நடைமுறைப் பார்வை மிக்க இலக்கண வழிகாட்டி

By ச.கோபாலகிருஷ்ணன்

தமிழைச் சரியாகப் பேசவும் எழுதவும் வேண்டும் என்கிற அக்கறை அதிகரித்துவரும் சூழலில், தமிழ் இலக்கண விதிகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையிலும் சுவாரசியமான நடையிலும் எழுதப்படும் நூல்களின் தேவை அதிகரித்துவருகிறது. தமிழாசிரியராகப் பணியாற்றியவரும் எழுத்தாளருமான நா.முத்துநிலவன் எழுதிய இலக்கணம் தொடர்பான 10 கட்டுரைகளின் தொகுப்பான ‘இலக்கணம் இனிது’ என்னும் நூல் தலைப்புக்கு ஏற்பத் தமிழ் மொழியையும் அதன் இலக்கணத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ள முடியும் என்னும் நம்பிக்கையைத் தருகிறது.

இலக்கண விதிகளை எடுத்துக்காட்டுகளுடன் சொல்லிச் செல்லும் மரபார்ந்த அணுகுமுறைக்கும் மாறாக, அவற்றின் பின்னணியையும் காரணங்களையும் அவற்றின் நடைமுறைப் பயனையும் விளக்கிச் சொல்கிறார் முத்துநிலவன். இரண்டு சுழி ன, மூன்று சுழி ண, சொல்லின் முதல் எழுத்தாக வருகிற ந என்று பயன்பாடு சார்ந்து எழுத்துகளைக் குறிப்பதற்கு பதிலாக டண்ணகரம், றன்னகரம், தந்நகரம் என்று சொல்வது அவற்றின் சரியான பெயரைக் குறிப்பிடுவது மட்டுமல்ல... எந்த எழுத்து எங்கு வரும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும் உதவுவது என்பதை விளக்குகிறார். தமிழ் மொழியில் மெய் எழுத்துகள் ‘க்’ முதல் ‘ன்’ வரை தமிழை நாம் உச்சரிக்கும் முறையின்படியே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

திருக்குறளின் முப்பால்களும் அவற்றுக்கு ஒதுக்கப்பட்ட அதிகாரங்களின் எண்ணிக்கையும் மனிதர் தம் வாழ்வை எப்படிப் பிரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கான வள்ளுவரின் வழிகாட்டுதலாக அமைந்திருக்கிறது. தமிழ் மொழி, அதன் தொன்மையான இலக்கிய நூல்களின் அமைப்பு குறித்த இதுபோன்ற தகவல்களின் மூலம் நம் மொழி அறிவியல் சிந்தனை கொண்டதாகவும் வாழ்வியல் வழிகாட்டும் கூறுகளை உள்ளடக்கியதாகவும் இருப்பதை உணர்த்துகிறார் நூலாசிரியர். ஒற்றுப் பிழை, எழுத்துப் பிழை, சொற்பிழை ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கு உதவும் இலக்கணக் குறிப்புகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையிலான எடுத்துக்காட்டுகளுடன் விளக்குகிறார்.

அதே நேரம், ஆங்கிலம் உள்ளிட்ட மாற்று மொழி ஆதிக்கங்களைக் கடந்து தமிழில் எழுத வரும் இளம் தலைமுறையினரை அவர்கள் எழுத்தில் இடம்பெறும் இலக்கணப் பிழைகளைப் பெரிதுபடுத்தி மொழியிடமிருந்து அந்நியப்படுத்திவிடக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார். அதற்காகவே ‘பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்களும் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்களும்!’ என்னும் கட்டுரையை எழுதியிருக்கிறார். அதே போல் ச, ர, ல ஆகிய எழுத்துகளில் தமிழ்ச் சொற்கள் தொடங்கக் கூடாது என்பது போன்ற மரபான விதிகளையும் அந்நியமொழி பெயர்ச் சொற்களைத் தமிழ்ப்படுத்துவதையும் நவீன காலத்தின் தேவைக்கேற்பச் சற்று தளர்த்திக்கொள்ளலாம் என்கிறார்.

‘மக்கள் தமிழ், கொச்சைத் தமிழா?’ என்னும் கட்டுரையில் பேச்சுத் தமிழைக் கொச்சை வழக்கு என்று குறிப்பிடும் வழக்கத்தைக் கேள்விக்குட்படுத்தி மக்களிடம் புழங்கும் பேச்சுத் தமிழின் மேன்மையை விவரிக்கிறார் நா.முத்துநிலவன் இலக்கணம் கற்க விரும்புகிறவர்கள் மட்டுமல்லாமல், இலக்கணத்தில் கரைகண்டவர்களும் வாசிக்க வேண்டிய நூல் இது.

இலக்கணம் இனிது

நா.முத்துநிலவன்

வெளியீடு - பாரதி புத்தகாலயம்

தொடர்புக்கு – 044-2433 2424

விலை – ரூ.90

- ச.கோபாலகிருஷ்ணன், தொடர்புக்கு: gopalakrishnan.sn@hindutamil.co.i

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

3 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

இலக்கியம்

4 months ago

மேலும்