சிறுகதைகள் 2016: உயிர்ப்புடன் இருக்கும் சிறுகதை உலகம்

By கே.என்.செந்தில்

பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் குறிப்பிடத்தக்க விதத்தில் இந்த ஆண்டு வெளிவந்திருக்கின்றன. இவற்றின் கதைகள் ஆர்வத்தையும் சுவாரசியத்தையும் ஒருசேர அளிக்கின்றன. எஸ்.ராமகிருஷ்ணனின் பதினைந்தாவது தொகுப்பும், சாம்ராஜ், போகன் சங்கர், ஜி.காரல் மார்க்ஸ், கே.ஜே.அசோக்குமார் ஆகியோரின் முதல் தொகுப்பும் வெளி வந்திருக்கின்றன. இக்கதைகள் காட்டும் நிலப்பகுதிகள் வேறுபட்டவை. பிரத்தி யேகப் பேச்சுவழக்குகள், பண்பாட்டுக் கூறுகள், வாழ்நிலைகளை அவை கொண் டிருக்கின்றன. பெயர்களிலும் அடையாளங் களிலும் கதை மாந்தர்களுக்குள் வேறுபாடு இருப்பினும் சில விதிவிலக்குகள் நீங்கலாக இந்தக் கதையுலகுகள் பெரும் பாலும் உணர்ச்சியின் தளத்தில் ஒன்றிணை கின்றன. பல கதைகளில் காமம் வெவ்வேறு வடிவங்களில் கலந்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டின் கதைகளின் வழியே அதன் ஆசிரியர்கள் எதிர்கொண்ட வாழ்க்கை, படைப்புரீதியான அகப் போராட்டங்கள் ஆகியவற்றிலிருந்து வேறு பட்டவை இருபத்தொன்றாம் நூற்றாண்டு முற்பகுதியின் படைப்புகள். அதன் தொடர்ச்சி அறுபடாத வேளையிலும் அதைக் கடந்து செல்ல விழையும் முனைப்பு ஆர்வ மூட்டுகிறது. ஆனால், அந்த ஆர்வம் சிலவற்றில் அதீதமாகி நடுவிலேயே கொழ கொழத்துப்போய்விடுகிறது.

தமிழில் பரிசோதனை முயற்சிகளை விடவும் யதார்த்த, இயல்புவாத, செவ்வியல், நவீனத்துவக் கதைகூறு முறைகளும் நவீனக் கதை சொல்லல் உத்திகளுமே பரவலான கவனத்துக்கும் சிலாகிப்புக்கும் உள்ளாகின்றனவோ என எண்ணச் செய்யும் தொகுப்புகளாகவே இவை இருக்கின்றன.

பிறரால் அறிய முடியாத இஸ்லாமிய வாழ்வே கீரனூர் ஜாகீர் ராஜாவின் கதைக்களம். கடலூர் (இமையம்), கன்னி யாகுமரி (போகன் சங்கர்), கொங்குப் பகுதி (தேவிபாரதி, ஜாகீர் ராஜா), சென்னை (அரவிந்தன்), மதுரை, கேரளா (சாம்ராஜ்) எனக் கதைகள் பல்வேறு நிலப்பரப்புகளில் விரிகின்றன. ஈழமும் அயல் தேசங்களுமே முத்துலிங்கம் கதை களின் பின்னணி. சிறுகதைகள் என்னும் பொதுப் பெயரில் இத்தொகுதிகள் சுட்டப் பட்டாலும் நெடுங்கதைகளும் குறுங் கதைகளும் (தமிழவன்) மாறுபட்ட கதை சொல்லலும் (பாலசுப்பிரமணியம் பொன் ராஜ், எஸ்.ராமகிருஷ்ணன்) முயன்று பார்க்கப் பட்டிருக்கின்றன.

உலகின் பல்வேறு இடங்களையும் நிலக்காட்சிகளாகக் கொண்டிருப்பவை அ.முத்துலிங்கத்தின் கதைகள். அதற்கு ‘ஆட்டுப்பால் புட்டு’ தொகுப்பும் விதிவிலக் கல்ல. புலம்பெயர்ந்து வாழ நேர்ந்துவிட்ட வளின் பத்து வயது மகளுக்கு வெள்ளிக் கிழமைகளைத் தாங்க முடிவதில்லை. அவளுக்குத் தன் தந்தையைத் தெரிய வேண்டும் என்னும் பிடிவாதம். ‘வெள்ளிக்கிழமை இரவுகள்’ கதைக்குள் குரூரம் உறைந்திருக்கிறது. 70 வயதில் வேலை வேண்டி தட்டச்சு பயிலும் ஆப்பிரிக்கக் கிழவரைப் பற்றிய ‘சின்ன ஏ…பெரிய ஏ…’, இரு மாதங்களுக்கு ஒரு முறை ‘ஆட்டுப்பால் புட்டு’ தின்பதற் காகவே வீடு வரும் சிவப்பிரகாசம், மரங்களின் மீது மாறா நேசம் கொண்ட சிங்களவனான சோமபாலாவைக் குறித்த ‘சிம்மாசனம்’ போன்ற கதைகள் முத்து லிங்கத்தின் தனித்துவத்தைக் காட்டுகின்றன.

இஸ்லாமியரின் வாழ்க்கை

கீரனூர் ஜாகீர் ராஜாவின் கதைகள் பெரும்பாலும் அவர் வாழ்ந்து பெற்ற அனு பவங்களிலிருந்து உருவாகி வந்தவையே. அவரை நல்ல கதைசொல்லியாக நிலை நிறுத்துவதும் அத்தகைய கதைகளே. நவீன இலக்கியத்துக்குள் இஸ்லாமியச் சமூகத்துக்கான இடம் குறைவானது. அவ்வுலகைப் பிறர் சமைப்பதும் சுலபமல்ல. அச்சமூகத்தின் எளிய மனிதர்களின், லெளகீகத்தில் தோற்றுப்போனவர்களின் துயரார்ந்த வாழ்வையே ஜாகீர் ராஜா கதைகளாக்குகிறார். ‘கொமறு காரியம்’ தொகுப்பும் அவ்வகையானதே. பள்ளிவாசல் வேலை பறிபோய் உயிர் வாழும் பொருட்டு, இல்லாத மனைவிக்குப் புற்றுநோய் எனவும் திருமணமாகாத நான்கு ‘கொமறு’களுக்கு (உண்மையில் ஒரு மகள்) மணமுடிக்க வேண்டும் எனவும் அச்சடிக்கப்பட்ட தாளைத் தூக்கித் திரிந்து வயிறு வளர்க்கப் போராடும் தந்தையின் பாடுகளை மகளின் மனம் வழியாகச் சொல்கிறது ‘கொமறு காரியம்’ கதை. ‘தலாக்’ பெற்றுச் சிறு வயது மகனுடன் பிறந்த ஊர் திரும்பும் பெண், வயதான காலத்தில் ‘தலாக்’ வாங்கி ராட்டை சுற்றிக் காலம் கழிக்கும் அம்மாவிடம் அடைக்கலம் தேடு வதை ‘பாவம் இவள் பெயர் பரக்கத்நிஸா..’ காட்டுகிறது.

இது போன்ற கதைகளை விடுத்து, ‘வேறு மாதிரி’ எழுதப்பட்ட ஜாகீரின் கதைகள் வெற்று முயற்சிகளாகவும் பலவீனமான வையுமாகவே எஞ்சுகின்றன. சில கதைகளில் அவர் சிரிப்பு மூட்ட ஆசைப்படும் இடங்களை வாசிப் பவர் மவுனமாகக் கடக்க நேர்வது துரதிஷ்டவசமானதுதான்.

மீள முடியாத துயரங்கள்

பரிதவிப்புகளால், எளிதில் வெளிக்காட்ட முடியாத ஆழமான காயங்களால், உணர்ச்சியின் தத்தளிப்புகளால், அகத்தின் மாறாட்டங்களால், எளிதில் மீள முடியாத துயரங்களால் ஆனது போகன் சங்கரின் புனைவுலகம் (கிருஷ்ணன் ஆயிரம் நாமங்கள்). பாதிக்கும் மேற்பட்ட கதை களின் சரடாகக் காமம் இருக்கிறது. கதைகளில் பலவும் எல்லையோர மாவட்ட மான குமரியில் நிகழ்கிறது. ‘யாமினி அம்மா’ மலையாளக் கதையொன்றின் மொழிபெயர்ப்பு போலவே இருந்தது. ‘நடிகன்’, ‘நிறமற்ற வானவில்’ இரண்டும் ஆழமான கதைகள். ஆற்றுப்படுத்த முடியாத உணர்ச்சியின் மீது கட்டப்பட்ட ‘மீட்பு’ கதை முடிந்த பின்பும் தேவையற்றுத் தொடர்கிறது. கதைகளுள் தொடர்ச்சியாகப் பயின்றுவரும் உவமைகளால் அமைந்த நடையிலிருந்து போகன் வெளியேற வேண்டும். சில கதைகளின் முடிப்பு குறையாகத் தொக்கி நிற்கிறது.

இவ்வாண்டு வெளிவந்தவற்றிலேயே பெருந்தொகுப்பு (25 கதைகள்) எஸ். ராம கிருஷ்ணனின் ‘என்ன சொல்கிறாய் சுடரே’. நேரடிச் சித்தரிப்புகளைக் கொண்ட யதார்த்தக் கதைகளும் மிகுபுனைவுகளும் தொகுப்பில் கலந்திருக்கின்றன. ஆயினும் கதைகளை வாசித்து முடித்து நிமிர்ந்ததும் அலுப்பும் சோர்வும் மனதை மூடியதை எவ்வளவு முயன்றும் தடுக்க இயலவில்லை. ‘உலகின் கண்கள்’, ‘புதுமைப்பித்தனின் கடிகாரம்’ ஆகியவை குறிப்பிடும்படி இருக்கின்றன.

முந்தைய கதைகளின் சட்டகங்களி லிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு புதிய வடிவம் நோக்கிச் செல்பவை தேவிபாரதியின் நான்கு நெடுங்கதைகளின் தொகுப்பான ‘கறுப்பு வெள்ளைக் கடவுள்’. மொழியின் மீது தீவிர கவனம் கொண்டவை இப்புனைகதைகள். புனைவுக்கும் நிஜத்துக்குமான கோட்டை அழித்துப் பயணிக்கும் ‘அ.ராமசாமியின் விலகல் தத்துவ’த்தை வாசிக்கையில் கிட்டும் சுவாரசியம், அதை அசைபோடும்போது காணாமல் போய்விடுகிறது. இந்திய இலக்கிய ‘க்ளாஸிக்’கான ‘அக்னி நதி’ நாவலைப் போன்ற ஒன்றைத் தன் நெடுங் கதையில் மீட்டுருவாக்கம் செய்ய முயன்றிருக்கும் ‘கழைக்கூத்தாடியின் இசை’யே தொகுப்பில் சிறப்பான படைப்பு. மற்ற இரு நெடுங்கதைகளும் தேவைக் கதிகமாக நீட்டப்பட்டுவிட்டனவோ என்னும் உணர்வையே அளித்தன.

மதுரை மற்றும் கேரளத்தின் பிரதான சாலைகள் மட்டுமல்ல; குறுக்குச் சந்து களும் கண்முன் தெரியும்படியான காட்சி களைக் கொண்ட கதைகளின் தொகுதி சாம்ராஜின் ‘பட்டாளத்து வீடு’. புறக்காட்சி களின் சித்தரிப்புகளால் ஆன கதைகள் என்றபோதும் அவை ஒரு கட்டத்தில் பாத்திரங்களின் மன இயல்புடன் கலந்து விடுகின்றன. இடதுசாரி அரசியலின் களப்பணியினுள் அம்மனிதர்கள் சந்திக்க நேர்வதென்ன என்பதைக் காட்டும் கதைகளுள் ஒன்று ‘களி’. மென்மையும் நாசூக்கும் கொண்டு அதிராத தொனியில் நகரும் ‘13’ இறுதியில் வைத்திருக்கும் அதிர்ச்சி எதிர்பார்க்க முடியாதது. இந்த ஆண்டு வாசிக்கக் கிடைத்த காதல் கதைகளில் குறிப்பிடத்தக்கது ‘நாயீஸ்வரன்’. கதைகளின் நடை பேச்சாளரின் தொனியைக் கொண்டிருப்பது தொகுதியின் குறை.

மத்திய வர்க்கப் பின்னணி கொண்ட மனிதனை முதன்மையான, அல்லது கதையை நகர்த்திச் செல்லும் பாத்திரமாகக் கொண்டிருக்கும் அரவிந்தனின் ‘கடைசி யாக ஒரு முறை’ தொகுப்பின் கதைகள் பெரும்பாலும் சென்னையைப் பின்னணி யாகக் கொண்டிருக்கிறது. அந்த ஒரு மனிதனே வேறு வேறு காலகட்டங்களில் இக்கதைகளுக்குள் இருக்கிறான் என்பதே இக்கதைகளின் நிறையாகவும் பாதக மாகவும் இருக்கிறது. திரும்பிப் பார்த்தல், மனநடுக்கத்தை உற்று நோக்குதல், தர்க்கங்களை அடுக்கி வகை பிரித்தல் என்பதே இக்கதைகளின் பொதுப்பண்பு. தலைப்புக் கதையும் ‘மலையும் மலை சார்ந்த வாழ்வும்’ கதையும் குறிப்பிடத் தக்கவை. கூறுமுறையில் மேலும் மெனக் கெட்டிருந்தால் இன்னும் சில கதைகள் மேலும் நன்றாக வந்திருக்கக்கூடும்.

பன்முகம் காட்டும் கதைகள்

பாலசுப்பிரமணியன் பொன்ராஜின் ‘துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை’யும் தமிழவனின் ‘நடனக்காரியான 35 வயது எழுத்தாளர்’ தொகுப்பும் வழக்கமான கதைப் போக்குகளிலிருந்து விலகியவை. தமிழவனுடையது சிறிய, குறுங்கதைகளின் தொகுதி. தொகுப்பிலுள்ள 22 கதை களிலும் உள்ளூர ஏதோ பொதிந்துகிடப்ப தான தோற்றத்தை அளிக்கும் உரை யாடல்கள் இடம் பெற்றிருக் கின்றன. ஆனால், அவை வெறும் தோற்றம் மட்டுமே. இதைவிடவும் பல மடங்கு அர்த்தக் கூறுகளைத் தம் அடியோட்டமாகக் கொண்ட சிறுகதைகள் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் எழுதப்பட்டுவிட்டன. ‘மூவரும் மெளனமானர்கள்’, ‘கொலை செய் யாதிருப்பாயாக’, ‘நால்வரின் அறையில் இருந்த சிலர்’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

வாழ்க்கையின் வெறுமை யையும் இரு இணைகளுக்கிடை யேயான ஈகோ யுத்தங்களையும் பேசும் கதை, புதிர்த் தன்மை கொண்ட குறுநாவல், பின்நவீனக் கதை என பாலசுப்பிரமணியன் பொன் ராஜின் புனைவுலகம் வித்தியாசம் கொண்டிருந்தாலும் கலையாக ஆகாமல் ஏதோ ஒரு விதத்தில் நழுவிப் போய் விடுகின்றன. ஆனால் ‘வலை’ குறுநாவல் பாலாவின் தனித் துவத்தைக் காட்டக்கூடியது. அதில் அவர் எழுப்பும் வினாக்களும் புதிர்த் தன்மை கொண்ட கதை சொல்லல் முறை யும் ரமேஷ் பிரேம் விட்டுச் சென்ற இடத்தைத் தொடுபவராக அவரை அடையாளம் காட்டுகின்றன. இத்தொகுப்பில் சிறந்த ஆக்கமாகக் கருதத்தக்கது ‘வலை’. ‘உடைந்துபோன பூர்ஷ்வா கனவு’ குறிப்பிடத்தக்க கதை.

பத்துக் கதைகளைக் கொண்டிருக்கும் ஜி.காரல் மார்க்ஸின் ‘வருவதற்கு முன்பிருந்த வெயில்’ தொகுப்பில் அக்கதைகளின் பாத் திரங்களுக்குப் பெயர்களே இல்லை. ஆண் பெண் உறவுகளைப் பேசும் காரல் மார்க்ஸின் கதைகளில் சில தருணங்கள் நன்றாக இருக்கின்றன. ‘காட்டாமணக்கு’, ‘உப்புச்சுவை’ ஆகியவை குறிப்பிடத்தக்கவை. எளிய மொழி என்றபோதும் அதில் ஆழமின்றி இருப் பதும் உரைநடையில் சொற்களைச் செறி வாகக் கைகொள்ளத் தவறியிருப்பதும் இக்கதைகளின் பலவீனங்கள்.

‘சாமத்தில் முனகும் கதவு’, கே.ஜே.அசோக்குமாரின் முதல் தொகுப்பு. குறிப்பு களாகச் சொல்ல வேண்டியதை விரிவாகவும் விஸ்தரித்து எழுத வேண்டியதை ஒற்றை வாக்கியத்திலும் சொல்லி நகர்கின்றன இக்கதைகள். காமத்தின் நிறத்தை அறிய முயலும் ‘சாமத்தில் முனகும் கதவு’, வித்தியாசமான கருப்பொருளைக் கொண்ட ‘வருகை’ ஆகியவை கவனத்தில் நிலைக்கின்றன. தேவை யற்றுக் கதையை வளர்த்துச் செல் வதையும் பழைய பாணியை நினை வூட்டும் கூறல்முறை களையும் கடந்து சென்றால் மேலும் நல்ல கதைகளை இவரால் அளிக்க இயலும்.

தனித்து நிற்கும் கதைகள்

2016-ல் வெளிவந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளில் மெச்சத் தக்கது இமையத்தின் ‘நறுமணம்’. தேர்ந்தெடுக்கும் கருப்பொருளைச் செய்நேர்த்தியுடன் கலையாக மாற்றும் ரசவாதம் ஒன்றிரண்டு கதைகள் தவிர்த்துப் பிற அனைத் திலும் நிகழ்ந்திருக்கிறது. உலக மயமாக்க லில் இந்நூற்றாண்டு அடைந்திருக்கும் கசப்புகளையும் இழப்புகளையும் இமைய மளவுக்குக் கதைகளுக்குள் கொணர்ந்த வர்கள் மிகச் சிலரே. வியாபாரமயத்தின் நச்சுப் பொய்கை சக மனிதர்களைக்கூடப் பண்டமாக, ஏதிலிகளாக ஆக்கிவைத் திருப்பதை நுட்பமாகப் பொதிந்துவைத்திருக் கிறார். பிரச்சாரமாக ஆகியிருக்கக்கூடிய ‘நறுமணம்’ அவரது சொல்முறையால் கலைஅமைதி பெற்றிருக்கிறது.

இவ்வாண்டின் மொத்தக் கதைகளிலும் உயர் தளத்தில் வைத்து மதிப்பிட வேண்டியது ‘ஈசனருள்’. பெண்களின் மன உலகை நெருங்கிச் சென்று காட்டும் இமையம், தேர்ந்த படைப்பாளிகளின் குறுக்கே பால் பேதங்களின் சுவர்கள் ஏதுமில்லை என உணர்த்துகிறார். உயிரோட்டமான பாத்தி ரங்களும் உரையாடல்களில் வட்டார வழக்கின் கொச்சையும் இக்கதைகளுடன் அணுக்கமான பிணைப்பை உண்டாக்கி விடுகின்றன. சில கதைகளில் வெளிப்படும் தொனியின் நிழல் வேறு சிலவற்றிலும் பரவிவிட்டதோ எனத் தோன்றும் ஐயமே இத்தொகுப்பின் குறை.

இந்தத் தொகுப்புகள் அனைத்தையும் வாசித்தபோது பலரும் எண்ணிக்கொண் டிருப்பதுபோல தமிழில் சிறுகதை வடிவம் சுணங்கிப் போய்விடவில்லை என்ற எண்ணமே ஏற்பட்டது. அவ்வடிவத்தின் மீது படைப்பாளிகளுக்குள்ள தாகம் அடங்கிவிடவில்லை என்றும் தோன்றியது. 2016-ல் வந்துள்ள கதைகளிலிருந்து தேர்ந்தெடுத்த கதைகளின் தொகுப்பை உருவாக்கினால் அது தமிழ்ச் சிறுகதையுலகினுள் என்ன நடந்துகொண் டிருக்கிறது என்பதை அறிவதற்கான தொகுப் பாக இருக்கும். ஆனால், அந்நூலைக் கையில் பற்றியபடி அத்தொகுப்பு குறித்துப் புளங்காங்கிதமடையவோ இறுமாப்புக் கொள்ளவோ முடியுமா என்பது ஐயமே.

கே.என்.செந்தில், எழுத்தாளர், ‘கபாடபுரம்’ இணைய இதழின் ஆசிரியர். தொடர்புக்கு: knsenthilavn7@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

13 hours ago

இலக்கியம்

13 hours ago

இலக்கியம்

13 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

மேலும்