புத்தகத் தாத்தா முருகேசன்

By த.கண்ணன்

புத்தகத் தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டவர் சா.க.முருகேசன். மதுரை மாவட்டம் அலங்காநல்லூருக்கு அருகில் உள்ள தண்டலை எனும் கிராமத்தில், 13.04.1941-ல் பிறந்த புத்தகத் தாத்தா, தன் புத்தகக் குழந்தைகளை நம்மிடம் விட்டுவிட்டு 03.12.2021 அன்று இயற்கை எய்தினார். சிறு வயதில் தந்தையை இழந்து 14 வயது முதல் மளிகைக் கடையில் பணிசெய்தவர். மளிகைக் கடைக்கு வரும் பழைய நூல்களையும் இதழ்களையும் வாசிக்கத் தொடங்கியவர், தான் படித்தவற்றைத் தொகுத்து வைத்து அடுத்தவர்களுக்குப் படிக்கக்கொடுத்தார்.

இவரது மளிகைக் கடை, வாசகர் அரங்கமாகக் காட்சிதந்தது. கடைக்கு வந்து சென்ற ஆசிரியர்களும் வாசகர்களும் இவருடைய நூல்கள், இதழ்களின் தொகுப்புகளை வாங்கிச் சென்று படித்தனர். வாசித்தவற்றைப் புத்தகத் தாத்தாவுடன் பகிர்ந்துகொண்டனர். கல்வியாளர்களுடன் கலந்துரையாடுவதில் மகிழ்ச்சியடைந்த புத்தகத் தாத்தா, தனது பணியை மேலும் விரிவுபடுத்தினார். நூல்களைத் தேடிச் சேகரித்தார். கையில் கிடைக்கும் நூல்களை எல்லாம் அவர் வகுத்துக்கொண்ட முறைக்கு ஏற்ப வகைப்படுத்திக்கொண்டார். நூல் அடுக்குகள் இல்லாமலே நூல்களை அடுக்கி வைத்தார். வாடகை வீட்டில் வசித்த இவருக்கு இவரது நூல் தொகுப்புகளே வீடு மாறுவதற்குக் காரணமாகின. பழைய நூல்களின் வாசனையில் வாழ்வதைப் பெருமை எனக் கருதிய புத்தகத் தாத்தாவுக்கு, வாடகை வீடு கிடைப்பதும் அரிதாகியது. நூல்களைச் சுமந்துகொண்டு வாடகை வீடுகள் தேடினார்.

சேகரித்த புத்தகங்கள் உரியவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில், கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் சென்று அங்குள்ள மாணவர்களுக்கு வேண்டிய நூல்களை வாசிக்கக் கொடுத்தார். ஆய்வாளர்களின் அட்சய பாத்திரமானார் புத்தகத் தாத்தா. ஆய்வாளர்கள் கேட்ட நூல்களையும் அவர்களின் தலைப்புகளுக்குத் தொடர்புடைய நூல்களையும் தேடித்தந்தார். பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் இவரை அடையாளம் கண்டு, தேடிச்சென்று நூல்களைப் பெற்றுச்சென்றனர். தான் வழங்கும் நூல்களை நிறுவனங்களின் அடிப்படையில் தான் வைத்திருக்கும் குறிப்பேட்டில் குறித்து வைத்துக்கொள்வார். வழங்கிய நூல்களை உரிய இடைவெளிகளில் மீண்டும் பெற்றுக்கொள்வார். பெற்றுக்கொண்டதை அடுத்தவர்களுக்கு வழங்குவார்.

இப்பணியைச் சேவையாகச் செய்துவந்த புத்தகத் தாத்தா, இதற்காகக் கட்டணங்கள் ஏதும் பெறுவதில்லை. வாசகர்கள் அன்போடு அளிக்கும் தொகையை மட்டும் பெற்றுச்செல்வார். கல்வி நிறுவனங்களில் நடைபெறும் கருத்தரங்குகளில் ஏதேனும் ஒரு மூலையில் அமர்ந்துகொண்டு அந்த நிகழ்வுகளைக் கவனிப்பார். வாசற்படிகளில் அமர்ந்துகொண்டு, அங்கு வரும் ஆய்வாளர்களுக்குத் தனது சேகரிப்புகளை வழங்குவார்.

2020-ல் ஆனந்த விகடன் தேர்வுசெய்த டாப் 10 மனிதர்களுள் புத்தகத் தாத்தாவும் ஒருவர். சென்னை புத்தகச் சங்கமம் 2016-ல் இவருக்குப் ‘புத்தகர் விருது’ வழங்கிச் சிறப்பித்தது. ‘நூலக அருவி விருது’ (2015), ‘மூத்த குடிமகன் விருது’ (2011), ‘சாதனை விருது’ (2013), ‘சுதேசி துருவா விருது’ (2013), ‘சமூகத் தொண்டர் விருது’ (2012), ‘நூலக ஆர்வலர் விருது’ (2011), ‘புத்தக அனுமான்’ (2014), ‘விருட்சம் சேவை விருது’ (2014) உள்ளிட்ட பல விருதுகளையும் புத்தகத் தாத்தா பெற்றிருக்கிறார். புத்தகங்களைத் தேடித்தருவதில் அளவிட முடியாத ஆனந்தம் அடைந்த புத்தகத் தாத்தா, இரண்டாம் வகுப்புக் கல்வியைக்கூடப் பெறாதவர். ஆனால், இவரால் ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்கள் பெற்று பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியராகப் பணி செய்பவர்கள் ஏராளம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் மா.திருமலை, தனது ‘பேச்சுக்கலை’ எனும் நூலை புத்தகத் தாத்தாவுக்குச் சமர்ப்பணம்செய்தது குறிப்பிடத்தக்கது. புத்தகத் தாத்தாவும் தனக்கு வழிகாட்டிய கல்வியாளர்களைப் பல நேர்காணல்களில் நன்றியோடு குறிப்பிட்டுள்ளார்.

முறையாக அட்டவணைப்படுத்தப்படாமல் உள்ள புத்தகத் தாத்தாவின் தொகுப்புகளை அட்டவணைப்படுத்தி, ‘புத்தகத் தாத்தா தொகுப்புகள்’ என்ற பெயரில் ஆவணப்படுத்தும் பணியை அரசு முன்னெடுத்து அவருக்குச் சிறப்பு செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல், ஏனைய தனியார் சேகரிப்பாளர்களுக்கும் அரசு உரிய உதவி செய்ய வேண்டும்.

- த.கண்ணன், தொடர்புக்கு: kannanyoga.kannan@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

4 hours ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்