தமிழக அரசு கடந்த 2009 - 2014 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகளை கடந்த ஜூலையில் அறிவித்தது. இதில் 2013-ம் ஆண்டுக்கான சிறந்த இசையமைப்பாளராக ‘ராமானுஜன்’ திரைப்படத்துக்கு இசையமைத்த ரமேஷ் விநாயகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருடன் ஒரு நேர்காணல்..
‘ராமானுஜன்’ திரைப்படத்துக்கு இசையமைத்த அனுபவம் பற்றி..
சிறந்த இசை மட்டுமல்லாது, சிறந்த திரைப்படத்துக்கான விருதையும் பெற்ற படம் அது. முதலில், இசைமேதை வி.எஸ். நரசிம்மனைத்தான் இயக்குநர் ஞான ராஜசேகரன் அணுகியுள்ளார். அவரோ, பெருந்தன்மையோடு என் பெயரைப் பரிந்துரைத்தார். இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட நல்ல மனசு யாருக்கு வரும்? பட இயக்குநர் ராஜசேகரன், இசைஞானி இளையராஜாவோடு பணிபுரிந்தவர். எந்த ஆரவாரமும் இல்லாமல் நட்பு பாராட்டினார். இசையமைப்பில் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார்.
‘ஆறும் ஆறும் ஐந்துமாய்’ என எண்கள் பாட்டை வைக்கும் யோசனை எப்படி உதித்தது?
கணிதமேதை பற்றிய படம் என்பதால், ஆழ்வார் பாசுரங்களில் எண்களை வைத்து ஏதேனும் பாடல் இருக்கிறதா என்று ராஜசேகரன் பார்க்கச் சொன்னார். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை முதன்முதலாக திறக்கிறேன். என்ன ஆச்சரியம்.. நான் எதேச்சையாகத் திறந்த பக்கத்தில், எண்களைக் கொண்ட திருமழிசையாழ்வாரின் பாசுரம் இருந்தது. இங்கு ராமானுஜனின் அறிவாற்றலை யாரும் புரிந்துகொள்ளாத சூழலில், கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் ஹார்டி, அவரை லண்டனுக்கு அழைத்து ஆராய்ச்சி மாணவராகச் சேர்த்துக்கொண்டார். அப்போது தனிமையில் இறைவனை நினைத்து இதைப் பாடுவதாக ஒரு கற்பனையே இந்தப் பாடல்.
அதற்கு இசையமைத்த அனுபவம் எப்படி இருந்தது?
மேற்கத்திய இசையோடு, நம் செவ்விசையையும் கலந்து Fusion அடிப்படையில் செய்தேன். ஜெர்மனிக்குச் சென்று அங்குள்ள இசைக் கலைஞர்களை வைத்து இசையைப் பதிவு செய்தேன். ‘எங்கள் ஊரில் பிறந்து வளர்ந்த கலைஞரைப் போல இசையமைத்துள்ளீர்கள்’ என்று அவர்கள் பாராட்டியபோது, மகிழ்ச்சியாக இருந்தது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள உலகளாவிய திரை இசை பற்றிய புத்தகத்தில் ராமானுஜன் திரைப்படத்தின் இசைக் குறிப்புகளையும், அதைப் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரையையும் இணைத்துள்ளனர்.
தற்போது எந்தப் படத்துக்கு இசையமைக்கிறீர்கள்?
ஹாலிவுட் திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய சந்தோஷ், ஜல்லிக்கட்டு போராட்டத்தை மையமாக வைத்து ஒரு படம் இயக்குகிறார். இதில் கிராமிய மற்றும் மெல்லிசை நிறைந்து காணப்படும். என் இசைப் பசிக்குத் தீனி போட நல்ல தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் சந்தோஷ்.
உங்களது செவ்விசை ஆராய்ச்சி எப்படி நகர்கிறது?
செவ்விசையில் ராகங்கள், கிருதிகளைப் பாட எளிய இசைக் குறிப்பு முறையை வரையறுத்துள்ளேன். இதன் இலக்கணங்களை ஒரு சில மணி நேரங்களில் எளிதாகப் புரிந்துகொள்ளலாம். ராகங்கள், கிருதிகளை எளிதாகப் பாடலாம். ராகங்களின் கமகங்களுக்கான குறியீடுகளையும் கண்டுபிடித்துள்ளேன். மேலைநாட்டில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. முக்கியமாக, சென்னையில் உள்ள ஜெர்மனி கலாச்சார தூதரமாகச் செயல்படும் ‘கெத்தெ மையம்’ இதில் மிகவும் ஆர்வம் காட்டி என்னை ஜெர்மனிக்கு அனுப்பியது. ஒரு மாத காலம் தங்கி, அங்கு உள்ள இசைக் கலைஞர்களுக்காக இதைப் பற்றி பயிலரங்கம் நடத்தினேன். இந்தக் குறியீடுகளுக்கு‘Gamaka Box’ என்று பெயரிட்டுள்ளேன். ஏதோ பெட்டி என்று எண்ண வேண்டாம். இவை குறியீடுகள்தான். நம் நாட்டினருக்கும் இது மிகவும் பயன்படும். இதனால், செவ்விசைக்கான ரசிகர் வட்டம் விரிவடையும். தவிர இதன்மூலம் பிறவியிலேயே பேசும், கேட்கும் திறனை இழந்தவர்களை நமது ராகங்களை வாசிக்கவைத்து வெற்றியும் அடைந்துள்ளேன்.
மேற்கத்திய இசை, நம் செவ்விசை இந்த இரண்டிலும் எப்படி பரிச்சயம் ஏற்பட்டது?
என் தாய் வள்ளி, இசையில் நல்ல தேர்ச்சி பெற்றவர். தந்தை விநாயகம், இசையில் மட்டுமன்றி தமிழ், சமஸ்கிருதத்தில் பாடல்கள் எழுதும் திறன் பெற்றவர். நான் இசையமைத்து வெளிவந்த பக்திப் பாடல் தொகுப்புகளில் அவரது பாடல்களும் இடம்பெற்றுள்ளன. தமிழில் பாட்டு எழுதி, இசையமைக்கும் திறமை எனக்குள் உருவாக அதுவே காரணம் என்று நினைக்கிறேன். பியானோவில் மேற்கத்திய பாரம்பரிய இசையை வாசிக்கும் பயிற்சியை இசை மேதை ஜேக்கப் ஜானிடம் பெற்றேன்.
ஹாலிவுட் படத்துக்கு இசையமைத்தது குறித்து..
‘காந்தி’ திரைப்படத்தில் நடித்த சர் பென் கிங்ஸ்லீ, முன்னணி கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் ‘எ காமன்மேன்’. அதற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. திரையிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் எனது இசை பேசப்பட்டது. இந்தியாவிலும் அந்தப் படம் விரைவில் வெளிவரும்.
மற்ற இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறீர்களா?
ஹாரிஸ் ஜெயராஜ், யுவன்ஷங்கர் ராஜா, டி.இமான் ஆகியோரது இசையில் பாடியது அலாதி அனுபவம். நான் இசையமைக்கும் படத்தில் கண்டிப்பாக ஒரு பாடல் பாடிவிடுவேன்.
உங்கள் குடும்பம், நண்பர்கள் பற்றி..
மனைவி வித்யா என் அனைத்து முயற்சிகளுக்கும் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பவர். பொறுமைசாலி. மகன்கள் ப்ரணவ், அபிநவ் இருவருக்கும் இசையில் நல்ல ஆர்வம் உள்ளது. என் உயிர்த் தோழன் நாராயணன் என்கிற நாணி, அருமையான கவிஞன். நான் இசையமைப்பாளர் ஆகவேண்டும் என்பதற்காகவே பல பாடல்களை எழுதி என்னை இசையமைக்க வைத்து அழகு பார்த்தவன். இன்று அவன் இல்லை என்பது வருத்தம்தான் என்றாலும், அவனுக்காகவே இசையில் இன்னும் பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற உறுதியோடு பணிபுரிகிறேன். ‘வீணை பாச்சா’ என்ற பார்த்தசாரதியும் என் முன்னேற்றத்தில் பெரும் பங்கு ஆற்றியுள்ளார். எங்கள் நட்பு இன்றளவும் தொடர்கிறது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
16 hours ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago