நகுலனின் தனிமை

By முனைவர் செளந்தர மகாதேவன்

நூறு முறையாவது படித்திருப்பேன் நகுலன் கவிதைகளை. ஒரு மூச்சுக்கும் அடுத்த மூச்சுக்கும் இடைப்பட்ட காலம்தான் மனித ஆயுள் என்று புத்தர் சொன்னதுபோல் நகுலனும் சொல்கிறாரோ என்று நினைக்கத் தோன்றும்.வாழ்வைத் தத்துவ நோக்கோடு பார்த்தவர்கள் நகுலனும் மௌனியும்.

கனமான அரிசி மூட்டையை லாவக மாகக் கொக்கியால் குத்தித் தூக்கி முதுகில் ஏற்றி இடம் மாற்றும் தொழிலாளியின் நேர்த்தியான லாவகம் நகுலன் கவிதைகளில் உண்டு.

அவர் கவிதையின் கனம், வாசிக்கும் வாசகனின் மனதில் இடம்மாறி மனதை ஒரு வினாடி யில் பாரமாக்கும். இறந்து போன வண்ணத்துப்பூச்சியை இரக்கமில்லாமல் இழுத்துச் செல்கிற எறும்பைப்போல் காலம் நம்மை இழுத்துச்செல்லும் கோலத்தை நகுலன் கவிதைகள் அப்பட்டமாய் சொல்கின்றன.

நகுலனின் வரிகளில் சொல்ல வேண்டுமானால்

திரும்பிப் பார்க்கையில்

காலம் ஓர் இடமாகக் காட்சி அளிக்கிறது.

காலத்தை ஓர் இடமாக உருவகம் செய்கின்றன நகுலன் கவிதைகள்.

சொல் விளையாட்டுகளற்ற, தெளிவான கவிதைகளை நகுலன் தந்திருக்கிறார். கும்பகோணம் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு டப்பா, புகையிலை, பக்கத்தில் சாம்பல் கிண்ணம், சிகரெட், வத்திப்பெட்டி, பேசுவதற்கு நண்பர்கள் இவைபோதும் என்று நினைத்தவர் நகுலன். “காலா என் காலருகில் வாடா” என்று எமனை எதிர்கொண்டழைத்த மகாகவி பாரதியைப் போல் நகுலனும் “இந்தச் சாவிலும் ஒரு சுகமுண்டு” என்று சாவைக் கொண்டாடியவர்.

நகுலனின் உலகம் நாம் வாழும் உலகிலிருந்து வேறுபட்டது. அவருக்கு முகத்திரைகளும் மேம்போக்கான முகமன் உரைகளும் அவசியமற்றதாய் இருந்தன. தன்னை அவனாக்கும் சித்து விளையாட்டு தெரிந்திருந்தது.

அவரது கவிதைக்கு ஒரு பொருள் இல்லை. அவற்றை எந்தச் சிமிழுக் குள்ளும் எந்த விமர்சகனாலும் அடக்க முடியாது. அவை அவரைப் போல் சுதந்திர வெளியில் இன்னும் இருப்பது பெருஞ்சிறப்பு. எத்தனை முறை வாசித்தாலும் சலிப்புத்தட்டாது, ஒவ்வொரு முறையும் வேறுவேறு வாசிப்பனுபவத்தைத் தந்துகொண்டே இருக்கும். மனித அகம் குறித்த தேடல்தான் நகுலன் கவிதைகளின் கரு.

மனிதர்களின் தீரா ரணமாயிருக்கும் மரணம் அவருக்கு வேடிக்கை. பழைய நினைவுகளின் பள்ளத்தில் அவர் கவிதைகள் ஆழம் தேடுகின்றன. கிணற்றுக்குள் தவறி விழுந்த இரும்பு வாளியைப் பல கொக்கிகள் கொண்ட பாதாளக் கரண்டி அமிழ்ந்து தேடுவதைப்போல் அவர் மனமெனும் கிணற்றுக்குள் கவிதையெனும் பாதாளக் கரண்டியால் ஆழமாய்த் தேடுகிறார்.சில கவிதைகளைப் புரிந்து கொள்ள நமக்குப் பல நாட்கள் தேவைப்படுகின்றன.

எனக்கு

யாருமில்லை

நான்

கூட..

என்ற கவிதையைப் புரிந்துகொள்ள நெடுநேரம் தேவைப்படுகிறது. நகுலன், நகுலனின் சாயலில் மட்டுமே கவிதைகள் எழுதினார். அவர் முகமே அவருக்குப் போதுமானதாய் இருந்தது. தன்னைச் சுற்றியுள்ள உலகத்தை விளம்பரமயமானதாய் நகுலன் நினைத்தார்.

இறப்புவீடு கூட கேமராக்களும், விளம்பரச் சுவரொட்டிகளாலும், மலர் வளைய மரியாதைகள், பேட்டிகள், இரங்கல் கூட்டங்கள் என்று சந்தை இரைச்சலாய் மாறியதை அவரால் சகிக்கமுடியவில்லை.

செத்த வீட்டில்

துக்கம் விசாரிக்கச்

சென்று திரும்பியவர்

சொன்னார்

செத்த வீடாகத்

தெரியவில்லை

ஒரே சந்தை இரைச்சல்

துக்கம் விசாரிக்கச் சென்று துக்கத் தோடு திரும்பியவர் நகுலன்தான். மனிதனைத் தவிர வேறு எந்த விலங்கும் பறவையும் தன் இயல்பை இழக்கவில்லை என்ற எண்ணம் நகுலனுக்கு இருந்தது.

திருவனந்தபுரத்தில் அவர் வசித்த வீட்டிற்கு வந்த நண்பரிடம் நகுலன், “நான் இறந்த பின்பு தயவுசெய்து யாரும் இரங்கல் கூட்டம் நடத்த வேண்டாம், ஏனெனில் அக்கூட்டத்திற்கு என்னால் வரஇயலாது” என்று சொன்னாராம். கவிதையை வாசகன் புரிந்து கொள்ள அக்கவிஞனின் சொற்களே தடையாக இருப்பதாய் நகுலன் சலித்துக்கொண்டார்.

சிறு அச்சாணி மிகப் பெரிய உருள்பெருந்தேரின் ஓட்டத்திற்குக் காரணமாய் அமைவதைப்போல் அவர் செதுக்கிய சிறு சொற்றொடர்கள் பல நூறு பக்கத் தத்துவங்களாய் நீள்வன.

அவன் அதிகமாய்ப் பேசமாட்டான்

ஏனென்றால்

தான் பேசினால் எங்கேயாவது

அகப்பட்டுக் கொண்டுவிட்டாலோ

என்ற ஒரு எச்சரிக்கையான வாழ்வு

அவர் உதிர்த்த சொற்கள் பலமாய்த் தாக்குகின்றன இன்றும் பலரை. வாய் பேச வாய்ப்பிருந்தும் நமக்கேன் வம்பென்று கருத்துச் சொல்லக்கூட மறுக்கும் பலரது மனசாட்சியாய் நகுலன் உலுக்கிப் பார்க்கிறார்.

இந்தியத் தத்துவவியலின் மாயா வாதத்தை நகுலனின் கவிதைகளில் காணலாம். “காண்பதெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்பமன்றோ” என்ற மகாகவி பாரதியைப் போல் நகுலன் வாழ்தல், மறைதல் நிகழ்வுகளைத் தத்துவார்த்தமாய் அணுகுகிறார்.

இருப்பதெற்கென்றுதான்

வருகிறோம்

இல்லாமல்

போகிறோம்

எனும் வரிகளின் வீச்சு வாசகனின் கன்னத்தில் அறைகிறது. பாரதியின் காண்பது, மறைவது சொற்கள் போல் நகுலனின் இருப்பது, மறைவது என்ற சொற்கள் நிலையாமையை நிலையானதாய்க் காட்டுகின்றன.இந்தக் கவிதை மௌனியின் கதைகளை நினைவுபடுத்துகிறது.மெய்ப்பொருள் காணும் முயற்சியில் நகுலன் கவிதைகள் வாசகனை ஈடுபடவைக்கின்றன.

சகமனிதர்கள் மீதான அக்கறை கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துவரும் வேளையில் உலகியல் உண்மையை ராமச்சந்திரன் கவிதை மூலம் அதிர்ச்சியோடு காட்டுகிறார்.

ராமச்சந்திரனா

என்று கேட்டேன்

ராமச்சந்திரன்

என்றார்

எந்த ராமச்சந்திரன்

என்று நான் கேட்கவில்லை

அவர் சொல்லவுமில்லை

அன்றாட வாழ்வின் சிறுசம்ப வத்தைக்கூடச் சமூகத்தைக் காட்டும் கண்ணாடியாக நகுலனால் மாற்றிக்காட்ட முடிகிறது. எதற்கு மற்றவர்களோடு பேசுகிறோம் என்பதை அறியாத, இயந்தரத்தனமான உரையாடல்களை நாம் மேற்கொள் கிறோம் என்பதை நகுலன் இப்படிச் சொல்கிறார். தனிமை நகுலனின் கவிவேர்.

திண்ணைகள் தின்ற தெருக்கள், அளிக்கம்பிகள் இல்லாக் கதவுகள், தன்னைத்தானே பூட்டிக்கொண்டு சொந்தச் சிறையில் இருக்கும் விந்தை மனிதர்கள், நீர்மோர் தராத சாவடிகள், சிமென்ட் கடைகளாகிவிட்ட சத்திரங்கள், இவற்றுக்கு மத்தியில் ஊர்ந்து செல்கிறது இக்கவிஞனின் கவிப்பாம்பு.

பனங்கைப் பரண்கள், கட்டை குத்தப்பட்ட காரைவீடுகள் யாவற்றை யும் இழந்து கான்கிரீட் லாப்டுகளுக்கு மாறி வெகு நாளாகிவிட்டது. மனிதமும் மேலேறாமல் என்ன செய்யும்?

இறந்த காலத்தின் இருளும் பழமையும் நகுலன் கவிதைகள்மீது போர்வை போர்த்தியதாக நான் நினைப்பதுண்டு. நகுலன் கவிதைகள் கடல் மட்டத்தில் மிதந்து செல்லும் கட்டை யன்று, வாழ்க்கைக் கப்பலை நிலை நிறுத்த முயன்ற ஆழ்கடல் நங்கூரம்.

அவர் எதையும் மௌனத்தால் மூடியதில்லை, கவிதையாகப் பேசியிருக்கிறார். ‘‘தனியாக இருக்கத் தெரியாத, இயலாத ஒருவனும் ஒரு எழுத்தாளனாக இருக்க முடியாது”ஆம். தனியாக நிற்கிறார் நகுலன் கவிதை வெளியிலும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

18 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்