புராண காலம் தொடங்கி சமகாலம் வரை பெண்களின் உடல் மீதே ‘வீர வரலாறு’ எழுதப்படுகிறது. மன்னர்களின் போர்த்திறம் பாடிய காவியங்கள் எல்லாம் போரில் தோற்றவனின் நாட்டுப் பெண்கள் சீரழிக்கப்பட்ட கதையைப் பெருமிதப்படுத்தின. தாங்கள் கைப் பற்றிய நாட்டைச் சேர்ந்த பெண்களின் கூந்தலை அறுத்து அவற்றைக் கயிறாக முடிந்து மரங்களைக் கட்டியிழுத்த (நற்றிணை 270) கொடுமையைக் குற்றவுணர்வு சிறிதுமின்றி அரசன் என்னும் ‘ஆண்’மகனின் தீரமாகச் செதுக்கிவைத்தனர்.
வழிவழியாக வந்த இந்த ஆணாதிக்க அதிகார மனநிலைதான் மணிப்பூரின் மகள்கள் இருவரை இன்று சிதைத்திருக்கிறது. இது முரண்களின் தேசம். பண்பாடு, பாரம்பரியம், குடும்ப அமைப்பு என அனைத்திலும் பெண்ணைப் போற்றிப் பாதுகாப்பதாக ஒரு பக்கம் நாடகமாடிக்கொண்டே, மறுபக்கம் பெண்கள் மீதான அடக்குமுறைகளையும் வன்முறைகளையும் கட்டவிழ்த்துவிடுவதில் நாம் வல்லவர்கள்.
பெண்ணுக்கு யாரிடமிருந்து ‘பாதுகாப்பு’ தேவை என்பதைச் சாதுரியமாக மறைத்துவிட்டு, பாரதப் போர் தொடங்கி மணிப்பூர் கலவரம் வரைக்கும் பெண்களைத்தான் பகடைக்காய்களாகப் பலிகொடுத்துக்கொண்டிருக்கிறோம். தன் நாட்டுப் படைகள் பின்வாங்குவது தெரிந்ததுமே தங்களைத் தீயிலிட்டு அழித்துக்கொண்ட பெண்களே ஆணாதிக்கக் கொலைவெறிக்குச் சான்று.
ஒரு நாட்டை, ஓர் இனத்தை, தனி மனிதன் ஒருவனைத் தோற்கடிக்கவோ அவமானப்படுத்தவோ விரும்பினால் அந்த நாட்டையும் இனத்தையும் குடும்பத்தையும் சேர்ந்த பெண்களின் கண்ணியத்தைக் குலைத்தால் போதும் என்பது காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நடைமுறையாக இருக்கிறது. நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்ட ‘பெண் வெறுப்பு’க் கடலின் சிறுதுளிதான் மணிப்பூர் பெண்கள் மீதான வன்முறை.
வரலாற்று அவமானம்: ஒரு தரப்பினருக்கு எதிராக அதிகாரமும் ஆணாதிக்கமும் ஒன்றிணையும் புள்ளிகளில் எல்லாம் ஆண்களோடு சேர்த்துப் பெண்களும் வேட்டையாடப்படுகின்றனர். அதோடு கும்பல் மனநிலையும் இணைகிறபோது அந்தக் களம் குரூரம் நிறைந்ததாகிவிடுகிறது. ஆணுக்கு உடல் வதையாக இருப்பது, பெண்ணுக்கு உயிர் வாதையாகிவிடுகிறது. பெண்ணைச் சக உயிராக, மனிதப் பிறப்பாகப் பார்க்காமல் உடலாக மட்டுமே பார்க்கிற மனநிலையின் நீட்சியே பெண்ணுடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகள்.
சமூகத்தின் அனைத்து அடுக்குகளிலும் பெண்கள் இப்படித்தான் கையாளப்படுகிறார்கள். அது அப்பட்டமாகிவிடாதவாறு அவ்வப்போது ‘தாய்’நாடு, ‘தாய்’மொழி, தாய்மை, பெண்மை, பொறுமை என்று பலவிதமான வார்த்தை ஜாலங்களைக் கடைவிரிப்பதும் நம் பண்பாடே. மணிப்பூரின் மகள்களை ஆண்களின் கும்பல் சித்ரவதைக்குள்ளாக்கியது, இந்தியா இதுவரை காணாத காட்சியன்று. இதுபோன்ற எண்ணற்ற கொடூரங்களைத் தின்று செரித்தே இந்த நூற்றாண்டில் நின்றுகொண்டிருக்கிறோம்.
இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின்போது ஆண்களால் குதறப்பட்ட பெண்ணுடல்கள் கணக்கிலடங்காதவை. இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரத்தைத் தன் படைப்புகளில் பிரதிபலித்த சாதத் ஹசன் மன்டோ, ‘நான் எழுதியது உங்களுக்குக் களங்கமாகத் தோன்றினால், நாம் வாழும் நாடு இதைவிடக் களங்கம் நிறைந்தது என்று பொருள். என் கதைகள் சமூகத்தில் நிலவும் உண்மையைப் பிரதிபலிப்பவை’ என்றார்.
கற்பனையைவிடவும் நிதர்சனம் எவ்வளவு துயர மானது என்பதைத்தான் இது உணர்த்துகிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது சீக்கிய சமூகத்தின்மீது நடந்த கொலைவெறித் தாக்குதல், குஜராத் கலவரம், வீரப்பன் தேடுதல் வேட்டை, அரியலூர், விழுப்புரம், மணிப்பூரின் ‘அம்மா’க்கள் நடத்திய போராட்டம், உனா, ஹாத்ரஸ், டெல்லி, பதாவூன், கதுவா என நீளும் பட்டியல், நகரங்கள்தோறும் பெண்களை நாம் கொன்றுகுவித்த வரலாற்றைச் சொல்லும். ஏன்... அதே மணிப்பூரில் 2004இல் இளம்பெண்ணுக்குத் தீவிரவாத முத்திரை குத்தித் துணை ராணுவமே அவரைப் பாலியல் வேட்டையாடிக் கொன்றபோது என்ன நீதி கிடைத்தது?
கும்பல் வன்முறை: தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட குற்றங்களின் எண்ணிக்கை 2021இல் 4,28,278. பாலியல் வல்லுறவு வழக்குகளைப் பொறுத்தவரை, நாளொன்றில் சராசரியாக 87 பெண்கள் வல்லுவுறக்கு ஆளாக்கப்படுவதாகப் பதிவாகியுள்ளது. 2011 முதல் 2021க்கு இடைப்பட்ட பத்தாண்டுகளில், இந்தியாவில் பதிவான பாலியல் வல்லுறவு வழக்குகள் 87% அதிகரித்துள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் மக்களிடம் வேர்விட்டிருக்கும் கும்பல் மனநிலைக்கும் பெண்கள் மீதான வன்முறைக்கும் இடையிலான தொடர்பும் கவனத்துக்குரியது. தனிநபராகத் தவறு செய்யத் தயங்குகிறவர்கள்கூட, கூட்டத்தில் ஒருவராக மாறுகிறபோது வன்முறையைக் கையில் எடுக்கத் தயங்குவதில்லை.
மணிப்பூரில் நடைபெற்றுவரும் வன்முறைமீது அரசுகளின் கவனம் திரும்ப இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட காணொளி வெளியாக வேண்டியிருந்தது நம் ஜனநாயகப் ‘பெருமை’க்கான உரைகல்! ஒரு மாநிலத்தை, அங்கே நடைபெறுகிற வன்முறையை உலகின் பார்வையிலிருந்து மறைத்துத் தனித் தீவாக்க முடிகிற அரசுக்கு, உண்மை நிலவரத்தை அறிந்துகொண்டு கொதிப்பதற்கு 77 நாள்கள் ஆகின்றன என்பது இந்த நூற்றாண்டின் மிகச் ‘சிறந்த’ அரசியல் காட்சி.
இந்தக் கொடூரம் குறித்துப் பேசினாலே அதை அரசின் மீதான காழ்ப்பாகத் திசைதிருப்புவதோடு, இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினீர்களா, அந்தப் பிரச்சினை என்னவாயிற்று என்று எதிர்வாதம் செய்கிற ஒவ்வொருவரும் இந்தக் குற்றத்தில் பங்கேற்போர்தான்.
நாட்டின் எந்தவொரு மூலையிலும் ஒரு நாளுக்கு மேல் வன்முறை நீடிக்கிறது என்றாலே, அது ‘கட்டுப்படுத்த முடியாதது’ என்கிற முத்திரையோடு தொடரவே வழிவகுக்கப்படுகிறது என்பதற்கு மணிப்பூர் கலவரமும் விதிவிலக்கன்று. அரசும் அதிகாரமும் ஆதிக்கச் சக்திகளோடு இணைகிறபோது பெண்கள் இப்படியான சீரழிவைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
யார் குற்றவாளி? சட்டத்துக்கென்ன குறை. சதி ஒழிப்பில் தொடங்கிப் பணியிடத்தில் பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்வரை பெண்ணுக்குச் சாதகமானவை ஏராளம் உண்டு ஏட்டளவில் மட்டும். நெறிமுறைகள்படி அவை செயல்படுத்தப்பட்டிருந்தால் இந்தச் சட்டங்களுக்கான தேவையே நம் நாட்டில் இல்லாமல் போயிருக்கும்.
காணொளி வெளியான நாளில் மக்களிடையே இருந்த கொதிப்பு அடுத்தடுத்த நாள்களில் அடங்கிவிடும் என்பது ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரியும். இங்கே ஒவ்வொரு பிரச்சினையும் திட்டமிடப்பட்டுத் தனித்தனிப் பிரச்சினையாக ஆக்கப்பட்டு, மக்கள் ஒன்றி ணைந்து செயல்படுவது தடுக்கப்படுகிறது. மேலும், ஒரு பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகர்வதற்குள்ளேயே அது திசைதிருப்பப்பட்டு வேறொரு பிரச்சினையில் நம் கவனம் குவியும்படி செய்யப்படுகிறது.
தினசரிப் பாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களின் மரத்துப்போன மனநிலையோடு மறதியும் சேர்ந்து கொண்டால் ஆள்வோருக்கு அது சாதகம்தானே. இன்றைக்கு நடக்கிற கொடூரங்களை மக்கள் ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் மறந்துவிடுவார்கள் என்கிற நம்பிக்கையில்தான் பலர் இங்கே அரசியல் செய்துகொண்டிருக்கிறார்கள்.
மணிப்பூரில் ஆண்களின் ஆதிக்கவெறிக்கு இலக்காக்கப்பட்ட இரண்டு பெண்களின் நிலை குறித்தும் அவர்களுக்கான உடல்-மனநல சிகிச்சை, எதிர்கால வாழ்க்கை குறித்தும் இதுவரை எவ்வித முறையான அறிவிப்பையும் அரசு அறிவிக்காத நிலையில், இதுவரை ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த ஆறு பேர் மட்டுமா குற்றவாளிகள்? இந்திய அரசமைப்பின் அடிப்படையான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய மூன்றையும் அரசு தன்னுடைய நெறியாகக் கொள்ள வேண்டும்.
அரசு அனைவருக்குமானதாக இருக்கிறபோது மட்டுமே அது ஜனநாயக அரசு. மதம், மொழி, இனம், பாலினம் என எவ்விதப் பாகுபாடும் பக்கச்சார்பும் இல்லாமல் நீதியைப் பரிபாலனம் செய்யத் தவறினால் என்ன நிகழும் என்பதைத்தான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது அரசவையில் பார்வையாளர்களாக இருந்தவர்களில் ஒருவருக்குக்கூடவா அதைத் தடுக்கத் தோன்றவில்லை என்கிற கேள்வியைத்தான் மணிப்பூர் மகள்கள் இருவரை நிர்வாணப்படுத்திய ஆண்கள் கூட்டத்திடமும் சகல அதிகாரமும் பொருந்திய அரசிடமும் கேட்கத் தோன்றுகிறது. உங்களில் ஒருவர்கூடவா மனிதரில்லை?
- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in
To Read in English: Was there not even a single human among you?
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
20 hours ago
கருத்துப் பேழை
21 hours ago
கருத்துப் பேழை
18 hours ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
1 day ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
2 days ago
கருத்துப் பேழை
3 days ago
கருத்துப் பேழை
3 days ago