மொழிபெயர்ப்பில் சதம் அடிக்க விருக்கிறார் நாகலட்சுமி சண்முகம். பத்து ஆண்டுகளில் 90-க்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்துப் பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். யுவால் நோவா ஹராரியின் மூன்று புத்தகங்களையும் (‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டியஸ்’, ‘21-ம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’) தமிழுக்கு மொழிபெயர்த்தது அவரது மிக முக்கியப் பங்களிப்பு. தற்செயலாக மொழிபெயர்ப்புத் துறைக்குள் வந்தவர், தற்போது தமிழின் முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவராக அடையாளம் பெற்றிருக்கிறார். மூல நூலைத் தமிழ் மொழியின் லயத்தோடு பொருந்தச் செய்வது நாகலட்சுமி சண்முகத்தின் மொழிபெயர்ப்பின் தனித்துவம். நாகலட்சுமி சண்முகம் ஒரு ஊக்குவிப்புப் பேச்சாளரும்கூட. அவருடனான உரையாடலிலிருந்து…
உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பாரம்பரிய மிக்க டி.கே.எஸ். சகோதரர்களின் குடும்ப வாரிசுகளில் ஒருவராக (என் தந்தைவழித் தாத்தா டி.கே.எஸ். முத்துசாமி) இருந்தாலும், என் வாழ்க்கையின் முதல் 38 ஆண்டுகள் சாதாரணமாகத்தான் இருந்தன. நான் சென்னையில் பிறந்தபோதிலும், நான் படித்ததும் வளர்ந்ததும் பாளையங்கோட்டையில்தான். பின்னர், நான் சென்னைக்கு திரும்பி வந்தேன். கணினித் துறைக்குள் அடியெடுத்து வைத்து, என்னுடைய துறையின் தலைவர் நிலை வரை உயர்ந்தேன். திருமணத்துக்குப் பிந்தைய என் வாழ்க்கை எனது இரண்டாவது இன்னிங்ஸ். வேலைக்குச் செல்வது எனக்கு எப்போதுமே பிடிக்காது. என்னுடைய இரண்டாவது மகன் பிறந்ததும், நான் வேலையை விட்டுவிடத் தீர்மானித்தேன். அச்சமயத்தில், என் கணவர் பி.எஸ்.வி. குமாரசாமிக்கு, தென்னாப்பிரிக்காவின் அண்டை நாடான போட்ஸ்வானாவில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்ததால், நாங்கள் அங்கு சென்று ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தோம். பிறகு, தமிழ்நாட்டுக்குத் திரும்பி வந்தபோது, நான் மீண்டும் கணினித் துறைக்குள் நுழைந்தேன். அதன் காரணமாகத்தான் மும்பைவாசியாகவும் ஆனேன்.
மொழிபெயர்ப்புத் துறைக்குள் எப்படி வந்தீர்கள்?
அது ஒரு தற்செயல். முதலில் ஒரு வங்கியில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் கணவர், பல ஆண்டுகளாக எண்ணற்ற நூல்களை மொழிபெயர்த்திருந்தார். நாங்கள் மும்பைக்குக் குடிபெயர்ந்ததும் அவர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு, முழுநேர மொழிபெயர்ப்பாளராக ஆனார். ரோன்டா பைர்னின் ‘இரகசியம்’ என்ற நூலை அவர் மொழிபெயர்த்தபோது, அதைத் திருத்திச் செப்பனிட்டு மெருகேற்றும் பணியை அவர் எனக்குத் தந்தார். அது எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்துவிட்டது. அடுத்து வந்த நூலை மொழிபெயர்க்க உனக்கு விருப்பமா என்று என் கணவர் என்னிடம் கேட்டபோது, அதை நான் முயன்று பார்க்கத் துணிந்தேன். அப்புத்தகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, நானும் மொழிபெயர்ப்புக்குள் முழுமையாக இறங்கினேன். இதற்கிடையே நான் என்னுடைய வேலையிலிருந்து விலகியிருந்தேன்.
பத்து ஆண்டுகளில் 90-க்கும் மேற்பட்ட புத்தகங்களை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். சராசரியாக ஆண்டுக்கு ஒன்பது புத்தகங்கள் மொழிபெயர்த்தால் மட்டுமே இந்த எண்ணிக்கையை அடைவது சாத்தியம். நீங்கள் எப்படி இதைச் சாத்தியப்படுத்தினீர்கள்?
அது விளையாட்டுப் போக்காகத்தான் தொடங்கியது. இத்தனை நூல்கள் மொழிபெயர்க்க வேண்டும் என்ற பெரிய திட்டம் எதுவும் இருக்கவில்லை. நான் ஜோசப் மர்பியுடன் (‘ஆழ்மனத்தின் அற்புத சக்தி’ நூலின் ஆசிரியர்) பேசி முடித்தவுடன், மேற்கத்திய உலகின் மிகப் பெரிய ஜாம்பவான்கள் பலருடன் அவர்களுடைய நூல்கள் வாயிலாகக் கலந்துரையாடும் ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டம்தான். நான் ஒருவருடைய நூலை மொழிபெயர்க்கும்போது, அவர் என் வாழ்க்கைக்குள் முழுமையாக நுழைந்துவிடுவார். அந்த நூலை மொழிபெயர்த்து முடிக்கும்வரை அவர் என் மனத்தின் விருந்தாளியாகக் குதூகலமாக உலாவருவார். நான் ஒவ்வொரு நூலையும் ரசித்து மொழிபெயர்த்தேன். என் கணவரும் இதே தொழிலில் ஈடுபட்டிருப்பதால், மொழிபெயர்க்கும் நூல்களைப் பற்றியும், அவற்றின் ஆசிரியர்களைப் பற்றியும் நாங்கள் விவாதிப்போம். வாழ்க்கை இப்படியே சுவாரசியமாகச் சென்றுகொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது திரும்பிப் பார்க்கும்போது, நான் மொழிபெயர்த்துள்ள நூல்களின் எண்ணிக்கை எனக்குச் சற்று மலைப்பு ஏற்படுத்துவதாகத்தான் இருக்கிறது.
உங்கள் மொழிபெயர்ப்பு நடைமுறையைப் பற்றிச் சொல்லுங்களேன்…
நான் ஒரு முழுநேர இல்லத்தரசியாக இருந்துகொண்டுதான் மொழிபெயர்ப்பையும் மேற்கொள்கிறேன். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் மொழிபெயர்க்கத் தொடங்கியபோது, என் குழந்தைகள் இருவரும் மிகவும் சிறியவர்கள். எனவே, அவர்களுக்குச் செலவிட்டது போக எஞ்சிய நேரத்தில்தான் நான் மொழிபெயர்ப்புப் பணியைச் செய்தேன். வீட்டு வேலைகளுக்கு நான் ஆள் வைத்துக்கொண்டதில்லை. எனவே, எனக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது நான் மொழிபெயர்க்கிறேன். நான் நேரடியாக என்னுடைய கணினியில் தமிழில் தட்டச்சு செய்துகொள்கிறேன்.
ஹராரியின் மூன்று புத்தகங்களையும் மொழி பெயர்த்திருக்கிறீர்கள். அந்த அனுபவத்தைச் சொல்ல முடியுமா?
அந்த மூன்று புத்தகங்களுமே சவாலானவையாக இருந்தன. ஏனெனில், அவை, மானுடவியல், வரலாறு, தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் என்று பல துறைகளைத் தொட்டிருந்ததால், எளிமையான, அதே நேரத்தில் சரியான தமிழ்ச் சொற்களைத் தேடிக் கண்டுபிடிப்பது கடினமாக இருந்தது. ஒருசில இடங்களில் ஹராரி சொல்ல வந்த கருத்துகள் குறித்து எனக்குச் சந்தேகம் எழுந்ததால், நான் அவரை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டேன். அவரும் மகிழ்ச்சியோடு என் சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். பின்னர் அவர் மும்பை வந்திருந்தபோது நான் என் கணவரோடு சென்று அவரைச் சந்தித்துப் பேசினேன். அது ஓர் இனிய அனுபவம். அந்த மூன்று புத்தகங்களுமே எனக்கு நற்பெயர் ஈட்டிக்கொடுத்துள்ளன.
சுய முன்னேற்றம் தொடர்பாக நிறைய கருத்தரங்குகளில் பேசிவருகிறீர்கள். அதுகுறித்த உங்கள் அனுபவத்தைச் சொல்ல முடியுமா?
பள்ளி நாட்களிலிருந்தே மேடை என்னை வசீகரித்துவந்திருக்கிறது. நூல்களின் மூலமாக என்னைக் கவர்ந்த, உலகப் புகழ்பெற்ற பேச்சாளர்கள் சிலர்தான், கருத்தரங்குகளில் பேச வேண்டும் என்ற ஆர்வத்தை என்னுள் தூண்டியவர்கள். முதலில் ஜேனட் ஆட்வுட்டின் நூலைப் படித்து, அதனால் கவரப்பட்டேன். அவர் இந்தியாவுக்கு வந்தபோது, நான் அவரிடம் நேரடியாகக் கற்றுக்கொண்டு, பிறகு தமிழ்நாட்டில் பல இடங்களில் பயிலரங்குகளை நடத்தினேன். அதற்கு அடுத்து அறிமுகமானவர்தான் அமெரிக்காவின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவரான ஜாக் கேன்ஃபீல்டு. அமெரிக்கா சென்று நேரடியாக அவரிடம் பயிற்சி பெறும் அருமையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதற்குப் பிறகு, அவர் எனக்குக் கற்றுக்கொடுத்த ‘வெற்றிக் கொள்கைகள்’ என்ற பயிலரங்கை நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் பலருக்கும் நடத்தினேன். கடந்த ஆண்டு, கரோனா காரணமாக, ‘ஜூம்’ செயலி மூலமாக ஒருசில குழுக்களிடையே நான் சொற்பொழிவாற்றினேன். பின்னர், ஆறு மாதங்கள் உழைத்து, ‘வெற்றிக் கொள்கைகள்’ ஒருநாள் பயிலரங்கை ஒரு வீடியோ பயிலரங்காக உருவாக்கினேன். சுமார் ஐந்து மணி நேரம் ஓடக்கூடிய அந்த வீடியோக்களை, ஏறக்குறைய அரை மணி நேரம் ஓடக்கூடிய ஒன்பது வீடியோக்களாகப் பிரித்து, பிரத்யேகமான ஒரு வலைதளத்தில் (www.nagalakshmishanmugam.com) தரவேற்றம் செய்துள்ளேன்.
- முகம்மது ரியாஸ், தொடர்புக்கு: riyas.ma@hindutamil.co.in
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago