எஸ். ராமகிருஷ்ணன் எழுதியுள்ள புதிய நாவலிலிருந்து ஒரு அத்தியாயம் இங்கே வெளியிடப்படுகிறது. காது கேளாத ஒருவனின் நாற்பத்திஐந்து ஆண்டுகால வாழ்க்கை போராட்டத்தை விவரிக்கிறது ‘நிமித்தம்’. உயிர்மை பதிப்பகத்தின் வெளியீடாக வரவுள்ளது.
உபயோகமில்லாத காதுகள் எதற்காகத் தன் முகத்தாடு ஒட்டிக் கொண்டிருக்கின்றன என்று கண்ணாடி பார்க்கும் போது ஆத்திரப்படுவான் தேவராஜ். ஒரு இலையைக் கிள்ளி எறிந்துவிடுவது போலக் காதை அறுத்து போட்டுவிட முடியாது தானே. கேட்காத காதுகளைப் பார்க்கும் போதெல்லாம் மனது அவமானத்தில் குறுகிப்போய்விடுகிறது.
காது கேளாவிட்டால் என்ன. வயிறு பசிக்கத்தானே செய்கிறது. வயதிற்கே உரிய பருவ ஆசைகள் முளைவிடத்தானே செய்கின்றன. அதை எவரும் புரிந்து கொள்வதேயில்லை. இப்படித் தினம் தினம் காதுகேளாமையால் அவமானப்பட்டு வாழ்வதைவிடச் செத்துப் போய்விடலாமே என்று கூடத் தேவராஜ் நினைத்திருக்கிறான்.
இதற்காக ஒரு நாளிரவு யாரும் இல்லாத நேரம் தெப்பக்குளத்திற்குப் போய் நின்று கொண்டிருந்தான். ஊரின் மிகப்பெரிய தெப்பக்குளமது. அதில் விழுந்து ஒன்றிரண்டு போய்ச் செத்துப் போயிருக்கிறார்கள். தேவராஜே வேடிக்கை பார்த்திருக்கிறான். அது போல நாமும் ஒரு கல்லைக் கட்டிக் கொண்டு விழுந்து செத்துவிடலாமே என்ற நினைப்பில் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தான்.
இப்படியே குளத்தில் விழுந்து மூழ்கி செத்துப்போய்விட்டால் காலையில் பிணமாக மிதந்துகொண்டிருப்போம். காய்கறி மார்க்கெட்டிற்குப் போகின்றவர்கள் நின்று வேடிக்கை பார்த்துப் போவார்கள். ஆளுக்கு ஒரு காரணம் சொல்லுவார்கள். அப்போதும் அவர்கள் பேசுவது முழுவதுமாகத் தன் காதில் கேட்காது.
தண்ணீரில் குதித்துச் சாவதற்குத் தைரியம் வேண்டும். அவன் சிறு வயதில் புளியந்தோப்புக் கிணற்றில் ஒரு பெண் குதித்துத் தற்கொலை செய்து கொண்டு வயிறு வீங்கி மிதப்பதைக் கண்டிருக்கிறான். அவள் முகத்தில் கோபம் அப்பியிருந்தது. சாவின் வழியே புருஷனை ஜெயித்துவிட்டோம் என்ற இறுமாறுப்பு அந்த முகத்திலிருந்தது. அந்த வைரக்கியம் தனக்கு வராது.
பெண்கள் துணிச்சலானவர்கள். முடிவு எடுப்பதற்குத்தான் தயங்குகிறார்கள். முடிவு எடுத்துவிட்டால் அதை நிறைவேற்றத் தயங்குவதேயில்லை. விளைவுகளைப் பற்றிக் கவலைப்படுவதெல்லாம் ஆண்கள் தான். ஆண்களில் பாதிக்கும் மேலே கோழைகள். கற்பனையாக எதையாவது நினைத்துக் கொண்டு பதறுகிறவர்கள். உள்ளுறப் பயந்தவர்கள். ஆனால் வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள்.
அவனது அப்பா எத்தனையோ முறை கோபத்தில் வீட்டு உத்திரத்தில் தூக்குமாட்டி, செத்துப்போவதாகச் சொல்லி மிரட்டியிருக்கிறார். அதை அம்மா பெரிதாக நினைத்ததேயில்லை. அப்படிச் செய்வது அவரால் ஒரு போதும் முடியாது என்பதை அறிந்து வைத்திருந்தாள். அப்பாவைப் போல உள்ள ஆண்கள் சுகவாசிகள். அவர்களுக்கு வீடு வேண்டும். வேளை வேளைக்கு நல்ல சாப்பாடும் புணர்ச்சியும் முக்கியம். தானும் அப்பாவின் குணத்தைத் தான் கொண்டிருக்கிறேன் போலும் என்று தேவராஜ் நினைத்துக்கொள்வான்சாவது எளிதானதில்லை. வாழ்வின் பெருங்கரம் சதா அவனது பிடறியை பிடித்துத் தள்ளி உலகியல் வாழ்வில் மூழ்கடித்துச் சகல அவமானங்களையும், ஏமாற்றங்களையும் அற்ப சந்தோஷங்களையும் ஏற்றுக்கொள்ள வைக்கிறது. இந்த மூச்சுத் திணறும் அழுத்தம் அவனுக்குச் சலிப்பாக இருந்தது.
பெண்கள் இதற்கெல்லாம் பழகிவிடுகிறார்கள். அல்லது சலிப்பைப் போக்கிகொள்ளக் கடவுளிடம் தஞ்சம் புகுந்துவிடுகிறார்கள். கோவில் என்ற ஒன்று மட்டும் இல்லாமல் போயிருந்தால் பெரும்பான்மை பெண்கள் மனநோயாளி ஆகியிருப்பார்கள். தேவராஜ் சிறு வயதில் அம்மாவோடு செவ்வாய், வெள்ளிக்குக் கோவிலுக்குப் போய் வருவான். மதியம் ஐந்து மணிக்குக் கோவிலுக்குப் போனால் திரும்பிவர எட்டுமணி ஆகிவிடும்.
கடவுளின் முன்னால் பெண்கள் வேறுவிதமாகி விடுகிறார்கள். அவர்களின் முகம் மாறிவிடுகிறது. ஏதோ அருகில் பச்சை சட்டை போட்டுக் கொண்டு நிற்கிற ஒரு மனிதரை கூப்பிடுவது போல அத்தனை நெருக்கமாகக் கடவுளைக் கூப்பிடுகிறார்கள். முறையிடுகிறார்கள். கோவித்துக் கொள்கிறார்கள். கண்ணீர் விடுகிறார்கள்.
கோவில் பெண்களுக்கானது. அதை அவர்கள் உணர்ந்துகொண்டிருக்கிறார்கள். பெண்களுக்குக் கடவுள் தினமும் தேவைப்படுகிறார். ஆண்களுக்கோ கடவுளின் தேவை எப்போதாவது தான் வேண்டியிருக்கிறது. அதுவும் மனக்கவலையின் போதுதான் அதிகம் தேவைப்படுகிறார்.
பெண்கள் என்னதான் வேண்டு கிறார்கள். ஒரு பெண் கூடச் சப்தமாக வேண்டிக்கொள்வதில்லை. ஆனால் முணுமுணுக்கிறார்கள். அந்த முணுமுணுத்தல் கடவுளுக்கு நிச்சயம் புரிந்திருக்கும். கடவுளுக்குக் காது கேட்கும். காது கேளாத கடவுள் எவரும் இருக்கிறாரா என்ன?
சிலர் பிரார்த்தனை செய்யும்போது தன்னை அறியாமல் அழுகிறார்கள். அந்தக் கண்ணீரை துடைத்துக் கொள்வது கூட இல்லை. கோவிலில் சாமி கும்பிட்டுப் பிரகாரம் சுற்றும் போது பெண்களின் முகத்தில் அலாதியான சாந்தியும் நிம்மதியும் கவிழ்ந்துவிடுகிறது. அதற்காகத் தான் அங்கே வருகிறார்களோ என்னவோ.
தேவராஜ்க்குச் சிறுவயதில் கடவுளைப் பிடித்திருந்தது. கடவுளிடம் பேசுவதும் வேண்டிக் கொள்வதும் ஆறுதல் தருவதாக இருந்தது. ஆனால் வயது வளர வளர அவன் கடவுளை விட்டு விலகிப்போகத் துவங்கினான். கடவுளின் மீது ஆத்திரமாக இருந்தது. தன் விஷயத்தில் கடவுள் ஏன் இரக்கமற்றவராக நடந்து கொள்கிறார் என்ற கோபம் மேலோங்கியது.
கோவிலில் சாமியைப் பார்ப்பதை விடவும் கோவில் யானையை வேடிக்கை பார்ப்பது மட்டுமே அவனது பொழுதுபோக்கு. கோவில் யானைகளின் கண்களைப் பார்த்துக் கொண்டிருப்பது அவனுக்குப் பிடிக்கும்.
யானையின் கண்களில் எப்போதும் கண்ணீர் கசிந்த ஈரம் இருக்கவே செய்கிறது. யானை எதை நினைத்து அழுகிறது. யானையின் கண்கள் யாரையும் நேரிடையாகப் பார்ப்பதேயில்லை. இடுக்கிய கண்களுடன் அது தன் பெரிய காதுகளை அசைத்துக்கொண்டேயிருக்கிறது. எவ்வளவு பெரிய காதுகள். இவ்வளவு பெரிய காது இருந்தும் என்ன பயன். அது மிரட்டலை மட்டும் தானே கேட்டுவருகிறது.
யானை ஒரு முட்டாள் என்று சமயத்தில் தோன்றும். அது தன்னை அறிந்துகொள்ளவேயில்லை. யாரோ கொடுக்கிற வாழைப்பழங்களுக்காக அது தனது தும்பிக்கை தூக்கி ஆசிர்வாதம் செய்கிறது. பாகன் உருட்டித் தரும் சோற்றுக்கவளங்களுக்குக் கட்டுபட்டு அது வாழ்ந்துகொண்டிருக்கிறது. யானைகள் வாழ்வதற்கான இடம் கோவில் இல்லை. ஆனால் யானை பழகிவிட்டிருக்கிறது.
பழக்கம் என்பது ஒரு தந்திரம். அது ஒரு படுகுழி. எவரையும் அதற்குள் எளிதாகத் தள்ளிவிட்டுவிட முடியும்.
தேவராஜின் பள்ளியில் ஒருநாள் மாணவர்கள் அத்தனை பேரையும் சர்க்கஸ் பார்க்க அழைத்துப் போயிருந்தார்கள். அங்கே ஒரு கரடி பந்து விளையாடியது. புலி முக்காலியில் ஏறி நின்று காலைத் தூக்கி சல்யூட் அடித்தது. யானை சைக்கிள் ஒட்டியது. மற்றவர்கள் வாய்விட்டுச் சிரித்துக் கொண்டிருந்த போது தேவராஜிற்கு ஆத்திரமாக வந்தது. எதற்காக இப்படி யானைகள் கொஞ்சம்கூட அவமானப்படாமல் சைக்கிள் ஒட்டுகின்றன. புலி ஏன் இப்படி அசிங்கமாக மண்டியிடுகிறது. பார்ப்பவரை சந்தோஷப்படுத்த அவை ஏன் தன்னை வருத்திக்கொள்கின்றன.
உலகம் எல்லாவற்றையும் அதன் இயல்புகளை மாற்றி ஒடுக்குவதையே விரும்புகிறது. தன்னியல்பில் எந்த உயிரினமும் வாழ முடிவதில்லை. உலகம் ஒரு வதைக்கூடம். எந்த மிருகமும் இன்னொரு மிருகத்தைப் பழக்குவதில்லை. உணவிட்டு சித்ரவதை செய்வதில்லை. மனிதன் மாத்திரமே இது போன்ற அருவருப்புகளை ஆசையோடு செய்பவன். அப்படி ஒரு ஆளாகதான் இருக்க விரும்பவில்லை. உண்மையில்தான் எதையும் பழகிக்கொள்ள மறுக்கிறோம்.
தன்னை மாற்றிக் கொள்ள முடியாதவர்களை உலகம் அப்படியே விட்டுவிடாது. அது சவுக்கை உயர்த்திப் புட்டத்தில் அடித்து கூனிக்குறுகி மண்டியிட செய்யும். வளைந்து கொடுக்க வைக்கும். செய்யக் கூசுகின்ற அத்தனையும் செய்ய வைக்கும். ஜெயித்தவர்கள் உலகோடு பேரம் பேசத் துவங்கிவிடுகிறார்கள். தோற்றவர்கள் அப்படியில்லை. அவர்கள் தங்களுக்குத் தானே முணங்கிக்கொண்டு கசக்கி எறியப்பட்ட காகிதம் போலத் தன்னை உணர்கிறார்கள்
அவமானங்களுக்குப் பழகிப்போவது தான் வயதாவதின் முதல் அடையாளம்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago