பம்பாய் மாகாணத்தில் பம்பாய் அசோசியேஷன், பூனா சர்வோஜனிக் சபா, வங்காளத்தில் இந்தியன் அசோசியேஷன், சென்னையில் மெட்ராஸ் மகாஜன சபா என இந்தியா முழுக்க தனித் தனியாக இந்தியர்களுக்கான உரிமைக் குழுக்கள் இயங்கிவந்த வேளை அது. இந்த அமைப்புகளின் சக்தியை ஒன்றாகத் திரட்டுவதன் மூலம்தான் இந்திய மக்களின் உரிமைக்கான குரல் வலுப்பெறும் என அனைவரையும் ‘இந்திய தேசிய காங்கிரஸ்' என்று ஒரே குடைக்குள் திரட்டியவர் ஆலன் ஆக்டேவியன் ஹியூம்.
1829-ல் ஸ்காட்லாந்தில் பிறந்து, இந்தியன் சிவில் சர்வீஸ் பணிக்காக இந்தியா வந்தவர் ஹியூம். 1885-ல், மும்பை நகரின் கோவாலியா குளக்கரையில் உள்ள பள்ளிக்கூடத்தில் டிசம்பர் 28-ல் அவரால் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்டது. உலக அளவில் பழமையானதும், இன்று வரை நிலைத்திருக்கக்கூடியதுமான ஒருசில அமைப்புகளுள் இந்திய தேசிய காங்கிரஸும் முக்கியமான ஒன்று. ஆங்கிலேயரின் நடவடிக்கைகளை எதிர்த்துப் புரட்சிகள் எழுந்துவிடாமல் தணிக்கும் ‘பாதுகாப்பு வால்வு' போல அமைந்திருப்பதாகத்தான் காங்கிரஸ் அமைப்பின் தொடக்கத்தை இந்தியர்கள் சந்தேகத்துடன் பார்த்தார்கள். ஆங்கில ஆட்சியாளர்களும் ஆரம்பத்தில் அப்படியான மனநிலையில்தான் காங்கிரஸை வரவேற்றனர். ஆனால், அந்த அமைப்புதான் பின்னாளில் ஆங்கிலேயர் ஆட்சிக்குப் பெரும் தலைவலியாகி, இந்திய விடுதலைக்கு வித்திட்டு இன்று வரை 146 வருடங்களாக நிலைத்திருக்கிறது.
மாவட்ட அதிகாரியாக இருந்தபோதே, மக்கள் முன்னேற்றத்துக்குக் கல்விதான் அடிப்படைத் தேவை என்பதால், தொடக்கக் கல்வி கிடைப்பதில் பல முன்னெடுப்புகளை எடுத்தார் ஹியூம். ஆங்கிலம் தாண்டி தாய்மொழிக் கல்வியை முன்வைத்தார். இந்திய மொழிகளில் சர்வதேசத் தகவல்களை மேம்படுத்த ‘லோகமித்ரா' என்ற இந்தி பத்திரிகையையும், ‘முகிப்-இ-ரியா' (Muhib-i-riaya) என்ற உருதுப் பத்திரிகையையும் தொடங்கினார். மேல்படிப்புக்கு உதவித்தொகை பெறும் திட்டத்தைக் கொண்டுவந்தார். அப்போது, வைசிராயாக இருந்த மாயோ, ஹியூமின் மக்கள் நல முன்னெடுப்புகளுக்கு உறுதுணையாக இருந்தார்.
செயலாளராக ஹியூம் பதவி உயர்வு பெற்றவுடன், இந்திய விவசாயிகள் முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். விவசாயிகள், தங்கள் நிலத்தை அடமானம் வைத்து, விவசாயம் செய்து அதிகப்படியான வட்டியைக் கட்ட முடியாமல் தவித்த சூழலில், பெரும் வியாபாரிகள் மட்டுமே பயன்பெறும் வகையில் இருந்த வங்கிகளை அரசு வங்கிகளாக மாற்றி, விவசாயிகளுக்கு உதவத் திட்டம் வகுத்தார். அதற்கு எதிர்ப்புகள் கிளம்பவே கூட்டுறவு வங்கித் திட்டத்தை விவசாயிகளுக்காகக் கொண்டுவந்தார்.
இந்திய விவசாய முன்னேற்றத்தில், பருவமழையும், தட்பவெப்பச் சூழலும் முக்கியப் பங்காற்றுகிறது என்று உணர்ந்த ஹியூம், பருவநிலை சார்ந்த தரவுகளை முறையாகத் தயார்செய்து, பருவநிலையை முன்னதாகவே கணித்து, அதற்கேற்ப விவசாயம் செய்ய வேண்டும் என்ற முடிவை முன்வைத்தார். இன்று வரை செயல்பட்டு வரும் ‘இந்திய வானிலைத் துறை' (Indian Meteorological Department) உருவாக்கத்துக்கு 1875-ல் கையெழுத்திட்டவர் ஹியூம். மாதிரிப் பண்ணையை மாவட்டம்தோறும் அமைக்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
மாயோவுக்கு அடுத்து வந்த வைசிராய் நார்த் புரூக், அதற்கடுத்து வந்த லிட்டன் இருவருக்குமே ஹியூமின் திட்டங்களின் மீது கடும் அதிருப்தி இருந்தது. வைசிராய்கள் மீது ஏற்படும் கருத்து வேறுபாட்டையும் ஹியூம் வெளிப்படையாக முன்வைக்கத் தயங்கவில்லை. லிட்டனின் பொருளாதார நிர்வாகத்தில் உள்ள குறையை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டிய ஹியூமைப் பதவிக் குறைப்பு செய்து, செயலாளர் பதவியிலிருந்து நீக்கினார் லிட்டன். தொடர்ந்து, 1882-ல் சிவில் சர்வீஸ் பணியை ராஜினாமா செய்த ஹியூம், இந்திய தேசிய காங்கிரஸ் அமைப்புக்கான கருத்துருவை வளர்த்தெடுத்தார்.
பெண்களுக்கான திருமண வயதை 10-லிருந்து 12 ஆக உயர்த்த சட்டம் கொண்டுவருவதை ஹியூம் ஆதரித்தபோது, அவர் தொடங்கிய காங்கிரஸ் அமைப்புக்குள்ளேயே பலர் அதை எதிர்த்தனர். அதே காலகட்டத்தில் பெருநிலவுடைமையாளர்கள் காங்கிரஸ் அமைப்பில் இருந்துகொண்டே, ஜனநாயகத்தை ஆதரிக்காத நிலையில் இருந்தனர்.
ஒரு கட்டத்தில், ஹியூம் காங்கிரஸ் மீது நம்பிக்கையிழந்து லண்டனுக்கே திரும்பிவிட்டார். எனினும், இந்தியர்கள் மீது அவர் கொண்ட பற்று போகவில்லை. ‘இந்தியன் டெலிகிராப் யூனியன்' தொடங்கி ஆங்கிலேயர்களால் முடக்கப்படும் இந்திய மக்களின் செய்திகளை இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாளிதழ்களில் வெளிக்கொணர வழிசெய்தார். சமூகச் சீர்திருத்தம் தொடர்பில் முரண்பாடுகளைக் கொண்டிருந்த காங்கிரஸ், பின்னாளில் தன்னைத் தானே வளர்த்துக்கொண்டது. அனைத்து மக்களுக்குமான சுதந்திரத்தை முன்வைக்கும் வலுவான அமைப்பாக உருவெடுத்தது.
- சா.கவியரசன்.
கழனிப்பூ மின்னிதழ் ஆசிரியர், kaviyarasan411@gmail.com
டிசம்பர் 28: இந்திய தேசிய காங்கிரஸ் நிறுவன தினம்
முக்கிய செய்திகள்
இலக்கியம்
22 mins ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago