அ
து, படுவேகமாக ஓடும் வாகனங்கள் இல்லாத காலம்தான் என்றாலும் தகவல்கள் எப்படியோ வாகனங்களையும் விட அதி வேகமாகப் பரவிவிடுகிறது. இப்படி ஒரு காளை... இந்த ஊரில்... இன்னாரிடம் இருக்கிறது... என்கிற செய்தி, அந்த வட்டகை பூராவும் வேகமாக பரவிவிடுகிறது. இதேபோலத்தான் ஓரிடத்தில் அழகான பெண் இருக்கிறாள் என்கிற செய்தி யும்!
கூனம்மா என்ற கன்னிகையை சின்ன வயசில் திரும்பிப் பார்க்காதவர் இல்லை; பெண்கள் உட்பட. ஆனால் வயசுக்கு வந்துவிட்டால், பெண்கள் மட்டுமே பார்க்கலாம் என்பதே அந்தக் காலத்தில் எழுதாத சட்டம்.
பிச்சைக்கார வேஷம் போட்டுக் கொண்டு போய்ப் பார்த்த வாலிபர்கள், கறிவேப்பிலை விற்பவன் போலப் போய் அடி வாங்கியது, வளையல் விற்பவனைப் போல் தோளில் பக்கரைப் பை நிறைய்ய விதவிதமான வளையல்களை நிரப்பிக் கொண்டு போனது, சொன்னா சிரிப்பு வரும்.
வள்ளியைப் பார்க்க முருகர் வளையல் விற்கிறவரைப் போல போகலையா?
கூனம்மா வீட்டில் பெண் எடுத்தால் நிலங்கள் கிடைக்காது; சுமக்க முடியாத அளவுக்கு நகைகள் கிடைக்கும்.
நகை யாருக்குடா வேணும். அந்த பொண்ணு கிடைச்சாப் போதும்டா..!
நல்ல நல்ல பெண்களுடைய வாழ்நாளெல்லாம் வீண் நாளாகப் போனதெல்லாம், ஜாதகம் பொருந்தலை, அந்த தோசம் இந்த தோசம், வீட்டுப் பெயர் ஒத்து வரலை இப்படியான ‘ஆயிரம்’ காரணங்களால்தான்.
எல்லாம் சரியாக வருது மாப்பிள்ளைக்குத் தெத்துப் பல், கொன்னிக் கொன்னிப் பேசுறாம். நிறம் சரியில்லை, கிந்திக் கிந்தி நடக்காம், மாறுகண் வேற இருக்கு... இப்படி எல்லாம் உண்டு.
காலம் இவர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்குமா? குமரி முத்துனா என்னத்துக்கு ஆகும்?
****
கடேசியாக இந்த ஊர்தான் கிடைச்சது. சகல பொருத்தங்களும் இருந்தன. பெரிய குடும்பம். வீடு நிறைய ஆட்கள்... காடு நிறைய நிலங்கள்... ரொக்கம் இல்லென்னா என்ன, இறவைக் கிணறு இருந்தது. இது கீகாட்டில் அப்போ கிடையாது. இதுவே பெருசாகத் தெரிந்தது, கூனம்மாவின் சித்தப்பனுக்கு.
அவனுக்குள் பேராசை வியாபித்துக் கிடந்தது. தனது அண்ணன் காலமானதும், அனைத்தையும் கையில் பற்றிக் கொண்டான்.
எல்லாம் கூனம்மாவின் அம்மா வீட்டுச் சொத்துதான் அதிகம். பெண்ணுக்குச் சொத்தில் பங்கு இல்லை என்றாலும் தாய் கொண்டு வந்த நிலங்கள் பெண்களுக்கே என்ற நடைமுறை இருந்தது.
அந்தக் காலத்தில் நோய் ஏற்பட்டு சாவதை விட, தொற்று நோயால் சாவது அதிகமாக இருக்கும்.
அப்பா, அம்மா இல்லாததால் கூனம்மா மிகவும் செல்லமாகவும், தன் மூப்பாகவும் வளர்ந்தாள்.
அவள் தெருவில் இறங்கி நின்றால் எல்லோரும் வீட்டுக்குள் இருந்து பார்ப்பார்கள்.
என்ன உயரம், என்ன கம்பீரம்..!
இவளுக்கு என்றே தறிக்காரர்களிடம் சொல்லி அகலமான சேலைகள், நெய்து கொண்டுவரச் செய்தார்கள்.
இவளுடைய ஊருக்குப் போக வேண்டுமென்றால் - வண்டி கட்டிப் போக - இரண்டு நாள் பிடிக்கும். மழை காலத்தில் போகவே முடியாது.
அப்போதெல்லாம் அடைமழை தொடர்ந்தால், நிற்க ரெண்டு மாதம் ஆகும். அப்படி ஒரு மண்கண்டம் அது. ஒரு ஆத்திரம் அவசரத்துக்குப் போக அப்படி ஒரு கஷ்டம்.
வந்து போக இருந்தால்தான் சுற்றம். வேண்டுமென்றே தன்னைக் கொண்டு வந்து தள்ளிவிட்டதாகவே நினைக்கத் தோன்றியது.
தாட்டியமுள்ள பெண்களுக்கு வாய் செத்த புருசர்கள்தான் கிடைப்பார்கள் போலிருக்கு!
அப்படி ஒரு அடக்கமாக இருந்தான் கூனம்மாவின் மாப்பிள்ளை.
நோண்டினால்தான் திரும்பிப் பார்க்கிறான்.
சின்னப் பிள்ளைகளுக்கு சாப்பிடச் சொல்லிக் கொடுப்பது போல எல்லாத்துக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டியதிருக்கு.
அந்தப் பயம் இருக்க வேண்டிய ஒன்றுதான்.
முதல் தடவையிலேயே மயக்கம் போட்டு விழுந்தாம், கூனம்மாவின் புருசன்.
“அதெல்லாம் இருக்கிறதுதாம்; சில பய பிள்ளைக்கு” என்று வீட்டுப் பாட்டி தேறுதல் சொன்னாள் கூனம்மாவுக்கு.
“நாங்கேள்விப்பட்டதில்லையே!” என்று கேட்டதுக்கு, எல்லாம் செவ்வாக்கிழமை நோம்புக்கு ஒழுங்காப் போனா அங்கே உள்ள பாட்டிமாருக கதை கதையாச் சொல்லுவாங்க என்று சொல்லிச் சிரித்தாள் வீட்டுப் பாட்டி.
நாளா சரியாகத்தான் (நாளடைவில்தான்) தெரிந்தது. இவனுக்கு ஒரு உடல் நோய் இருக்கு என்று.
அந்தக் காலத்து நாட்டு வைத்தியர் வந்து இவனுக்கு நாடி பிடித்துப் பார்த்தார், ரெண்டு கைகளிலும்.
எல்லோரும் வைத்தியருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
தரையை மூன்று தடவை சுண்டிவிட்டு, ரெண்டு கைகளிலும் நாடிகள் எந்த மாதிரி ஓடிக் கொண்டு இருக்கின்றன என்பதை ஒரு பாட்டின் மூலம் பாடி விவரித்தார்.
புதிய காலத்து டாக்டர்மார் இப்படியெல்லாம் செய்வதில்லை. எல்லாம் நம்மிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்வார்கள்!
“லேகியம் ஒண்ணு தர்றேன், ஒரு மண்டலம் சாப்பிட்டால் போதும். அகப்பத்தியம் இருக்கணும்; அவ்வளவுதான்...’’ என்று லேகியம் தந்துவிட்டுப் போனார்.
“அது என்ன பாட்டி அகப்பத்தியம்?”
“சொல்றோம்; சொல்றோம்” என்று சுற்றியும் வீட்டுச் சின்னஞ் சிறுசுகள் இருக்கிறார்களா என்று கண்ணால் ஒரு நோட்டமிட்டு இவருக்கு மட்டும் தெரியும்படியாக சைகை மொழியில் காண்பித்தாள் வீட்டுப் பாட்டி.
சூட்டிகையான கூனம்மா புரிந்து கொண்டாள்.
பிறப்பிலிருந்து இறப்பு வரை சம்சாரி வீட்டுப் பிள்ளை களுக்கு படுக்கையிலிருந்து எழுந்திருந்து படுக்கைக்குப் போகிறவரை வேலைகள்தான். சாப்பிடுறதும் குளிக்கிறதும் கூட ஒரு வேலைதான்.
வெளியூர் போனாலும், ஆழ்ந்த உறக்கத்திலும்தான் வேலை என்பது இருக்காது. கதை கேட்கப் போன இடத்தில் கூட தூங்கினான் என்று ஒரு கதை இருக்கிறதே!
- கதைகள் பேசும்...
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago