நவீன கவிதை, பொன்மொழி என்ற தனித்துவத்தைக் கண்டடைந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மிகுந்த காத்திரமாக வெளிப்பட்ட கவிஞர் களில் ஒருவர் சல்மா. இவரது புகழ் பெற்ற நாவல் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’, தமிழ் வசனப் படைப்பில் புதிய திறப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரு டைய சிறுகதைகளின் தொகுப்பு ‘சாபம்’ என்ற தலைப்பில் 11 கதைகளைக் கொண்டதாக, ‘காலச் சுவடு’ பதிப்பகத் தால் வெளியிடப்பட்டிருக்கிறது.
இத்தொகுப்பில் உள்ள கதைகள், பெரும்பாலும் பெண்கள் பற்றியது. எப்போதும் பதற்றத்துடன் வைக்கப்பட்டு, மிகுந்த தயக்கத்துடன் அடுத்த அடி எடுத்து வைக்கலாமா, வேண்டாமா என்கிற தடுமாற்றத்துடன் இருப்பவர்கள். அவர்கள் வாழும் அதாவது உயிர் வாழும் அறைகளுக்கு ஜன்னல் இருப்பதில்லை. நாற்புறமும் கட்டி எழுப்பப்பட்ட, காரை பெயர்ந்து விழும் சுவர்களும் தரையும் தவிர, ஆகாயம் அவர்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. என்றாலும் என்ன, ஆகாயத்தில் புல் முளைப்பதில்லையே. அப்பெண்கள், தங்களுக்குக் கிடைத்த தரையில் தாங்கள் வாழ்ந்த சுவடைத் தங்கள் பெருமூச்சுகளால் எழுதிச் செல்கிறார்கள்.
சல்மாவின் சொற்கள், அர்த்தங்களை முழுமையாக ஏந்திக்கொண்டு வருவ தோடு, பொருளையும் தாண்டி நிற்பவை. மனதின் புதிர்களை எழுதிச் செல்லும் அவர் கதைகளுக்குச் சரியான சொற்கள் அவருக்குக் கிடைத்துவிடுகின்றன. ஒரு வர்ணனை என்ற அளவில் சுருங் காமல், அதைப் பாத்திரங்களின் மனநிலையாக மாற்றித் தரும் ஓர் உதாரணம் இது:
மங்களான மஞ்சள் ஒளி அறையில் பரவி இருக்க, வழிதவறிப் பறந்த ஈ ஒன்று தட்டுத் தடுமாறி டேபிளைச் சுற்றித் திரிந்து கொண்டிருந்தது. தண்ணீர்ச் செம்பின் விளிம்பில் ஒரு நொடி அமர்ந்துவிட்டு மறுபடி எழுந்து, ஒரு சுற்றுச் சுற்றிச் சாம்பார் கிண்ணத்தை நெருங்கி, அதன் விளிம்பில் அமர எத்தனித்துத் தவறிப்போய்க் கொதிக் கும் சாம்பாருக்குள்ளேயே விழுந்து அதன் சூட்டில் தத்தளித்து பின் மிதந் தது. இவள் பார்த்துக் கொண்டிருந்தாள். தொலைக்காட்சியில் லயித்துச் சாம் பாரை எடுத்துத் தன் சாதத்தில் போட்டு அவன் பிசைந்து கொண்டிருந்தான்.
‘பொறி’ என்றொரு கதை.
‘கதவு தட்டப்படுகிறது. அவள் விழித்துக்கொண்டாள். எழுந்து சென்று கதவைத் திறக்க மனமின்றி, உட்கார்ந்தே இருக்கிறாள். தட்டிவிட்டுப் போய்விடக் கூடாதா என்ற ஏக்கம். கதவு தட்டப்படும் ஓசை அதிகமாகிறது. தட்டும் கை அவளை நெருங்கி வருகிறதாக உணர்கிறாள்.
திறக்கும் எண்ணம் துளியுமற்ற நிலையில் கதவையே வெறிக்கிறேன். கெட்ட செய்தியாக இருக்கக்கூடும்.
அவன்தான் எழுந்து தூக்கம் கலைந்த கோபத்தில் கத்திக்கொண்டே கதவைத் திறக்கச் செல்கிறான். அவனுக்கு வேறெ தையும்விட தூக்கம்தான் முக்கியம்.
அவனோடுதான் அவள் வாழ்கிறாள். அப்படிச் சொல்வது சரியாக இருக்குமா? இருக்காது. இருக்கிறாள். அப்புறம் கதவை எப்படித் திறப்பது? திறக்கக் கூடியவனாக, கூடியதாக எதுவும் இல்லை. மட்டுமல்லாமல் கெட்டதாக ஏதாவது வந்து சேர்ந்தால்…’ சல்மாவின் வசனம் இப்படியாகக் கவிதைக்கும் வசனத்துக்கும் இடையில் இருக்கிறது.
‘சாபம்’ என்று கதை. தொகுப்பின் சிறந்த கதைகளுள் ஒன்று இது.
மாலை மயங்கும் நேரத்தில் கண் விழிக்கிறாள் ஷமீம். ரஷீதா, காலையில் போனவள் இன்னும் வீடு திரும்பாதது மனதை உறுத்துகிறது. யார் வீட்டில் மோருக்குக் கையேந்தி நிற்கிறாளோ? ராதா ராதியின் (தந்தைவழி தாத்தா மற்றும் பாட்டி) புகைப்படம் கண்ணில் படுகிறது. அவர்களைப் பற்றிப் படர்ந்த கொடிய சாபம் நினைவுக்கு வருகிறது. எப்போதும் ராதா, தென்னந்தோப்பில்தான் வாசம். இருண்டு மழை பெய்த அந்த மாலையும் இருட்டும் ஷமீமின் நினைவுக்கு வருகிறது. அந்த மழையில் மின்னல் வெளிச்சத்தில் இருவர் மற்றும் ஒரு இடுப்புக் குழந்தையும் அவரை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். மழைக்கு அடைக்கலம் கேட்டு வந்தார்கள். தாத்தா, தோட்டத்துக் குடிசையில் தங்கிவிட்டுப் போக இடம் கொடுத்தார். கருணையா? இல்லை. அந்தப் பெண் அணிந்திருந்த நகைகள். ‘‘எங்களை விட்டுடுங்க…’’ என்று அந்தப் பெண் கதறியது கேட்டுக்கொண்டே இருந்தது.
விடிந்தபோது அந்த மூன்று பேரும் கிணற்றை அடைத்துக்கொண்டு மிதந்ததை ஊர் பார்த்தது. கனி சச்சா மனைவியின் கழுத்தை நெரித்துக் கொன்றார். (சாபம்?). ரஷீதாவுக்குத் தாய்ப் பாசமாவது கிடைத்திருக்கும். ரஷீதா, குறைந்தபட்சம் மோர் யாசகம் கேட்டலைய வேண்டி இருந்திருக்காது. ஜீனத்தும் வீட்டுக்கு வீடு மோர் கேட்டு அலைந்தாள். ஏன், பக்கத்து வீட்டுப் பெண்ணிடம் ஷமீம் கேட்டாள். ‘‘பாப்பார வீட்டுப் பொண்ணைக் கொன்னா இல்லையா, உங்க ராதா. அவ பாவம்தான்’’ என்றாள் பக்கத்து வீட்டுப் பெண். ஒரு பெண் ஜீனத். அவளுக்கும் நாற்பத்தைந்து வயசும், நாலு குழந்தைகளுக்கும் தந்தையுமான ஒருவனுக்கும் கல்யாணம் நடந்தது. பாதி இரவின்போது அவன் கேட்டான். ‘‘உன் வயசு என்ன?’’ அவள் ‘‘27’’ என்றாள். ’’இது முதல் தடவை மாதிரி தெரியலையே. வலிக்கவே இல்லையே உனக்கு’’ என்றான் கணவன். விடியும்போது தலைவிரி கோலமும், வளையல்களை உடைத்துக் கொண்டு அமர்ந்திருந்த மணப்பெண்ணை உலகம் பார்த்தது. அந்த வீட்டில் எல்லோரும் கல்யாணம் வரை நன்றாகவும், அப்புறம் கிறுக்குப் பிடிக்கும் பெண்களை உலகம் பார்த்தது. ‘சாபம்’ என்பது இந்த உக்ரமான கதையின் தலைப்பு.
அந்த மக்களை ‘சிறுபான்மை மக்கள்’ என்கிறார்கள் மற்றவர்கள். என்றால், ஒரு நாகரிக பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையர் மேல் எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும்? அன்பும் அரவணைப்பும் காட்டப்பட வேண்டும். பசுமையும், சவுகரியமும் நோக்கிய வாழ்க்கைக்கு அவர்களைக் கொண்டு செல்ல, எத்தனை முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்? தாய், குழந்தைமேல் காட்டும் அக்கறையை அல்லவா பிறர் அவர்கள்பால் காட்டி இருக்க வேண்டும்?
கடவுளின் பிறந்த இடத்தை மசூதியில் தேடுகிற வரலாற்று மேதைகளை அல்லவா பிறப்பித்திருக்கிறது பாரதத் திருநாடு.
மனித இயல்பை மிக அழகாகவும் நுணுக்கமாகவும் சொல்ல முடிகிறது சல்மாவால். அவருடைய ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ நாவல் பெற்ற கலை வெற்றியை அவர் சிறு கதைகளிலும் பெறுகிறார்.
…அவள் பக்கத்து வீட்டுப் பையன் மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள். அவனும் ‘அக்கா அக்கா’ என்று கரைவான். திடுமென அவன் ஒரு விபத்தில் மாண்டுபோக, அவள் துவண்டு போனாள். இடைப்பட்ட காலத்தில் இரவு நேரங்களில் பெயர் சொல்லாத ஒரு தொலைபேசி அழைப்பு வந்துகொண்டே இருக்கிறது. யாரோ ஒரு பொறுக்கிதான். அண்மையில் புதுவிதமாக அவள் தொலைபேசியை எடுத்தவுடன் ஒரு மலையாளப் பெண் பாடிக் கொண்டிருந்தாள். அவள் அறியாமல் அவள் பாட்டை இவளுக்குக் கேட்கச் செய்கிறான், அந்த நம்பிக்கைத் துரோகி. இறந்துபோனவனின் மனைவியிடம் துக்கம் கேட்கப் போகிறான் இவள். பேசிக்கொண்டிருந்த மனைவி, போகிறபோக்கில், ‘‘எல்லாம் சரியாத்தான் இருந்ததுக்கா. அந்த மலையாளிச்சியோடு இவுர் தொடர்பு கொள்ற வரைக்கும்’’ என்கிறாள்.
‘‘என்ன மலையாளிச்சியா?’’ என்று அதிர்கிறாள் இவள். அவன் இறந்து போன அன்று தொலைபேசி வரவில்லை என்பது உறைத்தது. அப்படியானால் ‘அக்கா அக்கா’ என்று அவனது அழைப்பு…
அவளது வீட்டுக்குள் அந்தகாரம் புகுந்துகொண்டதுபோல் இருந்தது அவளுக்கு. கதையின் தலைப்பு ‘இழப்பு’.
சாத்தப்பட்ட கதவுகளுக்குள் வாசலுக்கும் பின்கட்டுக்கும் இடைப்பட்ட பிரதேசத்தில் நடந்து கொண்டிருக்கும் பெண்களின் காலடிச் சுவடுகள், மிக அழுத்தமாகப் பதிவுபெற்று, அவர்களின் தயக்கமும் அச்சமும் கொண்ட குரல்கள் மிகவும் துல்லியமாக வாசகர் கேட்கும்படி எழுதும் பெரும் கலை சல்மாவுக்கு வாய்த்திருக்கிறது.
‘இரவு கவியத் தொடங்கியதும் ஜன்னத்திற்கு இரவுக்கு என்ன சமைக் கலாம் என்னும் யோசனை வந்தது. இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படிக் கஷ்டப்படப் போகிறோம்...’ என்று வரும் வரிகளுக்கும், ‘மிக மிருதுவான அணைப்பில் கழுத்தில் பதிந்த முத்தத்தில் கிறங்கித் தவித்தாள்’ என்ற வரிக்கும், ‘உடல் சார்ந்த பயங்களும் தயக்கங்களும், மறைந்த மேலான சுதந்திரத்தை அடைந்திருந்தாள். பயத்தின் கரங்களிடமிருந்து விடுபட்டுப் பரவசத்தின் எல்லைகளுக்குள் பய ணிக்க ஆரம்பித்தாள்’ என்ற வரிக்கும் இடைப்பட்ட வாழ்க்கையை எந்த மறைப்பும் இல்லாமல், கதைகள் என்ற வடிவம் கோருகிற, அனுமதிக்கிற பிரதேசத்தை எழுதி நம் மனசுக்கு மிக நெருக்கமாகக் கொண்டுவந்து காட்சிப்படுத்துகிறார் சல்மா.
- நதி நகரும்…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
6 days ago