கடவுளின் நாக்கு 68: வீட்டின் தூண்கள்!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

வீட்டின் தூண்கள்!

ட்டிடக் கலை நிபுணர் ஒருவரோடு பேசிக் கொண்டிருந்தேன்.

அவர் சொன்னார்: ‘‘இப்போதெல்லாம் தூண்கள் வைத்து வீடு கட்டும் வழக்கம் போய்விட்டது. பழைய வீடுகளில் உள்ள தூண்களின் கம்பீரம் எனக்குப் பிடித்தமானது. அந்தத் தூண்கள் உறுதியின் அடையாளம். நிறைய தூண்கள் கொண்ட மண்டபங்கள் பேரழகானவை. அவை காலத்தை வென்று நிற்கின்றன!’’

உண்மை. நவீனமாக கட்டப்பட்ட வீடு எதிலும் தூண்களைக் காண முடிவதில்லைதான்.

நான் வேடிக்கையாக, ‘‘கண்ணுக்குத் தெரிகிற தூண்கள் காணாமல் போய்விட்டதைப் போலவே, கண்ணுக்குத் தெரியாத தூண்களும் காணாமல் போய்விட்டன!’’ என்று சொன்னபோது, நண்பர் புரியாதவராக என்னிடம் கேட்டார்: ‘‘அது என்ன கண்ணுக்குத் தெரியாத தூண்கள்?’’

‘‘ஒவ்வொரு வீட்டுக்கும் நான்கு அரூபமான தூண்கள் இருக்கின்றன. அவற்றின் மீதுதான் வீடு நிலை கொண்டிருக்கிறது. ஒரு தூணின் பெயர் அன்பு. ஆம், அன்பு செலுத்துதலே குடும்பத்தின் ஆதாரம். இன்னொரு தூண் உபசரித்தல். அறிந்தவர், அறியாதவர் என பேதமின்றி இன்மொழி பேசி, உணவு கொடுத்து உபசரித்தல். மூன்றாவது தூண் நல்லொழுக்கங்களையும் பண்புகளையும் கடைபிடித்தலும் கற்றுத் தருவதுமாகும். நான்காவது தூண் எளிமையும் தூய்மையும். சின்னஞ்சிறு குடிசை வீடாக இருந்தாலும் மாளிகையாக இருந்தாலும் சரி, வீட்டை இந்த நான்கு தூண்களே தாங்கிக் கொண்டிருந்தன!’’ என்று நான் விளக்கியபோது, நண்பர் வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தார்.

வீடும் கற்பிக்கலாம்

குடும்பம் என்பது எந்த பேதமும் இன்றி, ஒருவரோடு மற்றவர் அன்பு செலுத்துவதாகும். உறவுகளைப் பேணுவதே அதன் இயல்பு. தாய் தன் பிள்ளைகளுக்கு உணவிடும்போதே அன்பையும் சேர்த்து படைப்பாள். அது பிள்ளைகளின் ஊனில் கலந்துவிடும். இந்த அன்பு காலாகாலத்துக்கும் தொடரக்கூடியது.

இது போலவே, அதிதிகள் யார் வந்தாலும் வறுமையிலும் கூட அவர்களுக்கு முடிந்த வகையில் உதவிகள் செய்வதோடு உணவு கொடுத்து உபசரிப்பார்கள்.

பேச்சிலும், நடத்தையிலும், சிந்தனையிலும் நல்லதே இருக்க வேண்டும் என்பதை பாலபாடமாக வீடுதான் கற்பித்தது. சமூகத்துக்கு பயப்படாத மனிதன் கூட வீட்டுக்கு பயப் படுவான். தன்னை சொந்த தாய், தந்தை மதிக்க மாட்டாரே என அஞ்சுவான். பிள்ளைகள் வெறுத்துவிடுவார்களே என பயப்படுவான். நல்லொழுக்கங்களைப் பேணும் குடும்பமே நற்குடும்பமாக அறியப்பட்டது. இந்த ஒழுக்கமும், பண்பாடும் குழந்தை பருவத்திலேயே அறிமுகப்படுத்தபட்டு, வளர்த்தெடுக்கப்பட்டது.

எவ்வளவு வசதியிருந்தாலும், வறுமையில் இருந்தாலும் சரி, அகங்காரமின்றி எளிய வாழ்க்கையை வாழ வேண்டும். உடலையும் மனதையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடு என்பது கோயிலைப் போன்றது. சுத்தமாக, எளிமையாக, ஒளிர்தலுடன் இருக்க வேண்டும் என நினைத்தார்கள்.

இன்றைக்கு பெரும்பான்மை குடும்பங்களில் இந்த நான்கு தூண்களும் மறைந்துபோய்விட்டன. பிள்ளைகள் தாய், தந்தையை வெறுக்கிறார்கள். முதிய வயதில் வீட்டைவிட்டு துரத்தி வெளியே அனுப்பு கிறார்கள். ‘யாருக்கு வேண்டும் அன்பு? பணம் இருந்தால் மட்டும் போதும்’ என நினைக்கிறார்கள். கணவன், மனைவி உறவும் பணத்தால் மதிப்பிட முடிவதாகிவிட்டது.

குற்றங்களுக்கான விதை

உபசரிப்பு என்பது அநாவசியம் என்றாகிவிட்டது. முன்பின் தெரியாத ஒருவருக்கு ஒரு குவளை தண்ணீர் தருவதற்குக் கூட இன்று யாரும் முன்வருவதில்லை.

வீடும், கல்வி நிலையங்களும் ஒருசேர ஒழுக்கத்தை போதிப்பதை நிறுத்திக் கொண்டுவிட்டன. சகல ஒழுக்கக் கேடுகளையும் வீட்டுக்குள் தொலைக்காட்சி காட்சிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. குடி, போதை, வன்முறை போன்றவை வீட்டுக்குள் நுழையாமல் இருக்கலாம். ஆனால், காட்சி ஊடகங்களின் வழியே பிள்ளைகளுக்கு எளிதாக இவை எல்லாம் அறிமுகமானதோடு, அதுதான் கொண்டாட்டம், அதுதான் சாகசம் என்ற மன நிலையையும் உருவாக்கிவிடுகிறது.

வீடு சிறியதோ, பெரியதோ எதிலும் எளிமையும் தூய்மையும் இல்லை. நுகர்வு கலாச்சாரம் தேவையற்ற பொருட்களை வாங்கி, வீட்டை குப்பை மேடாக்கிவிட்டிருக்கிறது. ‘எல்லாவற்றுக்கும் ஆசைப்படு’ என நுகர்வு பண்பாடு தூண்டுகிறது. அடையமுடியாத ஆசைகளே குற்றங்களுக்கான விதையாக உருமாறுகிறது.

நவீன வீடுகள் நவீன மனிதனைப் போல அடைத்து சாத்தப்பட்டதாகிவிட்டன. வாழ்வின் ஆதாரங்கள்தான் தூண்கள் என உருவகப்படுத்தபட்டன. இந்தத் தூண்களை இழப்பது உண்மையில் ஒரு சமூகத்துக்கு பெரும் கேடுதான்!

காசுக்கு கிடைக்குமா அன்பு?

பிரெஞ்சு நாட்டுப்புறக் கதையொன்று இதைப் பற்றிப் பேசுகிறது.

தெற்கு பிரான்சில் உள்ள ஒரு கிராமத்தில், ஒருவன் அடகுக் கடை நடத்தி வந்தான். அவன் மக்களை ஏமாற்றி வாழ்ந்து கொண்டிருந்தான். ஏழை, எளிய மக்களின் அடகு வைக்கப்பட்டப் பொருட்களுக்கு அநியாயமாக வட்டி வாங்குவான். தாங்கள் அடகு வைத்த பொருட்களை அவனிடம் இருந்து மீட்க முடியாத அளவுக்கு அவனது வட்டி மக்களை வாட்டியது. மீட்க முடியாத பொருட்களை விற்று நிறைய பணம் சேர்ந்தான். அவன் மனைவியும் இரக்க குணமற்றவள். அந்த அடகு கடைக்காரனுக்கு பெரிய மாளிகை கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு.

அதன்படி அவன் ஒரு வீடு கட்ட ஆரம்பித்தான். பாதி வீடு கட்டிக்கொண்டிருக்கும்போது, திடீரென ஒருநாள் அக்கட்டிடத்தின் வலது பக்கச் சுவர் சரிந்து விழுந்தது. ‘இது என்ன சோதனை?’ என நினைத்து, மறுபடியும் அந்தச் சுவரை எடுத்துக் கட்டினான். மறுபடியும் அந்தச் சுவர் இடிந்து விழுந்தது. ‘இது எதனால் ஏற்படுகிறது?’ எனத் தெரியாமல் குழம்பிப் போனான் அடகு கடைக்காரன். உள்ளுர் பாதிரியாரிடம் சென்று ஆலோசனை கேட்டான்.

அவர் சொன்னார்: ‘‘உன் பாவம்தான் உனது புதிய வீட்டை கட்ட முடியாமல் தடுக்கிறது. உன்னை யார் மனதில் அன்போடு நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் ஒரு கல்லை எடுத்து வைத்து கட்டினால் மட்டுமே சுவர் நிற்கும்!’’

‘தன்னைத்தான் ஊரில் எவருக்குமே பிடிக்காதே. தன் மீது யார் அன்பு செலுத்துவார்கள்?’ எனக் குழம்பிப் போனான் அடகு கடைக்காரன். ‘காசு கொடுத்தால், அந்தக் காசுக்காகவாவது தன் மீது நிச்சயம் அன்பு செலுத்துவார்கள்’ என நினைத்து, காசு கொடுத்து ஆட்களை அழைத்து வந்து, ஒவ்வொருவராக கல்லை எடுத்துத் தரச் சொல்லி, வீட்டின் சுவரை கட்ட ஆரம்பித்தான். ஆனால், அவன் அழைத்து வந்த நபர்கள் எடுத்துக் கொடுத்த, எந்தக் கல்லாலும் அந்தச் சுவர் நிற்கவே இல்லை. மாதங்கள் போய்க் கொண்டேயிருந்தன.

‘தன் மீது உண்மையான அன்பு கொண்ட ஒருவர் கூட இல்லையே. இவ்வளவு நாட்களில் அப்படி ஒரு மனிதனை தான் சம்பாதிக்கவே இல்லை!’ என்பதை அந்த அடகு கடைக்காரன் உணர்ந்துகொண்டான்.

பாசம் வெளுப்பதில்லை

பின்னொரு நாள், உடம்பெல்லாம் கொப்பளங்களுடன் ஒருவன் அந்த ஊருக்கு வந்திருந்தான். அடகு கடைக் காரனின் சுவர் விஷயத்தை கேள்விபட்ட அந்தப் புதியவன். ‘‘நான் வேண்டுமானால் ஒரு கல்லை எடுத்து தரட்டுமா..?’’ எனக் கேட்டான்.

அடகு கடைக்காரனுக்கு அவனை பார்த்தாலே குமட்டிக் கொண்டு வந்தது. ஆனாலும், கல்லை எடுத்துத் தர அவனுக்கு அனுமதி தந்தான்.

அந்தப் புதியவன் ஒரு கல்லை எடுத்து வைத்து கட்டியதும், அந்த வலது பக்கச் சுவர் சரியாமல் நிமிர்ந்து நின்றது. இதைப் பார்த்த ஊர் மக்கள் வியந்தார்கள்.

அடகு கடைக்காரன் அவனை பார்த்து, ‘‘என் மீது அன்பு கொண்ட நீ யார்?’’ எனக் கேட்டான்.

‘‘இளம் வயதில் உன்னால் வீட்டைவிட்டு துரத்தப்பட்ட உனது தம்பிதான் நான். என் சொத்துகளைப் பறித்துக் கொண்டு, என்னை துரத்திவிட்டாய். அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு, நோயாளியாகி இப்போது திரும்பி வந்திருக்கிறேன். ஆயிரம் பேர் உன்னை வெறுத்தாலும், உன் மீதான எனது அன்பு மாறவே இல்லை!’’ என்றான் பாசம் பொங்க அந்தப் புதியவன். அதைக் கேட்ட அடகு கடைக்காரன் ‘ஊரே தன்னை வெறுக்கிறது. விரட்டி அடிக்கப்பட்ட தம்பியோ தன்னை நேசிக்கிறான். ரத்த உறவின் வலிமை இதுதானோ’ என கண்ணீர்விட்டான்.

அடகு கடைக்காரன் மனம் திருந்தியவனாகச் சொன்னான்: ‘‘கல்லும் மண்ணும் கொண்டு கட்டுகிற வீடு நிலைப்பதில்லை. அன்பால் கட்டப்படும் வீடே நிலைத்து நிற்கக் கூடியது என உணர்ந்து கொண்டேன். இனி, யாரையும் நான் ஏமாற்ற மாட்டேன். என் வீட்டில் இனி பசித்தோருக்கு உணவிடப்படும். என் தம்பியும் எங்களோடு வாழ்வான்!’’

காலம்... வீடு கட்டுவதில் எத்தனையோ மாற்றங்களை, புதுமைகளை உருவாக்கிவிட்டது. ஆனால், வீட்டில் வசிக்கும் மனிதர்களின் அன்பும் அக்கறையும் எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடியதுதானே. அதை ஏன் கைவிட வேண்டும்?

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பதிய: writerramki@gmail.vom

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்