எழுத்தாளர் இமையம், மொழி குறித்த தீர்க்கமான கருத்துகள் உடையவர். மக்கள் பேசும் மொழியைத்தான் அவர் தனதாக்கிக்கொண்டார். எனினும், சொற்கள் தங்கள் முழு அர்த்தத்தையும் பயன்பாட்டையும் தந்துவிடுமாறு தன் உரையாடலை அமைத்துக்கொள்ளும் வல்லமைகொண்டவர்.
இறுக்கமும், இனிமையான வாசிப்பு அனுபவத்தையும் தரும் விதமாக அவர் கதைகள் மிளிர்கின்றன. தம் சமகாலத்து வரலாற்றை அவர் எழுதுகிறார். அதைக் கதையாக மாற்றி எழுதுகிறார். அவர் கதைகள் யதார்த்தக் கதைகள் போலத் தோன்றும். ஏனெனில் அவர் புலப்படுகிற, எல்லோரும் அறிகிற மேற்கட்டுமான வாழ்க்கையை எழுதுகிற வர் இல்லை. வாழ்க்கை, எதை அர்த்தப் படுத்துகிறதோ, அந்த மறைபொருள் வாழ்க்கையையே எழுதுகிறார். அவர் கதைகள் ஒவ்வொன்றும் ஓர் இனத்தின் பண்பாட்டு வாழ்வியல் ஆவணமாக இருக்கும்படியாக அவர் எழுதுவது அபூர்வம் என்றே சொல்ல வேண்டும். அவர் மொழியைத் தனக்கான மொழியாக மாற்றி அமைத்துக்கொள்கிறார்.
‘சாவு சோறு’ சிறுகதைத் தொகுதி யும் (2014), 2016-ல் வெளியான ‘நறுமணம்’ தொகுதியும் என் மேஜையில் இருக் கின்றன. இரண்டும் ‘க்ரியா’ வெளி யிட்டவை. மொத்தம் 60 கதைகளுக்குள் ளாகவே அவர் எழுதியிருப்பார். அவர் கதைகள் அனைத்தும் கூர்மையான ‘எடிட்டிங்’குக்கு உட்பட்டவை. இது அந்த எழுத்தாளரின் சமூக பொறுப்பைக் காட்டுவது. தன்னிடம் உள்ளதை ஆகச் சிறப்பாகத் தர வேண்டும் என்ற உள்ளார்ந்த ஈடுபாட்டின் விளைவு அது. கதைக்கு அல்லது படைப்புக்குத் தேவை யற்றது என்று எந்த வரியும் இமையம் கதைகளில் காணக் கிடைக்காது. இமை யம், தன் கதையை எழுதத் தொடங்கி வைக்கிறார்; கதை, தன் கதையை எழுதிக் கொள்கிறது!
இமையம், பெண்கள் பற்றி எழுதும் பரப்பு அகலமானது. பொதுவாகப் பெண்கள் இயக்கப்படுபவர்கள் என்ற கருத்து, இமையத்தால் மீண்டும் மீண் டும் மறுக்கப்பட்டு… கணவர்களை, ஆண் களை, சமூகத்தை, சமூகத்தின் அனைத்து விவகாரங்களையும் இயக்குபவர்களாக பெண்கள் விளங்குகிறார்கள். இந்த மாற்றத்தை அவர்கள் கோஷங்கள், தத்துவார்த்தப் பிரச்சினைகள் ஏதுமற்று மிக இயல்பாக, காலை விடிவது போலவும், சாயங்காலம் வருவது போலவும் செய்துவிடுகிறார்கள்.
இரண்டு கதைகளைப் பார்ப்போம்:
ஒன்று ‘சாவு சோறு’. பூங்கோதை என்பது அந்த அம்மாளின் பெயர். சுமார் 50 வயதுக்காரி. பள்ளிக்கூடம்தோறும் சென்று, தன் மகள் அம்சவல்லியைத் தேடிக்கொண்டு அலைகிறாள். வாட்ச் மேன் துரத்துகிறார். அரசு பெண்கள் பள்ளி மட்டும்தான் அவள் பார்க்காதது. நாலைந்து நாட்கள் முன் மொட்டை அடித்த தலை. முழங்காலுக்கு மேலாகக் கட்டியிருந்த சேலை. வியர்வை வழிந்து உப்பு பூத்த சட்டை. தடித்த கருத்த உருவம்.
அம்சவல்லி படிக்கிறாளா, இல்லை வேலைசெய்பவளாக இருக்கும். பூங்கோதை அரசு பெண்கள் பள்ளிக்கு வருகிறாள். அங்கு மணி அடிக்கும் வேலை பார்க்கும் கமலாவைச் சந்திக் கிறாள். கமலாவுக்கும் பூங்கோதைக்கும் இடையே நடக்கும் உரையாடலாகக் கதை நடக்கிறது.
‘‘அம்சவல்லி என்ற பெயரில் ஆசிரியை யாரும் இல்லை. என்ன விஷயம்?’’
‘ ‘வேலைக்குப் போறப்ப ஒரு பயகூட ஓடிப்போச்சி. வாத்தியார் வேலைக்குப் படிச்சவ. அதனால பள்ளிக்கூடங்கள்ல தேடுறேன். இன்னியோட இருவது நாள் ஆச்சி. அவளுக்கு நான் சிலதைத் தரணும்.’’
‘’என்ன தரப் போறே?’’
பூங்கோதை வெள்ளந்தியாக எட்டு பவுன் நகையையும், இருபதாயிரம் ரூபா பணத்தையும், படிச்ச படிப்புக் கான சர்ட்டிஃபிகேட்டுகளையும் எடுத்துக் காட்டுகிறாள். திடுக்கிட்டுப் போய்விடு கிறாள் கமலா. ஓடிப்போனவள் எங்கிருந் தாலும் இவற்றைக்கொண்டு பிழைத்துக் கொள்ளலாம்தானே? கமலா, அவளை ஒரு மரத்தடியில் உட்கார வைத்தாள். குடிக்கத் தண்ணீர் கொடுத்தாள். பூங் கோதை தண்ணீர், டீ குடிக்கவில்லை.
இந்த நகையையும், பணத்தையும், சர்ட்டிஃபிகேட்டையும் கொடுத்து மக ளைப் பிழைத்துகொள்ளச் சொல்லலாம் என்று தாய் எண்ணுகிறாள். எப்படியானா லும் மகள் ஊருக்குள் வரக் கூடாது. ஏன்? வந்தால் பஞ்சாயத்து தீர்ப்பின்படி ஊர் மானத்தை (’கீழ்ச்சாதி’ பையனுடன் அல்லவா அவள் ஓடியிருக்கிறாள்) வாங்கியதுக்காக அவள் மாரை அறுத்துவிடுவார்கள். அதுக்கு ஊர் காத்திருக்கிறது. இதற்கு முன் இரண்டு பெண்கள் மார்கள் அறுக்கப்பட்டு, சாமியாகியிருக்கிறார்கள். அவர்கள் மானம் காத்த சாமிகள்.
‘‘அம்சவல்லி ஓடிட்டாள்னு தெரிஞ் சதும் அப்பனும் அண்ணனும் அவள் செத் துட்டதாப் பத்திரிக்கை அடிச்சு கருமாதி செஞ்சுட்டாங்க. அவளைத் தேடிட்டிருக் காங்க. கண்டுபிடிச்சா கொன்னுடு வாங்க. இழுத்துட்டு ஓடுன பையனின் தாய் தற்கொலை செஞ்சுகிட்டா. என் பொண்ணு ஊருக்குள்ள வந்துடாம அவளைக் கண்டுபிடிச்சு பணம் கொடுத்து எங்கேயாச்சும் ஓடிப் போய் பிழைச்சுக்க சொல்லணும் அதுக் காகத்தான் அலையறேன். இப்படி அலையறது தெரிஞ்சா, என் புருஷனும் என் புள்ளைகளும் என்னைக் கொன்னுடுவாங்க’’.
சுமார் 20 பக்கம் நீள்கிற கதை இது. நான் எழுதியது சுருக்கம்தான். வாசகர்கள், இக்கதையை இமையம் மொழியில் படிக்க வேண்டும். பதறா மலோ, கண்ணீர் துளிர்க்காமலோ இக் கதையை யாரும் படித்துவிட முடியாது.
தாழ்த்தப்பட்ட பையன்களுடன் ஓடிப் போகிற இடைநிலைச் சாதிப் பெண் களைக் கண்டுபிடித்துக் கொண்டுவந்து அவள் மாரை அறுப்பார்களா? ஆம்! அறுக்கிறார்கள். அப்பெண்களை செங்கல் சூளைக்குள் உயிரோடு இறக்கிக் கொல்கிறார்களா? ஆம்! கொல் கிறார்கள். சொந்த மகள் ஓடிப் போனாள் என்பதற்காக, அந்தப் பெண்ணின் தந்தை தன் மகளுக்குக் கருமாதி செய்வானா? ஆம்! செய்கிறான். அந்தப் பெண்ணை பெற்ற பூங்கோதைக்கு தலை மொட்டை அடிக்கப்படுகிறது. இவையெல்லாம் எங்கு நடக்கிறது. அதர்மபுரிகளில்தான்.
மானமற்ற மனிதர்கள் செய்யும் மானக் கொலைகள் பற்றியும், காதலர்கள் தலைமறைவு பற்றியும், அசாதாரண சமூகச் சூழலையும் ஆவணப்படுத்திய இக்கதையை (சாவு சோறு) போன்ற கதை, தமிழில் இன்னொன்று இல்லை. தங்கையைக் கொல்ல அலையும் அண் ணன்கள். பெண் உயிரொடு இருக்கும் போதே பெண்ணுக்கு கருமாதி செய்யும் தந்தை. காதலன் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவன் என்பதற்காக, அவன் தாய், தந்தையைக் கொல்கிற சாதி ஆணவம். இவர்களிடம் இருந்து தன் பெண்ணைக் காப்பாற்ற உணவு, உறக்கமின்றி அலையும் தாய்... என்று இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டில்தான் வாழ்கிறார்கள். நம்மோடுதான் வாழ் கிறார்கள்.
அடுத்து, ‘நறுமணம்’ தொகுப்பில் இடம் பெற்ற ‘மணியார் வீடு’ என்கிற கதை:
நல்ல வெயில். வீரமுத்து வீடு திரும்பு கிறார். வள்ளியம்மாளைப் ஃபேன் போடச் சொல்கிறார். ‘‘பவர் கட்…’’ என்கிறாள் வள்ளி. வியர்வை, குளிக்கலாம் என்று எழுகிறார். பம்ப் இறைக்க முடியாது. பவர் கட். ஊரில் சும்மா கிடக்கிற வீட்டை யும், நிலத்தையும் விலைக்கு வாங்க சிங்கப்பூர் சின்னச்சாமி வந்து காத் திருந்து, பிறகு வருவதாகச் சொல்லிச் சென்றதை சொல்கிறாள் வள்ளி.
‘‘என் வீடு மணியக்காரர் வீடு. அந்தப் பிச்சைக்காரனுக்கு நான் என் வீட்டை விற்பேனா?” என்கிறார் வீரமுத்து. ‘‘விற்றால் என்ன?” என்கிறாள் வள்ளி. பிள்ளைகள் எல்லோரும் இருக்கும் பட்டணத்துக்குப் போகலாம் என்கிறாள் வள்ளி. வீரமுத்துவுக்கு படுகோபம். கவுரவம்?
சின்னச்சாமி வருகிறான். வள்ளி முன் நின்று விலை பேச, அட்வான்ஸை வாங்கி அலமாரியில் வைக்கிறாள் வள்ளி. வீரமுத்து ஒன்றும் செய்ய முடியாமல், தன் குடும்பம் பற்றிய வளப்பமான கடந்தகாலப் பெரு மையை எண்ணிக்கொண்டு கண்ணீர் உகுக்கிறார்.
பழமை பித்து தன்னை அண்டவிடாது காத்துக்கொண்டவள் வள்ளி என்கிற பெண். பாழ் நிலத்தை தன் எதிர்காலச் சந்ததிக்குப் பயனாக மீட்டு எடுப்பவள்... பெண். வெற்றுப் பரம்பரை மேன்மைப் பித்தை துடைத்து வெளியேற்றி நவீனக் கதவைத் திறந்து வெளிச்சம் உள்ளே வரட்டும் என்று ஒளியை நோக்கி நடப்பவள்... பெண்.
இமையத்தின் பெண் இவள். சாதாரணக் கிராமத்துப் பெண். பெண் விடுதலை தத்துவம் எல்லாம் அவள் அறியாதது. ஆனால், வரலாற்றுப் பக்கத்தில், மாறுதல் என்ற மாறாத தத்துவத்தைப் படிக்காமலேயே, தன் உள்ளுணர்வின் போதத்தால் கணவனை, பிள்ளைகளை, சமூகத்தை முன் நகர்த்துகிறாள் வள்ளி.
இமையம் போன்ற எழுத்தாளர், மிக மிகச் சிலரே தமிழ்ச் சூழலில் மிகக் கடுமையான முயற்சி, உழைப்பை முன் வைத்து ஒரு புதிய உலக்குக்கு எழுதுகிறார்கள். இமையத்தின் முயற்சி தோற்பது இல்லை!
- நதி நகரும்…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago