ஊ
ன்றிய கம்புடனும் சிரித்த முகத்தோடும் ‘ஜெய்ஜாண்டிக்காக’ வந்து கட்டிலில் அமர்வாள். ஒரு பெரிய்ய கதைப் புத்தகம் அவள்.
யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளுவாள். அந்த பாரியான (பெரிய) உடம்புக்கு வசதியான கட்டில் தான் வேணும் உட்கார.
ஒருமுறை அந்தப் பாட்டி சொன்னாள்:
பச்சைக் குழந்தைகள் விரல் சூம்பும் வழக்கமெல்லாம் முந்தி கிடையாது. இப்பொ வந்ததுதாம் அதெல்லாம்; செழும்பரப் பால் கொண்ட மார்கள் கொண்டது நம்மது. முதன்முதலில் பால் காணாமல் குழந்தை அழத் தொடங்கியதும் அந்தத் தாய் ‘பெருமாட்டியே...’ என்று அழ ஆரம்பித்தபோது, அவள் காதில் பெருமாட்டி வந்து சொன்னது, ‘ ‘அந்தக் குழந்தையின் கைப் பெருவிரலை எடுத்து அதன் வாயிலே வை...’’ என்று.
பெரு விரலை குழந்தை தன் வாயில் வைத்ததும் அந்த விரலில் இருந்து அமிர்தப் பால் சுரந்து வந்ததாம். பெருமாட்டி காமதேனு அல்லவா..? குழந்தையின் வயிறு ரொம்பி, ஆனந்தமாகத் தூங்கியதாம்!
அன்றைய நாளில் இருந்து தான் இந்தக் குழந்தைகள் விரல் சூம்ப ஆரம்பித்தனவாம் என்றாள் கண்ணுப் பாட்டி.
ஆற்றைக் கடக்கும்போது பசியினால் குழந்தை அலற ஆரம்பித்தபோது, பெற்ற தாய் ஆற்றுத் தண்ணீரை அள்ளி குழந்தையின் வாயில் ஊற்றியதும் அந்தத் தண்ணீர் பாலாக மாறிய கதையும் இந்த கண்ணுப் பாட்டி சொன்னதுதான்.
‘‘பெற்ற தாய் பெற்ற குழந்தையை முத்தமிடும் வயணங்களைச் சொல்லுங்கொ’’ என்று பாட்டியிடம் கேட்டார் கள்.
இந்தப் பாட்டி தமிழ்ப் பெரியார் குடும்பத்தில் இருந்து வந்தவர். சீர்வில்லிபுத்தூர் அருகே ஓரூர். கேட்கச் சுவையாக இருக்கும். கண்ணுப்பாட்டி சொன்னாள்: முகர்வுதான் முத்தத்தின் அடிப்படை. இழுத்து இழுத்து முகர்ந்து அடுத்த முகர்வு அழுத்த முத்தமாகி விடும். இப்படி முத்தம் குழந்தையின் உள்ளங்காலில் இருந்து தொடங்கும்.
உடம்பை விட உள்ளங்காலின் மிருதுத் தன்மை நம்மை சொக்க வைக்கும். அந்த உள்ளங்காலால் நமது கண்களுக்கு ஒத்தடம் வைக்கலாம்; நெற்றியிலும், மூக்கிலும் தடவி மீண்டும் மீண்டும் முத்தலாம்.
பச்சைக் குழந்தையின் முகத்தில் முத்தமிட நாட்கள் செல்லும்; அவசரப்படக் கூடாது.
பள்ளியறை முத்தங்கள் என்பது வேறெ. அதை வெவரமா இன்னொரு நாளைக்குச் சொல்வோம்!’’
‘‘ம்... ம்... என்ன பாட்டி நீங்க..?’’ என்று சிறுசுகள் ரொம்பவும் சொணங்கினார்கள் (சிணுங்கினார்கள் என்கி றதுதான் சொணங்கினார்கள் என்பது). பாட்டியின் மேலே விழாத குறையாக.
பாட்டி அவர்களுக்கெல்லாம் நாடி தடவி - முத்தம் தருவது போல ஜாடை செய்தாள்!
‘‘நாடி முத்தமா? தடவு முத்தமா? தொட்டு முத்தமா?’’
‘‘அப்படியும் சொல்லலாம்... தடவாமல் ஏது? கட்டி முத்தம் என்பது, ஆவிச் சேர்த்துக் கட்டிக் கொடுப்பது. வயசு கூடக் கூட விதங்களும் கூடிக்கொண்டே போகும்!’’
‘ ‘அதென்ன இழுகி முத்தம்?’’
‘ ‘ஆமா..ஆமா... தேய்ப்பு முத்தமும் உண்டே!’’
‘ ‘கடி முத்தம்?’’
‘‘பொய்க்கடி முத்தம்... (நாய்களுக்குப் பிரியமானது) சுவை முத்தம்... கூடியது!’’
‘‘நாக்கு முத்தம்’’ என்று பாட்டி சொன்னவுடன்,
அவரது முதுகில் யாரோ ஒரு பொய் அடி கொடுத்தார்கள்.
‘‘கொன்னுராதேங்கடி; கொன்னுராதேங்கடி...’’ பாட்டியின் பொய்க் குரலும் கேட்டது.
‘‘பாட்டீ நீ உறிஞ்சு முத்தத்தைப் பற்றிச் சொன்னியா? மறைச்சிதானே வெச்சுக்கிட்டே?’’
‘ ‘தேவுடா என்னைக் காப்பாத்தூ...’’ இதுவும் பொய்க் கூவல்தான்.
பாட்டி வைத்தியம் என்றுதான் உண்டு; தாத்தா வைத்தியம் என்று கிடையாது.
பெண்ணிலிருந்து வளர்ந்ததுதான் எல்லாமே. குழந்தை வைத்தியத்தின் மூலமாக பாட்டி வைத்தியம் உண்டானது என்றுகூட சொல்லலாம்.
உடல் தளர்ந்து வயது நிறைந்த ஒரு பாட்டியின் மேல் பார்வையில் ஒவ்வொரு குடும்பமும் வளர்ந்த காலம் அது.
‘வைத்திய ரகசியங்கள்’ என்று ஆனது எல்லாம் ஆண்களின் கை களுக்குப் போன பிறகுதான்.
விடாமல் குழந்தை அழுதுகொண்டே இருந்தால் அதன் காரணம், பெற்ற தாய்க்குத் தெரிவதற்கு முன் அந்த வீட்டுப் பாட்டிக்குத் தெரிந்துவிடும்.
பச்சை நிறத்தில் குழந்தை கழிந்துகொண்டே இருந்தால் ‘‘ஒரு சங்கு கழுதைப் பால் கொடு...’’ என்பாள்.
கழுதைப் பால் வயிற்றுக்குள் போனதும் குழந்தை சிரிக்கும்!
‘அழுத பிள்ளையும் சிரிச்சதாம்
கழுதைப் பாலையும் குடிச்சதாம்’ என்கிறது ஒரு சொலவம்.
கிராமப்புறங்களில் கழுதைப் பால் கிடைத்த காலம் அது.
கழுதை விடும் மூச்சுக் காற்று கூட குழந்தையின் வைத்தியத்துக்கு உதவியது.
‘‘பிறளி எண்ணெய்...
கணை எண்ணெய்...
பிள்ளைக் கெண்ணெய்...’’ - என்ற விற்பனைக் குரல் கேட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
புதுமைகளை வரவேற்கும் அதே காலத்தில் பழமைகளை மறந்தார்கள்.
இப்பொ ஊருக்குப் போனால் எங்கேயாவது நமது பாட்டிமார்கள் கண்ணுக்குத் தட்டுப்படுவார்களா..?
பாட்டி என்று இருந்தால்தானே முருகனும் வருவான் ‘என்ன பழம் வேணும்?’ என்று கேட்க...
பாட்டியும் இல்லை; முருகனும் வருவதில்லை!
- நிறைந்தது -
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago