‘கி.ரா. நூறு’ - இரு தொகுப்பு நூல்களை மார்ச் 13-ல் வெளியிடுகிறார் வெங்கய்யா நாயுடு

By செய்திப்பிரிவு

கி.ராவின் நூற்றாண்டு விழாவுடன் ‘கி.ரா. நூறு’ என்னும் இரு தொகுப்பு நூல்களை இம்மாதம் 13-ம் தேதி ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு வெளியிடுகிறார்.

இது தொடர்பான செய்திக் குறிப்பு: ‘கி.ரா. நூறு’ என்னும் இரு தொகுப்பு நூல்களை கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தொகுத்தார். 500-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் குழுவால் பரிசீலிக்கப்பட்டு 160 கட்டுரைகள் இறுதியாக்கப்பட்டு கி.ரா.நூறு என்ற இரு தொகுப்புகளாக வெளிவருகின்றன. வருகிற 13.03.2023 அன்று கதைசொல்லி, பொதிகை - பொருநை - கரிசல் சார்பில் இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (சத்யா ஸ்டுடியோ) முன்னாள் குடியரசு துணைத் தலைவர் எம்.வெங்கய்யா நாயுடு அவர்களால் காலை 9.30 மணியளவில் வெளியிடப்படுகிறது. நல்லி குப்புசாமி செட்டி, சுதா சேஷய்யன், ஆர்.எஸ்.முனிரத்தினம், மரபின் மைந்தன் முத்தையா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நூற்றாண்டு காணும் கரிசல் காட்டின் முதுபெரும் படைப்பாளி கி.ராஜநாராயணனின் படைப்புகள் குறித்த முழுமையான பார்வையை வாசகர்களுக்கு ஏற்படுத்தும் வண்ணம் வெளியிடப்பட்டுள்ள தொகுப்பு நூல்கள் இவை. முதல் தொகுப்பில் மூத்த அரசியலாளர் இரா.நல்லகண்ணு, பழ.நெடுமாறன் முதலானோர் மட்டுமல்ல, கி.ரா குறித்த தனது மேலான கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

புகழ்பெற்ற ஆய்வாளர்கள், திறனாய்வாளர்கள், படைப்பாளிகள், இலக்கிய விமர்சகர்கள், திரைத்துறையைச் சார்ந்த ஆளுமைகள், ஆர்வலர்கள் கி.ராவின் படைப்புகள் குறித்தும் அவற்றின் பன்முகத்தன்மை குறித்தும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்புகளாக இவை மிளிர்கின்றன.

நடிகர் சிவகுமார் கி.ராவுக்கு எழுதிய கடிதம் ஒன்றில், ‘உங்களது வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் உணர்ந்து ரசிக்கும் ஒரு சில பட்டணவாசிகளில் நானும் ஒருவன்’ என்கிறார்.​ ஆம், கி.ரா.வின் எழுத்துகள் பட்டணவாசிகளை உண்மையில் கிராமப்புறங்களுக்கு அழைத்துச் செல்பவை.

புகழ்பெற்ற ஆய்வாளர் நா.வானமாமலை கி.ராவின் ‘கோபல்ல கிராமத்தை’ப் பற்றிய தனது பார்வையை இவ்வாறு தெளிவாக முன் வைக்கிறார். ‘தெலுங்கு நாட்டிலிருந்து குடிபெயர்ந்து, தமிழகத்தில் நிலையாக வாழ வழியமைத்துக் கொண்ட கம்மவார்களின் நாட்டு மரபான வரலாற்றைக் கூறும் நாட்டார் நாவலா? இந்நாவலை முற்போக்கு, பிற்போக்கு என்று வறட்டுத்தனமாக மதிப்பிட முடியாது. நாட்டுப் பண்பாட்டு மரபில் தோன்றிய ஒரு வரலாற்று நாவல் இது’ என்கிறார்.

இலங்கை இலக்கிய திறனாய்வாளர் எம்.ஏ.நுஃமான், ‘தமிழிலே கிராமத்தைப் பற்றி எழுதிய மற்றவர்களுக்கும், ராஜநாராயணனுக்கும் இடையே ஒரு பெரும் வித்தியாசம் இருக்கிறது. இவர் கிராமத்தை பற்றார்வத்துடன் அதன் பண்பாட்டு அம்சங்களை ஒரு அலாதியான மோகத்துடன் பார்‌க்கிறார்’ என மிகத் துல்லியமாக கி.ராவின் படைப்புகளைப் பற்றி மதிப்பிட்டுக் கூறுவது குறிப்பிடத்தக்கது.

கி.ரா என்ற படைப்பாளியின் முழுப் பரிமாணத்தையும் பற்றி, ‘எழுத்தாளன், படைப்பாளி எனும் விதத்தில் சகல ஆளுமைகளும் பன்முகத்தன்மையும் கொண்டவர் கி.ராஜநாராயணன். கதைகள், நாவல்கள், கட்டுரைகள், சொலவடைகள், சடங்குகள், மரபுகள், நாட்டார் கதைகள், மறைவாகக் கூறப்படும் கதைகள், கதைப்பாடல்கள், இசை பற்றியெல்லாம் விரிவாகப் பேசலாம். அவரது மறைவாகச் சொல்லப்பட்ட கதைகளுக்கு பதவுரை, பொழிப்புரை, குறிப்புரை, விளக்கவுரை எழுதலாம்’ என எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தனது கட்டுரையில் மிகச் சரியாகவே எடுத்துக் காட்டியிருக்கிறார்.

கி.ராவை ஓர் இயல்பு நெறியாளர் என மதிப்பீடு செய்கிற ஆய்வாளர் எஸ்.தோதாத்ரியின் கட்டுரை, ‘போலியான புறவயத்தன்மை, கலைஞனுக்கும் சமூகத்திற்கும் உறவு இல்லாமல் அவன் நடுநிலைமை வகித்தல், எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரே மாதிரியாகப் பார்த்தல், அளவிற்கு அதிகமாக சுற்றுப்புற வர்ணனையில் ஈடுபடுதல் ஆகியவை இவரது படைப்புகளில் வலுவாகக் காணப்படுகின்றன’ என்ற விமர்சனத்தையும் முன்வைக்கிறது.

கி.ராவை போற்றுதல் என்ற எல்லையைக் கடந்து அவரை விமர்சனரீதியாக மதிப்பிடுகிற கட்டுரைகளும் இம்மாதிரியான கட்டுரைகளும் இந்நூலில் இருப்பது சிறப்பு.

‘கி.ரா.வின் கதைகளின் இலக்கிய மதிப்பை இறுதியாக நிறைவூட்டுபவை இவ்வாறு தொடத் தொட விரியும் கவித்துவச் சாத்தியங்கள்தான்’ என்ற ஜெயமோகனின் வரிகள், கி.ராவை இன்னொரு கோணத்தில் அணுகத் தூண்டுகின்றன.

‘வறண்ட கரிசல் நிலத்தை உயிர்ப்பான கதைகளின் விளைநிலமாக மாற்றியவர் கி.ரா’ என்ற எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் பார்வை, கி.ரா.வின் மையத்தை மிகத் தெளிவாக முன் வைக்கிறது.

‘கி.ராஜநாராயணன் என்ற கதைசொல்லி, வாசகர்களிடம் எதையும் திணிப்பதில்லை. அமானுஷ்யம், அற்புதம், அதீதம் எதையும் உளவியல் ஆய்வோட கதைசொல்லி சொல்வது கிடையாது. உளவியல் கண்டுபிடிப்புகளை வாசகர்களிடம் திணிப்பதில்லை என்ற கோணங்கியின் கருத்து, கி.ரா. என்ற படைப்பாளி தான் கண்ட வாழ்வை பிறரிடம் மிக இயல்பாக பகிர்ந்து கொள்கிறார். அவருக்கு வேறு எந்த நோக்கமும் இல்லை’ என்பதை நமக்குச் சொல்கிறது.

‘குருமலைக் காற்றில் வாசம் கலந்து வரும் இசைச் சக்கரவர்த்தி காருக்குறிச்சியாரின் நாயன இசையும், நண்பன் கு.அழகிரிசாமியின் கி.ராவின் பெருமைகள் பேசிக் கொண்டிருக்கும்’ என்ற கிருஷி ராமகிருஷ்ணனின் வரிகள் கி.ராவின் இன்னொரு வெளியை நமக்கு அறிமுகப்படுத்துகின்றன.

இந்நூல்களின் முதல் தொகுப்பு இவ்வாறு கி.ரா என்ற படைப்பாளியின் மொத்த ஆளுமை குறித்த பார்வைகளை வெளிப்படுத்தும் கட்டுரைகள் நிரம்பியவையாக இருக்கின்றன. இரண்டாம் தொகுப்பிலோ கி.ராவின் படைப்புகளில் காணப்படும் குறிப்பான தன்மைகள் எடுத்துக்காட்டப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, நா.சுலோசனா கட்டுரை கி.ராவின் படைப்புகளில் காணப்படும் சொலவம், வழக்குச் சொற்கள், உவமைகள் பற்றி பேசுகிறது. இர.சாம்ராஜாவின் கட்டுரை, ‘கிடை’ குறுநாவலில் காணப்படும் உவமைகள் குறித்து கூறுகிறது. ஆகாச மூர்த்தியின் கட்டுரை, ‘கி.ராவின் சங்கீத நினைவுகள்’ கட்டுரைத் தொகுப்பு, ‘பிஞ்சுகள்’ குறுநாவல் பற்றி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. உதயகுமாரின் ‘கி.ராவும் கதவும்’ கட்டுரை ‘கதவு’ கதையைப் பற்றி விவரிக்கிறது.

கி.ராவின் படைப்புகளில் உயிர்ப்போடு வாழும் பெண்களை முபீன் சாதிகா கட்டுரையும், பெ.இராஜலட்சுமி கட்டுரையும் நமக்கு புது வெளிச்சத்தில் அறிமுகப்படுத்துகின்றன.

எல்லாவற்றையும் தாண்டி கி.ராவின் கடிதங்களும் இடம் பெற்றிருக்கின்றன. அவருடைய கடிதாசிகளைப் பற்றிய கட்டுரைகளும் உள்ளன. கி.ரா என்ற படைப்பாளி குறித்த இந்த இரு தொகுதிகளும் அவரின் மிகச் சிறந்த படைப்பாளுமையை எல்லோரும் அறிந்து கொள்வதற்கான கலங்கரை விளக்கங்களாகத் திகழ்கின்றன.

கி.ரா.வை மக்களிடம் எந்த வகையில் சிறப்பாகக் கொண்டு சேர்க்க வேண்டுமோ, அந்த வகையில் இந்த நூல் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

கி.ராவுக்கு நெருக்கமாக இருந்த வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 52 ஆண்டுகாலம் அரசியல் களப்பணியில் மட்டுமல்ல, இலக்கியப் பணிகளிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார். எழுபதுகளில் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியின் புதல்வி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.சியின் அன்றைக்கு அனைவராலும் அறியப்பட்ட வாசகர் வட்டம் மூலமாக கி.ராவின் ‘கோபல்ல கிராமம்’ கே.எஸ்.ஆர், சிட்டி சிவபாத சுந்தரமும் ஆகியோரின் முன் முயற்சிகளின் மூலமாக வெளி வந்தது.

அதுமட்டுமல்லாமல், தகழி சிவசங்கரன் பிள்ளை போல கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்து கொண்டு கரிசல் கந்தக பூமியில் உள்ள இடைசெவல் என்ற குக்கிராமத்தில் தனது படைப்புகளை கி.ராஜநாராயணன் உருவாக்கிய போது, அவரோடு இருந்தவர்களில் கே.எஸ்.இராதாகிருஷ்ணனும் முக்கியமானவர். நாராயணசாமி நாயுடு விவசாய சங்கப் போராட்டத்தில் இருவரும் கைதாகி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டபோது பார்க்க வந்த காமராஜரிடமும் கி.ராவை கே.எஸ்.ஆர் அறிமுகம் செய்து வைத்தும் உண்டு. வேலுப்பிள்ளை பிரபாகரனை இடைசெவலுக்கு அழைத்துச் சென்று கி.ராவிடம் கே.எஸ்.ஆர் அறிமுகப்படுத்திய நிகழ்வுகள் எல்லாம் நெகிழ்வானவை.

கி.ரா.வின் 60-வது மணி விழாவை மதுரையில் உள்ள காலேஜ் ஹவுஸ் விடுதி அரங்கத்தில் கவிஞர் மீராவும், கே.எஸ்.இராதாகிருஷ்ணனும் நடத்தியது உண்டு. கே.எஸ்.ஆரின் முன்முயற்சியால் கி.ரா.75, கி.ரா.80, கி.ரா 85 நிகழ்வுகளில் சென்னையில் ஜெயகாந்தன், நெடுமாறன், இரா.செழியன், வைகோ எனப் பல ஆளுமைகள் கலந்து கொண்டனர். டெல்லியில் கி.ரா.வின் 90 விழாவை தினமணி நாளிதழும், தில்லி தமிழ்ச் சங்கமும் நடத்த கே.எஸ்.இராதாகிருஷ்ணன் சிறப்பாக முன்னெடுப்பு செய்தார். கி.ரா. 95 விழா புதுவை மத்தியப் பல்கலைக்கழகத்தில் நடந்தபோது அதில் பல ஆளுமைகள், பிரமுகர்கள் பங்கேற்கும்படி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் செய்ததை கி.ராவும் மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இப்போது கி.ராவின் நூற்றாண்டு விழா கே.எஸ்.இராதாகிருஷ்ணனின் முன்னெடுப்பில் நடைபெற உள்ளது.

கி.ரா. நூறு இரண்டு தொகுதிகள்

தொகுப்பாசிரியர்: வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்;

வெளியீடு
புஸ்தகா டிஜிட்டல் மீடியா பிரைவேட் லிமிடெட்,
7-002, மந்த்ரி ரெசிடென்சி, பன்னேர்கட்டா மெயின் ரோடு, பெங்களூரு-560 076, இந்தியா.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்