எட்டுத் தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து, பரிபாடல், புறநானூறு ஆகிய மூன்றைத் தவிர நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு ஆகிய ஐந்தும் அகத்துறையைப் பாடும் நூல்கள். அவற்றுள் அகம் என்பதைப் பெயரில் தாங்கியுள்ள சிறப்பு அகநானூறுக்கே உண்டு. இதில் தொகுக்கப்பட்ட பாடல்கள் 13 அடிகள் முதல் 31 அடிகள்வரை கொண்டு நீண்ட பாடல்களாக இருப்பதால் இதற்கு ‘நெடுந்தொகை’ என்ற பெயரும் உண்டு.
முதல் 120 பாடல்களை களிற்றியானை நிரை எனவும், அடுத்த 180 பாடல்களை மணிமிடைபவளம் எனவும், இறுதியாக அமைந்த 100 பாடல்களை நித்திலக்கோவை எனவும், அகநானூற்றை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரித்துக் கூறுவர்.சங்க இலக்கியப் பிரதிகள் பலவற்றையும் பதிப்பித்த உ.வே.சா இதன் சுவடிகள் பலவற்றையும் தேடித் தொகுத்து வைத்திருந்தபோதிலும் தன் வாழ்நாளில் அதைப் பதிப்பிக்கவில்லை.
அகநானூற்றை முதன்முதலில் பதிப்பித்தவர் மயிலாப்பூர் கம்பர் விலாசத்தைச் சேர்ந்த ஸ்ரீவத்ஸக்ரவர்த்தி ராஜகோபாலார்யன். ராகவையங்கார் துணையோடு மூன்று தனித்தனி பகுதிகளாகவும் பின்னர், 1933-ல் ஒரே தொகுப்பாகவும் அகநானூற்றை அவர் வெளியிட்டார். அதன் பின்னர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், வேங்கடாசலம்பிள்ளை ஆகியோரின் உரையோடுகூடிய தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பதிப்பு; மூலத்தை மட்டும் கொண்ட மர்ரே எஸ்.ராஜம் பதிப்பு; மாணிக்கனார் பதிப்பு; பொ.வே.சோமசுந்தரனார் பதிப்பு; 5 சுவடிகள், 8 கையெழுத்துப் பிரதிகள் ஆகியவற்றை ஒப்புநோக்கி மூன்று பாகங்களாக பேராசிரியர் வே.சிவசுப்பிரமணியனால் பதிப்பிக்கப்பட்ட உ.வே.சா நூல் நிலையப் பதிப்பு எனப் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. அவற்றையெல்லாம் ஒப்புநோக்கி அகநானூறு முழுவதையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தந்துள்ளார் ஜார்ஜ் எல்.ஹார்ட். தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட பாடுபட்டவரும் உலகப் புகழ்பெற்ற தமிழ் அறிஞருமான ஜார்ஜ் எல்.ஹார்ட்டின் ஐந்து ஆண்டுகால கடும் உழைப்பின் விளைபொருளாக இந்த மொழிபெயர்ப்பு வெளியாகியிருக்கிறது.
சங்கப் பாடல்களை மொழிபெயர்ப்பதில் உள்ள சிக்கல்களை ஏ.கே.ராமானுஜன் சுமார் 50ஆண்டுகளுக்கு முன்பே விரிவாக விவாதித்திருக்கிறார். தமிழின் வாக்கிய அமைப்பு ஆங்கில வாக்கிய அமைப்புக்கு நேர் எதிராக இருப்பதால் ஒரு பழந்தமிழ்க் கவிதையை ஆங்கிலத்தில் அப்படியே மொழிபெயர்ப்பது மிகப்பெரிய சவால் என்று கூறியுள்ள அவர், கவிதை என்பது ‘ஆகச் சிறந்த சொற்களை ஆகச் சிறந்த ஒழுங்கில் அமைப்பது’ என்பதைச் சுட்டிக்காட்டி மூல வாக்கியத்தின் புதிர் மாறாமலும் அதேவேளை ஆங்கில மொழியிலிருந்து அது அந்நியப்பட்டுவிடாமலும் தனது மொழிபெயர்ப்புகளைச் செய்ததாகக் கூறியுள்ளார். (ஆன் ட்ரான்ஸ்லேட்டிங் எ தமிழ் பொயம், 1968, இன் த கலக்ட்டெட் எஸ்ஸேஸ் ஆஃப் ஏ.கே. ராமானுஜன், ஓ.யூ.பி., 1999)
ஜார்ஜ் ஹார்ட்டின் மொழிபெயர்ப்பு அணுகுமுறை ராமானுஜனிடமிருந்து வேறுபட்டதாக இருக்கிறது. “சங்கப் புலவர்கள் தமது கருத்தொன்றை இன்னொன்றுக்குள் பொதித்து அதை வேறொன்றில் பொதித்துத் தரும் உத்தியைக் கையாண்டிருக்கின்றனர்.
அதனால் சங்கக் கவிதை ஒரு சிக்கலான மொழியியல் அமைப்பாக உள்ளது. அந்த வடிவத்தை அப்படியே ஆங்கிலத்தில் எளிதாகத் தர முடியாது. ஏ.கே. ராமானுஜன் முதலான மொழிபெயர்ப்பாளர்கள் ஒரு கவிதையின் பல்வேறு கூறுகளை ஒரு பக்கத்தின் பல்வேறு இடங்களில் பிரித்து வைப்பதன்மூலம் கவிதையின் ஒவ்வொரு பகுதியின் முழுமையையும் வாசகருக்கு உணர்த்தும் முறையைக் கடைப்பிடித்தார்கள். ஆனால், மூலக் கவிதை அப்படி உடைத்து எழுதப்படவில்லை. எனவே, அது எப்படி இருக்கிறதோ அப்படியே நான் மொழிபெயர்த்திருக்கிறேன் ” என அதை விளக்குகிறார் ஜார்ஜ் ஹார்ட்.
“புறநானூறு மொழிபெயர்ப்பின்போது கையாண்ட அணுகுமுறையைத்தான் இப்போதும் நான் பின்பற்றினேன். தமிழில் எத்தனை வரிகள் உள்ளனவோ அதே எண்ணிக்கை ஆங்கில மொழிபெயர்ப்பிலும் இருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொண்டேன்" என ஹார்ட் கூறியிருப்பது சங்க இலக்கிய மொழிபெயர்ப்பில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய விதியென்று தோன்றுகிறது.
சங்க இலக்கியப் பாடல்கள் யாவும் ஒருசிலரால் ஒரே காலத்தில் பல பெயர்களில் திட்டமிட்டு எழுதப்பட்டவை எனக் குற்றம்சாட்டும் ஹெர்மன் டீக்கன் போன்றவர்களுக்குச் சரியான பதிலையும் தனது முன்னுரையில் ஜார்ஜ் ஹார்ட் கொடுத்திருக்கிறார். “சம்ஸ்கிருதத்திலும் பல்வேறு புலவர்கள் எழுதிய பாடல்களைக் கொண்ட ‘சுபாஸிதரத்னகோஸா’ போன்ற தொகை நூல்கள் உள்ளன. அப்படியிருக்கும்போது அகநானூறு மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டிருக்காது என எண்ணுவதற்கு எந்தக் காரணமும் இல்லை. அதில் அதிகமான பாடல்களை எழுதியுள்ள கபிலர் மற்றும் பரணரின் நடை வெவ்வேறாகவும் தனித்துவம் கொண்டவையாகவும் இருக்கின்றன” என அவர் விளக்கமளித்துள்ளார்.
"எனது மொழிபெயர்ப்பில் வெளிப்படும் குரல் என்னுடையதாக இருக்க வேண்டும் என்பதால் இந்தப் பிரதியின் பிற மொழிபெயர்ப்புகளைப் படிப்பதை நான் தவிர்த்துவிட்டேன்" என முன்னுரையில் ஜார்ஜ் ஹார்ட் குறிப்பிடுவது ஒருவிதத்தில் சரியென்றே தோன்றுகிறது.
சீனப் பேரரசர் ஒருவர் மலையொன்றைக் குடைந்து பாதை அமைக்க ஆணையிட்டாராம். அதை விரைவாகச் செய்து முடிக்க வேண்டுமென்றால் மலையின் இரண்டு பகுதிகளிலிருந்தும் ஆரம்பித்துக் குடைந்துகொண்டே வர வேண்டும். இரண்டும் சந்திக்கும்போது பாதை நிறைவடைந்துவிடும் எனப் பொறியாளர் யோசனை கூறினாராம். இரண்டும் சந்திக்கவில்லையென்றால் என்ன ஆவது? எனப் பேரரசர் கேட்டபோது ‘சந்திக்கவில்லையென்றால் நமக்கு இரண்டு பாதைகள் கிடைத்துவிடும்’ என்றாராம் பொறியாளர். இந்தக் கதையைக் கூறிவிட்டு ‘மொழிபெயர்ப்பும் அப்படித்தான், ஒரு மொழியில் இருப்பதற்கு நெருக்கமாக மொழிபெயர்ப்பு அமையவில்லை. ஆனால், அது மூலக் கவிதையை எப்படியோ தன்னுள் கொண்டுவந்திருக்கிறது என்றால் ஒரு கவிதைக்குப் பதிலாக நமக்கு இரண்டு கவிதைகள் கிடைத்துவிடும் “ என்று நகைச்சுவையோடு தனது கட்டுரையை முடித்திருப்பார் ஏ.கே.ராமானுஜன்.
ஜார்ஜ் ஹார்ட் செய்திருக்கும் மொழிபெயர்ப்பு மூலத்துக்கு விசுவாசமாக இருக்கிறது, கவித்துவத்தோடும் திகழ்கிறது. எனவே, ஆங்கில வாசகர்களுக்குக் கிடைத்திருப்பது ஜார்ஜ் ஹார்ட் புதிதாக எழுதிய நானூறு ஆங்கிலக் கவிதைகள் அல்ல, சங்க இலக்கியமான அகநானூற்றின் நம்பகமான உயிர்த்துடிப்புகொண்ட மொழிபெயர்ப்பு.
-ரவிக்குமார், செம்மொழித் தமிழாய்வுமத்திய நிறுவனத்தின் எண்பேராயக் குழு உறுப்பினர்களில் ஒருவராக இருந்தவர், மணற்கேணி ஆய்விதழின் ஆசிரியர்,விசிக பொதுச்செயலாளர். தொடர்புக்கு: adheedhan@gmail.com
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago