பட்டியல் சாதி ஊராட்சித் தலைவர்களும் தேசியக் கொடியும்

By ஞா.குருசாமி

விடுதலை பெற்று எழுபத்தைந்து ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், தமிழ்நாட்டின் சில இடங்களில் ஆண்டுதோறும் பட்டியல் சாதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் கொடியேற்றுவது தொடர்பான பிரச்சினை தீர்ந்தபாடில்லை. கடந்த சில ஆண்டுகளாகக் குடியரசு நாள், விடுதலை நாளையொட்டி பட்டியல் சாதி ஊராட்சிமன்றத் தலைவர்கள் கொடியேற்ற முடியாதது குறித்த செய்திகள் ஊடகக் கவனம் பெற்றிருக்கின்றன.

கொடியேற்றுவதற்கு மட்டுமல்ல. நிர்வகிக்கவே முடியாத ஊராட்சிகளும் இருக்கின்றன. சிலவற்றின் மீது அவ்வப்போது ஊடகக் கவனம் கிடைத்துப் பேசுபொருளாகிறது. அதற்குப் பிறகு, அந்த ஊராட்சியின் நிர்வாகச் சுதந்திரம் கண்காணிக்கப் படுவது குறித்த செய்திகள் இல்லை.

தொடரும் சிக்கல்கள்: ‘ஊராட்சி மன்றம்’ என்பது உள்ளூர் அளவில் அதிகாரம் மிக்க சட்டப் பாதுகாப்பு கொண்ட அமைப்பு. ஊராட்சித் தலைவருக்கு ஊதியம் என்பது வெகு சொற்பம். ஆனாலும் அந்தப் பதவிக்குப் பெரும் போட்டி இருக்கிறது. காரணம், அது பணம் புழங்கும் இடம் என்பது மட்டுமல்ல. பல இடங்களில் அந்தப் பதவி வாரிசு உரிமை போலவோ வகையறா உரிமை போலவோ இருக்கிறது.

காலனிய காலத்து ஜமீனின் மனநிலைப் பிரதிபலிப்புகளை இன்றும் பல ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் பார்க்க முடியும். இவையெல்லாம் சேர்ந்துதான் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தலைவராகும்போது அவருக்கு எதிரான சிக்கல்களாக உருவெடுக்கின்றன.

சான்றாக ஒரு சம்பவம். 2022ஆம் ஆண்டு விடுதலை நாளன்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் கொடியேற்றுவதற்காக அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவர் சென்றார். அவர் பட்டியல் சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணத்துக்காக ஆதிக்கச்சாதியினரால் தடுக்கப்பட்டார்.

இதைப் பற்றி ஆலங்குடி வட்டாட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் தலையிட, ஆகஸ்ட் 18ஆம் தேதி அவர் முன்னிலையிலேயே ஊராட்சி மன்றத் தலைவர் கொடியேற்றினார்.

விடுதலை நாளில் ஒவ்வொரு ஊராட்சியிலும் அதன் தலைவர்கள்தான் கொடியேற்ற வேண்டும் என்றும், சாதிரீதியான காரணங்களால் பட்டியல் சாதி ஊராட்சி மன்றத் தலைவர்களையோ, உறுப்பினர்களையோ தேசியக் கொடியை ஏற்றவிடாமல் தடுப்பது சட்டத்தின்படி தண்டனைக்குரிய குற்றம் என்றும் தமிழ்நாட்டின் அன்றைய தலைமைச் செயலர் 2022 ஆகஸ்ட் 12 அன்று மாவட்ட ஆட்சியர்களுக்குக் கடிதம் எழுதியிருந்தார். அப்படியிருந்தும் மேற்சொன்ன ஊரில் 15ஆம் தேதி கொடியேற்ற முடியவில்லை. இதுதான் கள எதார்த்தம்.

உள்ளூர் மனநிலை: தலைவர் பதவியை நீண்ட காலமாகத் தக்கவைத்திருந்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஒருவரைத் தேர்தலில் தோற்கடித்து ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த இன்னொருவர் தலைவராவதை ஆதிக்கச் சாதியினர் ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தலைவராவதை ஏற்றுக்கொள்வதில்லை.

பிரச்சினைக்குரிய பல இடங்களில் சட்டத்தின் அதிகாரத்தை ‘உள்ளூர் மனநிலை’ நீர்த்துப் போகச் செய்துவிடுகிறது. உள்ளூர் மனநிலையின் திரட்சி, தேர்தல் அரசியலின் அதிகாரத்தை முடிவு செய்வதில் முக்கியப் பங்கு வகிப்பதால், அதைக் காலி செய்ய அரசியல் கட்சிகளும் விரும்புவதில்லை.

மாறாக, வாய்ப்பு இருக்கும் வழிகளில் எல்லாம் அதைப் பாதுகாக்கவே அவர்கள் விரும்புகிறார்கள். இவ்வளவு ஆதிக்கத்தையும் எதிர்கொண்டு பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் தலைவராகி, சட்டத்தின் அனுமதிக்கு உட்பட்டுச் சுதந்திரமாகத்தனது நிர்வாகத்தை அமைத்துக்கொண்டால், அது பிரச்சினையாக மாற்றப்படுகிறது. அதாவது, பட்டியல் சாதியைச் சேர்ந்தவரின் ‘சுதந்திரமான நிர்வாகம்’ என்பது உள்ளூர் மனநிலைக்கு எதிரானதாக ஆதிக்கச் சாதியினரால் கருதப்படுகிறது.

கொடியும் அதிகாரமும்: வரலாற்றில் சுதந்திரமான அதிகாரத்தை நிலைநிறுத்தும் குறியீடாகக் கொடிகள் இருந்துவந்திருக்கின்றன. விளையாட்டின் வெற்றி / தோல்வி முதல், போர்களின் வெற்றி / தோல்வி வரை கொடி வகித்துவரும் பங்கு முக்கியமானதாக இருந்துவந்திருக்கிறது. வரலாற்றில் உயரப் பறக்கும் ‘கொடி’ என்பது ஆதிக்கத்தின் அல்லது தன்னாட்சியின் அடையாளமாகும்.

சர்வதேச அளவில் பொ.ஆ.மு. (கி.மு.) 11ஆம் நூற்றாண்டு முதலே எகிப்து, ரோம், சீனா உள்ளிட்ட பண்டைய நாகரிகங்களில் கொடிகள் பயன்பாட்டில் இருந்திருக்கின்றன. அரசரின் கொடி அரசரைப் போலவே மரியாதைக்குரியதாக இருந்திருக்கிறது. கொடிபிடிப்பதற்கென்றே தனி ஆள்களை நியமித்திருக் கிறார்கள். அந்த ஆளைத் தொடுவதுகூடக் குற்றமாகக் கருதப்பட்டிருக்கிறது.

லத்தீன் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தங்களுக்கு இடையிலான வியாபாரப் போட்டிகளினால் உருவான போர்களில் கொடியை வல்லாண்மையின் அடையாளமாகப் பயன்படுத்தின. அவர்களின் வணிகத் தலங்கள் பிற்காலத்தில் குடியேற்றங்களாக மாறிய போது அவர்களின் கொடி அதிகாரத்தின் அடையாளமாகவும் ஆட்சிப் பரப்பின் எல்லையைக் குறிக்கவும் பயன்பட்டது.

தமிழகத்தில் கொடியின் வரலாறு பற்றி அறிந்துகொள்ள இலக்கியச் சான்றுகளே அதிகமாகக் கிடைக்கின்றன. கோட்டை, மதில், தேர், பாசறை முதலியவற்றில் கொடிகள் பறக்க விடப்பட்டிருக்கின்றன. யானை மீது ஏற்றப்பட்ட கொடியால் ஆகாயத்தில் நிழலை உண்டாக்கு பவனாக பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சிறப்பிக்கப்பட்டிருக்கிறான் (புறநானூறு. 9:7).

பட்டத்து யானைகளை வேறுபடுத்திக் காட்ட அதன் மீது கொடிகள் கட்டப்பட்டிருக்கின்றன (கலித்தொகை. 11:3-4). பகைவர் களின் கொடியை அறுத்தல் மாபெரும் வீரமாகக் கருதப்பட்டிருக்கிறது (பரிபாடல். 2:38). இதன்வழி, ‘கொடி’ ஆட்சிப் பகுதியின் எல்லைகளைக் குறிக்கவும் வெற்றியைப் பறைசாற்றவும் ஆதிக்கத்தின் அடையாள
மாகவும் பயன்பட்டிருப்பதை அறியலாம்.

இப்படிக் காலந்தோறும் கொடி சார்ந்து இருந்துவந்த ஆதிக்க உளவியல்தான், பட்டியல் சாதி ஊராட்சி மன்றத் தலைவர் கொடியேற்றுவதை ஏற்க மறுக்கிறது. பட்டியல் சாதியைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர், காவல் அதிகாரி அல்லது அரசால் நியமனம் செய்யப்பட்ட பட்டியல் சாதி அதிகாரி ஒருவர் தனது பணியிடத்தில் எந்தத் தடையும் இல்லாமல் கொடியேற்ற முடிகிறபோது, பட்டியல் சாதி ஊராட்சி மன்றத் தலைவருக்கு மட்டும் ஏன் பிரச்சினை உருவாக்கப்படுகிறது? நியமனம் செய்யப்பட்ட பட்டியல் சாதி ஆசிரியரோ அதிகாரியோ அரசின் நேரடிப் பிரதிநிதி. அவரது அதிகாரத்துக்குள் அவர் வேலை செய்யத் தடையில்லை.

அவரது எல்லையை அவர் மீறினால் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கும். ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் அப்படியில்லை. அவர் மீது நினைத்தவுடன் நடவடிக்கை எடுக்க முடியாது. அவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தாலும் விசாரிக்காமல் உடனடியாகப் பதவிநீக்கம் செய்ய முடியாது. அவர் தனது நிர்வாகத் திறமையினால் மக்கள் செல்வாக்கைப் பெற்றுவிடுவாரேயானால் அவரை அப்பொறுப்பில் இருந்து அகற்றுவது கடினம்.

ஜனநாயகத்தை உணர்தல்: கொடியின் வரலாறு, ஆதிக்கத்தோடு தொடர்புடையதாக இருப்பதால், பட்டியல் சாதித் தலைவர் கையில் ‘கொடி’ என்றதுமே ஆதிக்கச் சாதியினர் உளவியல்ரீதியாகக் கொதிப்படைகிறார்கள். ஒரு நாட்டின் கொடி அந்நாட்டின் மக்கள் அனைவருக்கும் பொதுவானது. ஆனால், ஆதிக்கச் சாதியினரின் உள்ளூர் மனநிலை இதை ஏற்கத் தயாராக இல்லை.

இந்தச் சூழல் மாற, பட்டியல் சாதியினரின் பிரச்சினைகளை அனைவருக்குமான பிரச்சினைகளாப் பார்க்க வேண்டும். நாடு முழுவதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கச் சட்டம் இருந்தாலும், அது உள்ளூர் அளவில் பல இடங்களில் வலுவிழந்து கிடப்பதை ஆள்வோர் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆள்வோர் தம் அதிகாரத்தை நீட்டித்துக்கொள்வதற்கான வழிகளுள் ஒன்றாக ‘உள்ளூர் மனநிலை’யைக் கருதும் வரை பிரச்சினை தீராது. ஜனநாயக நாட்டில் உரிமைகளைப் பகிர்ந்துகொள்ளும் சமூகமே ஆரோக்கியமானது என்பதை ஆதிக்கச் சாதியினரும் ஆள்வோரும் உணர்ந்துகொள்வார்களேயானால் பட்டியல் சாதி ஊராட்சி மன்றத் தலைவர்கள் தடையின்றி கொடியேற்றுதல் சாத்தியமாகும்.

- தொடர்புக்கு: jeyaseelanphd@yahoo.in

To Read in English: SC panchayat chiefs and National Flag

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்