கடவுளின் நாக்கு-62: வாளும் வித்தையும்!

By திருவனந்தபுரம் எஸ்.ராமகிருஷ்ணன்

சைப்பட்டவற்றை நிஜத்தில் அடைவது எளிதானதில்லை. பலரும் அவற்றை கற்பனையிலே அடைந்துகொள்கிறார்கள். அதுவே போதும் என்றுகூட நினைக்கிறார்கள். கற்பனைக்கும் நிஜத்துக்குமான இடைவெளியைக் கடந்து வருவது எளிதில்லை.

ஆசைப்பட்டவற்றை அடைந்தால் எப்படியிருக்கும் என கற்பனை செய்வது தேவையானதுதான். ஆனால், எந்த முயற்சியும் அற்று பழம் தானே கைக்கு வந்து சேர்ந்துவிடும் என கனவு கண்டுகொண்டிருப்பது தவறானது.

இன்றைய விஞ்ஞானச் சாதனைகள் யாவும் நேற்றைய கற்பனைகளே. ஆனால், அந்தக் கற்பனைகளுக்கு உயிர் கொடுப்பதற்கு விஞ்ஞானிகள், தொழில்நுட்ப அறிஞர்கள் பெரும் சவால்களைச் சந்தித்திருக்கிறார்கள். தோல்வியும், அவமானமும், புறக்கணிப்பும் அவர்களைத் துவளச் செய்திருக்கின்றன. ஆனால், விடாமுயற்சியுடன் செயல்பட்டு நினைத்தவற்றை சாதித்து காட்டியிருக்கிறார்கள்.

எதிர்மறை கற்பனை

பழைய திரைப்படம் ஒன்றில் நாகேஷ் எதையும் எதிர்மறையாக கற்பனை செய்து பார்க்கிற கதாபாத்திரமாக நடித்திருப்பார். கல்யாண வீட்டுக்குப் போகும்போது அழுவார். காரணம் கேட்டால், விளக்கு தட்டி விழுந்து பந்தல் தீப்பற்றி எரிந்துவிட்டால் என்ன செய்வது எனக் கேட்பார். அவரது கற்பனை முழுவதும் எதிர்மறையாகவே இருக்கும். திரைப்படத்தில் அது நகைச்சுவையாக சித்தரிக்கப்பட்டாலும், அவரைப் போல நிறையப் பேர் எதிர்மறையான எண்ணங்களைக் கொண்டு, தன்னுடைய வாழ்க்கையையும் உடன் இருப்பவர்களின் வாழ்க்கையையும் நரகமாக்கிக் கொள்கிறார்கள்.

எங்கேயோ, எப்போதோ, யாரோ சொன்ன கெட்டவிஷயங்கள் யாவும் மனதில் தங்கிவிடுகின்றன. நல்ல விஷயங்கள் உடனடியாக மறந்து போய்விடுகின்றன. திறமை இருந்தும் சிலர் வெற்றிபெறாமல் போவதற்குக் காரணம் அவர்களிடம் இருந்த எதிர்மறை எண்ணங்களே.

பயத்துடன் பயணம்

கெய்ரோவில் ஒரு வணிகன் இருந்தான். அவன் ஒவ்வொரு நாளும் இரவு கடையை மூடிவிட்டு, வீட்டுக்குத் திரும்பி போகும்போது போகிற வழியில் இருந்த உயரமான கட்டிடம் ஒன்றை நிமிர்ந்து பார்ப்பான். கட்டிட உச்சியில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி உடைந்து விழுந்துவிடப்போகிறது என்கிற பயம் அவனுக்கிருந்தது. ஆகவே, பயத்துடன்தான் எப்போது அதைக் கடந்து போவான்.

உறுதியான இடிதாங்கி என்பதால் அது அசைவற்றிருந்தது. ஒருநாள் நிச்சயம் அது இடிந்துவிழுந்துவிடும் என்றே அந்த வணிகன் நம்பினான். ஒரு மழைக்கால இரவில் அவன் வீடு திரும்பும்போதும் அந்த இடிதாங்கியை ஏறிட்டுப் பார்த்தான். அவன் நினைத்ததைப் போலவே அந்த இடிதாங்கி உடைந்து, நேராக அவன் மீதே விழுந்து மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

அலறி வீழ்ந்தவனை ஓடிவந்து சில ஆட்கள் தூக்கினார்கள். ‘இடிதாங்கி விழுந்துவிடும் என்பதை நான் முன்பே அறிந்திருந்தேன். நான் நினைத்தபடியே அது நடந்துவிட்டது...’ எனப் புலம்பினான்.

அப்போது அவனை தூக்க வந்தவர்களில் ஒரு வயதானவர் சொன்னார்: ‘‘அப்படியில்லை. அந்த இடிதாங்கி உன்மீது விழுந்துவிடும்... விழுந்துவிடும் என நீ நினைத்துக் கொண்டேயிருந்தாய். அதனால்தான் உன் மீது அது விழுந்துவிட்டது. எதிர்மறையானவற்றை நினைத்துக் கொண்டேயிருந்தால் நிச்சயம் அது நடந்தேறிவிடும்!’’

பெரியவர் சொன்னதை விஞ்ஞானபூர்வமாக நிரூபணம் செய்ய இயலாதுதான். ஆனால், உளவியல் நம்பிக்கையின்படி எதிர்மறை எண்ணங்கள் ஒருவனை ஆழமாக பாதிக்கவே செய்கிறது. ஆகவே, ‘ஏதோவொன்று நடந்துவிடும்... நடந்துவிடும்’ என வீண் கற்பனை செய்து கொண்டேயிருக்க வேண்டாம்.

சிறிய விஷயங்கள் கூட தேவையற்ற கற்பனையால் பெரிதாக்கப்பட்டுவிடுகின்றன. தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விடுகின்றன. விளைவு, பகையும் வெறுப்பும் குரோதமும் உருவாகிவிடுகிறது. தன்னைப் பற்றிய சுயமதிப்பிடலில்தான் பிரச்சினைகள் தோன்றுகின்றன. சட்டைப்பையில் சில்லறைகள் சேர்ந்துவிட்டால் கனக்கத் தொடங்கிவிடும். அது போலவே நிறைய புகழ்ச்சிகள் சேர்ந்துவிட்டால் மனது சுயபெருமை கொள்ளத் தொடங்கிவிடும். ‘நான் யார் தெரியுமா?’ என தன்னைப் பற்றிய பிம்பத்தை மனசு ஊதிப்பெருக்க வைக்கத் தொடங்கிவிடும்.

வணிக தந்திரங்களில் ஒன்று பொறாமையைத் தூண்டுவது. அதற்காக தான் இவ்வளவு தொலைக்காட்சி, ஊடக விளம்பரங்கள். நம்மை அறியாமலே அழகாக நகை அணிந்த பெண்ணை, விலை உயர்ந்த கார் வைத்திருப்பவரை, ஆடம்பரமான வீடு உள்ளவரை, அழகான உடலமைப்பு கொண்டவர்களை, சுவையான உணவை ருசிப்பவரைப் பார்த்து பொறாமைப்படுகிறோம்.

பொறாமையின் வரலாறு

அந்தப் பொறாமை நமக்குள் ஆசையாக உருமாறுகிறது. அதை நோக்கி நாமும் முன்னேறத் தொடங்குகிறோம். ஒவ்வொரு நாளும் புதுப்புது ஆசைகள் விதைக்கபட்டுக் கொண்டேயிருக்கின்றன. அதில் இருந்து நாம் தப்பிப்பது எளிதானதில்லை.

பொறாமையின் வரலாறு மிக நீண்டது. வரலாற்றின் கூடவே பொறாமையின் கதை உடன்வருகிறது. மனிதர்கள் எல்லாவற்றையும் கண்டு பொறாமை கொள்ளக்கூடியவர்கள், நோயைத் தவிர. அவருக்கு இவ்வளவு நோய்கள் இருக்கிறது. நமக்கு இல்லையே என யாரும் பொறாமை கொள்வதில்லை. எலும்புத் துண்டைக் கவ்விக் கொண்டுபோகும் தெருநாயைப் பார்த்துக் கூட மனிதர்கள் பொறாமை கொள்ளக்கூடியவர் என்று எழுதியிருக்கிறார் ஆன்டன் செகாவ். அது முற்றிலும் உண்மை!

வாள் செய்யத் தெரிந்தவன்

சீனாவில் வாள் செய்வதில் சிறப்பாக ஒருவன் இருந்தான். அவன் பெயர் சென் யுவான். அவன் செய்து கொடுத்த வாளைதான் மாமன்னர் கூட பயன்படுத்தினார்.

தான் செய்து கொடுத்த வாளால் மன்னருக்கும், தளபதிக்கும் பெருமை கிடைக்கிறதே அன்றி; தன்னை யாரும் புகழ்வதில்லையே என அவனுக்கு உள்ளுக்குள் கோபம் இருந்தது. ஒருமுறை வாள்போட்டி ஒன்று நடைபெறப் போவதாக அறிவிக்கப்பட்டது. உடனே சென் யுவான் சிறப்பான வாள் ஒன்றை செய்துகொண்டு போட்டியில் கலந்து கொள்ளச் சென்றான்.

மன்னருக்கே வாள் செய்து தருகிற சென் யுவானே வாள் சண்டைக்கு வந்துவிட்டான் என்பதால் பலரும் அவனுடன் சண்டையிட பயந்தார்கள். ஆனால், இளைஞன் ஒருவன் அவனை எதிர்த்துச் சண்டையிட்டான். சில நிமிடங்களிலே சென் யுவானைத் தோற்கடித்து அவன் கையில் வைத்திருந்த வாளை உடைத்து போட்டான் அந்த இளைஞன்.

சென் யுவான் அவமானப்பட்டு தலைகுனிந்து நின்றான். மன்னர் அவனை அழைத்துச் சொன்னார்: ‘‘நீ வாள் செய்பவன். அது ஒரு கலை. உன்னால் மிகச் சிறப்பாக வாள் செய்து தர முடியும். ஆனால், போர்வீரனால் மட்டுமே சண்டையிட முடியும். வாளை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற சூட்சுமத்தை வீரனே அறிவான். அது அவனது திறமை!

நீ வாளை ஒரு பொருளாக நினைக்கிறாய். அவன் தனது இன்னொரு கரமாகக் கருதுகிறான். வாளை செய்து முடித்தவுடன், அதன் மூலம் பெறப் போகும் பணமே உன் மனதில் முக்கியமாக இருக்கிறது. அவன் பணம் கிடைக்கும் என்பதற்காக சண்டையிடவில்லை. தனது வீரத்தைக் காட்டவே அவன் சண்டையிடுகிறான். தேசத்துக்கு தன் உயிரைக்கூட கொடுக்கவே அவன் போர்ப் படையில் இருக்கிறான்.

தேவையற்ற உனது கர்வம் காரணமாகவே நீ தோற்றுப் போனாய். உன்னை எதிர்த்து சண்டையிட்டானே அவனது கையில் இருந்ததும் நீ செய்து கொடுத்த வாள்தான். இதற்கு முன்னால் ஒரு சமயம் அவனது திறமையைப் பாராட்டி நான்தான் எனது வாளை பரிசாகக் கொடுத்தேன். உன்னை வென்றது நீ செய்து கொடுத்த வாளே!’’ என்றார்.

வாளை செய்வது வேறு. வாள் வீரனாக மாறுவது வேறு என்பதை அந்தப் போட்டி அந்த வாள் செய்பவனுக்கு உணர்த்திவிட்டது. சென் யுவான் தனது தவறை உணர்ந்து கொண்டான் என முடிகிறது அந்தச் சீனக் கதை.

நம்மில் பலரும் தன்னுடைய பலம், பலவீனத்தை உணராமலே இருக்கிறோம். வெறும் வாய்சொல்லிலே தன்னை வெல்ல யாருமில்லை என சுயதம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சிறந்த வீரர்கள் கூச்சலிடுவதில்லை. தேவையில்லாமல் வாளை வெளியே உருவுவதில்லை’ என்று சாமுராய்களைப் பற்றி சொல்வார்கள். இது வாள்வித்தைக்கு மட்டுமில்லை. எல்லா விஷயங்களுக்கும் பொருந்தக்கூடியதே.

- கதைகள் பேசும்...

எண்ணங்களைப் பகிர: weriterramki@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்