பொது சிவில் சட்டம் தேவைதானா? - சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு

By Guest Author

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்தும், அது எவ்வாறு இந்துக்களில் ஒரு பிரிவினரின் திருமண முறை மற்றும் பழங்குடிகளின் வாழ்வியல் முறைகளில் காலம் காலமாக இருந்து வரும் மரபுகளை பாதிக்கும் என்பது குறித்தும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துவதன் பின்னணியில் உள்ள அரசியல் குறித்தும் விவரிக்கிறார் சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு. இந்து தமிழ் திசை டிஜிட்டலுக்கு அவர் அளித்துள்ள கட்டுரை இது...

”அரிசி குத்தும் அக்கா மகளே!“, ”அத்தை மகள் ரத்தினமே!“, பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்தால் இதுபோன்ற தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு வேலையில்லாமல் போய்விடும். ஏன் என்று இனி பார்க்கலாம்.

1950-ம் வருடம் நடைமுறைக்கு வந்த இந்திய அரசமைப்பு சட்டத்தின் 44-வது பிரிவில் இந்தியாவிலுள்ள முழு பரப்பளவில் வசிக்கும் அனைத்து குடிமக்களுக்கும் பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கு அரசு முயலவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அரசமைப்பு சட்டத்தின் மூன்றாவது பகுதியில் அடிப்படை உரிமைகளையும், நான்காவது பகுதியில் அரசு கொண்டுவர வேண்டிய வழிகாட்டும் நடைமுறைக் கொள்கை விதிகளும் வகுக்கப்பட்டுள்ளன. அடிப்படை உரிமைகளை யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நிலைநாட்ட முடியும். ஆனால், கொள்கை விதிகளில் கூறப்பட்டுள்ளவற்றை நாடாளுமன்றம் விருப்பப்பட்டால் மட்டுமே சட்டம் இயற்றி நிறைவேற்ற முடியும். இதில் பொது சிவில் சட்டம் கொண்டுவர வேண்டுமென்பது அரசின் வழிகாட்டுதல் நடைமுறை விதியாக மட்டுமே உள்ளது. அதை நீதிமன்றத்தின் மூலம் நிலைநிறுத்த முடியாது.

உதாரணமாக, 39A ஏழைகளுக்கு இலவச சட்ட உதவி அளிக்க வேண்டுமென்பது கொள்கை விதியாகக் கூறப்பட்டுள்ளது. 1950-ம் வருடம் அரசமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்தாலும் 1976-ம் வருடம் 42-வது சட்டத் திருத்தத்தின் மூலம் 39A என்ற பிரிவு நுழைக்கப்பட்டது. கொள்கை விதியாக வகுப்பதற்கே இதற்கு 26 ஆண்டுகள் ஆனது. அதற்கு முக்கிய காரணம் நீதிபதிகள் வி.ஆர்.கிருஷ்ணய்யரும், பி.என்.பகவதியும். அவர்கள் இருவரும் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இச்சட்டப்பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், அதற்காக நாடாளுமன்றம் இந்திய சட்ட சேவைகள் ஆணையத்தை 1987-ல்தான் உருவாக்கியது. அரசமைப்பு சட்டம் திருத்தப்பட்டும் ஏறக்குறைய 11 ஆண்டுகளுக்குப் பிறகே சட்டத்தை நிறைவேற்ற நாடாளுமன்றம் முயன்றது. அதேபோல் நான்காவது பிரிவில் வேலை செய்யும் உரிமை, நிர்வாகத்தில் பங்கு, வாழ்வதற்கான ஊதியம், ஓய்வு கால பாதுகாப்பு இப்படிப் பல கொள்கை விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கான நாடாளுமன்ற சட்டங்கள் முழுமையாக இன்னும் இயற்றப்படவில்லை.

ஆனால், திடீரென்று ஒன்றிய அரசு பொது சிவில் சட்டத்தைப் பற்றிய விவாதத்தைத் துவக்கியுள்ளது. இதற்காக ஒன்றிய சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளையும் கேட்டுள்ளது. அதையொட்டி ஆணையமும் பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது பொது சிவில் சட்டத்தைப் பற்றிய விவாதத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. ஆனால், நீதிபதி சவான் தலைமையில் இருந்த ஒன்றிய சட்ட ஆணையம் 2018-ம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே இந்த கோரிக்கையைப் பரிசீலித்து தன்னுடைய 185-வது அறிக்கையில் இந்த சட்டம் தற்போது தேவையில்லை என்று அறிவித்துள்ளது.

நீதிபதி சவான் ஆணையம் கொடுத்த அறிக்கையில், நாட்டின் பன்முகத்தன்மையை முரண்படச் செய்யும் வேலையை மதசார்பின்மை என்ற அடிப்படையில் நாம் செய்யக்கூடாது என்றும், கலாச்சார பன்முகத்தன்மையை சமரசம் செய்யும் வகையில் பொது என்ற பெயரில் நாட்டின் ஒருங்கிணைப்புக்கு அச்சம் விளைவிக்கக் கூடாது என்றும், ஒன்றுபட்ட தேசம் என்பது பொதுவான என்ற எண்ணமாக இருக்க முடியாது என்றும் வேறுபாடுகள் என்பது ஒரு செயல்படும் ஜனநாயகத்தில் பாகுபாட்டுடன் இருப்பதுதான் என்றும் மத (அ) பிராந்திய ரீதியான பன்முகத்தன்மை பெரும்பான்மையினருடைய குரலில் அமிழ்ந்துவிடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை வந்தபோது பா.ஜ.க. அரசுதான் ஆட்சிக் கட்டிலில் இருந்தது. அதற்குப் பிறகும் ஒரு தேர்தலைச் சந்தித்தது. அப்பொழுதெல்லாம் இந்த அறிக்கையை மறுதலித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. ஏனென்றால் நீதிபதி சவானை சட்ட ஆணையமாக நியமித்ததே அவர்களது அரசுதான். இதேபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி பலர் உச்சநீதிமன்றத்தை அவ்வப்போது அணுகினர்.

1984-ம் வருடம் பொது சிவில் சட்டத்தை இயற்றுமாறு நாடாளுமன்றத்திற்கு உத்திரவிடும்படி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அப்பொழுது அதற்கான நேரம் கனியவில்லை என்று உச்சநீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்தது. 2015ம் வருடம் பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அஸ்வினிகுமார் உபாத்தியாயா மறுபடியும் ஒரு வழக்கு தொடுத்தார். அதை மூன்று நீதிபதிகள் அமர்வு தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்றம் வழக்கு தொடுத்தவர் எந்த அடிப்படையில் இவ்வழக்கை தொடுத்துள்ளார் என்றும், சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட எவரும் தாங்கள் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படுகிறோம் என்று சொல்லி நீதிமன்றத்திற்கு வரவில்லை என்றும், நேரடியாக செய்யமுடியாத ஒன்றை மறைமுகமாகச் செய்வதற்கு அவர் முயலக்கூடாது என்றும், நாடாளுமன்றத்தை குறிப்பிட்ட சட்டம் இயற்ற வேண்டும் என்று உத்திரவிட முடியாது என்றும் கூறிவிட்டது. (7.12.2015).

இப்படி சட்ட ஆணையமும் உச்சநீதிமன்றமும் சொன்ன பிறகும் இப்பிரச்சினையை மீண்டும் எழுப்புவதற்கு பா.ஜ.கவும் ஒன்றிய அரசும் முயல்வதற்கு அரசியல் காரணம் மட்டுமே இருக்கமுடியுமேயொழிய மக்கள் நலனுக்காக அது இருக்க முடியாது. மேலும் அடுத்து வரப்போகும் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சார உத்தியாகவும் இப்பிரச்சினையை அவர்கள் கையில் எடுத்திருக்கலாம். ஆனால் இதன் மூலம் நாட்டின் ஒற்றுமையையும் அமைதியையும் குலைப்பதைத் தவிர அவர்களால் "வேற்றுமையில் ஒற்றுமை" யை உருவாக்க முடியாது.

பல நூற்றாண்டுகளாக ஏற்படுத்தப்பட்ட சாதிக் கட்டுமானத்தினால் பல சமுதாயத்தினருக்கு சமூகநீதி மறுக்கப்பட்டதுடன், கல்வி கற்கும் உரிமையும் தடுக்கப்பட்டது. இவற்றையெல்லாம் களையும் வண்ணம் அரசமைப்பு சட்டத்தின 15வது பிரிவு உருவாக்கப்பட்டது. அதில் அரசு நடத்திவரும் அமைப்புகள், நிறுவனங்கள், கடை, பொது உணவு விடுதி, பொது மக்களுக்கான கேளிக்கை இடங்கள் ஆகியவற்றில் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பு இதன் காரணமாக எவ்வித பாகுபாடும் அரசு காட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சமூக (அ) கல்வியினால் பின்தங்கியுள்ள மக்களுக்கு சிறப்பு சட்டங்களின் மூலம் அரசு உரிமைகளை ஏற்படுத்தித் தரும் என்றும் கூறப்பட்டிருந்தது. எனவேதான் 20 நூற்றாண்டுகளுக்குப் பிறகும் அடித்தட்டு மக்கள் சாதிக் கட்டுமானத்தில் கீழே வைக்கப்பட்டுள்ள சாதியினர் இந்த அமைப்பில் கல்வி கற்று பொது வேலை வாய்ப்புகளில் பங்குபெற்று தங்களை முன்னேற்றிக் கொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. பொது சிவில் சட்டம் என்று சொன்னால் அதில் இடஒதுக்கீட்டிற்கு பங்கு இருக்காது. அடிமையையும் ஆண்டானையும் பொது என்று சொல்வது சமத்துவத்திற்கே எதிரான கொள்கை.

இந்தியக் குடிமக்கள் அனைவரும் தாங்கள் விரும்பக்கூடிய மதத்தைத் தேர்ந்தெடுத்து அதை நடைமுறைப்படுத்துவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் முழு உரிமை அரசமைப்பு சட்டத்தின் 25வது பிரிவில் அறிவிக்கப்பட்டுள்ளது. 29-வது பிரிவில் சிறுபான்மையினர் தங்களுடைய மொழி, எழுத்து, கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், 30வது பிரிவில் மொழி (அ) மதம் சார்ந்த சிறுபான்மையினர் தாங்கள் விரும்பக்கூடிய கல்வி நிறுவனங்களை நிறுவுவதற்கும் அதை நிர்வகிப்பதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இந்த உரிமைகளை எந்த சட்டத்தின் மூலமும் நீக்க முடியாது.

இப்படி மொழி சார்ந்த மற்றும் மதம் சார்ந்த சிறுபான்மையினருக்கு அரசமைப்பு சட்டப்பேரவை உரிமை வழங்கி அதற்கான பிரிவுகளை அரசமைப்பு சட்டத்தில் உருவாக்கியிருக்கிறது. இதில் பொது சிவில் சட்டம் என்பது சிறுபான்மையினருடைய மத நம்பிக்கைகளையும், கலாச்சார நடவடிக்கைகளையும் பாதிக்கும் என்பது உண்மை. 17-ம் நூற்றாண்டில் இந்தியாவில் தங்களது வியாபாரத்தைப் பெருக்கிக் கொண்ட கிழக்கிந்திய கம்பெனி இவ்வளவு பெரிய நிலப்பரப்பை ஆளமுடியாது என்ற காரணத்தினாலும் பிரித்தானிய அரசே இந்தியாவின் ஆளும் உரிமையைக் கையில் எடுத்துக் கொண்டது. அவர்களது அரசியாரே பிரிட்டிஷ் இந்தியாவின் பேரரசியாகவும் தன்னைப் பட்டம் சூட்டிக் கொண்டார்.

ஒரு நாட்டை ஆள்வதற்குப் போதுமான சிவில், கிரிமினல் சட்டங்கள் தேவை. ஆனால் அப்பொழுது பேசப்படும் அளவுக்கு எந்த கிரிமினல் சட்டங்களும் இல்லை. எனவே மெக்காலே பிரபுவை வரவழைத்து இந்திய தண்டனைச் சட்டத்தை உருவாக்கி 1860ல் நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். பொதுவான கிரிமினல் சட்டமாக அச்சட்டம் இந்தியாவில் மட்டுமல்ல, இந்த துணைக்கண்டத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான கிரிமினல் சட்டங்களாக இன்றும் நடைமுறையில் உள்ளது. ஆனால் பிரிட்டிஷ் அரசிற்கு பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதற்கு போதுமான திராணி அப்பொழுது இல்லை. காரணம் இந்துக்கள் வாழக்கூடிய பகுதிகள் அனைத்தும் பல்வேறு சமஸ்தானங்களின் கீழே இருந்தன. அதுமட்டுமின்றி பகுதிக்கு ஏற்ப பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. சில இடங்களில் பழைய மரபுகள் பின்பற்றப்பட்டன.

அதேபோல் இஸ்லாமியர்கள் வாழக்கூடிய பகுதிகள், ஆதிவாசி பகுதிகள், மதம் மாறிய கிறிஸ்தவர்கள், சமணம்,பௌத்தம் மற்றும் பார்சி இனத்தைச் சேர்ந்தவரும் இருந்தனர். ஆகவே பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் அனைவருக்கும் அவர்கள் திருமணம், வாரிசுரிமை, சொத்துரிமை, தத்தெடுக்கும் உரிமை இவற்றையெல்லாம் பற்றி ஒரே சட்டம் எழுதுவதற்கு அவர்கள் அரசியல் ரீதியாக தயாராகவில்லை. மேலும் ஒரே மதத்தைச் சேர்ந்தவராகயிருப்பினும் அவர்களுக்கு உள்ளே இருந்த பல்வேறு குழுக்களுக்கு மத்தியில் இருந்த நடைமுறை செயல்பாடுகள் மரபுரீதியான பண்புகள் வெவ்வேறாக இருந்தன.

இப்படிப்பட்ட பிரிவுகளை ஒருங்கிணைத்து ஒரே பொது சிவில் சட்டமாக உருவாக்குவதற்கு பிரிட்டிஷ் அரசு தயாராக இருக்கவில்லை. ஒவ்வாரு மதத்திற்கும் பொதுவான சில காரணிகளைக் கண்டெடுத்து அவற்றை ஒருமுகப்படுத்தி மதரீதியான சட்ட நடைமுறைகளை உருவாக்க பிரிட்டிஷ் முற்பட்டது. அதேசமயத்தில் சில சீர்திருத்தக் கருத்துக்களை தங்களது சட்டமியற்றும் அதிகாரம் மூலம் நடைமுறைக்குக் கொண்டுவந்தனர். குறிப்பாக சதி ஒழிப்பு, விதவைத் திருமணம், சாதிப் பாகுபாடு மறுத்தல் போன்ற கொடுமைகளை ஒழிக்கும் விதமாக சட்டங்கள் இயற்றப்பட்டன. மதம் சார்ந்த சட்ட நடைமுறைகளை ஒழுங்குபடுத்தினாலும் இந்தியா போன்ற பெரும் பரப்பில் உள்ள பெரும்பான்மையான இந்துக்கள் மத்தியிலேயே பகுதிக்கு பகுதி சட்ட நடைமுறைகள் வேறுபட்டன. அதேபோல் ஆதிவாசி மக்களும் தங்களுடைய மரபுகளையே இவ்விஷயங்களில் கடைபிடித்தனர்.

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.சந்துரு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு புதிய இந்தியாவை நடத்திச் செல்லும் அரசமைப்பு சட்டத்தை உருவாக்குவதற்கு சுமார் மூன்று ஆண்டுகள் ஆயின. அரசமைப்பு சட்டத்தை உருவாக்கும் போது நடைபெற்ற விவாதங்களிலும் இதுபற்றிய கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. ஆனாலும் ஒருமித்த கருத்து இல்லாததனால் பொது சிவில் சட்டம் கொண்டுவருவது பற்றி ஒரு வழிகாட்டு நடைமுறையை 44வது பிரிவில் சொல்லி வைத்தனர்.

இருப்பினும் அரசமைப்பு சட்டம் வந்தபின் ஒன்றிய அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த பாபா சாகேப் அம்பேத்கர், முதலில் இந்துக்களுக்கான ஒருமித்த சட்டத்தொகுப்பை உருவாக்க முற்பட்டார். அப்படி திருமணம், சொத்துரிமை, வாரிசுரிமை பற்றிய பிரிவுகள் அடங்கிய இந்த சட்டத்தொகுப்பிற்கு காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அச்சட்ட வடிவிற்கு அன்றைய குடியரசுத் தலைவர் பாபு இராஜேந்திர பிரசாத் தன்னுடைய இசைவை தர மறுத்துவிட்டார்.

பின்னர் பிரதமர் நேரு அவர்களின் தலையீட்டில் கட்சிக்குள் ஒருமுகக் கருத்து ஏற்படுத்தப்பட்டு நான்கு சட்டங்களாக இந்து திருமணச் சட்டம், இந்து வாரிசுரிமைச் சட்டம், இந்து தத்தெடுப்பு மற்றும் நிர்வகிக்கும் சட்டம், இந்து மைனர் மற்றும் காப்பாளர் சட்டம் உருவாக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கே சுதந்திரம் பெற்று ஒன்பது ஆண்டுகள் ஆயின. இருப்பினும் இச்சட்டங்கள் இந்து பிரிவினருக்குள்ளேயே ஒரு சில பிரிவினரின் நடைமுறை மரபு வழக்கங்களை ஏற்றுக்கொண்டதேயொழிய பரந்த இந்து சமுதாயத்தின் அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளே ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயத்தில் குறிப்பிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கணிசமான அளவிற்கு இருந்தால் அவர்களது நடைமுறை மரபு வழக்கங்களைப் பாதுகாக்கும் வகையிலும் விதிவிலக்கு பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன.

உதாரணமாக, தமிழ் மற்றும் தெலுங்கு மக்களிடையே முறைமாமனைத் திருமணம் செய்து கொள்ளும் நடைமுறை இருந்தது. ஆனால், இந்து திருமணச் சட்டத்தில் ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் (அ) ரத்த ரீதியான உறவில் பிறந்தவர்களாயின் ஐந்து தலைமுறைக்கு திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறப்பட்டிருக்கிறது (பிரிவு 3(g). இப்படி திடீர் தடை ஏற்படுத்தினால் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரத்த உறவாக இருந்தாலும் அது சம்பிரதாய நடைமுறையில் இருப்பதனால் விதிவிலக்கு கொடுக்கப்பட்டது. அதனால்தான் சட்டத் தடை இருப்பினும் இன்றும் இப்பகுதி மக்களுக்கு அத்தை மகள்களையும், அக்காள் மகள்களையும் திருமணம் செய்து கொள்வது சாத்தியப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் இந்த மரபுகளுக்கு முடிவுகட்டப்படும். இக்கட்டுரையில் ஆரம்பத்தில் சொன்ன வரிகளுக்கு அதுதான் அர்த்தம்.

திருமணம் மட்டுமின்றி சொத்துரிமைகளிலும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. கூட்டு குடும்ப சொத்தில் மகள்களுக்குப் பங்கில்லை என்று இதுவரை இருந்தது. அதேபோல் மைனர் ஆண் குழந்தைக்கு தகப்பனே காப்பாளர் என்றும், காப்பாளர் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்துக்களுக்கான சட்டங்களில் எல்லாமே விஞ்ஞான ரீதியாக அணுகப்பட்டு சமூக நீதி கடைபிடிக்கப்பட்டிருப்பதாக யாரேனும் நம்பினால் அவர்கள் தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்கிறார்கள் என்று கருதவேண்டும்.

இந்து திருமணச் சட்டத்தில் இருதார மணம் தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்று நீதிமன்றங்களில் வாரிசுரிமை சான்றிதழ் கேட்டு வரக்கூடிய வழக்குகளில் 95 விழுக்காடுகள் இரண்டாவது மனைவி (அ) மூன்றாவது மனைவியிடமிருந்துதான் வருகின்றன என்பதை உறுதியாகக் கூறலாம். சட்டம் எவ்வாறு இருப்பினும் சமூகம் வேறு அளவில் செயல்படுகிறது என்பதுதான் உண்மை. முதலில் இருக்கக்கூடிய சட்டங்களை உண்மையிலேயே மக்கள் ஏற்றுக்கொண்ட நடைமுறையில் கடைபிடிக்கிறார்களா என்பதை நாம் உறுதி செய்த பிறகே அனைவருக்குமான பொது சட்டத்தை நோக்கி செல்ல முற்பட வேண்டும். இல்லாவிட்டால் அது ஒரு இரட்டை நாடகமாகவே இருக்கும்.

பொது சிவில் சட்டம் என்று சொல்லும்போது அது சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களைத் தாக்குவதற்கும் அவர்களுடைய மத நம்பிக்கையை முறிப்பதற்கும் உருவாக்கப்பட்ட புதிய சதித் திட்டம் என்று பலரும் பேசிவரும் வேளையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்திய அரசமைப்பு சட்டத்தில் 244வது பிரிவில் அஸ்ஸாம், மேகாலயா, திரிபுரா, மிசோரம் ஆகிய மாநிலங்களில் பட்டியலின பகுதிகளுக்கும் பட்டியலின ஆதிவாசி மக்களுக்கும் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளும் வகையில் சுயாட்சி அமைப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் 5வது மற்றும் 6வது அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டவணைப்படி அங்குள்ள ஆதிவாசி மக்கள் தங்களுடைய தலைமையைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது, சொத்துரிமை, திருமணம் மற்றும் விவாகரத்து, சமூக வழக்கங்கள் இவற்றின்படி நிர்வகித்துக் கொள்வதற்கு முழு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மரபுரீதியான தங்கள் வழக்கங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், சிவில் கிரிமினல் சட்டங்களை தங்களது மரபுரீதியான சட்டங்கள்படி நடத்திச் செல்வதற்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இது தவிர 371 இது தவிர 371-A என்ற பிரிவில் நாகாலாந்து மாநிலத்திற்கும் 371G பிரிவில் மிசோரம் மாநிலத்திற்கும் சிறப்புப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆதிவாசி மக்கள் தங்களுடைய கலாச்சார மரபுகளை தொடர்ந்து கடைபிடிப்பதற்கு அரசமைப்பு சட்டம் வழிவகுத்துள்ளது.

அதேபோல் உள்ளாட்சி விதிகளிலிருந்தும் அவர்கள் தங்களுடைய மரபு ரீதியான நடவடிக்கைகளை தொடர்ந்து கடைபிடிக்கும் வண்ணம் நாடாளுமன்ற சிறப்பு சட்டத்தின் மூலம் விதிவிலக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் ஏற்படுத்த குரல் கொடுப்பவர்கள் இதையெல்லாம் பற்றி யோசித்தார்களா என்று தெரியாது. ஆனால் அதில் ஒரு சிலர் ஆதிவாசி மக்களுக்கு விதிவிலக்கு தரும் வகையில் பொது சிவில் சட்டம் அமையலாம் என்று கூற முற்பட்டிருக்கிறார்கள். இதுவே பொது சிவில் சட்டத்திற்கு அர்த்தம் ஏதுமில்லை என்பதை தெளிவுபடுத்தும்.

இப்படி பரந்த நிலப்பரப்பில் பல்வேறு சமூகக் குழுக்கள் மதரீதியாகவும் இனரீதியாகவும் பல்வேறு பழக்கவழக்கங்களை நடைமுறையில் கடைபிடித்து வரும் சூழ்நிலைகளில் பொது சிவில் சட்டம் ஏற்படுத்துவோம் என்று கூறுவது பெரும்பான்மையான மதத்தைச் சேர்ந்தவர்களின் பழக்கவழக்கங்களை சிறுபான்மையினர் மீது திணிக்க வைக்கும் ஏற்பாடு என்பது திண்ணம். முதலில் பெரும்பான்மையான மதமான இந்து மதத்தைச் சேர்ந்தவர் மத்தியில் திருமணம், சொத்துரிமை, வாரிசுரிமை பற்றி பொது சட்டம் இருக்கிறதா? அதில் பாலின சமத்துவம் இருக்கிறதா என்பதையெல்லாம் பற்றி நாம் விவாதிக்க வேண்டும்.

அவற்றையெல்லாம் விவாதித்து ஒரு சீரான பொது சட்டத்தை உருவாக்குவதில் வெற்றி பெற்றால் மற்ற சமயத்தினருக்கும் நாம் ஆலோசனை சொல்ல முற்படலாம். இல்லையென்றால் இது ஒரு வெற்றுக் கோஷமாக தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டுமே பயன்படும். அதனால் ஏற்படும் விளைவுகளோ இந்நாடு வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கான சிறந்த உதாரணம் என்ற பெருமைக்கு வேட்டு வைக்கும்.

முந்தைய அத்தியாயம் > பொது சிவில் சட்டத்தின் வித்து எங்கிருந்து தொடங்குகிறது? - ஓர் அலசல்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

16 hours ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

7 days ago

கருத்துப் பேழை

8 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

11 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

14 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

கருத்துப் பேழை

21 days ago

மேலும்