360: மீண்டும் ‘மஞ்சரி’

By செய்திப்பிரிவு

தமிழின் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ என்று பெயர்பெற்ற பத்திரிகை ‘மஞ்சரி’. பள்ளி மாணவர்கள் தொடங்கி, தீவிர வாசகர்கள் வரைக்கும் அறிவுத் தீனியிடும் மாத இதழ். பல்சுவைச் செய்திகள், பிறமொழி இலக்கியங்கள், அறிவியல் கட்டுரைகள் என்று பிறநாட்டுச் சாத்திரங்களைத் தமிழில் கொண்டுவரும் முயற்சியாகத் தொடங்கப்பட்ட இந்தப் பத்திரிகை, மூன்று தலைமுறை வாசகர்களைக் கொண்ட பெருமைக்குரியது.

கரோனா பொதுமுடக்கத்தால் மார்ச், 2020 இதழோடு நின்றுபோன இந்த இதழ், நவம்பர் 2021-ல் மீண்டும் வெளிவந்துள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகையில் தனிச் செயலாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இந்த இதழின் நிர்வாகம் மாறியுள்ளது. கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமிமலையிலிருந்து இனி ‘மஞ்சரி’ வெளியாகும்.

புதிய நிர்வாகம் என்றாலும் ‘மஞ்சரி’யின் நீண்டநாள் வாசகராக அதன் பெருமையைக் காப்பாற்றுவது தனது கடமை என்கிறார் ஜெ.ராதாகிருஷ்ணன். செயற்கை நுண்ணறிவு பற்றிய கட்டுரை, அறிவியல் தமிழ் எழுத்தாளர் பெ.நா.அப்புசுவாமியைப் பற்றிய அறிமுகம், நோபல் பரிசு பெற்றவர்களைப் பற்றிய அறிமுகங்கள், ஆண்டன் செகாவ் எழுதிய ‘வான்கா’ சிறுகதை, லியோ டால்ஸ்டாயின் ‘சுகம்’ குறுநாவல் ஆகியவை இந்த இதழில் வெளியாகியுள்ளன. இதழ் தொடர்புக்கு: 98683 75985

பரவட்டும் ‘சிறார் நூலகம்’ இயக்கம்!

சுட்டிகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் முன்னுதாரணங்களாகியிருக்கிறார்கள் ஆரணியைச் சேர்ந்த குழந்தைகள் ஹேத்விக், ஆதன், தான்யா மூவரும். சமீபத்தில் தங்கள் பிறந்த நாட்களில் இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? குட்டி அலமாரி ஒன்றைச் செய்து, அதில் சிறுவர்களுக்கான நூறு புத்தகங்களை வைத்து அரசுப் பள்ளிகளுக்கு வழங்கியிருக்கிறார்கள். தச்சரம்பட்டு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கு ஆதனும், கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு ஹேத்விக்கும், நாராயணமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு தான்யாவும் இந்தச் சிறார் நூலகங்களை வழங்கியிருக்கிறார்கள். இந்த முன்னெடுப்பைத் தொடங்கியது ஆரணியைச் சேர்ந்த ‘அறம் செய்வோம்’ அமைப்பு.

“நகரத்தில் உள்ள பெற்றோர்களே தங்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பதில்லை எனும்போது, கிராமத்துப் பள்ளிக் குழந்தைகளுக்குப் புத்தகங்களை யார் வாங்கிக்கொடுப்பார்கள். ஆகவேதான், இந்த முயற்சியை மேற்கொண்டோம். 100 சிறார் நூலகங்களை அரசுப் பள்ளிகளுக்கு வழங்குவதுதான் இலக்கு” என்கிறார் ‘அறம் செய்வோம்’ அமைப்பின் தலைவர் சுதாகர். சுதாகர் கூறிய 100 சிறார் நூலகங்கள், இலக்கைத் தாண்டியும் இது தமிழ்நாடு முழுவதும் விரியட்டும். சிறுவர்கள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் இதுபோன்ற சிறார் நூலகங்களைத் தங்கள் பிறந்த நாள், மணநாள், பெற்றோர்கள் - நண்பர்களின் நினைவுநாள் போன்றவற்றின்போது அரசுப் பள்ளிக்கு வழங்கலாம். அப்படி வழங்கிய ஒளிப்படங்களை ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு அனுப்பினால் பிரசுரிக்கப்படும்.

யாவரும்-10

யாவரும் பதிப்பகத்தின் 10-வது ஆண்டு நிறைவு விழா நாளை (ஞாயிறு) கொண்டாடப்படுகிறது. இந்நிகழ்வில் க.நா.சு. நினைவு சிறுகதைப் போட்டி-2020, புதுமைப்பித்தன் நினைவு குறுநாவல் போட்டி-2020 ஆகியவற்றில் வென்றவர்களுக்குப் பரிசு வழங்கப்படுகிறது. பரிசுபெற்ற குறுநாவல்களும் சிறுகதைகளும் புத்தகங்களாகவும் வெளியிடப்படுகின்றன. கணையாழி ஆசிரியர் ம.ராஜேந்திரனுடன் ஜீவ கரிகாலன், வேல்கண்ணன், அகரமுதல்வன், கணபதி சுப்பிரமணியம், கே.என்.சிவராமன், சீராளன் ஜெயந்தன், வேடியப்பன், வா.மணிகண்டன் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள். விருதாளர்களுக்கு வாழ்த்துகள்! விழா நடைபெறும் இடம்: நிவேதனம் ஹால், மயிலாப்பூர். நேரம்: மாலை 5 மணி.

புத்தகக்காட்சிகள்

சப்னா புத்தகக்காட்சி:

ஈரோட்டில் நேற்று ‘சப்னா புத்தகக்காட்சி’ தொடங்கியிருக்கிறது. இது டிசம்பர் 2-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்து தமிழ் திசை வெளியீடுகள் உள்ளிட்ட அனைத்து நூல்களுக்கும் 15%-20% தள்ளுபடி உண்டு. இடம்: பிரப் ரோடு, ஈரோடு.

மடிப்பாக்கம் புத்தகக்காட்சி:

மதுரை மீனாட்சி புத்தக நிலையமும் ‘இந்து தமிழ் திசை’யும் இணைந்து நடத்தும் புத்தகக்காட்சி கடந்த 12-ம் தேதி சென்னை மடிப்பாக்கத்தில் தொடங்கியது. இந்தப் புத்தகக்காட்சி நவம்பர் 30 வரை நடைபெறுகிறது. இந்தப் புத்தகக்காட்சியில் ‘இந்து தமிழ் திசை’யின் வெளியீடுகள் உட்பட அனைத்து நூல்களுக்கும் 10% தள்ளுபடி உண்டு. இடம்: செல்லம்மாள் சக்தி திருமண மாளிகை, மேடவாக்கம் பிரதான சாலை, மடிப்பாக்கம். நேரம்: காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை. தொடர்புக்கு: 9443262763.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

13 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

மேலும்