புற்றீசல் நிபுணர்களும் போலி அறிவுரைகளும்

By டாக்டர் ஜி. ராமானுஜம்

இந்த உலகில் காற்றுக்கு அடுத்தபடியாக அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் கிடைப்பது அறிவுரைதான். உண்மையில், அறிவுரை கூறுவது மனித இனத்தின் மிக முக்கியமான சமூக உளவியல் செயல்பாடாகும். பிற உயிரினங்கள் எல்லாம் அடுத்த தலைமுறைக்குப் பெரும்பாலும் மரபணுக்கள் மூலமாகவே இந்த மாற்றங்களைக் கடத்துகின்றன.

மனித இனம் மட்டுமே மொழி மூலமாகப் பிற மனிதர்களுக்குத் தமது அனுபவங்களைக் கூறி அவர்களை மேம்படுத்துகிறது. எனவே, அறிவுரை கூறுவது காலம் காலமாகத் தொடர்ந்துகொண்டேதான் வந்திருக்கிறது. அறிவுரை தேவையான ஒன்றுதான். ஆனால், அறிவுரை சொல்பவர், அவர் சொல்வதன் மீதான நம்பிக்கை கேள்விக்குறி ஆவதுதான் இங்கு பிரச்சினையே.

போலி நிபுணர்கள்: ஆரம்ப காலத்தில் அனுபவ அறிவின் மூலமே கொடுக்கப்பட்ட அறிவுரைகள் கொஞ்சம் கொஞ்சமாக அறிவியலாகிப் பல்வேறு துறைகளிலும் அறிவுரை கூறுவது தொழிலாக ஆனது. ஒருகட்டத்தில் வெறும் அனுபவஸ்தர் என்பதிலிருந்து அறிஞர், நிபுணர் என்ற நிலைக்குச் சென்று அறிவுரைகளும் ஆலோசனைகளும் வழங்கத் தொடங்குகிறார்கள் பலர். அவற்றின் நம்பகத்தன்மை பலமடங்கு அதிகரிக்கிறது. அவை அறிவியல்பூர்வமாகவும் அதன் நடைமுறை விதிகளுக்கு உள்பட்டதாகவும் ஆகின்றன. இங்கு இரண்டு விஷயங்கள் இருக்கின்றன. முதலாவதாக நிபுணத்துவம். இரண்டாவதாகத் தொழில்முறை அணுகுமுறை.

நிபுணத்துவமும் தொழில்முறை அணுகுமுறையும் சமநிலையில் இருக்க வேண்டும். அறிவுரையும் ஆலோசனைகளும் கூறுவது தொழிலாக மாறிய பிறகு நிபுணத்துவம் இல்லாத அல்லது போதாத துறைகளில் தங்களை நிபுணர்கள் எனக் காட்டிக்கொண்டு அத்தொழில் மூலம் வருமானம் ஈட்டுவது உண்டு. ஆம். போலி நிபுணர்கள் காலம்காலமாக எல்லாத் துறைகளிலும் இருந்துவருகின்றனர்.

இணையத்தின் வருகைக்குப் பின்னர் நிபுணர்களின் எண்ணிக்கை பலமடங்காகப் பெருகி உள்ளது - போலிகளின் எண்ணிக்கையும்தான். முன்பெல்லாம் ஒரு ‘நிபுண’ரை நேரில் போய்ச் சந்தித்து ஆலோசனை பெற வேண்டியிருந்தது. ஆகவே, அவரால் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் இருப்பவர்களை மட்டுமே ஏமாற்ற முடிந்தது. இப்போது இணையதளங்கள் மூலம் நாம் உலகின் எந்த மூலையில் இருக்கும் நிபுணராலும் ஏமாற்றப்படும் வசதியைப் பெற்றுள்ளோம். அதுவும் நம் வீட்டிலிருந்தபடியே சாவகாசமாக ஏமாறலாம்.

‘முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல’: குறிப்பாக, கோவிட் பெருந்தொற்றுக்குப் பின்னர் எல்லா விஷயங்களும் இணையத்தில் கிடைப்பதுபோல், பல்வேறு வகுப்புகளும் இணையத்தில் தொடங்கப்பட்டன. எப்படி அறிவுரை கூறுவது அனுபவத்தைப் பகிர்வதாகத் தொடங்கி, ஒரு துறை சார்ந்த அறிவியலாக மாறி அறிவுரை கொடுப்பவர்கள் நிபுணர்களாக ஆனார்களோ அதே போன்றுதான் இணையத்தில் ஆரம்பத்தில் அனுபவங்களைப் பகிரும் பதிவுகள், காணொளிகளைப் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தனர். இவை பெரும்பாலும் ‘முன்னோர்கள் என்ன முட்டாள்களா?’ வகை அறிவுரைகள். பெரும்பாலும் உணவு-மருத்துவக் குறிப்புகள், வாழ்க்கைத் தத்துவங்கள், உளவியல் போன்றவை.

பின்னர், அவற்றுக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்ததும் கொஞ்சம் கொஞ்சமாகத் தொழில் முறையில் இவற்றைச் செய்ய ஆரம்பித்தனர். தங்களது தளங்களுக்குச் சந்தாதாரராகச் சொல்லிக் காணொளிகளைக் காணவைத்து வருவாய் ஈட்டிவந்தனர். இத்தொழிலில் பலரும் இறங்கியிருக்கிறார்கள்.

பயனர்களுக்குப் பாதிப்பு: எல்லா நல்ல விஷயங்களையும் போன்றே இதிலும் பல இடங்களில் எல்லை மீறிப் போவதைப் பார்க்க முடிகிறது. மருத்துவத்தைப் பொறுத்தவரை எடை குறைப்பு, டயட் போன்ற விஷயங்களில் இவ்வாறு ஆலோசனை சொல்பவர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். சரியான ஆலோசனைகள் சொல்பவர்கள் இருப்பதை மறுக்க முடியாது. எனினும், பல நேரங்களில் அறிவியல்பூர்வமற்ற தவறான ஆலோசனைகளைக் கேட்டு உடல்நலம் பாதிக்கப்படுபவர்களைப் பரவலாகக் காணலாம்.

அடுத்ததாக, உளவியல் ஆலோசகர்கள் என்ற பெயரில் பல நிபுணர்கள் இருக்கிறார்கள். ஆளுமையை முன்னேற்றும் பயிற்சி வகுப்புகள் தொடங்கிப் பல்வேறு பயிற்சி வகுப்புகள், ‘முப்பது நாளில் மார்ட்டின் லூதர் கிங் போல் பேசுவீர்கள்’ என விளம்பரம் செய்யும் பேச்சுப் பயிற்சி வகுப்புகள், ‘அடுத்த ஐன்ஸ்டைன் உங்கள் குழந்தைதான்’ என ஆசை காட்டும் அறிவியல் பயிற்சி வகுப்புகள், இன்னும் டேட்டிங் போக, காதலிக்க என ஏராளமான விஷயங்களுக்கு ஆலோசனைகளும் வகுப்புகளும் கொட்டிக் கிடக்கின்றன.

துணிகளை மடித்து வைப்பதற்குக்கூட வகுப்புகள் இருக்கின்றன. சில பயிற்சி வகுப்புகளின் முடிவில் வழங்கப்படும் வசீகரமான சான்றிதழ்கள் இவற்றுக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தருகின்றன. குழந்தை வளர்ப்பு குறித்துப் பெற்றோர்களுக்கு வகுப்பு நடத்திவரும் பெண் ஒருவர், தன் எட்டு வயது மகளுடன் ஆபாசப்படங்களைப் பார்த்ததாகச் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இது போன்ற அறிவுரைகள் சமூகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடுகின்றன.

தாக்கம் செலுத்துபவர்கள்: இங்குதான் சாதாரண அறிவுரைக்கும் உண்மையாகவே தொழில்ரீதியான நிபுணர்கள் வழங்கும் அறிவுரைக்கும் வேறுபாடு இருக்கிறது. தேர்வு எழுதுவதற்கு முன் தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் நன்றாகத் தேர்வு எழுதலாம் எனப் பக்கத்து வீட்டுப் பாட்டி சொன்னால் அதை ஓரளவுதான் நம்புவோம். அதுவே நிபுணர் ஒருவர் சொன்னால் அப்படியே கண்மூடித்தனமாக நம்பிவிடுவோம். தேர்வு நுழைவுச்சீட்டு வாங்குவதற்கு முன்பே தயிரையும் சீனியையும் வாங்குவோம். இந்த நிபுணர்கள் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிப்பவர்களாக ஆகிறார்கள், இவர்களை ஆங்கிலத்தில் இன்ஃப்ளூயன் ஸர்கள் (Influencers) என்கின்றனர்.

முன்பெல்லாம் எந்த விஷயமாக இருந்தாலும் அதைப் புத்தகத்திலோ நாளிதழிலோ அச்சில் பார்த்து விட்டால் அதை அப்படியே மக்கள் நம்பிவிடுவார்கள் என்பார்கள். இப்போது இணையத்திலோ காணொளி வடிவிலோ ஒரு விஷயத்தைச் சொன்னால் அதை அப்படியே நம்பிவிடுகிறார்கள்.

இந்த இடத்தில் முக்கியமான ஒரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். அறிவும் நிபுணத்துவமும் யாருடைய தனிப்பட்ட உரிமையோ சொத்தோ கிடையாது. நாங்கள் மட்டும்தான் நிபுணர்கள், எங்களுடைய அறிவுரைகளை மட்டுமே அப்படியே நம்ப வேண்டும் எனச் சொல்வதும் ஒருவகை அதிகாரம்தான்.

இணையதளங்களின் பெருக்கம் மனிதகுலத்துக்குச் செய்த பெரும் கொடை, அறிவு என்பதை எல்லோருக்கும் எட்டும் வண்ணம் எளிதாகக் கிடைக்கச் செய்தது. கூடவே, ஒரு நிபுணர் சொல்வதை நம்மால் உண்மைதானா என உறுதிப்படுத்திக்கொள்ள முடியும். இணையத்தின் தாராளத்தன்மை வரவேற்கத்தக்கது.

நிபுணத்துவம் இருந்தும் பெரிய நிறுவனங்களைத் தொடங்க வாய்ப்பே இல்லாதவர்களுக்குத் தங்கள் நிபுணத்துவத்தின் மூலம் பொருளீட்டவும் இணையம் ஒரு பெரும் திறப்பாக இருக்கிறது. அதே போல் சுலபமாகவும் மலிவாகவும் தரமான ஆலோசனைகள் மக்களுக்குக் கிடைக்கப் பெரும் வாய்ப்பினைத் தருகிறது.

ஆனால், இணையதளத்தின் வளர்ச்சியே இது போன்ற போலிகளையும் ஊக்குவிக்கிறது. போலி நிபுணர்களின் ஆலோசனைகளிடமிருந்து தப்பிக்க வேண்டுமானால், மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம் தேவை. ஆலோசனை தருபவர்களின் நிபுணத்துவம், அவர்களின் கல்வி, அனுபவம் குறித்த தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

அவர்களை நம்பிப் பெரும் முதலீடு செய்வது, வேலையை விடுவது, வெறும் வயிற்றில் எட்டு லிட்டர் தண்ணீர் குடிப்பது எனத் தடலாடியாக எதுவும் செய்வதற்கு முன் அந்த ஆலோசனைகளின் உண்மைத்தன்மையையும் சாத்தியங்களையும் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.

இணையத்திலேயே இது குறித்து தேடிப் படித்து உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். மருத்துவம், பொருளாதாரம் உள்ளிட்ட எந்தத் துறையிலும் எல்லோருக்கும் பொதுவான ஆலோசனைகளை யாராலும் வழங்க முடியாது. துறைசார்ந்த உண்மையான நிபுணர்கள் தனிப்பட்ட முறையில் உங்களிடம் பேசி, பகுத்தாய்ந்து வழங்கும் ஆலோசனை கள்தான் நம்பகமானவை. ஆகவே, அடுத்த முறை ‘ஆன்லைன் மூலம் பைலட் ஆகும்’ பயிற்சி வகுப்பில் சேர்வதற்குமுன் கொஞ்சமேனும் யோசியுங்கள்!

- தொடர்புக்கு: drgramanujam@gmail.com

To Read in English: Mushrooming ‘experts’ and fake advices

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE