பேருந்தில் வந்துகொண்டிருக்கும்போது நண்பர் ஒருவர் நிறைய அலுத்துக்கொண்டார். 'செலவு செய்பவருக்குத்தானே தெரியும்.. குழந்தைகளை வளர்ப்பது என்பது எவ்வளவு பெரிய கஷ்டம்' என்பதுபோல... அவர் தனது குழந்தைகளை பள்ளிப் படிப்போடு பல்வேறு பாடப்பிரிவுக்கு அப்பால் உள்ள கல்வியை வழங்குவதில் நிறைய செலவிடுபவர். அவரது நிலையை நினைக்கும்போது ஒருபக்கம் வருத்தமாகவும் இன்னொருபக்கம் இன்றைய குழந்தைகளின் இறுக்கம் குறித்த சிந்தனைகளும் மெல்ல விரியத் தொடங்கின.
அப்போதெல்லாம் வீட்டில் குழந்தைகள் இருப்பார்கள் அவ்வளவுதான். பள்ளிநேரம் தவிர அவர்கள் எங்கு போகிறார்கள் எங்கு விளையாடுகிறார்கள் என்பதிலெல்லாம் எந்தக் குழப்பமும் சந்தேகமும் வராத காலமாக அது இருந்தது. லட்சியம், நோக்கம், இலக்கு என்பதெல்லாம் கொஞ்சம்கூட மகிழ்ச்சிக்கு ஒவ்வாத வார்த்தைகளாக இருந்த காலம்கூட அதுதான். குழந்தைகள் என்றாலே அது பெற்றோர்கள் தங்களோடு மட்டுமே சொந்தம் கொண்டாடிக்கொள்ளும் உரிமைகளாக மாறிப்போய்விட்ட ஒரு காலகட்டத்திற்கு நாம் வந்துசேர்ந்துவிட்டோம். தங்கள் வீட்டைத்தவிர அண்டைவீட்டைக்கூட அறிந்துகொள்ள விருப்பமில்லாத குறுகிய மனநிலைக்குள் இன்று அவர்கள், ஒண்டுக்குடித்தனம்போல!
அதேபோல, குழந்தைகளுக்கு கதைகள் சொல்வதைப் பற்றி சொல்லிச்சொல்லி சிலாகித்துக்கொள்கிறோம். எத்தனைபேர் குழந்தைகளைப் பற்றிய கதைகளை மற்றவர்கள் சொல்லி சிலாகித்திருக்கிறோம்? சுவாரஸ்யமான அவர்கள் உலகத்தை புரிந்துகொள்ள அவர்களுக்கு எந்தவகையில் நாம் சுதந்திரம் அளித்திருக்கிறோம் எனும் கேள்விகள் அடுக்கடுக்காய் எழுகின்றன.
இதைசொல்லும்போது கு.அழகிரிசாமி அவர்கள்தான் நினைவுக்கு வருகிறார். குழந்தைகளைப் பற்றிய பெரியவர்களுக்கான கதைகள் எழுதுவதில் சமர்த்தர். 'அன்பளிப்பு' எனும் சிறுகதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாதெமி விருதுபெற்ற தமிழின் முக்கியப் படைப்பாளி. அதே தொகுப்பில் உள்ள 'ராஜா வந்திருக்கிறார்' கதையைத்தான் சுஜாதா சிறப்பித்துப் பேசுவார். பலரும் அக்கதையையே குறிப்பிட்டுள்ளனர். குழந்தைகளின் மனஉலகம் தன் சிறகுகளை தங்குதடையின்றி விரித்துக்கொண்ட கதை அது.
எனக்கு தலைப்புக் கதையான அன்பளிப்பே சிறந்த கதை என்றுதான் படுகிறது. அதற்குக் காரணம் ஒருவேளை அதில் குழந்தைகளோடு ஒரு இளைஞனும் இடம்பெறுவதற்காக இருக்கலாம்.
குழந்தைப் பருவத்தைக் கடந்த பிறகுகூட இளைஞனாக திரிந்த காலத்தில் பெரும்பாலும் திரும்பவும் குழந்தைகளோடு விளையாடவும் அன்போடு மல்லுக்கட்டவும் கிடைத்த வாய்ப்புகள் அதிகம் என்பதால் 'அன்பளிப்பு' பிடித்திருக்கிறது என்பதை சொல்வதில் எந்த தயக்கவும் இல்லை.
அழகிரிசாமியின் சிறுகதைக்குள் போவதற்குள் எனது அனுபவம் ஒன்றைக் கூறினால்கூட சற்றே பொறுத்தமாக இருக்கும். என்றுமில்லாமல் அன்று குழந்தைகள் சிலநாட்கள் நான் இடம்மாறியிருந்த கரும்புக்கொல்லைக்கே வந்துவிட்டனர்.
ஒருபக்கம் கரும்பு சுமைகள் கட்டப்பட்டு பெரிய கோட்டைமதில் போல காட்சியளித்தது. இன்னொரு பக்கம் கரும்பாலையில் பாகுகாய்ச்சும் வேலைகள் மும்முரமாக நடந்துகொண்டிருந்தன. வெயிலில் காய்ந்த கரும்பு கோதுகளை கோணியில் கட்டி நான் எடுத்துக்கொண்டுபோய் கரும்பாலையில் போட்டுபோட்டு போட்டுவிட்டு வந்துகொண்டிருந்தபோதுதான் அவர்களைப் பார்த்தேன்.
எங்களின் தக்காளி மிளகாய் தோட்டத்து வரப்பில் நடந்துபோய் வேறுதிசையில் வெள்ளைகாசி வீட்டு முள்ளங்கிப் பாத்திவழியாக போக இருந்தவர்களைப் பார்த்து நான் கையசைத்தேன்... ''இந்தப் பக்கம் வாங்க'' அத்தனைக் குழந்தைகள் முகத்திலும் மகிழ்ச்சி. துள்ளிக் குதித்து ஓடிவந்தார்கள்... ''என்ன இவ்வளவு தூரம்? வீட்ல சொல்லிட்டுதானே வந்தீங்க?''
''அதெல்லாம் சொல்லலை. அப்புறம் சொல்லிக்கலாம். ஒருமைல் தூரம் வந்துருக்கோம். வெல்லம் காய்ச்சற வாசனை தூரத்திலேயே மூக்கைத் தொளைச்சது. மொதல்ல எங்களுக்கு கரும்புப் பால் கொடுங்க..'' என்றவர்களைப் பார்த்து, ''ஹாஹாஹா ஹோஹோஹோ'' என்று சிரித்துவிட்டு வேகமாய் ஓடிப்போய் பித்தளை போகினியில் ஆலைப்பால் எடுத்துவந்து, கிணற்றோரம் முளைத்துக்கிடந்த ஆலை இலைகளைவிட அகலமாய் இருந்த முருக்கன்இலைகளை பம்புசெட்டில் நன்றாகக் கழுவி சுண்டல்காகிதத்தைப் போல பெரியஅளவில் சுருட்டி கீழ்விளிம்பில் மடித்துக்கொள்ளச் செய்து அனைவருக்கும் ஆலைப்பாலை ஊற்றிஊற்றிக் கொடுக்க அவர்கள் ருசித்துக் குடித்தது நெஞ்சில் பால் வார்த்தது.
''நீங்க வந்தது நல்லவிஷயமதான். ஆனா நம்ம தெருவுல மாதிரி இங்க உக்காந்து கதை பேசமுடியாதே? நான் வேலையா இருக்கேன் இல்ல?''
''நாங்களும் கோது அள்ளிப் போடறோம். அப்போ யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க.. அப்படியே பேசியிருந்துட்டு நாங்க கௌம்பறோம்'' என்றனர். அவர்களின் கள்ளமறியா அன்பை நினைத்து ஒருகணம் மனம் சிலிர்த்தது. பெரியவீட்டு பப்லு, மணிமாமா குட்டிப்பொன் (வீட்டில் பொண்ணு என்றில்லாமல் பொன்-தங்கம் என்ற அர்த்தத்தில் அழைக்கிறாரகள்),டேவிட் ஆசிரியர் இளையமகன் சார்லஸ் (இவன் டிரிபிள் பேங்கூஸ் இசைக்கருவி வித்தகன்), சுகுணா டீச்சர் பையன் மக்கேசு(வீட்டில் அவனை மக்க்க்க்கேசு என்று இழுத்து அழைப்பார்கள்), சுந்தருவோட அக்கா பையன் கோவாலு, 100க்கு 110 மார்க் எடுக்கும் வெங்கட்ராமன், மஞ்சுவூட்டு பாப்பா இவர்கள் எல்லாம் அவ்வளவுதூரம் எப்படி நடந்து வந்தார்கள். இவர்கள் போகும்போது எப்படியாவது மாட்டுவண்டியில் ஏற்றி அனுப்ப ஏற்பாடு செய்யவேண்டும் என்று தோன்றியது.
அதுமட்டுமின்றி ''நீங்க வேலையை முடிக்கறத்துக்குள்ள மல்லாட்ட கேக் செய்யலாம்'' என்று சொன்னேன்.. ''ஆ மல்லாட்ட கேக்கா... அப்போ வேலையை சீக்கிரம் முடிப்போம் லல்லா லல்லா லாலா'' என்று கும்மாளத்தோடு கோணிப்பைகளை தூக்கிக்கொண்டு ஓடினர்.
எல்லோரும் கோணிப்பையின் மேல் காய்ந்த கோது சக்கைகளை எடுத்துப்போட்டு சிந்தாமல் எடுத்துச்சென்று ஆலை அடுப்பு அருகே கொட்டிவிட்டு வந்தனர். ஆனால் இந்த சுகுணா டீச்சர் பையன் மக்கேசு மட்டும் கோதுகளை தானே ஒரு கோணிப்பையில் போட்டு எடுத்துச் சென்றானே தவிர ஆலை அடுப்புக்கு போகும்போது ஒரே ஒருகோது செத்தைகூட அந்தக் கோணியில் இல்லை. தவிர வழியெல்லாம் அங்கேஇங்கே என்று கோதுசெத்தைகள் சிதறிக்கிடந்தன. இப்படி ஒவ்வொருமுறையும் செய்ததை கவனித்துவிட்டு நான் மெல்ல அவனிடம் சென்றேன்.
''தம்பி இப்படி வாங்க... அவங்க வேலையை சுத்தமா முடிக்கட்டும். உங்களுக்கு மல்லாட்ட கேக்கு உண்டு... இப்படி வந்து உக்காருங்க..'' என்றதும்தான் தாமதம் என்னை அவன் முறைத்த முறை இருக்கிறதே... ''எனக்கு இந்தக் கோணியை எப்படி பிடிக்கறதுன்னு சொல்லிக்கொடுங்க..''என்றான்.
எப்படி சொல்லிக்கொடுப்பது கோணி அவனைவிட பெரியதாக இருக்கிறதே?
''பரவாயில்ல மக்கேசு... வாங்க வந்து இப்படி உக்காருங்க... ஸ்கூல்ல இன்னிக்கு என்ன நடந்தது அதை சொல்லுங்க...''
''மாமா நான் சொல்றேன்... அவன் இன்னைக்கு என்ன பண்ணான் தெரியுமா அந்த கலா டீச்சர் இருக்காங்க இல்ல அவங்க உலகம் உருண்ட மூனுபங்கு தண்ணி தன்னைத்தானே சுத்திக்கிட்டு சூரியனை சுத்திவரும்னு சொன்னாங்க. இவன் என்ன கேட்டான்னு கேளுங்களேன்...'' மணிமாமாவின் குட்டிப்பொன் கேட்க நான் அவனைப் பார்த்தேன்.
''என்ன கேட்டே? நான் ஒன்னும்சொல்லமாட்டேன் சொல்லு.''
''அப்படி தன்னைத்தானே சுத்திக்கிட்டு சூரியனையும் சுத்திவரும்போது தண்ணி அலம்பி கீழே ஊத்திக்காதான்னு கேட்டேன்... இது தப்பா. ஒழுங்கா படிக்காத! ஆனா கேள்விமட்டும் கேளு'ன்னு பளார்னு அடிச்சிட்டாங்க. அதுக்கு அவங்களுக்கு பதில் தெரியலை. உங்களுக்காவது தெரியுமா?'' என்று கேட்டான்.
எனக்கு அந்தமாதிரியெல்லாம் அறிவியல்பூர்வமாக அதுவும் உடனே பதில்சொல்லும் அளவுக்கு தெரியாது. ''தெரியாது. ஆனா மல்லாட்ட கேக்கு செய்யத்தெறியும்... வாங்க போய் சுடச்சுட வெல்லப்பாகு எடுத்துவரலாம்.'' என்று அவனை அழைத்துச் சென்று இறைப்பு மழைக்குக் காத்திருந்த வேர்க்கடலைச் செடிகளைப் பிடுங்கிவர அழைத்துச் சென்றேன்
காய்களைப் பறித்து ஓலையில் காய்களைப் போட்டு சுட்டு மூன்று கற்களை அமைத்து அடுப்பு செய்து எடுத்துவந்த வெல்லப்பாகை திரும்பவும் காய்ச்சினோம். முக்கால்வாசி காய்ந்திருந்த அந்தப் பாகையே மீண்டும் காய்ச்சியபிறகு அதில் வேர்க்கடலைக் காய்களைப் போட்டு சற்றே கிளறினேன். பாகு முறுகக் தொடங்கியதும் அடுப்பை அணைத்தேன். தட்டில் ஊற்றி கத்தியால் குறுக்கும்நெடுக்குமாக இழுத்து வில்லைவில்லைகளாக துண்டித்தேன்.
எல்லோரும் வெல்லப்பாகுமல்லாட்டகேக்கை சுவைக்கத்தொடங்கினர். மக்கேசு மட்டும் தொடவேயில்லை. ''என்ன மக்கேசு சாப்பிடுங்க'' என்றேன். ''என்னை கோது அள்ளவேணாம்னு சொன்னீங்க இல்லை. எனக்கு மல்லாட்ட கேக் வேண்டாம். நான் வீட்டுக்கு கௌம்பணும்'' என்றான். என் முகம் சட்டென்று வாடியதைப் பார்த்தவன், ''வேண்ணா எப்படி கோதுஅள்றதுன்னு சொல்லிக்கொடுங்க. மல்லாட்ட கேக்கை எடுத்துக்கறேன்...'' என்று உறுதியாகக் கூறினான்.
வேறுவழியின்றி அவனையும் கோவாலுவையும் அழைத்துச்சென்று இரண்டு பேரையும் கோணியின் இரண்டுபக்கங்களையும் பிடிக்கச்சொல்லி கோதுகளை அள்ளிப்போட்டேன். ''கீழே சிந்தாம கொண்டுபோய் கொட்டுங்க'' என்றேன்.
வேறுயாரையும்விட சிறு செத்தைகூட கீழே விழாமல் அவன் கோவாலுவுடன் கோது எடுத்துச்சென்றதைக்கண்டு என் கண்கள் விரிந்தன. மல்லாட்டக்கேக்கை சாப்பிட்டவாறே எனக்கு கைகளை அசைத்து பூஞ்சிரிப்பை உதிர்த்தபடி விடைபெற்றவாறே மாட்டுவண்டியில் போய்கொண்டிருக்கும் அந்த மக்கேசு என் மனதில் சம்மணம் போட்டு அமர்ந்துவிட்ட கதை இது.
கு.அழகிரிசாமிவின் 'அன்பளிப்பு' சிறுகதையில் வருவது இவர்களைவிட மிக மிக உணர்வுபூர்வமான சிறுவர்கள். வளர்ந்த சிறுவர்கள் என்று கூறப்படுபவர்களுக்கெல்லாம் புத்தகங்கள் தரும் மாமா தங்களுக்கு புத்தகங்கள் படிக்க இன்னும் கொஞ்சம் வகுப்புகள் தாண்டவேண்டும் என்று கூறுவதற்காக மிகவும் வருத்தப்படும் சிறுவர்கள் அவர்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாமல் பிருந்தாவுக்கு காய்ச்சலே வந்துவிடுகிறது.
'அன்பளிப்பு' கதைசொல்லி கு.அழகிரிசாமிதான். இக்கதையில் அவர் பத்திரிகையில் பணியாற்றும் எழுத்தாளர் என அறிமுகமானாலும் கதைமுழுக்க குழந்தைகளோடு, குழந்தைகளின் நண்பராகத்தான் வருகிறார்.
கதைக்களன், சென்னை மாம்பலத்தில் உள்ள அவரது வீடும் அருகில் உள்ள சில தெருக்களும்தான். அவ்வப்போது மதிப்புரை எழுத இவரிடம் தரப்படும் புத்தகங்களை வீட்டில் வைத்து படித்துவிட்டு பொறுமையாக எழுதுவது வழக்கம். குழந்தைகள் அதை எடுத்துச் செல்வார்கள். சில நேரங்களில் புதிய புத்தகம் எதையும் கொண்டுவரவில்லையென்றால் அதை எதிர்பார்த்து வரும் குழந்தைகள் இவரை உண்டு இல்லை என்று செய்துவிடுவார்கள். இவருக்கு சொந்தமில்லாத அக்கம் பக்கத்துவீட்டுக் குழந்தைகள்தான் அவர்கள். அவர்களை
ஏன் இவர் இவ்வளவு நேசிக்கவேண்டும். அதற்கான காரணத்தை 'அன்பளிப்பு' கதையில் ஒரு இடத்தில் குறிப்பிடவும் செய்கிறார். அதை அவருடைய வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ளும்போது நமது ஹார்மோன்களில் தேன்சுரக்கும்.
''உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்ளுவதும், அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், ஒரு நடிப்பும் கலந்திருக்கின்றன. குழந்தையைப் போலப் பேசி, குழந்தையைப் போல ஆடிப்பாடி, குழந்தையை விளையாட்டுப் பொம்மையாகக் கருதி அதற்குத் தக்கவாறு நடந்து கொள்ளுகிறார்கள். ஆனால் அந்தச் சூதுவாதறியாத குழந்தைகளோ அப்படி நடிப்பதில்லை; அவர்களுடைய அன்பில் அந்த விளையாட்டுணர்ச்சி கலக்கவில்லை. அவர்கள் உண்மையிலேயே அன்பு காட்டுகிறார்கள். இந்த உண்மை எனக்கு என்றோ, ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் மனத்தில் தைத்தது. அன்று முதல் நான் அவர்களைக் குழந்தைகளாக நடத்தவில்லை. நண்பர்களாக நேசித்தேன். உற்ற துணைவர்களாக மதித்தேன்.'' -- அழகிரிசாமியின் இந்த வார்த்தைகள் அசலான நேசிப்பை வாசகருக்குக் கடத்துகிறது.
குட்டிச்சிறுவனான சாரங்கனுக்கும் பிருந்தாவைப்போல மனதில் தனக்கு புத்தகம் தரவில்லை என்ற ஆதங்கம் நிறைய உண்டு. பிருந்தாவுக்கு உடம்புசரியில்லை என அவளை வீட்டுக்குப் போய் பார்க்க இவரைக் கண்டதிலிருந்து காய்ச்சல் குறையத் தொடங்குகிறது. இவன் அங்குபோவதை அறிந்த சாரங்கன் அவன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்தவாறே ''எங்கள் வீட்டுக்கு வாருங்கள்...'' என்று அழைக்கிறான்.
எவ்வளவு மறுத்தும் அவன் விடவேயில்லை. ஓடிவந்து கையைப் பிடித்து இழுக்க ஆபிசுக்கு நேரமாகிவிட்டது, விடு கையை'' என்று கூற அவன் விட்டுவிட்டான். தன் இடது கையில் வைத்திருந்த நெல்லிக்காயை ''இந்தாருங்கள்'' என அவருக்குக் கொடுக்கிறான். அதை வாங்கிக்கொள்ள அவனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி... ''எப்போ எங்க வீட்டுக்கு வருவீங்க என்று கூடவே நடக்கிறான்... ''அடுத்த ஞாயிற்றுக்கிழமை... கட்டாயம் வரவேண்டும்''
''சரி'' என்பதைக் கேட்டு வீட்டுக்கு திரும்பிவிடுகிறான்.
பிருந்தாவுக்கும் காய்ச்சல் குணமாகிவிட்டது. ''நீங்க வந்ததுதான் அவளுக்கு மருந்தாக இருந்தது'' என அவளின் தகப்பனார் கூற இவருக்கு எப்படியோ ஆகிறது. ''எப்படியாவது உடம்பு குணமாயிற்றே அதுபோதும்'' என்று பதில் தருகிறார்.
சனிக்கிழமையன்று குழந்தைகளுக்கு விடுமுறை. பிருந்தா உட்பட எல்லாக்குழந்தைகளும் வீட்டுக்கு இவரது வீட்டுக்கு வந்துவிட்டார்கள். புதுவருஷம் இரண்டு மூன்று தினங்களே இருந்ததால் சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும் மட்டும் இரண்டு டைரிகள் தந்து அதில் 'அன்பளிப்பு' என எழுதி இருவர் கையிலும் தருகிறார். இவர் எத்தனை புத்தகங்கள் கொண்டுவந்தாலும் அதை சுந்தரராஜனுக்கும் சித்ராவுக்கும்தான் தருவது வழக்கம். மற்ற குழந்தைகளுக்கு அதில் ஆட்சேபம் இல்லை.
அவர்கள் இருவர்தான் இப்படிப்பட்ட அன்பளிப்புக்குத் தகுதியானவர்கள் என்பதை ஒப்புக்கொண்ட பாவனையில் அவர்கள் இருப்பார்கள். எல்லோரும் போய்விட சாரங்கன் மட்டும்போகவில்லை. மாமா நாளை ''எங்கள் வீட்டுக்கு வருகிறீர்களா? நாளைக்குத்தான் ஞாயிற்றுக்கிழமை'' என்றான்.அருகிலிருந்த வால்ட் விட்மனின் கவிதைத் தொகுதியை கையில் எடுத்து, ''இந்தப் புத்தகத்தை எனக்குத் தருவீர்களா?'' என்று கெஞ்சுதலாக் கேட்டான். இவருக்கு வேடிக்கையாக இருந்தது. சிரித்துக்கொண்டே ''இந்தப் புத்தகம் உனக்கு எதற்கு? நான் அன்றைக்கே சொல்லவில்லையா? நீ எஸ்.எஸ்.எல்ஸி.வகுப்பு வந்ததும் கேள் தருகிறேன்'' என்கிறார். மீண்டும் மீண்டும் பிடிவாதம் பிடித்தான்.
இவர் சொல்வதை அவன் கேட்கவில்லை. மெல்ல எழுந்து ஒரு வறண்ட பார்வை பார்த்துவிட்டு எழுந்துசென்றவன் வாசலில் நின்று அழுவது இவருக்குக் கேட்கிறது. என்னது அழுவது சாரங்கனா என யோசித்து இவர் போய் எட்டிப்பிடிப்பதற்குள் ஓடியே போய்விட்டான். மறுநாள் ஞாயிறு அன்று எல்லாக்குழந்தைகளும் வந்திருந்தனர். அவனைக் காணவில்லை. கடைசியாக வந்தவன்
''ஏன் எங்க வீட்டுக்கு வரவில்லை.'' எனக் கேட்டு அவர் எவ்வளவு மறுத்தும் வீட்டுக்கு இழுத்துச்செல்கிறான். அங்கு இவருக்கு பலமான உபசரிப்பு. ஒரு தட்டில் உப்புமா. ஒரு டம்ளரில் காபி. இவர் திடுக்கிட்டு அவனைப் பார்க்கிறார். இவருக்கு சுவாசமே நின்றுவிட்டதுபோல ஆகிறது... வேறுவழியின்றி சாப்பிடுகிறார். இந்தப் பையனுக்கு எதற்கு என் மேல் இவ்வளவு அன்பு? இவன் அன்பு என்னைத் திணற அடிக்கிறதே! இது தாங்கமுடியாத அன்பு! தாங்க முடியாத பேதைமை! இரண்டும் சேர்ந்து என்னை குரங்காட்டம் ஆட்டுகின்றன என்றெல்லாம் நினைக்கிறார்.
அறையில் சென்று தட்டு டம்ளர்களை வைத்துவிட்டு வந்தவன்... நேற்று கொடுத்த டைரியைப் போலவே புத்தம்புது டைரி ஒன்றை எடுத்துவந்து இவரிடம் கொடுத்து பேனாவையும் கொடுத்து எழுதுங்கள் என்றான்.இவருக்கு ஒன்றுமே புரியவில்லை. “என்ன எழுத?” என்று கேட்கிறார்.
“என் பிரியமுள்ள சாரங்கனுக்கு அன்பளிப்பு” என்று எழுதுங்கள்.”
*
(ஓவியம்: வெங்கி)
பால்நிலவன்
தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago