தனக்கென ஏதும் சேர்த்துவைக்காமல் எல்லாவற்றையும் தமிழ்க் காரியங்களுக்காகவே செலவிட்ட பெரிய மனிதர் ராஜம்!
மர்ரே-ராஜம் என்றழைக்கப்பட்ட ராஜம் தன்னலம் கருதாமல் தமிழுக்காக உழைத்தவர்களுள் ஒருவர்! கூடவே, தமிழர்களின் மறதியால் விழுங்கப்பட்ட மாமனிதர்களுள் ஒருவர். பழந்தமிழ் இலக்கியங்களை சந்தி பிரித்து, மலிவு விலையில் அவர் பதிப்பித்த நூல்கள் தமிழின் சமீப வரலாற்றின் சாதனைகளுள் ஒன்று. 1986-ல் ராஜம் மறைவுக்குப் பிறகு அவர் உருவாக்கிய பதிப்பு வளங்கள் கிட்டத்தட்ட முடங்கிப் போன நிலை! இந்த நிலையில் பழந்தமிழ் இலக்கியத்தை வெளியிடுவதற்காக 60-களில் ராஜம் ஏற்படுத்திய ‘சாந்தி சாதனா’ அறக்கட்டளைக்கு அவரது நண்பரின் மகனும் ராஜத்தின் பங்குதாரருமான ஸ்ரீவத்ஸா 2001-ல் புத்துயிர் கொடுக்கிறார். அதனைத் தொடர்ந்து, கைப்பிரதியாக இருந்த நூல்களெல்லாம் ஒன்றொன்றாக வெளிவரத் தொடங்கின. ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’ போன்ற அகராதிகளும் ‘பெருங்காதை’, ‘ஸ்ரீதேசிகப் பிரபந்தம்’ போன்ற நூல்களும் வெளியாகின.
சாந்தி சாதனாவின் தற்போதைய அறங்காவலர்களுள் ஒருவரான சகுந்தலாவைச் சந்தித்தபோது ராஜத்தின் நினைவுகளில் மூழ்கினார். “தனக்கென ஏதும் சேர்த்துவைக்காமல் எல்லாவற்றையும் தமிழ்க் காரியங்களுக்காகவே செலவிட்ட பெரிய மனிதர் ராஜம்!
பழந் தமிழ் இலக்கியங்களுக்கு முறையான பதிப்புகள் வெளியிட வேண்டுமென்று ‘சாந்தி சாதனா’ அறக்கட்டளையைத் தொடங்கினார். அவரது மற்ற தர்மகாரியங்கள் இடைவெளி இல்லாமல் இயங்கிவந்தாலும் ‘சாந்தி சாதனா’வுக்கு மட்டும் அவரது மறைவால் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. எனது கணவர் வத்ஸா பணிஓய்வு பெற்ற பிறகு ‘சாந்தி சாதனா’வை மீண்டும் தொடங்கினார்” என்கிறார்.
திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சாக்கை என்ற ஊரில் 1904-ல் பிறந்த ராஜம் கணக்குத் தணிக்கை தொடர்பான படிப்பைப் படித்தவர். சென்னையில் மர்ரே அண்டு கம்பெனி என்றொரு ஆங்கிலேய ஏல நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார் ராஜம். அந்த நிறுவன உரிமையாளர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது அந்த நிறுவனத்தை ராஜம் ஏற்று நடத்தினார்.
1940-களில் தமிழறிஞர் எஸ். வையாபுரிப் பிள்ளையுடன் ஏற்பட்ட சந்திப்பு ராஜத்தின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
எல்லோருக்கும் புரியக் கூடிய வகையில் சந்தி பிரித்த பதிப்புகளைப் பழந்தமிழ் இலக்கியங்களுக்குக் கொண்டுவர வேண்டும்
என்று ராஜத்திடம் அவர் வலியுறுத்தியிருக்கிறார். வையாபுரிப்பிள்ளையையே பதிப்பாசிரியராகக் கொண்டு பதிப்புப் பணிகளை ராஜம்
தொடங்கினார். முதல் நூலாக, திவ்யபிரபந்தத்தின் முதலாயிரம் சந்தி பிரிக்கப்பட்டு 1955-ல் வெளியானது. எஸ். ராஜம், நெ 5, தம்புச்செட்டித் தெரு, சென்னை-01 என்ற முகவரி தமிழ்ப் பதிப்பு வரலாற்றின் மிக முக்கியமான முகவரியாக மாறியது அப்படித்தான்.
அப்படியொரு ஆசிரியர் குழு!
வையாபுரிப்பிள்ளை, பெ. நா. அப்புசாமி, மு. சண்முகம் பிள்ளை, வி.மு. சுப்பிரமணிய ஐயர், பி.ஸ்ரீ. ஆச்சார்யா, கி.வா.ஜ., தெ.பொ. மீனாட்சிசுந்தரம், ரா.பி. சேதுப்பிள்ளை முதலான மகத்தான தமிழறிஞர்களை உள்ளடக்கிய ஆசிரியர் குழு மர்ரே ராஜம் நிறுவனத்துக்கு வாய்த்தது. அதுபோன்றதொரு குழு இனியொருபோதும் வாய்க்காது! சிறு வயதில் ராஜத்திடம் பணிக்குச் சேர்ந்து அவரது இறுதிக்காலம் வரை உடன் இருந்த பரமார்த்தலிங்கத்திடம் பேசியபோது, “வழக்கமாக ஒரு குழுவின் பெரிய அறிஞர்கள் ஒன்றுகூடினால் அவர்களுக்குள் ‘நான்தான் பெரிய ஆள்!’ என்ற மனோபாவம் வந்துவிடும். ஆனால், இந்தக் குழு அப்படியில்லை. ஒருவர் பார்த்த ப்ரூஃபை இன்னொருவர் மறுபடியும் சரிபார்ப்பார். ‘நான் பார்த்ததை நீ எப்படிப் பார்ப்பது?’ என்றெல்லாம் யாரும் சண்டையிட மாட்டார்கள். ஏனென்றால், அவர்களின் பிரதான நோக்கம் பிழையில்லாமலும் எளிமையாகவும் தமிழ் இலக்கியம் தமிழர்களின் வீடுகள்தோறும் சென்றடைய வேண்டும் என்பதுதான்” என்கிறார்.
மர்ரே ராஜம் நிறுவனம் மேற்கொண்ட பணிகளின் விரிவை நம்மால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. பழந்தமிழ் இலக்கியங்கள், இலக்கணங்கள் என்று 40-க்கும் மேற்பட்ட புத்தகங்களைத் தரமான அச்சில் மலிவு விலையில் வெளியிட்டார்கள். அந்தப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்கள்கூட அவ்வளவு அழகு. கூடவே, பழந்தமிழ் இலக்கியங்களில் இடம்பெற்ற சொற்கள், தமிழகக் கோயில் கல்வெட்டுக்களில் இடம்பெற்ற சொற்கள், வைணவ உரைநடை இலக்கியத்தின் சொற்கள் போன்றவற்றைத் தனித்தனியாகத் தொகுத்ததெல்லாம் நம்மை மலைக்க வைப்பவை. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு அட்டை என்று எழுதித் தொகுத்த அட்டைகளும் பேரேடுகளும் இருபதுக்கும் மேற்பட்ட பீரோக்கள், அந்தக் கால இழுப்பறை அலமாரிகள் போன்றவற்றை ஆக்கிரமித்திருக்கின்றன. இவற்றில் பலவும் நூல்களாக வெளிவருவதற்காகக் காத்திருப்பவை.
பாராமுகம் ஏனோ?
“இந்த பொக்கிஷங்களை அழியாமல் பாதுகாப்பது பெரியதொரு பணி என்றால், இவற்றைத் தொகுத்துப் புத்தகங்களாகப் போடுவது மலை போன்ற இன்னொரு பணி! ஆனால், வெளியிட்ட புத்தகங்களுக்கு உரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பது எங்களுக்கு வருத்தம். ‘தமிழ்க் கல்வெட்டுச் சொல்லகராதி’, ‘வரலாற்று முறைத் தமிழ் இலக்கியப் பேரகராதி’ போன்ற நூல்களுக்குப் பின்னால் நம்பவே முடியாத உழைப்பும் அர்ப்பணிப்பும் இருந்திருக்கின்றன. இது போன்ற உழைப்புக்குச் சமூகத்திடமிருந்து கிடைக்கும் பாராமுகம் பணிகளில் தொய்வை ஏற்படுத்துகிறது. இவற்றை
எல்லோருக்கும் கொண்டுசேர்க்க வேண்டும் என்பதற்காகத் தற்போது 50% தள்ளுபடி தருகிறோம். இலக்கிய ஆர்வலர்கள், மாணவர்கள், பல்கலைக்கழகங்கள் எல்லாம் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வாங்கினால் எங்களின் எதிர்காலப் பணிகளுக்கு உந்துதலாக இருக்கும்” என்கிறார் ‘சாந்தி சாதனா’ அறக்கட்டளையின் அறங்காவலர்களில் ஒருவரான ஹேமந்த்.
சந்திப்பை முடித்துவிட்டு வரும்போது அந்தப் பழைய கட்டிடத்தின் ஒரு அறையில் வீற்றிருந்த பழைய காலத்து நாற்காலிகளைக் காட்டி இப்படிச் சொன்னார் பரமார்த்தலிங்கம், “வையாபுரிப் பிள்ளை, பெ. நா. அப்புசுவாமி, தொ.பொ.மீ., எல்லாம் உட்கார்ந்து வேலை பார்த்த நாற்காலிகள்!” அந்த நாற்காலிகளை நிரப்ப இனி யாரும் வரப்போவதில்லை! சுவரில் தொங்கிய புகைப்படமொன்றில், பணிகளை மேற்பார்வையிடும் தோரணையில் ராஜம் காட்சியளித்துக்கொண்டிருந்தார்.
-ஆசை,
தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago