வே.அலெக்ஸ்: பெரிதினும் பெரிது விரும்பிய பதிப்பாளர்

By ஸாலின் ராஜாங்கம்

எழுத்துப் பதிப்பகம் அலெக்ஸ் என்றறியப்பட்ட வே.அலெக்ஸ் நோயுற்றிருந்த நிலையில் கடந்த வாரம் மதுரையில் மரணமடைந்தார். தலித் கலை, இலக்கியம் மற்றும் வரலாறு சார்ந்து முக்கியமான பங்களிப்புகளை வழங்கியிருப்பவர் அவர். அந்த வகையில் அவரைப் பற்றி பலவற்றைக் கூற முடியும். எனினும் பதிப்பாளர் என்ற அவரின் அடையாளம் முதன்மையானது. பதிப்பாளராக அவர் வெளியிட்ட நூல்கள் குறைவானவை என்றாலும் வெளியிட்ட நூல்களின் உள்ளடக்கம் என்ற வகையில் அந்நூல்கள் வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை.

தலித் வரலாற்று வரிசை என்கிற பொதுத் தலைப்பின் கீழ் 2009-ம் ஆண்டு அவர் வெளியிட்ட நான்கு நூல்கள் தலித் வரலாற்றியலின் இடைவெளிகளை இட்டுநிரப்ப உதவியதோடு நவீனத் தமிழ் அரசியல் வரலாற்றையும் புதுப்பித்துப் பார்ப்பதற்குப் பயன்படக்கூடியவையாக இருந்தன. பஞ்சமி நில உரிமை - முதல் தொகுதி, எம்.சி.ராஜா சிந்தனைகள் - முதல் தொகுதி, தலித் மக்களும் கல்வியும், தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும் ஆகிய நான்கு நூல்களே அவை. இந்நான்கு நூல்களுக்குமே சில பொதுத்தன்மைகள் உண்டு. நான்கு நூல்களும் ஆங்கிலத்திலிருந்து முதன்முறையாகத் தமிழுக்கு வந்தவை. இதில் முதல் மூன்று நூல்கள் அலெக்ஸ் திரட்டிய மூலத் தரவுகளின் ஆவணத் தொகுப்புகள். கடைசி நூல் மட்டும் வரலாற்றாய்வாளர் தி.பெ.கமலநாதனால் நேரடியாக எழுதப்பட்டது. மேலும், நவீனத் தமிழக அரசியலின் தோற்றுவாய்க் காலமான 19-ம் நூற்றாண்டின் கடைசியிலும் 20-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் நிலவிய தலித் செயல்பாடுகளையும் சிந்தனைகளையும் இத்தொகுப்புகள் உள்ளடக்கமாகக் கொண்டிருந்தன. 1990-களில் உருவான புதியவகை தலித் எழுச்சியை அரசியல் தளத்திலானதாக மட்டுமல்லாமல், தனித்துவமான அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாளமாக மீட்டெடுத்துக்கொள்வதற்கான வரலாற்றுத் தரவுகளை அத்தொகுப்பு கள் கொண்டிருந்தன. ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ வெளியானதற்குப் பிறகு, தமிழில் விரிந்த வரலாற்றுப் பெறுமானத்தை வழங்கியவை என்று இந்நூல்களைக் குறிப்பிடலாம்.

வடிவமும் ஓர் அரசியலே!

இந்த வரலாற்றுத் தரவுகளைத் தொகுத்துப் பதிப்பிக்க வேண்டுமென்பதோடு அவை எவ்வாறு பதிப்பிக்கப்பட வேண்டுமென்பதிலும் அலெக்ஸுக்கு இருந்த பார்வைதான் அவரைப் பதிப்புலகம் சார்ந்து நினைவுகூரக் காரணம். நூல்களுக்கான தலைப்பு, அட்டை வடிவம், ஓவியம், தாள், எழுத்துரு, உள்ளடக்கம் வகைப்படுத்தப்படும் முறை முன்னுரை அல்லது அணிந்துரை வழங்குவோரை இனங்காணுதல் ஆகிய ஒவ்வொன்றை யும் அவர் மிகவும் கவனமாகத் திட்டமிடுவார். கால தாமதம் ஆனபோதிலும் அவற்றிலிருந்து அவர் சமரசம் செய்துகொண்டதில்லை. உள்ளடக்கம் மட்டுமல்லாது வடிவமும் சேர்ந்ததே நூல் என்ற கருத்து அவருக்கிருந்தது. தலித் அரசியல், வரலாறு தொடர்பான நூல்கள் உள்ளடக்கத்தில் முந்திவிட்டு வடிவத்தில் மட்டும் ‘பொருந்தாத எளிமை’யைக் கொண்டிருக்கும் நிலையை மாற்றுவதும் அரசியலே என்று அலெக்ஸ் கூறினார். இவை மட்டுமல்லாது இந்நான்கு நூல்களி லிருந்த தரவுகளும் அவரால் நீண்ட காலம், நீண்ட பயணம் மேற்கொண்டு திரட்டப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அலெக்ஸ் ஆய்வாள ராகவும் சிந்தனையாளராகவும் செயல்பட்டிருக்கிறார். தனிநபர்கள், அரசு மற்றும் தனியார் ஆவணக் காப்பகங் கள் என்று அலைந்து திரட்டியவை இந்தத் தரவுகள். சிறிதும் பெரிதுமான நூல்கள், பிரசுரங்கள், அரசு ஆவணங்கள், நாட்குறிப்புப் பதிவுகள், செய்தித்தாள் குறிப்புகள், மேடைப் பேச்சுகள், நேர்காணல்கள் என்று திரட்டியவற்றை உரிய தலைப்புகள், பின்னிணைப்புகள், சொல்லடைவுகள் என்று தொகுத்து அலெக்ஸ் இந்நூல்களைப் பதிப்பித்தார்.

ஒரு பெயராகவும் சிறிய நூலொன்றின் ஆசிரியராகவும் மட்டுமே அறியப்பட்டுவந்த தலித் அரசியல் ஆளுமை யான எம்.சி.ராஜாவைப் பற்றி ஏறக்குறைய 400 பக்கங்களை எட்டும் அளவிலான ‘எம்.சி.ராஜா சிந்தனைகள்’ என்ற நூல் மூலம் அரைகுறையாகப் புரிந்துகொள்ளப் பட்டிருந்த ராஜாவை விரிந்த பின்புலத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது. அதே போல தலித் மக்களுக்கு ஆங்கிலேயர் காலத்தில் 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் இலவசமாக வழங்கப்படுவதற்குக் காரண மான திரமென்ஹீர் என்ற அன்றைய செங்கல்பட்டு மாவட்ட கலெக்டரின் அறிக்கையை உரிய முன்னுரை, பின்னிணைப்புகள் ஆகியவற்றோடு ‘பஞ்சமி நில உரிமை’ என்ற நூலாக அலெக்ஸ் பதிப்பித்திருந்தார்.

பதிப்புப் பயணங்கள்

பதிப்பு முயற்சிகளுக்கெல்லாம் முன்னதாக, தென் தமிழக சாதி எதிர்ப்பு அடையாளமான இம்மானுவேல் சேகரனின் முன்னோடி பேரையூர் பெருமாள் பீட்டர் பற்றி 1990-களில் ‘கரிசலில் ஓர் ஊருணி’ என்ற நூலை அலெக்ஸ் எழுதினார். அதன்பிறகு அவர் தனித்து எழுதவே இல்லை. நேரடியாக எழுதுவதில் அவருக்குத் தயக்கமிருந்தது. அது எழுத்தின் மீது அவருக்கிருந்த அக்கறையிலிருந்து பிறந்த தயக்கம். தரவுகளை ஆவணங்களாகத் தொகுப்பவராக இருந்த அலெக்ஸ் அவற்றைத் தேர்ந்த புனைவின் மொழியில் கதையாடலாக மாற்றித் தக்கவைக்க வேண்டுமென்ற ஓர்மை கொண்டிருந்தார். அதன்படி, 19-ம் நூற்றாண்டு இறுதி யில் நிகழ்ந்த சென்னை ஐஸ்ஹவுஸ் போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் எழுதிய வரலாற்றுப் புனைவான ‘வெள்ளை யானை’ நாவலை அவர் பதிப்பித்தார். தொடர்ந்து, ஜெயமோகனின் ‘அறம்’ தொகுப்பில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கலெக்டரின் வாழ்வைப் பேசுவதாக அமைந்திருந்த ‘நூறு நாற்காலிகள்’ கதையையும், காலனியக் காலத்தின் உப்புத் தடையைப் பற்றி ராய் மாக்ஸம் எழுதிய ‘உப்பு வேலி’ நூலையும் அலெக்ஸ் பதிப்பித்தார்.

ஈழத்துப் படைப்புகளை இங்கே வெளியிட வேண்டி இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட அவர், ஈழத்து நூல் வரிசை என்ற தலைப்பின் கீழ் 5 நூல்களை வெளியிட விரும்பியிருந்தார். அவற்றுள் தெணியான், தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் இரண்டு நூல்களை மட்டுமே அவரால் பதிப்பிக்க முடிந்தது. மலையகத் தமிழர் உரிமைப் போராட்டம் பற்றிய வரலாற்று நூலொன்றையும் அய்யன்காளி பற்றிய நூல் ஒன்றை யும் பதிப்பிப்பதில் ஈடுபட்டிருந்த அவரை மரணம் வழி மறித்துக்கொண்டது. அலெக்ஸ் எப்போதும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளாதவர். பதிப்பு தொடர்பாக அலெக்ஸுக்கு நிறைய கனவுகள் இருந்தன. 51 என்பது சாகும் வயதல்ல. ஆனால், உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் தான் பதிப்பிக்க எண்ணியிருந்த நூல்களுக்காக அலெக்ஸ் மேற்கொண்ட பயணங்கள் அவரின் மரணத்தைச் சமீபிக்கச் செய்துவிட்டது என்பது அவரை அறிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

-ஸ்டாலின் ராஜாங்கம்,

எழுத்தாளர், ‘எழுதாக் கிளவி’

உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்,

தொடர்புக்கு: stalinrajangam@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்