இசைபட வாழ்பவரின் பிரதி!

By ந.வினோத் குமார்

'சமதளப்படிகளில் இறங்கும் வித்தையறிந்திருக்கிறான் பியானோ கலைஞன்' என்று எழுதிய ஜான் சுந்தருக்குள் எப்போதும் ஒரு இசைஞன் கிதாரை மீட்டிக் கொண்டோ அல்லது 'தம் தனதம்' என்று தாளமிட்டுக்கொண்டோ இருக்கிறான். எதிரில் இருப்பவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது, வார்த்தைகள் கண்ணாமூச்சி ஆடுகிற நேரத்தில், அந்த இடைவெளியை நிரப்ப அவரிடம் தயாராக இருக்கிறது ஒரு பாடல்!

ஜான் சுந்தர்... அற்புதமான இசைக் கலைஞர்.

''நான்

ஆர்க்கெஸ்ட்ரா பண்றேன்'' என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்வது தன்னடக்கமாக இருக்கலாம். ஆனால் அவர் பிரதியெடுக்கும் இசை அசலான கலை. ரசிப்பவருக்கு வேண்டுமானால் இசை பொழுதுபோக்கு. அவருக்கு அதுதான் வாழ்க்கையாகவும், வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் ஒன்றாகவும் இருக்கிறது.

"கோயமுத்தூர்ல இருக்கேன். கிறிஸ்தவக் குடும்பம். அதனால சின்ன வயசுல இருந்தே சர்ச்க்குப் போய் 'கொயர்'ல பாடுறது வழக்கம். ஒரு நாள் அப்படிப் பாடிக்கிட்டிருக்கும்போது, கூட்டத்துல இருந்து 'ஏய்..'ன்னு யாராவது கூப்பிடுவாங்கள்ல. அந்த மாதிரி சர்ச்சுக்குப் பக்கத்துல இருந்த மண்டபத்தின் லவுட்ஸ்பீக்கர்ல இருந்து 'ஹேஏஏஏஏ... தந்தன தந்தன தந்தன தந்தன தந்தான்னனா... தந்தான்னா தந்தான்னா தந்தான்னா....' ('அறுவடை நாள்' படத்தில் இடம்பெற்ற‌ 'தேவனின் கோயில்...' பாட்டின் இரண்டாவது இடையிசையில் வரும் இளையராஜாவை நகலெடுக்கிறார்...) என்று ஒருத்தர் என்னைக் கூப்பிட்டார். அப்படித்தான் நான் ஆர்கெஸ்ட்ராவுக்குள் வந்தேன்" என்று புன்னகைக்கிறார் ஜான்.

90-களிலிருந்து மேடைகளில் பாட ஆரம்பித்தவர், இன்று 'இளையநிலா' என்ற பெயரில் சொந்தமாக ஆர்க்கெஸ்ட்ரா அமைப்பு நடத்துகிறார். கோவை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இவரின் ஆர்க்கெஸ்ட்ரா மிகப் பிரபலம். தன்னுடைய சுமார் 20 ஆண்டு கால ஆர்க்கெஸ்ட்ரா அனுபவங்களை 'நகலிசைக் கலைஞன்' என்ற தலைப்பில் புத்தகமாக்கியிருக்கிறார்.

"மேடையில் பாந்தமான உடையணிந்து ஸ்ரீதேவி பாடிக்கொண்டிருக்க, பின்னணியில் குழுத் தலைவனாக சின்னக் கொண்டையிட்ட சீக்கிய இளஞ்சிங்கமொன்று கம்பீரம் மிளிர்கிற உடல்மொழியோடு 'ட்ரெம்பெட்' குழலைச் சுழற்றியபடி நடைபோடும். இந்தக் காட்சிக்காகவே இயக்குநர் மகேந்திரனின் கைகளில் மண்டியிட்டு முத்தமிடலாம். இவ்வளவு இயல்பாக இசைக் குழுவைத் தமிழ் சினிமாவில் யார் காட்டினார்கள்?" என்று 'ஜானி' படக் காட்சியொன்றை சிலாகிக்கிறார் ஜான் சுந்தர்.

அதே ஜான் சுந்தர் இன்னொரு இடத்தில், "சீப்பை எடுத்து ஹோஸ் பைப்பில் வறட் வறட் என்று இழுக்க வேண்டும். அந்த 'வறட்'டிலிருந்த பெரிய 'ற' என்னைத் தொந்தரவு செய்துகொண்டே இருக்கிறது. ஜென்ஸியம்மா மாதிரி" என்று எழுதி நம்மைச் சிலிர்க்க வைக்கிறார்.

''நேற்றைய சுவரொட்டியில் ஒலிவாங்கியோடு புன்னகைக்கிற இதழ்களும் இப்போது நுரைத்துப் பொங்குகிறவைகளும் ஒன்றேதான்'' என்று சக இசைக் கலைஞனின் மரணத்தை எழுதி நம்மைக் கலங்கச் செய்கிறது ஜான் சுந்தரின் எழுத்து.

ஆர்க்கெஸ்ட்ரா அமைப்பில் இருக்கும் வாழ்க்கை, சோகம், சிரிப்பு, தோல்வி எனப் பல விஷயங்களைப் பேசுகிறது 'நகலிசைக் கலைஞன்'. ஜான் சுந்தருக்கு இது முதல் புத்தகம் அல்ல. ஏற்கெனவே 2013-ம் ஆண்டு அகநாழிகை பதிப்பக வெளியீடாக 'சொந்த ரயில்காரி' எனும் கவிதைத் தொகுப்பு வந்துள்ளது. அதற்கு 2014-ம் ஆண்டுக்கான 'ஜெயந்தன் விருது' கிடைத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

"சுமார் 15 வருஷம் கோயமுத்தூர்ல பஞ்சாலைகள்ல வேலை செஞ்சிருக் கணுங்க‌. 'மில்'லில் வேலை பார்த்துவிட்டு தலைமுடி, உடம்பெல்லாம் பஞ்சாக‌ வெளியே வருவது அன்னைக்கெல்லாம் பெரிய கிரெடிட்டுங்க‌. ஒரு கட்டத்துல வெளிமாவட்டங்கள்ல இருந்து பெண்களைக் கூட்டியாந்து குறைஞ்ச கூலிக்கு வேலைக்கு நியமிக்கிற‌ 'சுமங் கலித் திட்டம்' மாதிரியான விஷயங்கள் எல்லாம் வந்தப்புறங்க‌ என்னை மாதிரியான ஆட்களுக்கெல்லாம் கட்டாய ஓய்வு கொடுத்துட்டாங்க.

'மில்'லில் வேலையில இருந்தப்பங்க, ஃப்ரீலான்ஸா மேடைகள்ல பாடிட்டு இருந்தணுங்க. அப்ப எல்லாம் நிறைய புரோகிராம் வரும். மில்லுல பர்மிஷன் வாங்கிட்டு வர்றது அவ்ளோ கஷ்டமா இருக்கும். ஏதோ என்னோட சூப்பர்வைசருக்கு இசையில ஆர்வம் இருக்கப்போய், என்னை இந்த மாதிரி விஷயங்களுக்கெல்லாம் அனுப்பிச்சாருங்க. கட்டாய ஓய்வுக்குப் பிறகு எனக்கு ஆர்க்கெஸ்ட்ராதான் எல்லாமே!" என்பவர், லண்டன் ட்ரினிட்டி கல்லூரியில் 'ராக் அண்ட் பாப்' எனும் பிரிவில் எட்டாவது கிரேட் முடித்திருக்கிறார்.

"அப்டமன் வாய்ஸ், செஸ்ட் வாய்ஸ்னு நிறைய டெஸ்ட் வெச்சாங்க. அப்ப மலேசியா வாசுதேவன், எஸ்.பி.பி. வாய்ஸ்ல எல்லாம் பாடித்தான் அந்த எக்ஸாமை பாஸ் பண்ணேன். அதுக்கு ஆர்க்கெஸ்ட்ரா அனுபவம்தான் கைகொடுத்துச்சு" என்கிறார்.

தன்னுடைய ஆர்க்கெஸ்ட்ரா பணிகள் தவிர, கோவையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாரதியார் பாடல்கள், தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் போன்றவற்றை 'சேர்ந்திசை'யாகக் கற்றுத்தருகிறார் ஜான்.

"நம் திட்டப்படிதான் வாழ்க்கை போகுதான்னா, நிச்சயமா இல்லை. அதனால வாழ்க்கை போற போக்குல போய்க்கிட்டிருக்கேன். இதுநாள் வரைக்கும் என்னோட பயணிச்ச சக ஆர்கெஸ்ட்ரா கலைஞர்கள்ல பலர் இறந்துட்டாங்க. என்கிட்ட இருக்கிற தெல்லாம் அவங்க நினைவுகள் மட்டும்தான். அதைப் பதிவு பண்ணனும்னு நினைச்சேங்க. அதுதான் இந்தப் புத்தகம். இனி அவங்க சாக மாட்டாங்கல்ல!" என்று சொல்லிவிட்டுப் பாட ஆரம்பிக்கிறார் ஜான் சுந்தர்.

'எல்லோருக்கும் நல்ல காலம் உண்டு நேரம் உண்டு வாழ்விலே...

எல்லோருக்கும் நல்ல மாற்றம் உண்டு ஏற்றம் உண்டு உலகிலே...'

- ந.வினோத் குமார், தொடர்புக்கு: vinothkumar.n@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்