கல்வி இன்று | கல்விக் கொள்கை குழப்பத்தால் இழப்பு யாருக்கு?

By க.திருவாசகம்

தமிழ்நாட்டில் உள்ள 59 பல்கலைக்கழகங்களில், தனியார் - நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் 26, மத்திய அரசு நிதியில் செயல்படும் பல்கலைக்கழகங்கள் 2,மத்தியப் பல்கலைக்கழகங்கள் 2, சிறப்புத் தகுதிபெற்ற கல்வி நிறுவனங்கள் 7 என 37 பல்கலைக்கழகங்கள் தேசியக் கல்விக் கொள்கை (தே.ச.கொ) 2020இன்படி, பல்கலைக்கழக மானியக் குழு (UGC) அறிவித்துள்ள பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பிற 22 அரசுப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், கல்லூரி நிர்வாகத்தினர் - அங்கு பயிலும் பல லட்சம் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் செய்வதறியாது வேதனையில் உள்ளனர்.

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களின் வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசு-தனியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களின் கூட்டத்தைக் கூட்டி, தே.க.கொ. அளித்துள்ள பரிந்துரைகள் அனைத்தையும் உடனே அமல்படுத்தவும், அறிவிக்கப்பட்டுள்ள யுஜிசியின்திட்டங்களைச் செயல்படுத்தியமைக்கான அறிக்கையைச்சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தி வருகிறார்.

பல்கலைக்கழகங்களின் இணைவேந்தரான உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, தயாராகிவரும் மாநிலக் கல்விக் கொள்கையின் பரிந்துரையினை அரசு ஏற்றுக்கொண்டு அறிவித்தவுடன், அதை அமல்படுத்துவது துணைவேந்தர்களின் கடமை என்று துணைவேந்தர்கள் கூட்டத்தைக் கூட்டி வலியுறுத்தி வருகிறார்.

இதற்கிடையில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு இந்திய அளவில் தரவரிசையும் தரச்சான்றும் அளித்துவரும் தேசிய மதிப்பீடு - தரச்சான்று கவுன்சில் (NAAC), கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) ஆகிய நிறுவனங்கள், தே.க.கொ. 2020-ஐ அனைத்து நிறுவனங்களும் எந்தளவுக்கு அமல்படுத்தியுள்ளன என்று ஆண்டறிக்கையும் புள்ளிவிவரங்களும் சேகரிக்கின்றன; அதில் அமல்படுத்தியதற்கென்று மதிப்பெண்கள் அளிக்க இருக்கின்றன. இதனால் தே.க.கொ.யை அமல்படுத்தாத உயர் கல்வி நிறுவனங்கள், நாக் (NAAC), என்.ஐ.ஆர்.எஃப். (NIRF) ஆகியவற்றின் மதிப்பெண்களைக் குறைவாகப் பெற்று தேசியத் தரவரிசையிலும் தரச்சான்றிலும் பின்தங்கும் நிலை உருவாகும்.

ஆளுநர் அமல்படுத்த முடியுமா? - கல்வி, படிப்பு, ஆராய்ச்சி, பட்டம் பற்றிய எந்தவிதமான புதிய முறைகளை அமல்படுத்தும் அதிகாரம் பல்கலைக்கழகங்களின் ஆட்சிக் குழு, ஆட்சி மன்றக் குழு, கல்விக் குழு, பாடத்திட்டக் குழு ஆகியவற்றிடம்தான் உள்ளது. துணைவேந்தர் இந்தக் குழுக்களின் கூட்டங்களுக்குத் தலைமை வகித்து நடத்துவார். ஆனால், பங்குபெறும் உறுப்பினர்களின் ஆதரவும் ஒப்புதலும் இல்லாமல் துணைவேந்தர்களால் எந்த முடிவும் எடுக்க இயலாது.

தே.க.கொ.யின் பரிந்துரைகளாக, யுஜிசி அனுப்பும் திட்டங்களையும்கூட இக்குழுக்களின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே அமல்படுத்த முடியும். இந்தக் குழுக்களில் பெரும்பான்மை உறுப்பினர்கள், அரசால் நியமிக்கப்பட்ட பல துறையினைச் சேர்ந்த செயலர்கள், இயக்குநர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகள்தாம். எனவே, மத்திய அரசின் பிரதிநிதியாக, துணைவேந்தர்கள் கூட்டம் போட்டு ஆளுநர் வற்புறுத்தினாலும், அவரின் பிரதிநிதியாக ஆட்சிக் குழுவில் உள்ள இரண்டு நியமன உறுப்பினர்களைக் கொண்டு எந்த வகையிலும் தே.க.கொ.ஐ அமல்படுத்திவிட முடியாது.

கவனிக்க வேண்டிய அம்சங்கள்: யுஜிசி தற்போதுவரை அறிவுறுத்தியுள்ள அனைத்துத் திட்டங்களுமே, மாணவர்களின் - குறிப்பாக ஏழை-எளிய மாணவர்களின் கல்வி-வாழ்க்கை மேம்பாட்டுக்கு அவசியமானதாகவும் உகந்ததாகவும் உள்ளது.

கல்லூரி/ பல்கலைக்கழகத்தில் ஒரு பட்டப்படிப்பில் பயிலும் மாணவர், அதே காலகட்டத்தில், மற்றுமொரு பட்டப்படிப்பிலும் சேர்ந்து படித்து இரண்டு பட்டங்களைப் பெற வாய்ப்புத் தரப்பட்டுள்ளது. அந்த வகையில், பொருளியல் பயிலும் மாணவர் ஒருவர், இரண்டாவது படிப்பாக நேரடியாகவோ இணையவழியிலோ தரவு அறிவியலும் பயில முடியும்; முதுநிலைப் படிப்புக்கும் இது பொருந்தும்.

கல்லூரி/ பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் ஒருவர், அதே கல்லூரி அல்லது பிற கல்வி நிறுவனங்களில் குறிப்பிட்ட சில பாடங்களைப் படித்து அதன் மூலம் பெறப்படும் சான்றிதழ்கள், புள்ளிகளைத் தனது கணக்கில் இப்போது வரவுவைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம், கோவை அரசுக் கல்லூரியில் வேதியியல் படிக்கும் மாணவர் ஒருவர், ஐஐடி மும்பையில் உள்ள செயற்கை நுண்ணறிவு-இயந்திரக் கற்றல் பாடத்தை நேரடியாகவோ இணையவழியிலோ படித்து, அதன்மூலம் பெறுகின்ற சான்றிதழையும் புள்ளிகளையும் வேதியியல் பட்டத்துடன் இணைத்துக்கொள்ள முடியும்.

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் பெறுவது பெரும்பான்மை இளைஞர்களின் கனவு; ஆனால், வலுவான பொருளாதாரப் பின்புலம் கொண்ட மாணவர்களுக்கு மட்டுமே அது சாத்தியப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் பயில, ஆண்டொன்றுக்குக் குறைந்தது ரூ.20 லட்சம் கட்டணமும் பிற செலவுகளும் ஆகும். நான்கு ஆண்டு பொறியியல் படிப்புப் பயில, சுமார் ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை செலவாகிறது.

தகுதி இருந்தும் பொருளாதார வசதி இல்லாததால் வெளிநாட்டில் கல்வி பெற முடியாமல் உள்ளவர்கள் பலர். இவர்களுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், நான்கு ஆண்டுப் படிப்பில், மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் பல்கலைக்கழகத்தில் படித்துவிட்டு, கடைசி ஆண்டு மட்டும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் படித்து முடித்தால், வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாய்மொழியில் தேர்வு: பல்கலைக்கழகங்கள் அனைத்துப்பாடங்களையும் பொறியியல், மருத்துவம், கலை, அறிவியல் துறை மூலமாகத் தாய்மொழியில் வழங்கலாம் என்பதே தாய்மொழிக்குக் கொடுக்கப்பட்ட அங்கீகாரம். தற்போது, கல்லூரி/ பல்கலைக்கழகங்களில் தங்கள் தாய்மொழியிலேயே தேர்வு எழுதலாம் என்ற யுஜிசியின் சமீபத்திய அறிவிப்பு, பள்ளிப் படிப்பைத் தாய்மொழியில் பயின்று, உயர் கல்வியை ஆங்கிலத்தில் தொடர முடியாமல், பிற தகுதிகள் இருந்தும் இன்னல்படும் பல லட்சம் மாணவர்களுக்கும் உதவியாக இருப்பது கண்கூடு.

அரசின் தாமதமும் மெத்தனமும்: புதிய கல்வித் திட்டம் எதுவானாலும், அது முதலாம் ஆண்டு படிப்பில் சேருகின்றவர்களுக்குத்தான் பெரும்பாலும் பொருந்தும். நான்கு ஆண்டு இளங்கலைப் பட்டப்படிப்பு, ஒருங்கிணைந்த ஆராய்ச்சி பட்டப்படிப்பு, ஒரே காலகட்டத்தில் இரண்டு பட்டங்கள்,வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்துடன் இணைந்த பட்டங்கள் ஆகியவை 2023-2024 கல்வி ஆண்டில் சேரும் மாணவர்களிடமிருந்து தொடங்குகின்றன.

994 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இப்படியான பாடங்களுக்கு, பட்டங்களுக்கு மாணவர்களைச் சேர்க்கத் தொடங்கியுள்ளன. இதனால், பல்கலைக்கழக மாணவர்களும் பெற்றோர்களும் மிகப் பெரிய அளவில் பயன்பெறத் தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் மாநில கல்விக் கொள்கைத் தயாரிப்புக் குழு, செப்டம்பரில் அறிக்கை சமர்ப்பித்து, அதனை அரசு சட்டமன்றத்தில் ஒப்புதல் பெற்று, அமல்படுத்தும்போது ஒரு கல்வி ஆண்டு முடிந்துவிடும். அரசின் தாமதத்தால் அரசுப் பல்கலைக்கழகங்கள், அதன் ஆளுமையில் உள்ள 2,632 கல்லூரிகளில் பயிலும் பல லட்சம் மாணவர்கள், மாநில-தேசிய அளவில் பிற மாணவர்கள் பெறும் பயனைப் பெற முடியாமல் இழப்புகளையும் பாதிப்புகளையும் அடையப்போவது திண்ணம்.

இத்திட்டங்கள் தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐச் சேர்ந்தவை என்று ஒதுக்கிவிட்டால், முதல் தலைமுறையைச் சேர்ந்தவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளோர், கிராமப்புற - மலைவாழ் பகுதியில் வாழ்வோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகியோருக்கு இழப்பை ஏற்படுத்தும். எனவே, தமிழ்நாடு அரசு இது குறித்த தீர்க்கமான முடிவை விரைந்து எடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

தொடர்புக்கு: pca@ametuniv.ac.in

To Read in English: Educational policy confusion: Who will be the loser?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

மேலும்