கிட்டத்தட்ட 100 ஆண்டு காலத் தமிழ்ச் சிறுகதை எழுத்துகளைப் பிரதிநிதித்துவம் செய்யும்வண்ணம் ‘தி தமிழ் ஸ்டோரி’ தொகுப்பு நூல் ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது. ட்ராங்குபார் பதிப்பகம் இத்தொகுப்பை வெளியிட்டுள்ளது. செம்மொழித் தமிழின் வரலாற்றில் இந்தத் தொகைநூல் ஒரு மைல்கல். சிறுபத்திரிகை, பெரும்பத்திரிகை, திராவிட இயக்கம், முற்போக்கு இலக்கியம், தலித் இலக்கியம், பெண் எழுத்து என அனைத்து முனைகளிலிருந்தும் கடந்த நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் வகையில் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இதுவே இதன் முக்கியத்துவம். இக்கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்பவர் சுபஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி. ஆங்கிலப் பதிப்புத் துறையில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவருபவர் இவர். ‘இந்தியன் ரெவ்யூ ஆப் புக்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். நவீனத் தமிழ் வாழ்க்கை, சிறுகதை என்னும் வடிவம் வழியாகக் காலம் காலமாகத் துலக்கம் பெற்றதன் பின்னணியில் இத்தொகுப்பை ஆறு ஆண்டு காலம் உழைத்து உருவாக்கியுள்ளார் தொகுப்பாசிரியர் திலீப்குமார். இவர் தமிழின் குறிப்பிடத்தகுந்த சிறுகதையாசிரியர்களில் ஒருவர்.
சென்ற நூற்றாண்டில் தமிழ் வாழ்க்கை அடைந்த சலனங்கள், பார்த்த மாறுதல்கள், தாக்கத்துக்குள்ளான இயக்கங்கள் அனைத்தையும் பிரதிபலிப்பதால் ‘தி தமிழ் ஸ்டோரி’ முன்னுதாரணமில்லாத ஆவணமாகிறது. இந்தத் தொகுப்பு குறித்து திலீப்குமாரிடம் பேசியதிலிருந்து சில பகுதிகள்:
இந்த ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பை உருவாக்கியதன் நோக்கம் என்ன?
மேற்கிலிருந்து நாம் வரித்துக்கொண்ட இலக்கிய வடிவங்களில் நமது அதிகபட்ச ஈடுபாடும் சாதனையும் சிறுகதைத் துறையில்தான் காணப்படுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் இந்த வரலாற்றையும் வளர்ச்சியையும் ஆங்கில வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் திட்டமிடப்பட்ட விரிவான தொகுப்பு இது. 1913-2000 வரை தமிழ்ச் சிறுகதைத் துறையில் பல்வேறு அழகியல், கருத்து நிலைகளிலிருந்து வினையாற்றிய ஆளுமைகளின் 88 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக, ஆங்கில வாசகர்களிடையேயும் மற்ற இந்திய மொழியினரிடையேயும் தமிழின் அதிகபட்ச சாதனைகள் சங்க இலக்கியத்தில்தான் நிகழ்ந்துள்ளன என்ற கருத்து நிலவுகிறது. விளைவாக, தமிழின் தற்கால இலக்கியத்தின் மேன்மை உரிய வகையில் அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்தத் தொகுப்பு தமிழ்ச் சிறுகதையின் வரலாற்றைக் கூறுவதோடு, நூறாண்டு தமிழ் வாழ்க்கையின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தையும் முன்வைக்கிறது. கூடவே, தமிழிலும் ஒரு காத்திரமான நவீன இலக்கிய மரபு உள்ளது என்பதையும் நிறுவ முற்படுகிறது.
கதைகளைத் தேர்வு செய்வதில் என்னென்ன அடிப்படைகளை வைத்திருந்தீர்கள்?
தமிழ்ச் சிறுகதையின் பல்வேறு போக்குகளையும் கோணங்களையும் பிரதிபலிக்க வேண்டும் என்ற நோக்கில், முக்கியமான மூன்று அடிப்படைகளை ஆதாரமாக வைத்துக்கொண்டோம்.
வலுவான கதையம்சம்: மொழிபெயர்ப்பின்போது இருவேறு மொழிகளின் நுட்பங்களுக்கிடையேயான முரண்களை மீறியும், ஒரு தரமான இலக்கிய அனுபவத்தை இது உறுதி செய்யும்.
தமிழ் வாழ்க்கை: கதைகள் தமிழ் வாழ்க்கையின் பல்வேறு சமூக, தொழில், பண்பாட்டுப் பின்னணிகளைக் கொண்டவையாக இருக்க வேண்டும். ஒரு நூற்றாண்டு தமிழ் வாழ்க்கையின் மாறிவந்துள்ள மதிப்பீடுகளையும் அக்கறைகளையும் மிக இயல்பாக வெளிக்கொணர இது உதவும்.
சிறுகதை வடிவம்: சிறுகதை என்ற வடிவத்தின் மீது ஆசிரியருக்கு இருக்கும் நம்பிக்கையும் ஈடுபாடும். அதோடு, கதையின் ஆதார அனுபவத்தின் விவரிப்பில் நேர்மையும் துல்லியமும் பேணப்பட்டிருக்க வேண்டும். இவ்வரையறைகளின் அடிப்படையில் கதைகளைத் தெரிவு செய்தபோது மொழிபெயர்ப்புக்கு உகந்த ஒரு தொகுப்பு எளிதில் உருவாகியது.
இதுபோன்ற சிறுகதைத் தொகுப்புகளில் காணக் கிடைக்காத சில பெயர்களை உங்கள் நூலில் காண முடிகிறது. அவர்களது கதைகளைச் சேர்ப்பதற்கான முக்கியத்துவம் என்ன?
தமிழ்ச் சிறுகதையின் தோற்றத்தைப் பற்றிப் பேசும்போது நாம் எப்போதுமே வ.வே.சு.ஐயர், பாரதியார், ஆ.மாதவையா ஆகியோரிடமிருந்தே தொடங்குகிறோம். ஆனால், அந்தக் காலகட்டத்திலும் அதற்கு சற்று முன்பிருந்தும் பலராலும் சிறுகதைகள் எழுதப்பட்டு வந்துள்ளன. புதுமைப்பித்தன், சிட்டி சிவபாதசுந்தரம் ஆகியோரின் குறிப்புகளைக் கொண்டு மேற்குறித்த மூவருக்கப்பாலும் எனது தேடலை மேற்கொண்டேன். அப்படித்தான் அம்மணி அம்மாள், விசாலாட்சி அம்மாள், செல்வகேசவராயர் ஆகியோரின் கதைகளைக் கண்டெடுத்தேன். இவர்களது கதைகள் இலக்கிய நுட்பத்திலும், உள்ளடக்கத்திலும் தமிழ்ச் சிறுகதையின் முன்னோடிகளெனக் கருதப்படும் மேற்குறித்த மூவரின் கதைகளுக்கு நிகரானவையாக இருந்தன. இக்கதைகள் முதன்முதலாக இத்தொகுப்பில்தான் இடம் பெறுகின்றன. தமிழ்ச் சிறுகதையின் வரலாறு குறித்து நமது அனுமானங்களை மீள்பரிசீலனை செய்ய இது வாய்ப்பாக அமையும்.
கடந்த நூற்றாண்டிலிருந்து இன்றுவரை தமிழ்ச் சிறுகதை வடிவம் என்னென்ன மாற்றங்களைக் கண்டிருக்கிறது என்பதை இத்தொகுப்பின் வழியாகக் கூறுங்கள்.
பொதுவாக, உரைநடைப் படைப்புகளின் வடிவ எல்லைகள் மிகவும் துல்லியமானவை. அதாவது, அவற்றின் வடிவரீதியான சாத்தியக் கூறுகள் மிக மிகக் குறைவு. சிறுகதை ஒரு அற்புதமான இலக்கிய வடிவம். நாவலைப் போன்று சிறுகதைக்கு ஒரு தொய்வான காலம் என்றுமே இருந்ததில்லை. அது அறிமுகமான உடனேயே மிகச் சிறப்பான முதிர்ச்சியையும் நுட்பத்தையும் அடைந்துவிட்டது. நாம் பொதுவாக ஆ.மாதவையாவைச் சமூக சீர்திருத்தங்களை முன்னிட்டுக் கதைகள் எழுதியவர் என்று நினைத்து வந்திருக்கிறோம். ஆனால், அவரது ‘கண்ணன் பெருந்தூது’ என்ற சிறுகதை மிகப் புரட்சிகரமான ஒரு அறைகூவலை விடுப்பதோடு, உயர்ந்த தரத்திலான இலக்கிய நுட்பத்தையும் கொண்டது. முழுமையான முதல் நவீனச் சிறுகதை என்று இதை நாம் கூற முடியும். இந்தக் கதை 1924-ல் எழுதப்பட்டது. ஆனால், 1950, 60-களில் நமது முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் மிகத் தளர்ச்சியான கதைகளை மிகுந்த உற்சாகத்தோடு எழுதியிருக்கிறார்கள். எனவே, சிறுகதைகளில் ‘புதியது’, ‘பழையது’ என்று அறுதியிட்டுக் கூற முடியாது. மொழிப் பயன்பாட்டில் காட்டப்படும் நுண்ணுணர்வும் ஒருமையும்தான் சிறுகதை வடிவத்துக்குப் புதுமையையும் பொலிவையும் அளிக்கிறது. தமிழ்ச் சிறுகதைத் துறையில், முப்பதுகள் (புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா. ந.பிச்சமூர்த்தி, சி.சு.செல்லப்பா, க.நா.சு.), ஐம்பதுகள் (தி.ஜா.,சு.ரா, அசோகமித்திரன், ஜெயகாந்தன், சூடாமணி), எழுபதுகள் (அம்பை, பூமணி, ந.முத்துசாமி, ச.கந்தசாமி, வண்ணதாசன், வண்ண நிலவன், ராஜேந்திர சோழன், பிரபஞ்சன்), தொண்ணூறுகள் (எஸ் ராமகிருஷ்ணன், ஜெயமோகன், பெருமாள் முருகன், இமயம், பாமா) என்று தொடர்ச்சியாக இலக்கிய அலைகள் உருவாகிவந்துள்ளன. அன்றைய சமூக, அரசியல் சூழ்நிலைகளுக்கேற்ப சிறுகதையின் வடிவம் கூர்மையும் உக்கிரமும் அடைந்துவந்துள்ளது என்று வேண்டுமானால் கூறலாம்.
நீங்கள் விரும்பியும் சேர்க்க முடியாமல் போன கதைகள், எழுத்தாளர்களைப் பற்றிக் கூறுங்கள்.
நான் விரும்பியும் சேர்க்க முடியாமல் போன சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மூல மொழியில் மிக இயல்பாக தொனிக்கும் ஒரு கதை, மொழிபெயர்ப்பின்போது பல சமயங்களில் கூர்மை இழந்து விடுவதுண்டு. இந்த ஆசிரியர்களின் தனித்துவமான மொழிநடையையும், அவர்கள் தங்கள் கதைகளின் உருவாக்கத்தின்போது - வாக்கிய அமைப்பு, உருவகங்கள், வர்ணனைகள் சார்ந்து - எடுத்திருந்த நுட்பமான பல இலக்கிய முடிவுகளையும் மாற்றுவதென்பது மொழிபெயர்ப்பாளரின் சுதந்திர வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இலகுவான வாசிப்பு அல்லது மூலப் பிரதியை மேம்படுத்துவது போன்ற காரணங்களை முன்வைத்து எந்த அத்துமீறலையும் நாங்கள் செய்ய விரும்பவில்லை. இந்தத் தொகுப்பிலுள்ள எந்தக் கதையையும், நாங்கள் மொழிபெயர்ப்புக்காகச் சிறிதளவும் சிதைக்கவில்லை. இந்த அடிப்படையில் சில கதைகளத் தவிர்த்தோம். இந்த இழப்புக்கு ஈடுசெய்யும் வாய்ப்பு எனக்குப் பின்னாளில் கிட்டக்கூடும்.
சமீபத்தில் தமிழில் எழுதப்படும் சிறுகதைகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?
2000-மாவது ஆண்டுக்குப் பிறகு தமிழில் பல முக்கியமான நாவல்கள் வெளியாகிவருகின்றன. அவற்றில், பல, உன்னிப்பான வாசிப்பையும் கவனிப்பையும் கோருபவையாக உள்ளன. ஆனால் சிறுகதைகளைப் பொறுத்தவரை இவ்வாறு நிகழவில்லை. நாம் பொருட்படுத்தக்கூடிய சிறுகதைத் தொகுப்புகளும் சிறுகதை ஆசிரியர்களும் அதிகமில்லை என்றுதான் தோன்றுகிறது. சொல்லப்போனால் சிறுகதை ஆசிரியர்களேகூட நாவல்கள் எழுதுவதை நோக்கிப் பயணித்து வெற்றியும் அடைந்திருக்கிறார்கள். வன்ணதாசன், அம்பை, சுதாகர் கத்தக், என். ராம் போன்ற சிலர்தான் சிறுகதை என்ற வடிவத்தில் இன்னும் நம்பிக்கையுடன் வெற்றிகரமாக இயங்கிவருகிறார்கள். தற்போது, உலக அளவில் சிறுகதை மீண்டும் மிகப் பெரிய எழுச்சியை அடைந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். தமிழிலும் இது நிகழும் என்று நம்புகிறேன்.
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
1 month ago
இலக்கியம்
2 months ago
இலக்கியம்
2 months ago