சிற்றிதழ்தாசன்

By மு.முருகேஷ்

இலக்கியம், இசை, இதழியல் துறைகளுக்கும் புதுக்கோட்டைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. 1947-ல் புதுக்கோட்டையிலிருந்து முருகு.சுப்பிரமணியன், அரு.பெரியண்ணன் இணைந்து ‘பொன்னி’ எனும் மாத இதழை நடத்தினார்கள். 1953 வரை வெளிவந்த இந்த இதழ் பாரதிதாசன் கவிதைப் பரம்பரையை அறிமுகப்படுத்தியது. இதே காலகட்டத்தில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தலைவன்’, ‘குயில்’ மாத இதழ்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. ‘தலைவன்’ இதழின் துணையாசிரியராக உவமைக்கவிஞர் சுரதா பணியாற்றினார். 1953-ல் ‘டிங்டாங்’ எனும் சிறார் இதழும் வெளிவந்து பாராட்டைப் பெற்றது. அந்த தொடர் மரபின் நீட்சியில் வெளிவந்த இதழே எஸ்.விஜயகுமார் நடத்திய ‘ஏழைதாசன்’.

1980-களின் இறுதியில் நண்பர்கள் சிலரோடு சேர்ந்து, நான் நடத்திய ‘விடியல்’ எனும் உருட்டச்சு (ரோனியோ) இதழுக்கு அழகான, முத்துமுத்தான கையெழுத்தில் கவிதைகள் வரும். அந்தக் கவிதைகளை எழுதி அனுப்பியவர் எஸ்.விஜயகுமார். புதுக்கோட்டையிலுள்ள அடப்பன்வயல் எனும் பகுதியில் பிறந்தவர். பள்ளியில் படிக்கிற காலத்திலேயே கவிதைகளை எழுதிய விஜயகுமார், தமிழில் ஹைக்கூ அறிமுகமான தொடக்கக் காலத்திலேயே காட்சியழகு மிக்க ஹைக்கூ கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டார்.

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவரான விஜயகுமார், தீராத புத்தகக் காதலராகவும் இருந்தார். திருக்கோகர்ணம் அரசுக் கிளை நூலகத்தில் அடிக்கடி அவரைப் பார்க்கலாம். 90-களில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த அனைத்துச் சிற்றிதழ்களிலும் விஜயகுமாரின் கவிதைகள் இடம்பெற்றிருக்கும்.

விஜயகுமார், தனது நண்பரோடு இணைந்து 1992-ல் ‘தமிழன்னை’ என்றொரு இதழைத் தொடங்கினார். பிறகு, தனியாக ‘நமது தமிழன்னை’ எனும் இதழையும் நடத்தினார். இந்த இதழே 1995-ல் ‘ஏழைதாசன்’ இதழாகப் பதிவுபெற்று வெளிவரத் தொடங்கியது. ‘ஏழைதாசன்’ இதழைத் தொடங்கிய காலந்தொட்டு, கடந்த 27 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து 323 இதழ்களை அவர் வெளிக்கொண்டுவந்தது சாதாரணமான விஷயமில்லை.

‘ஏழைதாசன்’ இதழையே தனது வாழ்க்கையாக வரித்துக்கொண்டு, வேறு பணிகள் எதற்கும் செல்லாமல் இதழியல் பணியில் தன்னை முழுமையாய் விஜயகுமார் கரைத்துக்கொண்டார். உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளோடும், தமிழ்ப் படைப்பாளிகளோடும் நல்ல நட்புறவை வைத்திருந்த விஜயகுமார், ‘உலகத் தமிழர்களின் ஒப்பற்ற குரல்’ எனும் சிறப்பு வரிகளோடு ‘ஏழைதாசன்’ இதழை வெளியிட்டுவந்தார்.

ஹைக்கூ கவிதைகள் இன்றைக்குத் தமிழில் பரவலான அறிமுகத்தையும் வரவேற்பையும் பெற்றிருப்பதில் ‘ஏழைதாசன்’ இதழுக்கும் முக்கிய பங்குண்டு. ‘ஏழைதாசன்’ இதழ் 50 ஹைக்கூ கவிதைகளோடு 1996-ல் தனது முதல் ஹைக்கூ சிறப்பிதழை வெளியிட்டது. பிறகு, ‘ஹைக்கூ-100’ (நவம்பர்-1999), ‘ஐக்கூ–200’ (மே-ஜூன்–2001), ‘துளிப்பா சிறப்பிதழ்’ (நவம்பர்-2013), ‘துளிப்பா நூற்றாண்டுச் சிறப்பிதழ்’ (ஏப்ரல்-2017) என ஐந்து ஹைக்கூ சிறப்பிதழ்களை வெளியிட்ட பெருமை தமிழில் வேறெந்த இதழுக்கும் இல்லையென்றே சொல்லலாம். சர்வதேச அளவில் 500 கவிஞர்களின் கவிதைகளைத் தொகுத்து, ‘அய்க்கூ 500’ எனும் தொகுப்பு நூலை டிசம்பர் – 2021-ல் விஜயகுமார் வெளியிட்டார். தானொரு கவிஞராக இருந்தும், தனது கவிதைகளை நூலாக்காமல் பலரின் படைப்புகளையும் நூலாக்கிப் பார்க்கும் மனம் வாய்த்தவராக இருந்தார்.

தமிழ் மருத்துவ முறைகளில் ஈடுபாடு கொண்ட எஸ்.விஜயகுமார், சித்த மருத்துவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததோடு, சித்த மருத்துவர்களின் தொடர் செயல்பாடுகளைப் பரவலாக அறிமுகம் செய்யும் களமாகவும் ‘ஏழைதாசன்’ இதழை வெளிக்கொண்டுவந்தார். மூத்த தமிழர்கள் பலரின் நேர்காணல்களையும், பிற நாடுகளில் நடைபெறும் தமிழ் அமைப்புகளின் விழாக்கள் பற்றிய செய்திகளையும், கலை இலக்கிய அமைப்புகள் நடத்தும் உலகு தழுவிய போட்டிகள் குறித்த விரிவான செய்திகளையும் சிறப்பாக வெளியிட்டுவந்தார்.

கவிஞர் மித்ரா எழுதிய ஹைக்கூ தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். சிறப்பான தொடர் இதழியல் பணிகளுக்காகப் பல்வேறு அமைப்புகளின் பாராட்டுகளையும் விருதுகளையும் ‘ஏழைதாசன்’ இதழுக்காக விஜயகுமார் பெற்றார். அவ்வப்போது ‘ஏழைதாசன்’ எனும் புனைபெயரிலும் விஜயகுமார் கவிதைகளை எழுதிவந்தார்.

கடந்த பிப்ரவரி 23 அன்று சென்னையில் ‘பொதிகை மின்னல்’ இதழ் வழங்கிய சிறந்த சிற்றிதழுக்கான பரிசைப் பெறவும் வர இயலாத நிலையில், பிப்ரவரி 26 அன்று காலை ‘ஏழைதாசன்’ இதழாசிரியர் எஸ்.விஜயகுமார், உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். ‘ஏழைதாசன்’ எஸ்.விஜயகுமார் என்றென்றும் சிற்றிதழ்தாசனாக நினைவுகூரப்படுவார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

15 hours ago

இலக்கியம்

15 hours ago

இலக்கியம்

15 hours ago

இலக்கியம்

15 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

மேலும்