மனிதர்கள் தங்கள் பிரச்சினைகளை வசனங்களாகவும் உணர்வு வெள்ளமாகவும் கொட்டித் தீர்க்க, தாவரங்களும் பிராணிகளும் வீடுகளும் திரைச்சீலைகளாக நிற்பதைப் பல்வேறு கதையுலகங்களில் கண்டிருக்கிறோம். முதன்முதலாக மனிதர்கள் பின்னிற்க, தாவரங்களும் பிராணிகளும் ஜீவராசிகளும் ஆசாரத்துத் திண்ணைகளும் மரச் சித்திரக் கதவுகளும் பிரதான அம்சங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன என்.ஸ்ரீராமின் கதைகளில்.
ஸ்ரீராமின் மொத்தப் படைப்புகளும் அடங்கிய இந்நூலின் கதைகள் யாவும் முழுக்க முழுக்க மனிதர்கள் பற்றியவை. ஆனால், “எங்கள் நில அமைப்பையும் வேரூன்றிய இயற்கையின் வாசத்தையும் தொட்டிகட்டு வீடுகளின் அமைப்பு களையும் அறியாமல் அவற்றைச் சார்ந்தியங்கும் மனிதர்களை நீங்கள் புரிந்துகொள்ள முடியாது” என்பதை இந்நூல் அழுத்தமாகச் சொல்கிறது.
சிற்றோடையின் நீரோட்டம்
யாருடைய சாயலும் இல்லாமல் அதேநேரத்தில் பிற்காலப் படைப்பிலக்கியங்களில் எல்லோரும் சென்ற பாதை வழியாகவும் நடந்து, அதைக் கடந்து தனக்கெனப் புதிய பாட்டையை வடிவமைத்துக்கொண்டுவிட்டார் ஸ்ரீராம். அதுவே அவரது படைப்பு நெறியாகவும் அமைகிறது. நிலம் சார்ந்த வாழ்வைச் சித்தரிப்பின் அழகியலாய் மாற்றுகிறது. வாசகரிடம் பெருஞ்சலனத்தை ஏற்படுத்திவிட்டுச் சிற்றோடையின் நீரோட்டமாகச் சலனமின்றி அந்தப் படைப்பு நெறி செல்கிறது. 37 சிறுகதைகள், 13 குறுநாவல்கள் ஒரு நாவல் என விரியும் தொகுப்பு முழுவதும் இத்தன்மையைக் காண முடிகிறது.
ஸ்ரீராமின் புனைகதை வெளியெங்கும், தெற்கு வளவில் வடக்கு வாசல் கல்நிலவு நடை, வடதிசைப் பக்கம் செல்லும் இட்டேரி, வாவிக்கரைத் தோட்டம், கிளுவை வேலிகள், உப்பாற்றங்கரை, காற்று மரங்களினூடே புகுந்து எழுப்பிச் செல்லும் முறைச்சல், மசை பிடித்த நாய், சேந்து கிணற்றடி, கொட்டுக்காரர்கள், கைக்கோளர்களின் பாவடிக்கல், தொட்டி மரநிழல் போன்ற ஏராளமான சொற்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. காட்டுப் பழம் வேண்டுமெனில் புதர் வெளிக்குள் நுழைந்து சிறுந்தளிர்கள் நிறைந்த முட்கிளைகளை அகற்றிப் பறிக்கப் பழக வேண்டும். ஸ்ரீராமின் கதை மாந்தர்களை, பசுமை அடர்ந்திருக்கும் கொங்கு மொழிகளுக்குள் சென்றுதான் உணர முடியும். நிலத்தின் மொழியைத் துல்லியமாகவும் நேர்த்தியாகவும் வடித்துத் தருகின்றன இவரது எழுத்துக்கள்.
விவசாய வாழ்வை நம்பியிருப்பவர்கள் மட்டுமின்றி, மில் தொழிலாளிகள், கோவில் பூசாரிகள், கோவில் உதிரி வேலை செய்பவர்கள், மாட்டுத் தரகர்கள், வீடு மராமத்து பார்ப்பவர்கள், தேர்த்தச்சர்கள், மை எடுப்பவர்கள், பேய் ஓட்டுபவர்கள், குறி சொல்பவர்கள், கீரி பாம்பு சண்டை விடுபவர்கள் எனப் பல்வேறு வகை மனிதர்களும் இவரது கதைகளில் வருகிறார்கள். இது தவிர, பெண் சார்ந்த வாழ்க்கையைப் பல கதைகளில் கொண்டுவரும் ஸ்ரீராம், தகுந்த நுண்ணுணர்வோடும் அவற்றைப் பதிவுசெய் துள்ளார். கிராமங்களில் உதிரிகளாக வாழும் ஏதிலிகளின் வலிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டது சிறந்த படைப்பு நெறிமுறையையேப் புலப்படுத்துகிறது.
வர்க்கம், ஜாதி பேசும் கதைகளில் தான் சார்ந்த சமுதாய மனிதர்களின் தவறுகளையும் சுட்டிக்காட்ட ஸ்ரீராம் தயங்குவதில்லை. வறுமை யின் துயரங்களில் சிக்கினாலும் அவர்கள் வாழ்க்கை முறைமைகளின் நேரிய அழகையும் தரிசிக்கச் செய்கிறார்.
நவீனப் படைப்புகளிலும் நாடகீயம் சார்ந்த உள்ளீடுகள் இடம்பெற்றுக் காவிய உணர்ச்சி களைத் தூண்டியவாறு கனன்றுகொண்டே இருக்கும். இதுபோன்ற உணர்ச்சிப் பிரவாகங் களைத் தூக்கியெறிந்துவிடுகிறார் ஸ்ரீராம். சில இடங்களில் மனிதர்களோடு வாழப் பழகிய நான்கறிவு, ஐந்தறிவு ஜீவராசிகளும் இவரது கதைவெளியில் உயிர்பெற்றுத் துலங்குகின்றன. அசைக்க முடியாத நம்பிக்கையோடு சித்திரம் சித்திரமாக அடர்த்தியாகத் தீட்டப்பட்ட இக்கதை கள், ஒரு கட்டத்தில் விவரணைகளோடு களத்தில் இறங்கி ஆடும் வட்டார மொழியின் நர்த்தன மாகவே எஞ்சி நிற்கின்றன.
ஆதிக்கச் சாதிப் பெரும்பான்மையும் பிற்படுத் தப்பட்ட மக்களும், விளிம்பு நிலை மாந்தர்களும் அதன் உட்பிரிவுகளும் கலந்துதான் ஒரு பிரதேசம் என்பதை மறுப்பதற்கில்லை. இவை அனைத்தையும் உள்ளடக்கிய கொங்கு நிலத்தின் மைய நிலையிலிருந்தே படைப்பை நிறுவ முயலும்போது பல ஊசலாட்டங்களும் சிக்கல்களும் வரத்தான் செய்கின்றன. விளிம்பு நிலை மக்களின் வலியையே பிரதானப்படுத்துவது, சுயஜாதி விமர்சனத்தைக் கடுமையாக முன்வைக்க முயல்வது போன்றவை படைப்பு அமைதியை மீறித் துருத்திக்கொண்டு நிற்கின்றன. சமகால வாழ்வையும் சமூகம் சார்ந்த விமர்சனப் போக் கையும் நன்குணர்ந்த ஒரு படைப்பாளி என்ன செய்வாரோ அதையேதான் ஸ்ரீராம் செய்திருக்கிறார். ஆனால், படைப்பு தனக்குத் தேவைப்படும் தருணத்தில் தேவைப்படும் அம்சத்தைத் தானே தேர்ந்துகொள்ளும்; அப்படித்தான் தேர்ந்துகொள்ள வேண்டும். ஸ்ரீராமின் படைப்புகளில் விளிம்பு நிலை மாந்தர்களின் சித்தரிப்பு, எல்லாத் தருணங்களிலும் படைப்பின் இயல்புக்குப் பொருந்திப்போவதாகச் சொல்ல முடியவில்லை.
படைப்பும் பதிவுகளும்..
அதேநேரத்தில் விளிம்பு நிலை மக்கள் சார்ந்த ஸ்ரீராமின் எந்தக் கதையையும் எளிதில் புறந்தள்ளிவிட முடியாது. வாசிப்பின் அரசியலை எதிர்கொள்ளும் வலிமை வாய்ந்த படைப்புகள் இவை என்பதிலும் ஐயமுமில்லை.
கோம்பை வைத்த வீடு, அட்டாழி வீடு, தொட்டி கட்டு வீடு, நெட்டுக்கட்டு வீடுகளின் வாழ்வு குலைந்ததைச் சிற்சில கதைகளில் பேசியுள்ளார். பழைய பாரம்பரியங்களின் தோல்வியை நிலை நாட்டுவதில், வாழ்ந்து கெட்ட மனிதர்களின் உலகத்தைப் பதிவுசெய்வதில், நேர்மையும் அக்கறையும் உள்ளன. ஆனால், இவை சிறந்த படைப்புகளாக அமையாமல் வெறும் பதிவாகத் திணறுவதையும் உணர முடிகிறது.
‘குதிரை வண்டிக்காரனும் ஒன்பது குழந்தை களும்’ கதையில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இறந்தபோது, நாடுமுழுவதும் உண்டான பதற்றம் வெளிப்படுகிறது. கதை சொல்லப்பட்ட விதமும் ஒரு வரலாற்றின் கீற்றைக் கிழித்துத் தரும் லாவகமும் சிறப்பாக அமைந்துள்ள கதை இது.
புருவங்களை உயர்த்தவைக்கும் சிக்கலான திசைவெளிகளில், ‘இரவோடு போயினர்’, ‘பூனைகளின் தோரணை’, ‘கல் சிலம்பம்’, ‘சிதைக்கோழி’ உள்ளிட்ட பல கதைகளின் பயணம் அமைந்துள்ளது. எனினும், கதைசொல்லலின் சுவாரஸ்யங்களே இவை. வலுவான படைப்புகளாக அமைந்திருக்க வேண்டிய ‘தாமரை நாச்சி’, ‘மாடவீடுகளின் தனிமை’, ‘எதிர்திசை ஓட்டம்’, ‘வெளிவாங்கும் காலம்’, ‘மூன்றாம் நதி ஓடும் ஊரின் கதை’, ‘வேகாத வெயில்’, ‘திருவேலைக்காரி’ போன்ற முக்கியமான படைப்புகள் இருண்மையை நோக்கிச் செல்வதால் நேரும் பலவீனத்துக்கு ஆட்பட்டுவிடுகின்றன.
சகல விதமான மனிதர்களின் வாழ்வையும் மேற்கு நில வாட்டத்துக்கே உண்டான ஒய்யார மொழிவளமும் கொண்ட ஸ்ரீராமின் படைப்புகள் நமக்குத் தரும் ஒட்டுமொத்த அனுபவம் என்ன? பூமியின் எந்தத் திசையிலும் எந்தக் காலத்திலும் மனிதர்களின் பாடுகள், வெவ்வேறு வண்ணங்கள், வடிவங்கள் கொண்டிருப்பினும் அவற்றின் ஆதார சுருதி ஒன்றுதான். இந்த வாழ்க்கை ஸ்ரீராமின் படைப்புகளின் வழியாக வரும்போது நிலத்துக்கான வாழ்வு சார்ந்த அவதானிப்பு பெரும் காருண்யத்தோடு பீறிடுகிறது. மேற்குப் பகுதியின் இலக்கியப் பங்களிப்பில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெறக்கூடிய படைப்புகள் இவை.
இயற்கைச் சூழலின் மேடையில் சதா அலைக்கழிக்கப்படும் விதியென்னும் கடவுளின் பொம்மைகளாகத்தான் ஸ்ரீராமின் படைப்புகள் உள்ளன. மண் சார்ந்த வாழ்வும் மொழியும் கொண்ட இந்தக் கதைகள் விதியின் பிடியில் அல்லலுறும் வாழ்வை அதன் போக்கில் பதிவுசெய்கின்றன. அப்படி அல்லாமல், படைப்பாளிக்கே உரிய பார்வையுடன் நிகழ்தகவுகளின் பல்வேறு சாத்தியங்களைத் தருவிக்கும் எழுத்தாக அவை மாற வேண்டும். விதியின் பொம்மைகளாக அல்லாமல், படைப்பாளியான ஸ்ரீராமின் பொம்மை களாகவே அவை தனித்துவம் பெற வேண்டும்.
- பால்நிலவன் தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in
என்.ஸ்ரீராமின் படைப்புகள்
தோழமை வெளியீடு
கே.கே.நகர், சென்னை-78.
பக்கம் : 680
விலை : 450
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago