ஊர் ரட்சைக் கல்லருகிலே பூங்குளமே குழுமியிருந்தது. கோல்காரன் எல்லோரையும் அடக்கிக்கொண்டிருந்தான். ஊரிலிருக்கிற எல்லாத் தலைக்கட்டுகளும் வந்தானதா எனப் பார்த்துவிட்டுப் பேசினார் நாட்டாண்மை முனியப்பன்.
“இது ஒரு அவசரக் கூட்டம். ஆனா முக்கியமான கூட்டம். நாமும் குடியானவங்க கணக்கா மாறணும். மானம்-மரியாதையோட வாழணும். இங்கக்கீற பெருசுங்க தலமொறயப் போல, வளந்து வர்றதுங்களும் கையில தண்ணியையும் கூழையும் களியையும் வாங்கித் தின்னுனு, சேவகம் புரியணும்னு அவசியமில்ல. பெரியவங்க சொல்ற சீர்த்திருத்தக் கருத்துகள எடுத்துனு நம்ம பூங்குளம் இனிமே சீர்த்திருத்த பஞ்சாயத்தா இருக்கணுமின்னு சொல்லிக்கிறேன்.”
நாட்டாண்மையின் பீடிகைக்கு சலசலப்பு எழும்பியது. கோல்காரன் மறுபடியும் கத்தினான். திருவேங்கடம் பேசவும் கூட்டம் அமைதியானது.
“யாரோ ஒருசிலரின் சுயநலத்துக்காக உருவாக்கப்பட்ட இந்த ஜாதிமுறை காலாகாலமாக வழங்கி வர்றதினாலேயே சரியாயிடுமா? அதை அப்படியே ஏத்துக்கணுமா? உனக்கும் எனக்கும் இந்த ஜாதிமுறை அவமானத்தையும் இழிவையும் தந்ததில்லாம வேற எதை தந்தது? இந்த முறையை கடவுள் ஏற்படுத்தினார் என்றால் அப்படிப்பட்ட ஓரவஞ்சனை கொண்ட கடவுளே நமக்குத் தேவையில்ல.
இந்த மதமும் நமக்குத் தேவையில்ல. இந்த முறை மனிதர்களால் ஏற்பட்டது என்றால், இது திட்டமிட்ட சதியென்பதை நாம புரிஞ்சிக்கணும். ஜாதி இழிவைப் போக்க நாம இரண்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேணும்னு நான் நினைக்கிறேன். ஒன்று, சாதிக் கொடுமைகளை எதிர்ப்பது, அதை ஏவிவிடுகிறவர்களுடன் போராடுவது. இரண்டாவது, நம்மிடையே இருக்கும் இழிவான பழக்கங்களை ஒழிப்பது. அதனால சில தீர்மானங்கள நம் பூங்குளம் சீர்த்திருத்தப் பஞ்சாயத்து ஏகமனதாக எடுத்துள்ளது.’’
திருவேங்கடம் குறிப்பேட்டில் இருக்கும் தீர்மானங்களை வாசித்தான்.
“இனிமேல் இந்தப் பூங்குளம் கிராமத்திலிருக்கிற யாரும், யாருக்கும் பறை மேளம் அடிக்கப் போகக் கூடாது. இந்த ஊரிலும் இனிமேல் எந்த நிகழ்ச்சிக்கும் மேளம் அடிக்கக் கூடாது. மீறி அடித்தால் மேளம் கிழிக்கப்படும். மேளம் அடிக்கும் வீட்டில் யாரும் திருமணத்துக்குப் பெண்ணையோ, பிள்ளையையோ எடுக்கக் கூடாது.
ஆண்டைகளின் வீட்டில் செத்த மாட்டை அப்புறப்படுத்துவதோ, அதன் இறைச்சியைச் சாப்பிடுவதோ தவறு. யாரும் இதை மீறக்கூடாது. ஜாதி இந்துக்களின் பிணத்துக்குக் குழிவெட்டுவதோ, எரியூட்டுவதோ கூடாது.
சாவு சேதி சொல்லப் போவதோ, பாடைகட்டித்தருவதோ தடை செய்யப்படுகிறது. ஜாதி இந்துக்களின் வசிப்பிடங்களில் சென்று சாக்கடையை சுத்தம் செய்வதும், மலக்குழியை சுத்தம் செய்வதும் தடை செய்யப்படுகிறது. இனிப் பூங்குளம் கிராமத்துக்குட்பட்ட இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதோ விற்பதோ தடை செய்யப்படுகிறது. இந்தத் தீர்மானங்கள் அனைத்தும் ஊர்க்கட்டுமானமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதை மீறுபவர்களுக்கு பஞ்சாயத்தார் முடிவுப்படி நடவடிக்கை உண்டு.”
ஊர்க் கூட்டத்தில் ஒரு கணம் கடும் அமைதி நிலவியது. பேசுவதற்குச் சொற்கள் கிடைக்காதபடி தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டது. திருவேங்கடமே மீண்டும் பேசினான்.
“ஆதிக்குடி மக்களாகிய நாம் மிகவும் மதிக்கப்படும் இனக்குழுவாகவே இருந்திருக்கிறோம். அது பழைய கதை. இன்று நம்மை இழிவாக நடத்துவதற்கு உரிய சில அடையாளபூர்வமான தொண்டூழியங்கள் என்னென்ன என்பதை நாம் சிந்தித்துப்பார்த்து அந்த ஊழியங்களைச் செய்யாமல் நமக்கு நாமே தடைவிதித்துக்கொள்ள வேண்டும்.”
கூட்டத்திலிருந்து ஒருவன் திடீரென்று எழுந்து கேட்டான்.
“மோளமடிக்கப்போலன்னா அப்புறம் பொளைக்கிறதெப்படி?”
“செத்துப்போடா.”
கத்தினான் திருவேங்கடம்.
“வருசம் முந்நூத்தி அறுவத்தஞ்சி நாளும் பொணம் வுளுதா? கல்யாணம் கருமாதி நடக்குதா? இல்ல திருநாள் செய்யிறாங்களா? இல்லியே. வேற வேலை எதாச்சும் செஞ்சாதான பிழைக்கிறதுக்கு? மேளமடிக்கிறதும், செத்தமாட்ட தூக்கறதும், சாக்கடையை சுத்தப்படுத்துறதும் நம்ம மேல திணிக்கப்பட்ட வேல. அந்தத் திணிக்கப்பட்ட வேலைங்கள இனிமே செய்ய வேணாம். ஜாதி இந்துக்கு அந்த வேலைகளைச் செய்ய வேண்டிய அவசியமிருக்குதுன்னா அதை அவங்களே செஞ்சுக்கட்டும்.”
“அப்ப ஒரு கண்ணாலங் காட்சியின்னா, நாளுங் கெழமையின்னா இடி உளுந்த ஊட்டப்போல கம்முனுக்கீறதாப்பா? மோளச் சத்தம்னாலே ஒரு கெலிப்புப்பா!”
“இது நம்ம பூங்குளத்துல மட்டும் எடுத்த முடிவு இல்ல. நம்ம ஜனங்க இருக்குற எடத்தில எல்லாமே மேளத்த ஒழிச்சினு வந்துட்டாங்க. அதுக்கு பதிலா பேண்டு செட்டு, பஜனைக் குழுன்னு வச்சிக்கிட்டாங்க. நம்ம ஊருக்கும் அப்பிடி ஒரு ஏற்பாடு செஞ்சிக்கலாம்.”
கூட்டம் கலைந்தது. பூங்குளத்தில் தோட்டிப் பொறுப்பு பார்க்கும் பத்துக் குடும்பத்தின் பெரிய தலைக்கட்டுகளை மட்டும் பேசுவதற்கென நிறுத்திக்கொண்டார் முனியப்பன். அவர் பேசத் தொடங்கியபோது பஞ்சாயத்தாருடன் மாயன் மூர்க்கமாக வாக்குவாதம் செய்தான்.
“மோளமடிக்கிறத கௌரவமில்லன்றீங்க. திடுதிப்புனு எங்கிருந்து வந்துடுச்சி இந்த யோசன? மோளமடிக்கிறதுதான் எனுக்குக் கௌரவம். காலங்காலமா வர்றத என்னால உடமுடியாது.”
கடுஞ்சினத்துடன் அவனோடு பேசப் புகுந்த திருவேங்கடத்தை அடக்கினார் முனியப்பன்.
“டேய், நீ நேத்துப் பொறந்த புழுக்கடா. வெள்ளையுஞ் சொள்ளையுமா துணி போட்டுனு, நாலு பேரை எங்குந்தோ கூப்டுனு வந்துட்டா நீ பெரிய ஆளாடா. நீ போடற கட்டுமானத்துக்கு நா தல வணங்குணுமா? முடியவே முடியாது.”
திருவேங்கடத்தின் கோபம் முனியப்பனையும் தொற்றிக்கொண்டது.
அவர் கல்லின் மேலிருந்து எழுந்து அவனை அடிப்பதற்குப் போனார். கோல்காரன் அவரைச் சமாதானப்படுத்திவிட்டு மாயனை அதட்டினான்.
“இந்த முடிவு பஞ்சாயத்தார் எடுத்தது. மேக்கொண்டு பேசறதுக்கு எடமில்ல. மீறிப் பேசனியானா ஒங் கையிகால முறிச்சிப்புடுவோம். நாலு பேருக்கு என்னாவோ அதுதான் உனுக்கும். ஊரோட ஓடணும். நாலோட நடுவு ஓடணும் மாயா.”
“எல்லாரும் பேசட்டும். பிண்டுக்குப் பேசிக்கிலாம்னு இருந்தேன். இந்த முடிவு நல்லதுதான். இவுனுங்க சொல்லுவானுங்க. புத்திகெட்ட பசங்க. மோளமடிக்கப் போற எடத்துல எவ்ளோ அகுமானம்னு ரோசனபண்ணிப் பார்த்தாத்தான் தெரியும். நாளையோட அந்தச் சனியன தலமுழுகிடலாம் உடுங்க நாட்டாம.”
கோட்டான் எழுந்து பேசினான்.
அது பனிக்காலமென்பதால் விடிந்தும் இருள் துப்புரவாகப் போகவில்லை. பூங்குளத்தையே எழுப்பிவிடுவது போல இரவுப் பள்ளித் திடலிலிருந்து பறையின் ஒலி கேட்டது. முதலில் கேட்ட ஒலியோடு மேலும் சில மேளங்களும் சேர்ந்துகொண்டு ஒத்திசையில் முழங்கின. திருவேங்கடத்தின் காதுகளில் அவ்வொலி அருவருப்பாய் விழுந்தது. அவன் மிரள் வந்தவனைப்போல வீட்டிலிருந்து எழுந்து ஓடினான். தொண்டர் படையினரும், ஊர்ப் பெரியவர்களும் எழுந்து ஓடினார்கள். திடலின் மையத்தில் தீ மூட்டப்பட்டிருந்தது. அதனருகில் நின்றபடி மாயன் பறையை அடித்து முழக்கிக்கொண்டிருந்தான். அவன் இடது தோளில் மாட்டியிருந்த பலகை கிண்கிண்ணெனக் கேட்டது. அவனோடு துணையாக இடுப்பில் சட்டியைக் கட்டிக்கொண்டு ஒருவனும், டோலை ஒருவனும் வாசித்தார்கள். திருவேங்கடம் வெறியுடன் ஓடிச்சென்று மாயனை எத்தினான். அவன் கையிலிருந்த பலகை தொலைவில் போய் விழுந்தது. மாயன் தனியாக விழுந்தான்.
“பிய்யச் சாப்டுட்டு சேவகம் செய்யச் சொன்னாலும் செய்விங்கடா நீங்க. அடிமை புத்தி ரத்தத்துலயே ஊறிப்போயிருக்குது.”
திருவேங்கடத்தைத் தொண்டர் படை வாலிபர்கள் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டனர். மாயனைச் சிலர் தூக்கிக்கொண்டு போய் பக்கத்திலிருக்கும் வீட்டில் அடைத்துக் கதவைப் பூட்டினர். திமிறிக்கொண்டிருந்த திருவேங்கடம், ஆத்திரம் அடங்காதவனாய் பறையைத் தூக்கித் தீயில் வீசினான். சட்டியையும் டோலையும் அடித்துக்கொண்டிருந்தவர்கள் அவற்றைப் போட்டுவிட்டு ஓடிப்போயிருந்தார்கள்.
வெயில் தெளிந்திருந்த காலையில் அந்த ஊர்வலம் தொடங்கியது. பூங்குளத்திலிருந்த மேளக்காரர்கள் தமது மேளச்சாமான்களுடன் ஊர்வலத்தில் சென்றனர். ஊர்வலம் அல்லிக்குளம் காட்டாற்றை நோக்கிப்போனது. வழியிலிருந்த மையூர், அல்லிக்குளம் ஊர்களிலிருந்தும் சில மேளக் காரர்கள் ஊர்வலத்தில் சேர்ந்துகொண்டார்கள். ஊர்வலத்துக்கு முன்னால் கூட்டமைப்பின் தொண்டர்களும், சமத்துவத்தொண்டர் படையினரும் சென்றார்கள். யாரும் எதையும் பேசிக்கொள்ளவில்லை.
ஊர்வலம் ஆற்றை அடைந்ததும் மேளக்காரர்கள் மேளங்களைக் கரையிலே வைத்துவிட்டு ஆற்றில் இறங்கித் தலைமுழுகினார்கள். பிறகு ஊர்வலம் திரும்பி பெரியபேட்டை கச்சேரித் திடலைப் பார்த்து நகர்ந்தது. ஈரத்துணி உடலில் ஒட்டிட மேளக்காரர்கள் நடுங்குவது தமது பறைகளின் மௌனப் புலம்பலைக் கேட்கச் சகியாது நடுங்குவதாய் இருந்தது. ஊர்வலம் பெரியபேட்டை கச்சேரித் திடலை அடைந்ததும் எல்லாரும் தமது தோள்களிலும் இடுப்புகளிலும் இருந்த மேளங்களைக் கழற்றி ஓரிடத்தில் குவித்தார்கள். தமது உறுப்புகளைத் துண்டித்து வைப்பது போன்றும் இடுப்புக் குழந்தையைக் கைவிடுவது போன்றும் இருந்தது அவர்தம் செய்கை.
தீப்பந்தம் தயாராகிவிட்டிருந்தது. தொண்டர் படை இளைஞர்களும், கூட்டமைப்பின் தோழர்களும் முழக்கங்களை எழுப்பினர்.
“ஜாதி ஒழிக!”
“ஜாதி வெறியர்கள் ஒழிக!”
“இழிந்த பறை ஒழிக!”
திருவேங்கடம் தீப்பந்தத்தை வாங்கி மேளக் குவியலுக்குத் தீமூட்டினான். பறை மேளங்கள் பற்றியெறிந்தன. அவற்றுள் உறங்கிக் கிடந்த ஒலி தீச்சுவாலைகளினூடே எழும்பியதிர்ந்தது. தோல் எரிவது தசை பொசுங்குவதைப் போன்று நாறியது.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
3 months ago
இலக்கியம்
4 months ago
இலக்கியம்
4 months ago