மவுனத்தின் புன்னகை 20: ரவிசங்கரும் சகோதரரும்!

By அசோகமித்திரன்

நான் 1951 இறுதியில் சென்னை வந்தபோது ராஜகுமாரி திரை யரங்கில் ‘ஆவாரா’ என்ற இந்திப் படம் பார்த்தேன். நான் செகந்திராபாத்தில் இருந்தால் இப் படத்தைப் பார்க்கப் பெரிய பிரயாசை எடுத்திருக்கவேண்டும். சென்னையில் நான் தங்கியிருந்தது தி.நகரில். ராஜ குமாரி அரங்கு இருந்ததும் தி.நகர். படம் பார்த்து மலைத்துப் போனேன். இருபத்திரண்டு, இருபத்திமூன்று வயது இளைஞன் என்ன சாதனை செய் திருக்கிறான்? எனக்கு ராஜ்கபூர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. அந்த லட்சியவாதியான இளைஞன் பின்னர் ‘பாபி’ படம் எடுக்கும் அளவுக்குத் தலைகுப்புற விழுந்தது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது.

‘ஆவாரா’ படத்தில் ஒரு கனவுக் காட்சி வரும். அதைத் தொடர்ந்து இந்தியாவில் பல ஆண்டுகளுக்கு எல்லா மொழிப் படங்களிலும் கனவுக் காட்சி முக்கிய இடம்பெறும். ‘ஆவாரா’ படத்தின் கனவுக் காட்சியை மதாம் ஸிம்கி அமைத்ததாகப் போட்டிருந்தது. அன்று இணையம் கிடையாது. பழைய நூல்களையும் தின, வாரப் பத்திரிகைகளையும்தான் ஆதாரத்துக்கு நாட வேண்டும். அப்போது ஸிம்கி ‘அன்னா பவ்லோவா’ என்ற மகத்தான நாட்டியக் கலைஞருடைய குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிந்தது. இன்னும் சிறிது தேடலுக்குப் பின் பவ்லோவா குழுவில் உதயசங்கர் என்ற இந்தியர் இருந்திருக்கிறார். அவர் பவ்லோவாவுடன் ‘ராதா கிருஷ்ணா’ நாட்டிய நிகழ்ச்சியை ஐரோப்பாவில் நடத்தியிருக்கிறார். ரஷ்யா, சோவியத் ரஷ்யாவான பிறகும் பவ்லோவாவின் அயல் நாட்டுச் சுற்றுப் பயணங்கள் இருந்திருக்கின்றன. அன்னா பவ்லோவா வின் மிகப் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சி ‘டையிங் ஸ்வான்’ (அன்னத்தின் மரணம்). அன்னா ஒரு பாலே நடனக் கலைஞர். நடனம் முழுக்கக் கால் விரல்கள் நுனியில் மேடையெங்கும் பாய்ந்து, சுழன்று பம்பரமாக ஆடுவது. ஆணும் பெண்ணும் ஆடினாலும் கலாக்ஷேத்ரா பாணி நடனத்தையொத்து இதிலும் காமரஸம் இருக்காது. இந்த மகத்தான கலை வடிவம் ரஷ்யாவுக்கே உரியது. அப்படிப்பட்ட கலையின் முதன்மைக் கலைஞருடன் உதயசங்கர் ஆடியிருக்கிறார்!

அன்னா பவ்லோவா மரணத்துக்குப் பிறகு உதயசங்கர் இந்தியாவில் இமயமலைச் சாரலில் ஓர் நடனப் பள்ளி நிறுவினார். 1946-ம் ஆண்டுவாக்கில் ஒரு திரைப்படம் எடுக்கத் தீர்மானித்தார். அதற்கு சென்னை ஜெமினி ஸ்டுடியோ வைத் தேர்ந்தெடுத்தார். படத்தின் பெயர் ‘கல்பனா.’ அது 1948-ல் வெளிவந்தது. ஆர்.கே.நாராயண் சகோதரர் ஆர். கே. ராமச்சந்திரன் அப்போது ஜெமினி எடிட்டிங் பிரிவில் பணியாற்றிக் கொண் டிருந்தார். நான் 1952-ல் ஜெமினி ஸ்டுடியோவில் சேர்ந்தேன். ராமச் சந்திரன் மூலம் அவர்கள் குடும்பத்தினர், உறவினர் என சுமார் நூறு பேரை அறிந்தேன்.

‘சந்திரலேகா’ முரசு ஆட்டம் ‘கல்பனா’ தந்த யோசனை என்று ராமச்சந்திரன் என்னிடம் கூறியிருக்கிறார். ‘கல்பனா’ திரைப்படத்தில் அன்று முன்னுக்கு வந்துகொண்டிருந்த திருவிதாங்கூர் சகோதரிகள் லலிதா - பத்மினி ஆடியிருக்கிறார்கள். குரு தத் ஆடியிருக்கிறார். படமே ஒரு தனி ரகமாக இருக்கும். உதயசங்கர் சென்னை தி.நகரில் சில ஆண்டுகள் வசித்து வந்தார். அந்த வீடுதான் பின்னர் ‘பாலன் இல்லம்’என்று புது உரு எடுத்தது. அதே தெருவில் தமிழ்த்திரை மேதை கே.ராம்நாத் இருந்தார். அவர்தான் ‘கல்பனா’ படத்துக்கு கேமரா மேனாகப் பணியாற்றினார். அவருக்கும் உதயசங்கருக்கும் நல்ல மன ஒற்றுமை இருந்தது.

‘கல்பனா’படத்தையடுத்து புத்த சரித்திரத்தை ஒரு நிழல் நாடகமாக உருவாக்கி, அது சென்னையில் ஒரு மாதம் நடந்தது. காமராஜர், ரஷ்யப் பயணத்தை முடித்த கையோடு தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத் தில் ஒரு திறந்த வெளி அரங்கு கட்டினார். அந்த அரங்கில் நவாப் ராஜமாணிக்கம் அவருடைய அனைத்து நாடகங்களையும் மிகவும் வெற்றிகரமாக நடத்தினார். சஹஸ்ரநாமம் ‘பிரஸிடென்ட் பஞ்சாட்சரம்’ நாடகத்தை நடத்தினார். டி.கே.எஸ். சகோதரர்கள் ‘ராஜராஜ சோழன்’நாடகம் நடத்தினார்கள். உதய சங்கர் ‘புத்த சரித்திர’த்தை நிழல் நாடகமாக ஒரு மாதம் நடத்தினார். நான் அந்தத் திறந்த வெளி அரங்கத்தில்தான் எவ்வளவு நாடகங்களைப் பார்த் திருப்பேன். மகத்தான நாடக அனுபவத்தைப் பெற்றிருப்பேன்!

உதயசங்கரின் கடைசி நாட்கள் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக இல்லை என்று கேள்விப்பட்டேன். நடனம் வயதைச் சார்ந்தது. அவர் மறைவுக்குப் பின் உதய சங்கரின் மனைவி அமலா சிறிது காலம் நடனப் பள்ளியை நடத்தியிருக்கிறார். உதயசங்கர் பல நாடுகளில் மகத்தான சாதனைகள் செய்தாலும் லக்ஷ்மி கடாட்சம் தேவைப் பட்டிருக்கிறது. அந்த விதத்தில் அவருடைய சகோதரர் ரவிசங்கர் வலுவானவர்.

உதயசங்கருக்கும் அவர் தம்பி ரவிசங்கருக்கும் இருபது வயது வித்தியாசம். எனக்கு ஆச்சரியம், ரவிசங்கர் அலாவுதீன் கான் என் பவர் வீட்டிலேயே தங்கி சித்தார் கற்றார். இது 1930-களில் சாத்தியமாக இருந்திருக்கிறது. அலாவுதீன் கானின் மகன் அலி அக்பர் கான் பிரசித்த சரோத் வாத்தியம் இசைப்பவர். ரவிசங்கர் சித்தார் கற்றுக்கொண்டதோடு குருவின் மகளையே மணந்து கொண்டார்.

அன்றும் சரி, இன்றும் சரி, வாத்தியங்களில் மிகவும் கடினமான தந்தி வாத்தியங்களை வாசிக்க ஏராள மானோர் முன்வந்தார்கள், முன் வருகிறார்கள். சித்தார், சாரங்கி, சரோத் மற்றும் வீணை கடினமான வாத்தியங்களோடு, ஊர் ஊராக எடுத்துச் செல்லவும் மிகவும் கடின மானவை. இதில் புல்லாங்குழல் எளிது. ஆனால் வாசிப்பது மிகவும் கடினம். எனக்கு மாலியின் இரு சீடர்களைத் தெரியும். அதில் ரமணி பெரும் புகழ் பெற்றார். இன்னொருவர் வானொலியில் புதையுண்டார்.

ரவிசங்கரின் நல்ல காலம் அவரை வானொலியில் இருந்து பிரித்தது. அப்போது மஹேஷ் யோகி ஒரு மாதிரி இந்தியாவில் தெரிய வந்தார். மஹேஷ் யோகிக்கு ஒரு பரம்பரை இருக்கிறது. அவருடைய யோகம் எளிதாக இருப்பது போலத் தோன்றும். ஆனால் எந்த யோகமும் கடையில் வாங்கி வருவது போல எளிதல்ல. பீட்டில்ஸ் பாடகர்கள் மஹேஷ் யோகிக்காக இந்தியா வந்தார்கள். யோகம் சித்திக்கவில்லை. ஆனால் ஆளுக்கு ஒரு சித்தார் வாங்கிப் போனார்கள். சித்தார் ரவிசங்கரும் உலகப் பிரசித்தி பெற்றார். அவருடைய குரு அலாவுதீன் கான் நூறாண்டு களுக்கு மேலாக வாழ்ந்தார். அவரை பற்றி அன்றைய ஃபிலிம்ஸ் டிவிஷன் ஓர் ஆவணப் படம் எடுத்தது. அப்படத்தை எடுத்தவர் ரித்விக் கடக். அந்த அனுபவத்தை என்னால் மறக்க முடியாது.

சென்னையில் அன்று வருடா வருடம் மியூசிக் அகாடமியில் டிசம்பர் 31-ம் தேதி ரவிசங்கரின் சித்தார் கச்சேரி நடக்கும். இரவுக் கச்சேரி. அவருடைய மேதைமையைக் குறை கூற முடியாது. ஆனால் சரியாக 12 மணிக்கு வாசிப்பதை நிறுத்தி, புத்தாண்டு வாழ்த்துகள் என்பார். எல்லாரும் கைத்தட்டுவார்கள். நான் நெளிவேன். கலைஞனுக்கு அவன் கலை பழகும்போது நேரம் பற்றி உணர்வு இருக்குமா? ஆனால் ‘பாரத ரத்னா’ வரை அவர் கவுரவம் அனுபவித்தாயிற்று. நான் அதிர்ஷ்டக் கட்டை உதயசங்கரை நினைத்துக் கொள்வேன்!

- புன்னகை படரும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

16 days ago

இலக்கியம்

20 days ago

இலக்கியம்

20 days ago

மேலும்