மனம் திறக்கும் சொற்கள்!

By ந.வினோத் குமார்

ஒவ்வொரு மனித‌ மனமும் எவ்வளவு பைத்தியக்காரச் சிந்தனைகளுடன் இருக்கிறது என்பது விலகவே விலகாத மர்மம். ஒவ்வொரு மனதிலும் அந்தச் சிந்தனைகளின் சதவீதத்தில் வேண்டுமானால் மாற்றங்கள் இருக்கலாம். ஆனால், யாரிடமும் பைத்தியக்காரத்தனம் இல்லை என்று சொல்லிவிட முடியாது.

எது பைத்தியக்காரத்தனம்? அதை யார் முடிவு செய்வது? அதற்கு நமக்கு என்ன தகுதி இருக்கிறது? 'நிர்வாணமாக இருக்கும் ஒரு மனிதனை நீங்கள் ‘நாகரிகமற்றவன்’ என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அவனைப் பைத்தியக்காரன் என்று சொல்வதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது?’ என்கிற ரீதியில் ஜெயகாந்தன் தன் கதை ஒன்றில் கேள்வி எழுப்பியிருப்பார்.

‘பைத்தியக்காரத்தனம்’ என்பதை எப்போதும் நாம் மற்றவர்களுக்கே அடையாளப்படுத்துகிறோம். அதை ஒருபோதும் நம் அடையாளமாக மாற்றிக்கொள்வதில்லை. நாம் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பது தெரிந்தாலும், அதை அங்கீகரிக்கத் தயங்குகிறோம்.

நம் வீட்டில், நம் குடும்பத்தில் ஒருவருக்குப் பைத்திய நிலை ஏற்பட்டால் அதை நாம் என்ன செய்வோம்? அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவோம்? அவர்களை நாம் எப்படி அணுகுவோம்?

இதற்கான பதில்களை அளிப்பதாக இருக்கிறது ‘எ புக் ஆஃப் லைட்’ எனும் புத்தகம். நாவலாசிரியர் ஜெர்ரி பின்டோ தொகுத்த இந்தப் புத்தகத்தை ‘ஸ்பீக்கிங் டைகர்’ பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

பைபோலார் டிஸார்டர், மனச்சிதைவு, மன அழுத்தம், ஆட்டிஸம், தற்கொலை எண்ணம் என மனப் பிறழ்வு நிலைகள் பலவற்றைப் பேசுகிறது இந்தத் தொகுப்பு. சிறுகதை, நினைவுக் குறிப்பு, வாக்குமூலம் எனப் பல வடிவங்களில் மேற்கண்ட பிரச்சினைகள் ஆராயப்படுகின்றன. மொத்தம் 13 கதைகள். அவற்றில் கையாளப்பட்டிருக்கும் பிரச்சினைகள் எல்லாமே அந்தக் கதைகளை எழுதியவர்களின் நிஜ வாழ்க்கையில், அவர்கள் குடும்பத்தினருக்கு ஏற்பட்டவை. அந்த அனுபவங்களைச் சொற்களின் மூலம் நமக்குக் கடத்துவதன் மூலம் வாசகர்களுக்கு மனப் பிறழ்வுகளைக் கையாள்வதற்கான சில முக்கியமான பாடங்களை விட்டுச் செல்கிறார்கள்.

இந்தப் புத்தகத்தைத் தொகுத்த ஜெர்ரி பின்டோவே, இதற்கான ஒரு வாழும் சாட்சியமாக இருக்கிறார். அவருடைய அம்மாவுக்கு பைபோலார் டிஸ்ஆர்டர் இருந்தது. அதை அவர் எப்படிக் கையாண்டார் என்பதைத்தான் தனது முதல் நாவலான ‘எம் அண்ட் தி பிக் ஹூம்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருந்தார்.

பொதுவாகவே, நம் வீடுகளில் யாரேனும் நோயுற்றால், அவர்களுக்குச் சேவை செய்து சோர்வடையும் நேரத்தில் அவர்கள் மீது ஏன் என்று புரியாத ஒரு கோபம் ஏற்படும். அந்தக் கோபம் எத்தகையதாக இருக்கும் என்பதை இந்தத் தொகுப்பில் அமன்தீப் சந்து என்பவர், தன்னுடைய கதையில் இப்படிச் சொல்கிறார்: “கோபம் ஒரு அழிவு சக்தி. அதுவும் நம் நாக்கிலிருந்து புறப்படும்போது, பேரழிவை உண்டாக்கக்கூடியது”.

இன்னொரு கதையில் ‘ஆட்டிஸம்’ பாதிப்பு கொண்ட தன் மகனைத் தான் நடத்தும் விதம் குறித்து மதுசூதன் நிவாஸ் என்பவர் எழுதிய பதிவில் இப்படிச் சொல்கிறார்: “எங்கள் குழந்தைகள் எதையும் எப்போதும் எங்களிடம் கேட்டுப் பிடிவாதம் பிடிக்கவில்லை. மாறாக, இந்தச் சமூகம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமே என்பதற்காக நாங்கள்தான் அவர்களிடம் நிறைய விஷயங்களுக்காகப் பிடிவாதம் பிடிக்கிறோம்”.

சாதாரண உடல்நிலைக் கோளாறுகளுக்கே பொறுமை இழந்து கோபப்படும் நாம், மனநலக் கோளாறு உடையவர்களை எப்படி நடத்துவோம்?

உலக மனநல நாளின் இந்த ஆண்டு கருப்பொருள் ‘மனநல கண்ணியமும் மனநல முதலுதவியும்’ என்பது. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்ணியத்துடன் நடத்த வேண்டும் என்பதும், மனக் குழப்பங்களில் சிக்கித் தவிப்பவர்களுக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன் நாமே முதலுதவியும் செய்யலாம் என்பதும்தான் இதன் பொருள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவது சமூகத்தின் கைகளில் உள்ளது. ஆனால், முதலுதவியை நம் ஒவ்வொருவராலும் செய்ய முடியும். எப்படி?

இந்தத் தொகுப்பில் உள்ள கதையொன்றில் வரும் வரிதான் இதற்குப் பதில்: ‘குழம்பிய மனதுக்குக் கொஞ்சம் காது கொடுங்கள்!’

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

23 days ago

இலக்கியம்

23 days ago

மேலும்