இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையினும் வலி நிறைந்தது, வழக்கறிஞர் சன்னது பறிபோய் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவரது விடுதலைபெற்ற வாழ்க்கை. துயர் நிறைந்திருந்த இக்காலக்கட்டத்தில் அவருக்குப் பெருந்துணையாய் நின்றவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே.
தென்னாப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்திருந்ததால் அவர் வழியாகவும் பண உதவி செய்திருந்தனர். ஆனால், காந்தி அந்தப் பணத்தை வ.உ.சி.க்குத் தராமல் ஏமாற்றிவிட்டார் என்கிற தவறான தகவலின் அடிப்படையில், ஒரு விவாதம் தமிழ்ச் சூழலில் நீண்ட காலமாக நிகழ்ந்துகொண்டிருக்கிறது. யாராவது பணம் தராமல் ஏமாற்றினால், அந்தப் பணத்தை காந்திக் கணக்கு என்று சொல்லி, இவ்விவாதத்துடன் தொடர்புபடுத்திப் பேசுவதையும் காண முடிகிறது.
அவரவர் வாய்க்கு வந்த தொகையையும் கதையையும் சொல்லி வளர்த்தெடுக்கும் இவ்விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நூல்தான் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதிய ‘வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா’ நூல். காந்திக்கும் வ.உ.சி.க்கும் இடையே நிகழ்ந்த கடிதப் போக்குவரத்தை ஆதாரமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்நூலுக்கான தேடல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது எனலாம்.
வ.உ.சி. வழியாகவே ஆய்வுலகில் நுழைந்த சலபதி, 1984-லேயே வ.உ.சி.யின் கடிதங்களைத் தேடித் தொகுத்து நூலாக வெளியிட்டவர். இவ்விவாதம் தொடர்பாகவும் ஏற்கெனவே ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிலும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிலும் விரிவான கட்டுரைகளை எழுதியிருப்பினும், தற்போது வெளியிட்டுள்ள இந்நூல், இவ்விவாதத்துக்கு வித்திட்ட பின்னணித் தகவல்களுடன் காந்தி-வ.உ.சி. கடிதங்களையும் பிற ஆவணங்களையும் பின்னிணைப்பாகக் கொண்டு, இதுவரை தமிழ்ச் சமூகம் அறியாதிருந்த இரு பேராளுமைகளுக்கிடையே இருந்த உறவில் ஒளிபாய்ச்சியுள்ளது.
நூறு பெருந்தொகுதிகளாக வெளிவந்துள்ள காந்தி தொகுப்பு நூல்களில் ஒரு இடத்தில்கூட வ.உ.சி.யின் பெயர் சுட்டப்பெறவில்லை என்பதை மிகுந்த ஆதங்கத்துடன் பதிவுசெய்யும் சலபதி, இருவருக்கும் இடையே நெடும் கடிதப் போக்குவரத்து நிகழ்ந்துள்ளதை முதன்முறையாக இந்நூலில் வெளிச்சப்படுத்தியுள்ளார். காந்திக்கு வ.உ.சி. எழுதிய ஒரு கடிதம் மட்டுமே, டெல்லி காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் காணக்கிடைக்க வ.உ.சி. எழுதிய மேலும் ஏழு கரட்டு வடிவக் கடிதங்களையும் வ.உ.சி.க்கு காந்தி எழுதிய 11 மூலக் கடிதங்களையும் தேடிக் கண்டறிந்து, மொத்தம் 19 கடிதங்களின் துணைகொண்டு இவ்விவாதத்தின் உண்மைத் தன்மையை அவர் ஆய்ந்துள்ளார்.
சுதேசி இயக்கத்தின் தோற்றத்திலிருந்து தொடங்கி, வ.உ.சி. கப்பல் கம்பெனியை நிறுவியது, சிறை சென்றது, தென்னாப்பிரிக்காவில் தமிழர் குடியேறியது, அவர்களுக்கும் வ.உ.சி.க்குமான தொடர்பு, வ.உ.சி.யின் துணைவியார் மீனாட்சி அம்மாளின் ஆளுமை, தென்னாப்பிரிக்கத் தமிழர்கள் செய்த உதவிகள் என்று இவ்விவாதத்தைப் புரிந்துகொள்வதற்கான பின்புலத்தை சலபதி நிரல்பட விளக்கியுள்ளார். இறுதிப் பகுதியில் தென்னாப்பிரிக்கத் தமிழர்களின் நிதி தொடர்பாக இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடலையும் அந்நிதியை காந்தி வ.உ.சி.க்கு அனுப்ப, வ.உ.சி. அதனைப் பெற்றுக்கொண்ட தகவலையும் சலபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
வ.உ.சி.க்குப் பணம் கொடுத்தவர்கள் பற்றிய தகவல்களை அறியும் வரை அப்பணத்தை விடுவிக்காமல் வைத்திருந்த காந்தியின் நிலைப்பாட்டை நம்மால் புரிந்துகொள்ள முடிந்தாலும், வறுமை தன் குடும்பத்தை வாட்டியெடுத்த நிலையில், அத்தொகையில் சிறிதளவாவது அனுப்பி வைக்கும்படி தொடர்ந்து மன்றாடிய வ.உ.சி.யின் உணர்ச்சி மீதூரும் கடிதங்களைக் கண்கலங்காமல் ஒருவரும் கடந்துவிட முடியாது.
1915 ஏப்ரலில் காந்தி சென்னை வந்திருந்தபோது, சென்ட்ரல் ரயில் நிலையத்திலேயே இருவருக்குமான முதல் சந்திப்பு நிகழ்ந்ததற்கு வேறு எங்கும் பதிவில்லாத நிலையில், அந்தச் சந்திப்புக்குச் சான்று பகரும் வ.உ.சி.யின் கடிதம், காந்தி வ.உ.சி.க்குத் தமிழில் எழுதிய கடிதம், அதைக் கண்டதும் தன் வறுமை நிலையைக் கூட மறந்து, வ.உ.சி. மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கடிதம், காந்தியை அந்தரங்கமாகச் சந்திக்க விரும்பிய வ.உ.சி.யின் கடிதம், காந்தி ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க, அந்த நேரத்தில் தன்னால் வர இயலாது என்பதற்கு வ.உ.சி. காரணம் தெரிவித்து எழுதிய நெஞ்சுருக்கும் கடிதம் என்று ஒவ்வொரு கடிதமும் இரு வேறு ஆளுமைகளின் உணர்ச்சிப் பெருக்கை நம் கண்முன் நிறுத்துகின்றது
இந்நூலின் மற்றுமொரு சிறப்பம்சம், வ.உ.சி.யின் மனைவி மீனாட்சி அம்மாளின் இதுவரை அறியப்படாத முகம். உள்ள உறுதியும் போராட்டக் குணமும் தெளிந்த ஞானமும் கொண்ட மீனாட்சி அம்மாளின் தனித்தன்மையான ஆளுமையை முதன்முறையாக இந்நூல் வெளிக்கொண்டுவந்திருக்கிறது. வ.உ.சி. சிறை சென்றதும், வருமானமற்ற நிலையில் இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரத்துக்கும் வ.உசி.யின் வழக்குகளைச் சந்திப்பதற்கும் மீனாட்சி அம்மாள் அனுபவித்த துயரங்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் சலபதியின் எழுத்து கண்ணீரை வரவழைக்கக்கூடியது. லட்சக்கணக்கில் பணம் போட்டு கப்பல் வாங்கிய வ.உ.சி.யின் மனைவி, ‘எனது மானம் கெடாத வகையில் கூலி வேலை செய்யவும் தயாராக இருக்கிறேன்’ என்று தன் மாமனாருக்கு எழுதிய கடிதம் வாசிப்பவர்களை உலுக்கியெடுக்கிறது. மீனாட்சி அம்மாள் தன் உறவுகளுக்கு எழுதிய 10 கடிதங்களை மட்டுமே வைத்து, அவரது ஆளுமைச் சித்திரத்தைச் சலபதி படைத்திருக்கும் திறம் வியக்க வைக்கிறது.
ஆவணத்தன்மை கொண்டதாக இருப்பினும் புனைவுக்கான விறுவிறுப்புடன் எழுதப்பட்டுள்ள இந்நூலின் முதற்பகுதி காந்தி-வ.உ.சி. விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க, பின்னிணைப்புகளைக் கொண்ட இறுதிப் பகுதியோ பல புதிய ஆய்வுகளுக்கான தொடக்கமாக அமைந்திருக்கிறது.
- ஜெ.சுடர்விழி, உதவிப் பேராசிரியர், ‘பன்முக ஆளுமை மு.அருணாசலம்’ முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: sudaroviya@gmail.com
வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா
ஆ.இரா.வேங்கடாசலபதி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூ.140
தொடர்புக்கு: 91 4652 278525
முக்கிய செய்திகள்
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
11 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
18 days ago
இலக்கியம்
21 days ago
இலக்கியம்
21 days ago