பொது சிவில் சட்டம் எனும் கருத்தாக்கம் எங்கே எப்படி தோன்றியது? நாடு சுதந்திரம் அடைந்தபோது அரசியல் நிர்ணய சபையில் இது குறித்து எத்தகைய விவாதங்கள் நடைபெற்றன? பொது சிவில் சட்டம் அப்போதே நடைமுறைக்குக் கொண்டுவரப்படாததன் பின்னணி என்ன? அம்பேத்கர் என்ன கூறினார்? கோவா பொது சிவில் சட்டம் என்ன கூறுகிறது? - இவை தொடர்பாக தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அன்வர் ஹூசைன் அளித்த கட்டுரை இது:
பொது சிவில் சட்டம் எனும் கோட்பாடு எப்படி தோன்றியது என்பதும் தேசத்தின் வழிகாட்டியாக உள்ள சட்ட ஆவணமான அரசியலமைப்பு சட்டம் உருவானபொழுது நடந்த விவாதங்கள் குறித்தும் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இவற்றை விருப்பு வெறுப்பின்றி அறிந்து கொள்வது இந்த முக்கியப் பிரச்சனையை முழுமையாக புரிந்துகொள்ள உதவும்.
பொது சட்டங்கள் - காலனிய தொடக்கம்: இந்தியா காலனி ஆதிக்கத்தின் கீழ் குறிப்பாக கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த பொழுதுதான் பொது சட்டங்கள் குறித்து தேவை முதலில் எழுந்தது. 1834ஆம் ஆண்டு இந்தியாவுக்கான முதல் சட்ட ஆணையம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னதாக சட்டப் பிரச்சனைகளில் கடும் குழப்பங்கள் நிலவின. இந்து சட்டங்கள், முஸ்லிம் சட்டங்கள், ஆங்கிலேய பொது சட்டங்கள், சமஸ்தானங்கள் சட்டங்கள், நிஜாம்களின் சட்டங்கள் என பல வகையான சட்டங்களின் அடிப்படையில் வழக்குகள் தீர்க்கப்பட்டு வந்தன.
அன்றைய மெட்ராஸ் மற்றும் கல்கத்தா ராஜதானிகளில் கிரிமினல் சட்டங்கள் கூட இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் தனிதனியாக இருந்தன. மேலும் ஒவ்வொரு ராஜதானியிலும் அந்தந்த சூழல் அல்லது நீதிபதியின் புரிதலுக்கு ஏற்றவாறு தீர்ப்புகள் தரப்பட்டன. இந்தச் சூழலில்தான் 1834ம் ஆண்டு முதல் சட்ட ஆணையம் T.B.மெகாலே தலைமையில் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில் மெட்ராஸ், பம்பாய், கல்கத்தா ராஜ்தானிகளின் பிரதிநிதிகள் உட்பட மொத்தம் 5 பேர் உறுப்பினர்களாக இருந்தனர். இந்த சட்ட ஆணையம் 1837 ஆம் ஆண்டு தனது அறிக்கையை அரசுக்கு அளித்தது. எனினும் இதன் பல்வேறு அம்சங்கள் 1860ம் ஆண்டுதான் சட்டமாக்கப்பட்டன.
முதல் சட்ட ஆணையம் முன்வைத்த முக்கிய இரு பரிந்துரைகள்:
1. இந்து, முஸ்லிம் அல்லாமல் இந்தியாவில் வாழும் ஏனையோருக்கு ஆங்கிலேய சட்டங்கள் அமலாக்கப்படும். இது பெரும்பாலும் ஆங்கிலேயர்களுக்கு உரித்தானவை.
2. திருமணம் / விவாகரத்து / தத்தெடுப்பு ஆகிய விவகாரங்களில் அந்தந்த மதங்கள் அல்லது இனங்களுக்கு பொருந்தும் சட்டங்கள் அமலாக்கப்படும். ஏனைய சிவில் அம்சங்களில் பொது சட்டங்கள் உருவாக்கப்படும்.
அனைவருக்கும் பொருந்தும் இந்திய கிரிமினல் சட்டங்களுக்கான வரைவை மெகாலே உருவாக்கினார். இந்த ஆவணங்கள்தான் பின்னர் உருவாக்கப்பட்ட பல்வேறு கிரிமினல் சட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்தது எனில் மிகை அல்ல. இங்கு இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. ஒன்று கிரிமினல் சட்டங்களும் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு தவிர ஏனைய அம்சங்களிலும் அனைவருக்கும் பொதுவான சட்டங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே அமலில் இருந்த தனித்தனியான கிரிமினல் சட்டங்கள், வணிக சட்டங்கள் பொதுவாக்கப்படுவதற்கான அடித்தளம் இடப்பட்டது.
அதே சமயத்தில் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு ஆகிய விவகாரங்களில் சட்டங்களை பொதுவாக ஆக்க காலனிய ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. அதற்கு இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. ஒன்று தனி நபர் சட்டங்களில் தலையிட்டு முரண்பாடுகளை உருவாக்கிக்கொள்ள காலனி ஆட்சியாளர்கள் தயாராக இல்லை. இரண்டாவது இந்து-முஸ்லிம் எனும் முரண்பாடுகள் இருந்தால் தமக்கு நல்லது என அவர்கள் நினைத்தனர். குறிப்பாக 1857 கிளர்ச்சி அனுபவத்துக்கு பின்னர் இந்து-முஸ்லிம் ஒற்றுமை ஆபத்தானது என அவர்கள் மதிப்பிட்டனர். எனவே முதல் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் 1860 இல் சட்ட அங்கீகாரம் பெற்ற பொழுது இந்து-முஸ்லிம் முரண்பாடுகள் அவசியம் என்பதை உணர்ந்த பின்னணியில் சட்டங்கள் உருவாக்கப்பட்டன.
இஸ்லாமியர்களுக்கு தனி சட்டங்கள் என முடிவு செய்யப்பட்டாலும் அன்றைய இந்தியாவில் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஒரே மாதிரியான சட்டங்களை அமலாக்கவில்லை. ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு சட்டங்கள் அமலாயின. உதாரணத்துக்கு அன்று இஸ்லாமிய சட்டங்கள் பெண்களுக்கு சொத்துரிமையை வழங்கின. ஆண்களுக்கு சமமான சொத்துரிமை இல்லையெனினும் சொத்துரிமை என்பது இஸ்லாத்தில் இருந்தது. இத்தகைய சொத்துரிமை இந்து மதத்தில் இல்லை. ஆனால் வடக்கு / மேற்கு பகுதிகளில் இந்த உரிமை முஸ்லிம் பெண்களுக்கு இல்லாமல் இருந்தது.
இந்தச் சூழலில் முஸ்லிம்களை ஒரே கோட்பாட்டின் கீழ் கொண்டுவர திட்டமிட்ட முஸ்லிம் மேல்தட்டினர் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஷரியத் சட்டம் என்பதை கொண்டுவர வேண்டும் என பிரிட்டன் ஆட்சியாளர்களை வற்புறுத்தினர். இந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையும் வலுவடைந்து வந்தது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதனை ஏற்றுக்கொண்ட பிரிட்டன் ஆட்சியாளர்கள் 1937ம் ஆண்டு முஸ்லிம்களுக்கு ஷரியத் சட்டம் இயற்றினர். இதன்படி திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு, சொத்துரிமை, ஜீவனாம்சம் ஆகியவற்றில் ஷரியத் சட்டம் அமலாகும் என முடிவானது.
கோவா பொதுச் சட்டம்: கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் கோவாவில் பொது சிவில் சட்டம் உருவாக்கும் முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டன. கோவா பிரிட்டன் காலனியாக இருக்கவில்லை. அது போர்த்துகீசியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. போர்ச்சுக்கலில் இருந்த சட்டம் கோவாவிற்கும் பொருத்தப்பட்டது. இது 1870 ஆம் ஆண்டு கோவா, டாமன், டையூ ஆகிய பகுதிகளுக்கு அமலானது. இந்த சட்டத்தில் 1880, 1910, 1946 ஆகிய ஆண்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1961ம் ஆண்டு கோவா இந்தியாவுடன் இணைந்த பின்னரும் இந்த சட்டம் தொடர்ந்தது. எனவே, இந்தியாவின் ஏனைய பகுதிகளில் அமலில் இருந்த இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் தனிநபர் சட்டங்கள் கோவாவில் இல்லை. அங்கு கோவா பொது சட்டம்தான் இன்றும் அமலில் உள்ளது.
இந்தியாவுக்கே கோவா பொது சட்டம் முன்மாதிரியாக இருக்கும் தகுதி படைத்தது என சிலர் வாதிடுகின்றனர். முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சரத் பாப்டே “பொது சிவில் சட்டம் குறித்து அறிந்துகொள்ள விரும்பும் அறிவுஜீவிகள் கோவா சட்டத்தை உள்வாங்குங்கள்” என 2021 ஆம் ஆண்டு பேசினார். (இந்தியன் எக்ஸ்பிரஸ் 28/03/2021)
உண்மையிலேயே கோவா சட்டம் முன்மாதிரியா? - இந்த சட்டத்தில் சில நல்ல அம்சங்கள் உண்டு. உதாரணத்துக்கு திருமணத்துக்கு முன்பும் பின்பும் உள்ள சொத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் சம பங்கு உண்டு; அனைத்து திருமணங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும்; பலதார மண உரிமை முஸ்லிம்கள் உட்பட எவருக்கும் இல்லை. இவையெல்லாம் நல்ல அம்சங்கள். அதே சமயத்தில் சில பாரபட்சங்களும் கோவா சட்டத்தில் உண்டு. ஒரு இந்து மனைவி 25 வயதுக்குள் குழந்தை பெறாவிட்டால் கணவன் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. அதே போல இந்து மனைவி 30 வயதுக்குள் ஆண் குழந்தை பெறாவிட்டால் அப்பொழுதும் இரண்டாவது திருமணத்துக்கு கணவன் உரிமை பெருகிறான்.
இந்த உரிமையே பிற்போக்குத்தனமானது; மோசமானது. எனினும் இந்த உரிமை மற்ற மதத்தினருக்கு இல்லை. அனைத்து திருமணங்களும் அரசு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் கிறித்துவர்கள் அரசு அலுவலகத்தில் “ஆட்சேபணை இல்லை” எனும் சான்றிதழ் பெற்று தேவாலயத்தில் திருமண பதிவு செய்தால் போதுமானது. தத்தெடுக்கப்பட்ட மற்றும் திருமண உறவுக்கு வெளியே பிறந்த குழந்தைகளுக்கு கோவாவில் சம உரிமை இல்லை. இப்படி பல விதிவிலக்குகள் கொண்ட கோவா சட்டம் எப்படி முன்மாதிரியாக இருக்க இயலும்? மேலும் கோவாவின் மக்கள் தொகை சுமார் 16 லட்சம் மட்டும்தான் என்பதும் கவனிக்கத்தக்கது.
வரைவு கட்டத்தில் பொது சிவில் சட்டம்: நமது அரசியலமைப்பு சட்டம் ஏற்படுத்த அரசியலமைப்பு நிர்ணய சபை உருவாக்கப்பட்டது. மிகப்பெரிய அளவுக்கு பல்வேறு சட்ட நுணுக்கங்களை உருவாக்க வேண்டியிருந்ததால் பல உபகுழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று “அடிப்படை உரிமைகளுக்கான உபகுழு”. இந்த குழுவின் தலைவராக ஜே.பி. கிருபளானி தேர்வு செய்யப்பட்டார். அம்பேத்கர், மவுலானா அபுல் கலாம் ஆசாத், கே.எம்.முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், ராஜ்குமார் அம்ரீத் கவுர், எம்.ஆர். மசானி, கே.டி ஷா, ஜெய்ராம் தாஸ் தவுலத் ராம், ஹன்சா மேதா, ஷங்கர் ராவ் தியோ ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாக இருந்தனர்.
இந்த குழு அடிப்படை உரிமைகள் குறித்து வரைவு சட்டத்தை உருவாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டது. பொது சிவில் சட்டத்தை அடிப்படை உரிமைகளில் இணைப்பது என்பதுதான் முதல் ஆலோசனையாக முன்வைக்கப்பட்டது. அவ்வாறு அடிப்படை உரிமைகளில் இணைத்தால் அது நீதி மன்றங்களின் தீர்ப்புகளுக்கு உட்பட்டவையாகும். ஆனால் இந்த உபகுழுவில் நீண்ட விவாதத்துக்கு பின்னர் பொது சிவில் சட்டத்தை வழிகாட்டும் கோட்பாடுகளில் (Directive Principles) இணைப்பது என முடிவு செய்யப்பட்டது. வழிகாட்டும் கோட்பாடுகளில் இணைக்கப்படும் பிரிவுகள் நீதிமன்றத்தின் தீர்ப்புகளுக்கு உட்படாது. எதிர்காலத்தில் அமலாக்குவதற்கான திசைவழிகள் இந்த கோட்பாடுகள்.
ஏன் இவ்வாறு முடிவு செய்யப்பட்டது? - ஒருபுறம் முஸ்லீம் உறுப்பினர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. மறுபுறத்தில் இந்து மத ஆதரவாளர்களிடமிருந்தும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்து மரபுகளில் உள்ள பல்வேறு நடைமுறைகளை மாற்றத்துக்கு உள்ளாக்க அவர்கள் விரும்பவில்லை. அரசியல் நிர்ணயசபையின் தலைவராகவும் பின்னர் முதல் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பேற்ற டாக்டர் ராஜேந்திர பிரசாத் இதனை எதிர்த்தார் என்பதும் பொதுசிவில் சட்டம் அடிப்படை உரிமைகளில் இணைக்கப்பட்டால் தான் அதில் கையெழுத்திட மாட்டேன் என கூறும் அளவுக்கு எதிர்ப்பு இருந்தது என்பதும் கவனிக்கத்தக்கது. எனவே பொது சிவில் சட்டத்தை வழிகாட்டும் கோட்பாடுகளில் இணைப்பது எனும் சமரச முடிவு எடுக்கப்பட்டது.
இவ்வாறு வழிகாட்டும் கோட்பாடுகளில் இணைப்பதற்கு ராஜ்குமார் அம்ரீத் கவுர், ஹன்சா மேதா ஆகிய இரு பெண் உறுப்பினர்கள் எம்.ஆர். மசானி ஆகிய மூவரும் மாற்று கருத்து தெரிவித்தனர். எனினும் இந்த பிரிவு 8க்கு 3 என்ற வாக்குகள் அடிப்படையில் வழிகாட்டும் கோட்பாடுகளில் இணைக்கப்பட்டது. குறிப்பாக அம்பேத்கர், பொது சிவில் சட்டத்தை அடிப்படை உரிமைகளில் இணைக்க விரும்பினாலும் அவர் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்று கருத்துகளை முன்வைத்தவர்கள் தமது குறிப்பை கீழ்கண்டவாறு பதிவு செய்தனர்: “இந்தியா தேசத்தன்மை அடைவதிலிருந்து பின்னுக்கு இழுக்கப்படுவதற்கு மதம் அடிப்படையிலான தனிநபர் சட்டங்கள் காரணமாக உள்ளன. இந்த சட்டங்கள் தேசத்தை தனித்தனி இறுக்கமான பகுதிகளாக வாழ்வின் பல அம்சங்களில் பிளவுபடுத்துகின்றன. எனவே இந்திய மக்களுக்கு அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளில் பொது சிவில் சட்டம் கிடைக்க வேண்டும். எனவே பொது சிவில் சட்டம் பிரிவு 2 இல் இருந்து பிரிவு ஒன்றுக்கு (நீதிமன்றங்களின் அதிகாரத்துக்கு உட்பட்டது) மாற்றப்பட வேண்டும் என நாங்கள் கோருகிறோம்.”(The framing of India’s constitution –select documents-volume II-page 177.)
அரசியல் நிர்ணய சபை விவாதங்கள்: பல்வேறு குழுக்கள் தமது வரைவு சட்டங்களை சமர்ப்பித்த பின்னர் அரசியல் நிர்ணய சபையில் விவாதம் தொடங்கியது. அரசியலமைப்பு சட்டங்களை முன்மொழிந்து விவாதங்கள் அடிப்படையில் இறுதியாக்கும் பொறுப்பு அம்பேத்கருக்குத் தரப்பட்டது. அதன் அடிப்படையில் பொது சிவில் சட்டம் குறித்தும் விரிவான விவாதம் நடந்தது. ஏற்கெனவே ஒரு சமரச ஏற்பாடாக “வழிகாட்டும் கோட்பாடுகளில்” பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டது. “அனைத்து குடிமக்களுக்கும் இந்திய பூகோள பகுதி முழுமைக்கும் ஒரு பொது சிவில் சட்டத்தை கொண்டுவர அரசு அனைத்து முயற்சிகளையும் செய்யும்” என்பதே அந்த வாசகங்கள் ஆகும்.
எனினும் இது கூட தமது மத நடைமுறைகளுக்கு ஆபத்து விளைவிக்குமோ எனும் அச்சத்தை பல முஸ்லிம் உறுப்பினர்கள் வெளிப்படுத்தினர். எனவே வழிகாட்டும் கொள்கைகளின் கீழ் உள்ள பொது சிவில் சட்டம், தனி நபர் சட்டங்களுக்கு முரண்பட்டதாக இருக்கக் கூடாது என அவர்கள் வாதிட்டனர். முகம்மது இஸ்மாயில் சாஹேப், ஹஸ்ரத் மொகானி, மகபூப் அலி பெய்க், பி.போக்கர் போன்றவர்கள் இவ்வாறு வாதிட்டனர். அதே சமயத்தில் நசீரூதீன் அகமது, ஹுசேன் இமாம் ஆகியோர் பொது சிவில் சட்டம் தேவை என்பதை ஏற்றுகொள்ளும் அதே நேரத்தில் அது இப்பொழுது அமலாக்க முடியாது என கூறினர். மறுபுறத்தில் டாக்டர் முன்ஷி, அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் ஆகியோர் பொதுசிவில் சட்டத்தை ஆதரித்துப் பேசினர்.
இந்த விவாதங்களுக்கு அர்த்தமுள்ள பதிலை அம்பேதகர் முன்வைத்தார். பொது சட்டங்களே சாத்தியமில்லை எனும் கருத்துக்கு பதிலளித்த அம்பேத்கர், "ஏற்கெனவே அனைத்து கிரிமினல் சட்டங்களும் பொதுவாக்கப்பட்டுள்ளன எனவும் சொத்து பரிமாற்றம் மற்றும் வணிகம் தொடர்பான பிரச்சனைகளிலும் பொது சட்டங்கள் உள்ளன எனவும் திருமணம், சொத்துரிமை ஆகியவற்றில் மட்டும்தான் தனி நபர் சட்டங்கள் உள்ளன எனவும் எடுத்துரைத்தார். எனவே அவற்றில் பிற்காலத்தில் மாற்றம் கொண்டு வர ஒரு வசதியாகவே பொது சிவில் சட்டம் குறித்து 'வழிகாட்டும் கோட்பாடுகளில்' இணைக்கப்படுகின்றன" என்பதை அம்பேத்கர் குறிப்பிட்டார்.
மேலும், "இந்த பிரச்சனையில் முஸ்லிம்களின் உணர்வை நான் புரிந்து கொள்கிறேன். அரசு பொது சிவில் சட்டங்களை அனைத்து குடிமக்களுக்கும் கொண்டுவர முயற்சி செய்யும் என்றுதான் சட்ட பிரிவு 35 (அரசியல் சட்டத்தில் 44 ஆவது பிரிவு) கூறுகிறது. இந்த பிரிவு சட்டமாக்கப்பட்ட உடனே பொது சிவில் சட்டம் அனைத்து பிரிவு மக்கள் மீதும் திணிக்கப்படும் என்று பொருள் அல்ல. எதிர்காலத்தில் நாடாளுமன்றம் தொடக்கத்தில் இந்த பொது சிவில் சட்டத்தை திணிப்பதற்கு பதிலாக யார் விருப்பப்படுகின்றனரோ அவர்களுக்கு பொருந்தும் என சட்டம் இயற்றுவதற்கு வாய்ப்பு உள்ளது. சுய விருப்பத்தின் அடிப்படையில் இது அமலாக்கப்பட வாய்ப்புகள் உண்டு" என அவர் தெரிவித்தார்.
1937ம் ஆண்டு ஷரியத் சட்டம் முஸ்லிம்களுக்கு இயற்றப்பட்டபோது, அது சுயவிருப்பத்தின் அடிப்படையில்தான் முன்வைக்கப்பட்டது என்பதையும் அம்பேத்கர் நினைவுபடுத்தினார். மற்றொரு விவாதத்தின்போது, பொது சிவில் சட்டத்தை திணித்து முஸ்லிம் சமூகத்தை போராட தூண்ட எந்த அரசும் முயலாது எனவும் குறிப்பிட்டார். எனவே முஸ்லீம் உறுப்பினர்கள் பயப்பட வேண்டியது இல்லை எனவும் உத்தரவாதம் அளித்து அவர்கள் கொண்டு வந்த திருத்தங்களை நிராகரித்தார். அதன் அடிப்படையில்தான் வழிகாட்டும் கோட்பாடுகளின் கீழ் பொதுசிவில் சட்டம் வைக்கப்பட்டது. எனினும்...
• வேலை உரிமை
• வாழ்க்கை ஊதியம் (குறைந்தபட்ச ஊதியம் அல்ல)
• ஆலைகளின் நிர்வாகத்தில் தொழிலாளர் பங்கேற்கும் உரிமை
• ஆண் பெண் உழைப்பாளிகளுக்கு சம வேலைக்கு சம ஊதியம்
• இயற்கை வளங்களின் உரிமை பொது நன்மைக்காக பகிரப்படுதல்
• ஒரு சிலரிடத்திலே சொத்துக்களும் வளங்களும் சேர்வது தவிர்த்தல்
இதுபோன்ற வழிபாட்டு கோட்பாடுகளின் கீழ் வைக்கப்பட்ட பல உன்னதமான பிரிவுகள் அமலாகாதது போலவே பொது சிவில் சட்டமும் அமலாகவில்லை. மதம், இனம், மொழி அடிப்படையில் பிளவு வாதங்கள் கூர்மை அடைந்துள்ள இன்றைய சூழலில் பொது சிவில் சட்டம் சரியா தவறா என்பது மட்டுமல்ல; இந்த முயற்சிக்கு பின்னால் உள்ள நோக்கங்களும் விவாதத்துக்கு உள்ளாவது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஏற்கெனவே பல பிரிவினருக்கு விதிவிலக்கு என கூறப்படும் தருணத்தில் எஞ்சியுள்ள எவருக்கு இது பொருந்தும் எனும் கவலைக்குரிய கேள்வி எழுகிறது. இந்த நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தின்போது நடந்த விவாதங்களை குறிப்பாக டாக்டர் அம்பேத்கரின் அறிவார்ந்த சமூக உணர்வுள்ள எச்சரிக்கைகளை கவனத்தில் கொள்வது அவசியம் ஆகும்.
* முந்தைய அத்தியாயம் > பொது சிவில் சட்டம் - ஓர் அறிமுகப் பார்வை
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
கருத்துப் பேழை
6 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
4 days ago