வண்ணநிலவன் சிறுகதைகள்: பசி... பசி... என்கிற மானுடக் கதைகள்

By மண்குதிரை

ண்ணநிலவனின் முதல் சிறுகதை 1970-ம் ஆண்டு ‘தாமரை’இதழில் வெளிவந்தது. அவரது சமீபத்திய சிறுகதை 2011-ல் ‘ஆனந்த விகட’னில் வெளிவந்தது. இந்த இடைவெளிக்குள் அவர் தொண்ணூற்றிரண்டு கதைகளை எழுதியிருக்கிறார். சில கதைகள் தொகுக்கப்படாமலிருக்கக்கூடும். அவரது முதல் கதையான ‘யுகதர்ம’த்துக்கும் சமீபத்தியான கதையான ‘மழைப் பயண’த்துக்கும் இடைப்பட்ட நாற்பது ஆண்டுக் காலகட்டத்தில் வெளியேயும் உள்ளேயும் நிகழ்ந்த மனப் பிரயாசங்களின் வெளிப்பாடுதான் அவரது கதைகளுக்கான ஆதாரம் எனலாம். இந்த இரு கதைகளுக்கும் இடையில் பல்வேறு விதமான பரந்துபட்ட வாழ்க்கை முறைகளையும் மனிதப் பாங்குகளையும் வண்ணநிலவனின் கதைகள் சொல்லிச் செல்கின்றன. இந்தச் சித்திரிப்பு மொழி வழியாக வறுமை என்னும் தீப்பந்தம் சூரியனைப் போல் பிரம்மாண்டமாக எழுகிறது. பல கதைகளில் சோறு அரிய பண்டமாக வருகிறது. அதற்காக மனிதர்கள் பெரும்பாடுபடுகிறார்கள். ஆனாலும் அவர்களுக்குக் கோதுமைக் கஞ்சியும், கேப்பைக் கூழும்தான் உண்ணக் கிடைக்கின்றன.

1970-களில் 80-களில் நிலவிய வேலையில்லாத் திண்டாட்டத்தின் மனக் கிலேசத்தை இவரது பல கதைகள் நேடியாகவும் மறைமுகமாகவும் சித்திரிக்கின்றன. இந்த வேலையில்லாத் திண்டாட்டம், ஜவுளிக் கடைகள் ஊழியர்கள் போன்ற உதிரித் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய மோசமான விளைவுகளையும் சில கதைகள் உணர்வுபூர்வமாகச் சித்திரிக்கின்றன. மேலும் இந்த வறுமையான காலகட்டத்தில் தென்பகுதியில் கிறிஸ்துவ சமயம் வேர் பிடித்ததும், அதனால் குடும்பங்களில் நடந்த சச்சரவுகளும் சில கதைகளில் உபதொழிலாக வெளிப்பட்டிருக்கின்றன.

தொழிலற்றுப் போன வெட்டியான், பனையேறும் தொழிலாளி, சாராயம் கடத்துபவர்கள், தலைமறைவுப் போராளி, சர்க்கஸ் போடுபவன் எனப் பலதரப்பட்ட மனிதர்களை வண்ணநிலவன் கதைகள் சித்தரித்தாலும் அவரது கதைகளின் பிரதான பாத்திரங்கள் மூன்று பத்தி வாடகை வீடுகளின் வசிக்கும் கீழ் நடுத்தர வீட்டு மக்கள்தான். தார்சாவிலிருந்து (வரவேற்பறை) காண முடியாத அவர்களின் பட்டாளைகளின் (நடுப்பகுதி) சங்கதிகளை, மனக் கிலேசங்களை விவரிப்பின் வழியே இந்தக் கதைகள் மூலம் அவர் அம்பலப்படுத்துகிறார்.

குறிப்பாகத் திருநெல்வேலியில் வாழும் சைவப்பிள்ளைமார் சமூகத்தினர் குறித்த சித்திரிப்புகளே இந்தக் கதைகளில் அதிகம். திருநெல்வேலி டவுன் பகுதியின் ஒடுங்கிய தெருக்களைப் போன்ற அவர்களின் வாழ்க்கையையும் இந்தக் கதைகளில் காணலாம். வாழ்க்கை குறித்து அவர்களுக்குள்ளே இருக்கும் மதிப்பீடுகள், வெளியே நிகழும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சமூக நிகழ்வுகளால் சிதறடிக்கப்படுகின்றன. அவர்களின் வரட்டு ஐதீகங்களும் இந்தப் பெருவெள்ளத்தில் ஒன்றுமில்லாமல் போகின்றன. தலைமுறை தலைமுறைகளாக இருக்கும் குடும்பப் பெருமையும் கேலிக்குரிய ஒன்றாகிறது. இவற்றை எந்தச் சார்புமின்றிக் காட்சிப்படுத்துகின்றன இந்தக் கதைகள். வக்கீல் குமஸ்தாவாக இருக்கும் ஒரு பிள்ளைவாளின் பாடுதான் அவரது முதல் கதையான ‘யுகதர்மம்’. தினக் கூலியாக இருபது ரூபாய் சம்பாதிக்கும் குமஸ்தாவுக்கு மூன்று பிள்ளைகள். கல்யாண வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள். அன்றைக்குள்ள கூலியில் மூத்தவளுக்கு ரிப்பனும் இளையவளுக்குக் கண்ணாடிக்கல் மாலையும் சின்னவனுக்கு பென்சிலும் வாங்கிப் போகிறார். அதனால் அரிசி வாங்குவதில் பாதி மண். ‘இந்த நிலையில் மூத்தவளுக்குக் கல்யாணம் எங்கு பண்ணிவைப்பது? உடனொத்த பிள்ளைகள் எல்லாம் காதலித்துக்கொண்டு ஓடிப் போகின்றன. இவளுக்கும் அப்படி ஒரு காதல் வந்து ஓடிப் போகமாட்டாளா?’ எனப் பிரயாசைப்படுகிறார். இன்னும் பல கதைகள் இம்மாதிரியான குடும்பங்களைச் சித்திரிக்கின்றன. இக்கதைகளின் தொகுப்பு என இவரது ‘கம்பா நதி’ நாவலைச் சொல்லலாம்.

ஞ்சம் பிழைக்கப் போவது’ என்பது சில பத்தாண்டுகள் முன்பு இங்கு நடந்த ஒரு துயரமான சமூக நிகழ்வு. அடுத்த மழைக்காலம்வரை சாகாமல் உயிரைப் பிடித்துக்கொள்வதற்கான இடப்பெயர்வு. சோறுதான் இதன் பிரதான நோக்கம். இதுபோல் பஞ்சம் பிழைக்கப்போகும் குடும்பம் ஒன்றை வண்ணநிலவன் ‘எஸ்த’ரில் விவரிக்கிறார். எல்லோரும் பஞ்சம் பிழைக்கப்போய்விட்ட ஊரில் தனியாக இருக்கிறது அந்தக் குடும்பம். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என இருக்கும் அந்தக் குடும்பத்துக்கு ஓட மரமாக இருக்கிறாள் எஸ்தர். அவள் அவர்களுக்குச் சித்தி. படுத்த படுக்கையாக இருக்கும் பாட்டியைத் தனியே விட்டுவிட்டுப் போக முடியாததால் அவர்கள் இருக்கிறார்கள். கொஞ்சம் கம்பும் கேப்பையும் ஒரு தீப்பெட்டியும்தான் சேமிப்பில் இருக்கின்றன. தினமும் எல்லோருக்கும் அரை வயிற்றுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றுகிறாள். கால்நடைகளை அழித்துவிடுகிறார்கள். கடைசித் தீக்குச்சியும் தீர்ந்த பிறகு சுள்ளிகளைக் கொண்டு தீயைக் காப்பாற்றி வருகிறாள். நாளுக்குநாள் வெயில் கூடுகிறது. தண்ணீர்த் தட்டுப்பாடு. இரவில் இருட்டு அடர்த்தியாகிறது. இனியும் இங்கு இருப்பது நல்லதல்ல என நினைக்கிறாள். பாட்டியும் வேண்டும். பிள்ளைகளும் முக்கியம். இறுதியில் எஸ்தர் என்னதான் செய்வாள்? அவள் தைரியமான முடிவை எடுப்பதுடன் முடிகிறது கதை. மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்தக் கதை, உணர்ச்சிகரமான குடும்ப உறவுகள், அதற்கான மதிப்பீடுகள் எல்லாவற்றையும் வறுமை பாளம் பாளமாகச் சிதறடிப்பதை அப்பட்டமாகச் சித்திரிக்கிறது.

ண், பெண் உறவுகளின் முரண்களைச் சொல்லும் கதைகளையும் வண்ணநிலவன் எழுதியிருக்கிறார். அவரது தொடக்ககாலக் கதையான ‘அயோத்தி’யை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். வாழ்க்கைத் துணை குறித்து பரஸ்பரம் இருக்கும் புகார்களைக் குறித்த கதை இது. காதல் திருமணங்கள், நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் எல்லாவற்றிலும் இந்தச் சலிப்பைப் பார்க்க முடியும். வறுமையிலிருக்கும் மனைவி, கைகூடாமல் போன வேறொரு வாழ்க்கையைப் பற்றி நொந்து கணவனைக் கரித்துக்கொட்டுகிறாள். இதன் மற்றொரு பக்கமாக ‘பலாப்பழம்’ கதையையும் சொல்லியிருக்கிறார். இவை அல்லாமல் அசோகமித்திரனைப் போல் சினிமா பின்புலத்தில் சில கதைகளையும் சமீபத்தில் எழுதியிருக்கிறார்.

ண்ணநிலவனின் கதைகள் பெரும் பாலும் திருநெல்வேலியைக் களமாகக் கொண்டவை; தீப்பந்தம்போல் வெயில டிக்கும் தெருக்களையும் தாமிபரணியின் படித்துறைகளையும் சித்திரம்போல் எழுப்பிக் காட்டும் ஆற்றல் பெற்றவை.

வண்ணநிலவனின் மொழி அலங்காரங்கள் அற்றது; அப்பட்டமானது. அளந்து வைத்தாற்போல் கதைகளில் சொற்களைப் பயன்படுத்துகிறார். வாசகனை மிரட்டும் பிரயோகங்கள் இல்லை. கதைகளைத் திருத்தமான சம்பவங்களைக்கொண்டு சிருஷ்டிக்கிறார். விவரிப்பு மொழியிலேயே கதைகள் சொல்லப்படும் இந்தக் காலகட்டத்திலிருக்கும் பார்க்கும்போது, இது அரிய குணாம்சம். பெரும்பாலான கதைகள் போதுமான உரையாடல்களால் ஆனவையாக இருக்கின்றன.

இவை அல்லாமல் பாம்பும் பிடாரனும், காட்டில் ஒருவன் போன்ற சில கதைகள் அவரது கதை சொல்லும் முறையிலிருந்து வேறுபட்டவை. உரையாடலின்றி முற்றிலும் கதை சொல்லியின் விவரிப்பிலேயே இந்தக் கதைகளை உருவாக்கியிருப்பார். மேலும் இவை ஒன்றுக்கு மேற்பட்ட கதைப் பொருளை யும் கொண்டவையாகவும் இருக்கின்றன.

மேலும் கதாபாத்திரங்களின் மனநிலைக்கு, கற்பனாசக்திக்கு உள்பட்டு சிந்திக்கும்படியே எழுதியுள்ளார். கதைசொல்லியின் குரல் உயர அவர் அனுமதிக்கவில்லை. உதாரணமாக ‘மயான கண்டம்’ கதையின் வெட்டியான், சுடலை மாடசாமி சிலையின் அழகை வியக்கும்போது, “என்னமா துடிப்போட செஞ்சிருக்கான்” என அவனுடைய எல்லைக்குள் நின்றுதான் வண்ணநிலவன் விவரிக்கிறார்.

மிழ்ச் சிறுகதையின் வரலாறு இருபதாம் நூற்றாண்டில் சுப்பிரமணிய பாரதியிலிருந்தே தொடங்கிவிட்டது. ஆனால், சிறுகதை ஆற்றல் மிக்க வடிவமாக அந்த நூற்றாண்டின் மத்தியில்தான் வலுப்பெற்றது. தமிழ்ச் சிறுகதை முன்னோடிகளில் ஒருவரான புதுமைப்பித்தன்தான் அதைச் சாத்தியப்படுத்தினார். திருத்தமான வடிவம், திடகாத்திரமான உள்ளடக்கம், அலங்காரமற்ற விவரிப்பு மொழி எனத் தமிழின் முன்மாதிரியான நவீனச் சிறுகதைகளை உருவாக்கிக் காண்பித்தார். புதுமைப்பித்தனுக்குப் பிறகு அந்த மரபில் தமிழின் முன்னுதாரணக் கதைகளை உருவாக்கி வருபவர் வண்ணநிலவன்.

- மண்குதிரை, தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

வண்ணநிலவன் சிறுகதை (முழுத் தொகுப்பு)
நற்றிணை வெளியீடு, சென்னை-5
பக்கம்: 656 விலை ரூ. 550
044 28442855

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

6 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

2 months ago

மேலும்