என்னோடு சேர்ந்து என் கவலைகளுக்கும் வயதாகிறது என்ற எஹுதா அமிக்ஹாய்யின் (Yehuda Amichai) கவிதை வரி மனதில் சில நாட்களாகவே ஓடிக் கொண்டிருக்கிறது. எவ்வளவு எளிமையாக வாழ்க்கையின் உண்மையை எழுதியிருக் கிறார். கவிஞன், உலகின் துயரங்களை ஏற்றுக்கொள்கிறவன். தனது சொற்களால் மனதின் காயங்களை சொஸ்தப்படுத்துகிறவன். இஸ்ரேலைச் சேர்ந்த அமிக்ஹாய் நம் காலத்தின் மகத்தான கவி. ‘கவிதை எழுதுவது என்பது மலையுடன் போரிடும் புல்டோஸர் இயந்திரத்தைப் போன்றது’ என்கிறது அமிக்ஹாயின் இன்னொரு வரி.
கவலைகளின் துறைமுகமாக நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை அமிக்ஹாய் அழகாக சுட்டிக் காட்டுகிறார். நம் கவலைகள் குடும்பத்தால், சமூகத்தால், வரலாற்றால் அளிக்கப்பட்டவை. உங்களின் முதல் கவலை எது? எப்போது உருவானது? கவலையை எதற்காக உங்கள் மனதில் அனுமதித்தீர்கள்? வீட்டின் இருண்ட மூலையைப் போல மனதின் ஒரு மூலை கவலைகளுக்கானதுதான் போலும். மனிதர்களைப் போலவே கவலைகளும் நிறையப் பிள்ளைகள் பெற்று, தன்னை பெருக்கிக் கொண்டுவிடுகிறது.
கவலைகள் சேரச் சேர மனம் கனமாகத் தொடங்குகிறது. ஒரு கவலை நீங்கும்போது புதிதாக இன்னொரு கவலை வந்து சேர்ந்துவிடுகிறது. இந்தத் தலைமுறையின் சாபம் எல்.கே.ஜி குழந்தை கூட கவலைப்படுவதுதான். ‘எப்போது பள்ளி விடுமுறை விடப்படும்? ஹோம்வொர்க் முடிக்காவிட்டால் என்ன தண்டனை கிடைக்கும்’ என கவலை கொள்கிறது.
கவலைகள்தான் பயமாகிறது. பயம் தாழ்வுணர்ச்சியை உருவாக்குகிறது. தாழ்வுணர்ச்சி நம்மை இயங்கவிடாமல் தடுத்துவிடுகிறது.
சில கவலைகளை வீடு நமக்கு பரிசாக அளிக்கிறது. அப்படி தந்தையால் அளிக்கப்பட்ட கவலைகளை, பிள்ளைகள் வாழ்நாள் எல்லாம் சுமந்து அலைய வேண்டியிருக்கிறது. ஆண்களை விட பெண்கள் அதிகம் கவலை கொண்டவர்கள். பிரார்த்தனைகளின் வழியே அவற்றை இறக்கிவைக்கவும் கடந்து போகவும் அவர்கள் பழகிக் கொள்கிறார்கள்.
‘பயணத்திலும் கூட சூட்கேஸ் நிறைய எனது கவலைகளை தான் எடுத்துக் கொண்டு போகிறேன்’ என்கிறார் எழுத்தாளர் பில் மோரிசன். இயற்கை கவலை கொள்வதில்லை. இலைகளை உதிர்க்கும் மரம் ‘இது பருவகால மாற்றம்... மீண்டும் இலைகள் துளிர்க்கும் என காத்திருக்கிறது. இழந்துவிட்ட இலைகளுக்காக ஒருபோதும் கவலைகொள்வதில்லை பருவ காலங்கள்!
நாகரீகம் அடைந்த மனிதர்களைவிட கானகத்தில் வாழும் பழங்குடிகளிடம் கவலைகள் குறைவு. அவர்கள் கவலைகளைப் பொதுவிஷயமாகக் கருதுகிறார்கள். மனம்விட்டுப் பேசி தீர்க்க முயற்சிக்கிறார்கள். தங்கள் கவலைகளை அவர்கள் இன்னொருவரிடம் திணிப்பதில்லை. ‘ஒரு கைவிரல்களின் எண்ணிக்கைக்குள் கவலைகள் அடங்கிவிட வேண்டும்…’ என்கிறது பழங்குடி மரபு.
சீனாவில் ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு கவலை என்றால் என்னவென்றே தெரியாது. சந்தோஷமாக வாழ்ந்த அவன் ஒருநாள் தனது சபையைக் கூட்டி, ‘‘கவலை என்றால் என்ன? கவலை எப்படியிருக்கும்? என்ன செய்யும்…?’’ எனக் கேட்டான்.
‘‘இது தேவையில்லாத விஷயம் மன்னரே! அதைப் பற்றியெல்லாம் நாம் அறிந்துகொள்ள தேவையில்லை’’ என்றார் அமைச்சர்.
மன்னர் விடாப்பிடியாக ‘ ‘எனக்குக் கவலை யைப் பற்றி உடனடியாகத் தெரிந்துகொள்ள வேண்டும். யாராவது விளக்கிச் சொல்லுங் கள்…’’ என்றார்.
ஆளாளுக்கு கவலையைப் பற்றி சொன்னார்கள். ‘‘இவ்வளவுதானா கவலை? இது வெறும் பயம். இதற்குப் போயா நீங்கள் எல்லோரும் ஒரேயடியாக வருந்துகிறீர்கள்?’’ என மன்னர் அவர்களைப் பார்த்து ஏளனம் செய்தார்.
‘கவலை என்பதை மன்னருக்கு எப்படி உணர்த்துவது?’ என எவருக்கும் தெரியவில்லை. அப்போது அரண்மனை ஓவியன் ‘‘மன்னரே நான் கவலையை ஓவியமாக வரைந்திருக்கிறேன். பாருங்கள்…’’ எனக் காட்டினான்.
அதை வாங்கிப் பார்த்த மன்னன் திகைத்துப் போனார். காரணம், அதில் அவரது உருவம் மெலிந்து, நரைத்து, முகமெல்லாம் சுருக்கம் விழுந்து, ஒரு நோயாளியைப் போல் இருந்தது. அவர் ஆத்திரத்தில் ‘‘முதுமையில் நான் இப்படி ஆகிவிடுவேனா..?’’ எனக் கேட்டார்.
அதற்கு ஓவியன் ‘‘முதுமையில் நீங்கள் இப்படி ஆவதற்கும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று பதில் சொன்னான்.
‘‘இதை எப்படி தடுப்பது? வாழ்நாள் முழுவதும் இதே இளமையுடன் சந்தோஷத்துடன் எப்படி வாழ்வது?” எனக் கேட்டார் மன்னர்.
ஒருவரிடமும் பதில் இல்லை. அன்றிரவு மன்னரால் உறங்க முடியவில்லை. மறுநாள் சபைக்கு வந்தபோது அமைச்சர் சொன்னார்: ‘‘மன்னா உங்கள் முகத்தில் கவலை படர்ந்திருக் கிறது. மனித மனதில் ஒரேயொரு கவலை புகுந்துவிட்டால் போதும், அது பெருகி வளர்ந்துவிடும். இனி நீங்கள் நினைத்தாலும் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’
மன்னர் வருத்தமான குரலில் கேட்டார்: ‘‘முதுமையில் நான் மெலிந்து நோயாளி போலாகிவிடுவேனா..?’’
‘‘இது உங்கள் குரல் இல்லை. கவலையின் குரல். இனி, உங்களால் கவலையில் இருந்து விடுபடவே முடியாது!’’ என்றார் அமைச்சர்.
துறவிகளும் ஞானிகளும்கூட கவலையில் இருந்து தப்பிக்கவே முடியாது. அவரவருக்கு அவரவர் கவலை. அதன் சுமை ஆளுக்கு ஆள் வேறுபடக்கூடியது.
கவலைகளின் சுமை நம்மை அழுத்தும்போது அதில் இருந்து விடுபடவும், புரிந்துகொள்ளவும், தீர்த்துக்கொள்ளவும் கலை இலக்கியங்கள் உதவி செய்கின்றன. குறிப்பாக கதை, கவிதைகளின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்று கவலையில் இருந்து மனிதனை விடுவிப்பதாகும்.
‘தி ரெட் பலூன்’ என்ற பிரெஞ்சு மொழி படம் திரைக் கவிதை போல உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆல்பர்ட் லமொரீஸ் இயக் கிய இப்படம் இணையத்தில் காணக் கிடைக்கிறது. அதை ஒருமுறை பாருங்கள். எவ்வளவு கவலையாக இருந்தாலும் அதில் இருந்து விடுபட்டு புத்துணர்வு அடைவீர்கள்.
பள்ளிச் சிறுவன் ஒருவன் சாலையோரக் கம்பத்தில் சிவப்பு நிற பலூன் ஒன்று சிக்கி ஆடிக்கொண்டிருப்பதை பார்க்கிறான். கம்பத்தில் ஏறி அந்த பலூனை எடுக்கிறான், பலூனுடன் விளையாடியபடியே தெருக்களில் நடந்துசெல்கிறான். அவனது அம்மா பலூனை வீட்டுக்குள் கொண்டுவரக்கூடாது என வெளியே வீசி ஜன்னலை மூடிவிடுகிறாள். ஆனால், அந்த பலூன் பறந்து போகாமல் ஜன்னல் அருகிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறது.
சிறிது நேரத்துக்குப் பின்பு சிறுவன் ஜன்னலைத் திறந்த போது அதே பலூன் அவன் கைகளில் வந்துசேருகிறது. மறுநாள் பள்ளிக்கு பலூனைக் கொண்டுபோகிறான். பலூன் வகுப்பறைக்குள் நுழைந்துவிடுகிறது. அதைப் பிடிக்க மற்ற சிறுவர்களும் ஆசிரியர்களும் முயற்சிக்கிறார்கள். அதனால் ஓரே கூச்சல், குழப்பம்.
மெல்ல பலூனுக்கும் சிறுவனுக்கும் இடையே நெருக்க மான உறவு ஏற்படுகிறது. இது சகமாணவர்களிடையே பொறா மையை ஏற்படுத்துகிறது. அவனிடம் இருந்து பலூனைக் பிடுங்கி உடைக்கிறார்கள். காற்றுபோன பலூன் வெறும் ரப்பர் துண்டாகக் கீழே விழுகிறது. சிறுவன் கண் கலங்குகிறான்
மறுநிமிஷம், அந்த ஊரில் இருந்த அத்தனை பலூன்களும் தானாகவே வானில் பறக்கத் தொடங்குகின்றன. தெருவில் பலூன் விற்றுக்கொண்டிருப்பவர் கைகளில் இருக்கும் பலூன்கள்கூட தானே விடுபட்டுப் பறக்கத் தொடங்குகின்றன. வானம் முழுவதும் பலூன்களின் அணிவகுப்பு!
தனது சிவப்பு பலூனை இழந்து அழுதுகொண்டிருக்கும் சிறுவனின் முன்னால் அத்தனை பலூன்களும் போய் இறங்கு கின்றன. சிறுவன் முகத்தில் சந்தோஷம் பொங்குகிறது. அந்த பலூன்களின் கயிறுகளைப் ஒன்றாக்கி கையில் பிடிக்கிறான். அத்தனை பலூன்களும் அவனைத் தூக்கிக்கொண்டு வானத்தில் பறக்கின்றன. பலூன்களோடு சிறுவன் வானில் பறந்து செல்வதுடன் படம் நிறைவடைகிறது.
இப்படம் மகத்தான வாழ்க்கைப் பாடத்தை நமக்கு போதிக்கிறது. உயிரற்ற பொருட்கள் கூட நாம் நேசிப்பதால் உயிருள்ளதாகிவிடும். எது நம்மை சந்தோஷப்படுத்துகிறதோ, அது பொறாமையையும் உருவாக்கும். ஒருவர் சந்தோஷமே மற்றவரின் பொறாமைக்கான காரணம். ஆனால், ‘ஒன்றை பறிகொடுத்தால் அதற்கு ஓராயிரம் ஈடு கிடைக்கும்…’ என்ற நம்பிக்கையைப் படத்தின் இறுதிக் காட்சி உருவாக்குகிறது.
நம்பிக்கை தருவதும், இப்படி சந்தோஷத்தை பற்றிக்கொண்டு பறக்க வைப்பதும்தானே கதைகளின் வேலை. காலம் காலமாக அப்பணி சிறப்பாக தொடரவே செய்கிறது!
‘தி ரெட் பலூன்’ படத்தின் இணைய இணைப்பு
முக்கிய செய்திகள்
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
2 months ago