கந்தர்வன் கதை ஒன்றைத் தாமரை இதழில் 1970-ம் ஆண்டு வாசித்தேன். தமிழில் இப்போது ஆளுமைகளாக நிலைபெற்றிருக்கும் ஆறேழு எழுத்தாளர்கள் அப்போது எழுதத் தொடங்கியிருந்தார்கள். தொடர்ந்து வந்த ‘கண்ணதாசன்’ இத ழிலும் கந்தர்வனைப் பார்த்தேன். 1990-2000 காலகட்டத்தில், தமிழ் மொழியில் ஆகப் பெரிய கதை சொல்லியாகத் தன்னை ஸ்திரப் படுத்தியிருந்தார் கந்தர்வன்.
‘சிறுகதை’ என்ற கலை வடிவம், விளம்பலுக்கும் விரித்துரைப்புக்கும் வசனம் என்ற வகையில் இடம் கொடுப்பதுதான் எனினும், தேர்ந்த கலைஞர்கள் வார்த்தைகளை வீணடிப் பது இல்லை. ‘வானம் இடிக்கிறது’ என்று எழுதினால் கதை முடிவதற் குள் மழையால் கதை நனைந்திருக்க வேண்டும். கந்தர்வன் பல விஷயங் களைச் சொல்லாமல் உணர்த்திச் செல்பவர். ஒரு தேர்ந்த வார்த்தைக் கருமி அவர். கந்தர்வன் வாசகரோடு சேர்ந்து கதை எழுதுபவர். வாசகர்க்குச் சவுகரியமான சோபாவும் தனக்கு ஸ்டூலும் என்பதாக அவர் கவுரவிப்பவர். சாமானிய ஜனங்களோடு அவரும் முண்டாசு கட்டிக்கொண்டு நிற்பார். மத்தியதர மனிதர்களின் பாடுகளை அவர் அறிந்து எழுதியிருக்கிறார். அவர்களின் பாசாங்குகளை அவர் தெருவில் இழுத்துப் போடுவார். ஆக, கந்தர்வன் கதை எழுதுகிறார்.
கந்தர்வனின் 61 கதைகள் அடங்கிய ‘கந்தர்வன் கதைகள்’ என்ற தொகுப்புக்கு முன்னுரை எழுதிய ஜெயமோகன், ‘காளிப்புள்ளே’ என்ற கதையைச் சிகரமான கதை என்கிறார். உண்மை. அதைச் சற்று பார்ப்போம்:
கதைசொல்லி ‘இது என் பாட்டியின் கதை’ என்று கதையைத் தொடங்குகிறார். அம்மாவைப் பெற்றவள் அம்மாச்சி. அம்மாச்சியைப் பெற்றவள் பாட்டி. ஊர் முழுதும் இருந்த அவள் பிரயாத்துப் பெண்களில் அவளே அழகி யாக இருந்தாள். வலுமிக்கவள். அதை விடவும் யார் அழுதாலும் எதற்கு என்று கேட்காமல் தானும் அழு வாள், அழுபவளை விடவும் அதிக மாகவும் உண்மையாகவும். ‘காளி’ என்ற அவள் பெயரை அன்பு காரணமாகக் ‘காளிப்புள்ளே’ என்று சிறு பிள்ளை களைக் கூப்பிடுவதுபோல ஊர் கூப் பிட்டது. காளி, ஒரு கோடைக்காலத்தில் விதவையானாள். வளர்ந்த மகள், ஒரு மகன். மூன்றாம் நாளே, பால் செம்பை எடுத்துக்கொண்டு தொழுவத்துக்கு வந்துவிட்டாள். இன்னும் 30 நாள் முடியலையே என்றது சுற்றம். 'மகளைப் பார்க்கப் பாவமா இருக்கு. நான் எந்திருச்சி நடந்து திரிந்தாதான் என் மக அழுதறத நிறுத்துவா’ என்றாள் காளி. உதவிக்கு வந்த இளவட்டம் ஆம்பிளைகளைத் தள்ளி வைத்தாள். காடு கரை, மாடு கன்னு எல்லாம் அவர் கைப்பிடிக்குள் வந்து சேர்ந்தன.
ஊரில் பஞ்சம் வந்தது. வெள்ளாமை சுருங்கியது. நுங்கு வெட்டிக் குழந்தைகளின் பசி போக்கினாள். நாவல் பழம் பொறுக்கிக்கொண்டு வந்தாள். மேல வீட்டு வீரபத்ரன் ஒன்னா நம்பர் போக்கிரி. அவன் பார்வை சரியில்லை. அவன் மனைவி அண்மையில் இறந்து போயிருந்தாள். மூன்று பிள்ளைகள் தாயில்லாமல் தத்தளித்தன. ஒரு நாள் ஊர் பெரிய மனிதர் சகிதம் வந்த வீரபத்ரன் கொண்டுவந்த தாம்பாளத்தை அவனே காளிபுள்ளெயிடம் வலிந்து கொடுத்து, அவள் மகளைப் பெண் கேட்டான். காளி அழுது புரண்டாள். பெண்கள் துக்கம் கேட்க வந்தார்கள். என்றாலும் கல்யாணம் நடந்தது. அப்புறம், காளிப்புள்ளெ, மகள் வீட்டுக்கு உழைக்கத் தொடங்கினாள். மருமகனின் மூன்று பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்க வேண்டுமே. தன் பிழைப்பையும் பார்த்துக்கொண்டு மகள் வீட்டுக்கும் உழைத்தாள். பேத்தி பிறந்தாள். குழந்தைக்கும் உழைத்தாள். பேத்திக்கு ஒரு சூரன், பெரிய அழகன் வருவான் என்று எதிர்பார்த்தாள். ஆனால், பர்மாவில் இருந்து வந்த ஒரு சீக்காளிக்குப் பெண்ணைப் பேசி முடித்தான் அப்பன். மாப்பிள்ளை, மூல வியாதிக்காரன். உட்கார்ந்து எழுந்தால் வேட்டியில் ரத்தம் காணும்.
ஒரு மீன்பிடித் தகராறில் வீரபத்ரன் கொல்லப்படுகிறான். காளிப்புள்ளெ, தனியாக மகளோடு நின்று பலகாரம் சுட்டு விற்றாள். பேத்திக்கு ஊட்டினாள். பேத்தி புருஷனுக்கும் ஊட்டினாள். அவளுக்குப் பேரன் பிறக்க வேண்டும். ஆசை. கோயில் கோயிலாகச் சுற்றினாள். பேத்தி உண்டானாள். பேரன் (பூட்டன்) பிறந்தான். பேரன் தின்ன, முறுக்கும் அதிரசமும் சுட்டு அடுக்கினாள். மொச்சைப் பயிறு, தட்டைப் பயிறு அவித்து நெல்லுக்கு மாற்றாக விற்றாள்.
ஒரு நாள் டவுனில் இருந்து போட்டோ பிடிக்கிறவர் வந்தார். காளிபுள்ளெயிடம் பேத்தி சொன்னாள்:
‘‘நம்ம எல்லோரும் சேந்தாப்ல நின்னு ஒரு போட்டோ எடுக்கணும்.’’
பத்து நாள் கழித்து போட்டோ வந்தது. கையில் வாங்கிப் பார்த்த காளிப்புள்ளெ சொன்னாள்:
‘‘நான் காஞ்சு கருக்கழிஞ்சு இப்படியா இருக்கேன்?’’
பேத்தி கோபமாகச் சொன்னாள்:
‘‘போட்டோ வந்ததும் நீ மொதல்ல என் பூட்டனைப் பார்க்கலை. என்னைப் பாக்கலை. அம்மாவைப் பாக்கலை. ஒன்னைத்தான் பாத்தே.’’
காளிப்புள்ளெ சொன்னாள்:
‘‘இது என்னடி மாயமா இருக்கு. இந்தச் சனியனைக் கையில வாங்கியதும் கண்ணு என்னைத்தாண்டி பார்க்குது!’’
கந்தர்வன் எழுதிய கதையின் கடைசி வாக்கியத்தை அப்படியே கொடுத் திருக்கிறேன்.
காளிப்புள்ளெ, தனக்காக ஒரு கணமும் வாழ்ந்தது இல்லை. அவள் வியர்வை குடும்பத்தின் பொருட்டு. தேசத் தலைவர்கள் எவரின் தியாகத்துக்கும் கொஞ்சமும் குறையாதது அவள் தியாகம். ஒருபோதும் கண்ணாடியில் தன்னைப் பார்த்திருப்பாளா என்றால் இல்லை. அவள் கண்கள்... தன்னை, தனக்குள் இருக்கும் தன்னைப் பார்க்க முயன்றிருக்குமா என்றால் இல்லை. என்றாலும் குடும்பப் போட்டோ அவள் கையில் அளிக்கப்பட்டபோது, அவள் கவனம், பார்வை முதலில் பதிவது அவள் படத்தை நோக்கித்தான். ‘‘நான் இப்படியா இருக்கேன்?’’ என்றுதான் முதலில் சொல்கிறாள்.
அவளுக்கும் அவள்தான் முக்கியம். அவள்தான் அவளுக்கு உள்ளூர முக் கியம். தர்மமும் இதுதான். தரிசனமும் இதுதான்.
கந்தர்வனோடு அடிக்கடி பேசப்படும் கதை ‘சாசனம்’.
கதை ஒரு புளியமரம் பற்றியது. அதை ‘அப்பாவின் புளியமரம்’ என்று கதைசொல்லி அறிமுகப்படுத்துகிறார். அப்பாவுக்கு ஆறு கிராமங்களிலும் நிலம் உண்டு. அத்தனை நஞ்சை புஞ்சை களிலும் அப்பாவுக்கு இஷ்டமானது இந்தப் புளிய மரம்தான். அப்பாவின் சொத்துக்களில் எல்லாம் தாத்தா பேஷ காராக இருந்த காலத்தில் மகாராஜா வுக்கு நாக்கு ருசியாகச் சமைத்துப் போட்டு வளைத்ததுதான். சாசனங்கள் இருந்தன. அவை எல்லாம் இரும்புப் பெட்டியில் பாதுகாப்பாக இருக்கின்றன. அந்தப் புளியமரம் அப்பாவின் பெருமை! அதை ‘கொறட்டுப் புளி’ என்று விநோதமான வார்தைப் பிரயோகத்தால் குறிப்பிடுவார். அதன் அர்த்தம் கொறவீட்டுப் புளி என்பதாகும். அதை அப்பாவால் முழுமையாகச் சொல்ல முடியாது. அந்தப் பகுதியில் இருக்கும் ஒரு கிழவி, மகளோடு வாழ்ந்து வந்தாள். அந்தப் பெண், தாத்தா ஜாடையில் இருந்தாள்.
அப்பா ஆட்களைக் கூட்டிக் கொண்டு புளி உலுக்கப் போவார். உதிரும் புளி, ஆண்டுக்கு வரும். அப்போது அப்பா, காலால் கொஞ்சம் புளி ஒதுக்குவார். அதை அந்தக் கிழவி எடுத்துக் கொள்ளும்.
எல்லாம் கிரமப்படித்தான் நடந்தது.
ஒரு வருஷம் எல்லாம் மாறியது. மரத்துக்குக் கீழே சுத்தப்படுத்தப்படாத பன்றிக் கழிவுகள். அங்கே கயிற்றுக் கட்டில் போட்டு கிழவி அமர்ந்திருந்தாள். பெண், குழந்தைககளோடும் புருஷனோ டும் நின்றாள்.
அப்பா கடுமையாக ‘‘என்ன இதெல்லாம்?'' என்றார்.
அந்தப் பெண் ‘‘இனிமேற்பட்டு இந்த மரத்தை நான்தான் உலுக்குவேன். இதிலே எனக்கும் பாத்தியதை உண்டு'' என்று பேசத் தொடங்கியது. அப்பாவுக் குக் கால் நடுங்கியது. உதடு கோணி யது.
‘‘போதும் போதும் பேச்சை நிறுத்து...'' என்று அதற்குப் அப்பால் அந்தப் பொம்பிளை பேசப் போவதைப் பதறிப்போய் நிறுத்தினார். கூட்டி வந்த ஆண்களைத் திருப்பி அழைத் துக் கொண்டு தலையைச் சாய்த் துக் குனிந்து நடந்து வீடு வந்து சேர்ந்தார்.
சாசனங்களை அப்பா ஆராய வில்லை. ஏன் எனில் நிலமும் மரமும் ‘அவர்களுக்குச் சொந்தம்’ என்பது அப்பாவுக்குத் தெரியும். பணம், அதிகாரம், செல்வாக்கு என்ப தல்லாமல், தனக்குச் சொந்தம் இல்லாத பொருளைத்தான் அப்பாவும், ஊர், நாட்டு, தேசப் பெரிய மனிதர்கள் ஆண்டு கொண்டிருக்கிறார்கள் என் கிறார் கந்தர்வன்.
காலம் மாறிவிட்டது. அவர்கள் உண்மையான உரிமையாளர்கள். பேசத் தொடங்கிவிட்டார்கள் என்று கந்தர்வன் காலத்தின் குரலாகப் பேசுகிறார்.
கந்தர்வன் 1944-ல் பிறந்து 2004-ல் மறைந்தார். 60 ஆண்டுகால வாழ்க்கையில் 62 கதைகள் எழுதினார். ‘கந்தர்வன் கதைகள்’ என்ற பெயரில் பவா செல்லதுரை தொகுத்து ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இறந்துபோன ஒரு பெரிய எழுத்தாளரின் தொகுப்பு எப்படி வரவேண்டும் என்கிற முன் மாதிரியை இத்தொகுப்பே உருவாக்கி இருக்கிறது.
கந்தர்வன்
- நதி நகரும்…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago