தொகுதி மறுசீரமைப்பு: தமிழ்நாட்டுக்கு என்ன பாதிப்பு?

By டி. கார்த்திக்

தலைநகர் டெல்லியில் ‘சென்ட்ரல் விஸ்டா’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டுவிட்டது. திறப்பு விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மக்களவையில் 888 பேர், மாநிலங்களவையில் 384 பேர் அமரலாம். கூட்டுக் கூட்டத்தின்போது மக்களவையில் 1,224 பேர் அமர முடியும். இந்தக் கணக்கீடுகள் உறுப்பினர்களின் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்பதற்கான சமிஞ்கைதான். அப்படி உயரும்போது தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்ற அச்சம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இந்த அச்சம் சுமார் 50 ஆண்டுகளாக நீடித்துவருகிறது. தற்போது, மக்களவையின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 543. இந்திய அரசமைப்புச் சட்டக் கூறு 81, ஒரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறது: ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கைக்கும் அந்த மாநிலத்தின் மக்கள்தொகைக்கும் இடையேயான விகிதமானது, முடிந்த அளவுக்கு எல்லா மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.

அதேபோல, அரசமைப்புச் சட்டக் கூறு 81-இன் 3ஆவது பிரிவு, மக்கள்தொகை அடிப்படையில் உறுப்பினர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்கிறது. அதாவது, நாடாளுமன்றத்தில் உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை, கடைசியாக எடுக்கப்பட்ட மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இருக்க வேண்டும். ஒவ்வொரு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகும் அந்த எண்ணிக்கை மாறிக்கொண்டே வந்திருக்க வேண்டும். ஆனால், 1971-க்குப் பிறகு இது சாத்தியமாகவில்லை.

சமச்சீரற்ற மக்கள்தொகை: எனில், உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் அல்லவா? நிச்சயம் உயர்த்தப்பட வேண்டும். ஆனால், 50 ஆண்டுகளாக ஏன் உயர்த்தப்படவில்லை என்ற கேள்விக்கும் விடை தேட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை சற்று அதிகரிக்கவே செய்தது.

இப்போது உள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கை 1971 மக்கள்தொகை (56 கோடி) கணக்கெடுப்பின்படியானது. அதன்பிறகு, எம்.பிக்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கு இந்திய மாநிலங்கள் மாறுபட்ட விகிதங்களில் வளர்ச்சியடைந்ததே முக்கியக் காரணம்.

மக்கள் தொகையில் தென்னிந்திய மாநிலங்கள் மெதுவாகவும் வட இந்திய மாநிலங்கள் சில அதிவேகமாகவும் வளர்ச்சி அடைந்தன. இந்த ஏற்றத்தாழ்வு விகிதமே தொகுதி மறுசீரமைப்புக்குத் தடைக்கல்லாக நீடிக்கிறது. 1970-களுக்குப் பிறகு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டங்கள் இந்தியாவில் வேகம் பிடித்தன.

இதன்படி, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தென்னிந்திய மாநிலங்கள் சிறப்பாகச் செயல்படுத்தின. ஆனால், வட இந்தியாவில் சில மாநிலங்களைத் தவிர்த்து, மற்றவை இத்திட்டத்தில் முனைப்புக் காட்டவில்லை. எனவே, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தென்னிந்திய மாநிலங்களில் குறைந்தது; வட இந்தியாவில் அதிகரித்தது.

ஒத்திவைத்த இந்திரா: இதன்படி தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட்டால், வட இந்தியாவில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை உருவானது. தென்னிந்தியாவில் குறையும் சூழல் ஏற்பட்டது. மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென்னிந்திய மாநிலங்களுக்குத் தண்டனை; அதைச் செயல்படுத்தாத வட இந்திய மாநிலங்களுக்குப் பரிசு என்ற முரணான நிலை உருவானது. இதைத் தென்னிந்திய மாநிலங்கள் எதிர்த்தன. இது அரசமைப்பின் 81ஆவது கூறுக்கும் எதிராக இருந்தது.

எனவே, தொகுதிகள் மறுவரையறை, மக்கள்தொகை எண்ணிக்கைப்படி உறுப்பினர்கள் இருக்கையை அதிகரிக்கும் நடவடிக்கை 1976இல் கைவிடப்பட்டது. அந்த நடவடிக்கையை நெருக்கடிநிலை அமலில் இருந்த காலகட்டத்தில், 25 ஆண்டுகளுக்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி ஒத்திவைத்தார். இதற்காக அரசமைப்புச் சட்டம் 42இல் திருத்தம் செய்யப்பட்டது. 2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்குப் பிறகு இதைப் பார்த்துக்கொள்ளலாம் என்பது கணக்கு. அதற்குள் சீரான மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் சாத்தியமாகும் என்று நம்பப்பட்டது. ஆனால், அப்படி நடக்கவில்லை.

இந்திரா வழியில் வாஜ்பாய்: 2002இல் வாஜ்பாயும் இந்திரா காந்தியைப் பின்பற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. 2001இல் மக்கள்தொகை 102 கோடி. அதன்படி தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய முடிவெடுத்தால் தென்னிந்திய மாநிலங்கள் பாதிக்கப்படும் சூழல் மாறாமல் இருந்தது. எனவே, 2003இல் வாஜ்பாய் அரசு அரசமைப்புச் சட்டக் கூறு 84இல் திருத்தம் செய்து, அந்த நடவடிக்கையை 2026 வரை ஒத்திவைத்தது. என்றாலும் 2002இல் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் அமைக்கப்பட்டு, மக்களவை, மாநில சட்டமன்றங்களின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை மாறாமல், தொகுதிகளின் எல்லைகள் மட்டும் மாற்றியமைக்கப்பட்டன.

தற்போது புதிய நாடாளுமன்றக் கட்டிடம் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், தொகுதி மறுசீரமைப்புப் பற்றிய பேச்சுகள் எழுந்துள்ளன. 2026 நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், 2024 பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் கட்சி/கூட்டணி இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். 2026க்குப் பிறகு நடைபெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 2031இல் தொகுதிகள் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டும்.

பெருகும் வித்தியாசம்: 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள்தொகை 121 கோடி. 2021இல் நடைபெற்றிருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கரோனா பெருந்தொற்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகே அது தொடங்கப்படக்கூடும்.

பிறகுதான் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் தெரியவரும். என்றாலும், 1971-2011 இடைப்பட்ட காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் 138%, ராஜஸ்தானில் 166% மக்கள்தொகை அதிகரித்தது. ஆனால், தமிழ்நாட்டில் 75%, கேரளத்தில் 56% மட்டுமே அதிகரித்துள்ளதைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதில் பெரிய மாநிலங்கள் இடையே பெரும் வித்தியாசம் காணப்படுகிறது.

ஒரு பெண், குழந்தை பிரசவிப்பதன் சராசரி விகிதக் கணக்கீட்டையும் இதில் பொருத்திப் பார்க்கலாம். இதன்படி ஒரு பெண் 2.1 என்னும் விகிதத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால் மக்கள்தொகை நிலைபெறத் தொடங்குவதாக அர்த்தம். ஆந்திரம், கேரளம், தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்கம், இமாச்சலப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் அந்த நிலைக்கு வந்துவிட்டன.

ஆனால், இந்த விகிதம் பிஹாரில் 3.2, உத்தரப் பிரதேசத்தில் 3 என்பதாக இருக்கிறது. 1971-2011 இடைப்பட்ட காலத்தில் சமநிலை ஏற்படாத நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. இந்த முரண்பாடான சூழலில் தொகுதி மறுசீரமைப்பு தென்னிந்திய மாநிலங்களுக்குப் பாதகத்தை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

எளிதான பணியா? - அரசியல் நிபுணர் என்று அழைக்கப்படும் அலிஸ்டர் மேக்மில்லன் (Alistair McMillan), 2001ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி 647 மக்களவைத் தொகுதிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று பதிவுசெய்திருந்தார். அப்போது தமிழகத்துக்கு 39 தொகுதிகள் என்றே அவருடைய கணக்கீடு கூறியது.

தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம். இந்த விஷயத்தில் முடிவெடுப்பதில் 2023-24இல் நடைபெற உள்ள மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முக்கியப் பங்காற்றும். சட்டக்கூறு 81 சுட்டிக்காட்டும் அம்சம் சாத்தியமாகியிருக்கிறதா என்பதை இந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பே தீர்மானிக்கும்.

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் சராசரியாக 15 லட்சம் பேருக்கு ஒரு மக்களவை உறுப்பினர் இருக்கிறார். இது உத்தரப் பிரதேசத்தில் 25 லட்சமாக இருக்கிறது. நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் தொகுதி மறுசீரமைப்புக்கு நிச்சயம் தீர்வு காணப்படத்தான் வேண்டும். ஆனால், 1952, 1963, 1973இல் நடைபெற்ற மறுசீரமைப்புபோல அது சுலபமாக இருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

To Read in English: Constituency delimitation: How TN will be hit

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

21 hours ago

கருத்துப் பேழை

1 day ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

2 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

3 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

4 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

கருத்துப் பேழை

5 days ago

மேலும்