கதாநதி 11: தேன்மொழி - உலகத் தரம் வாய்ந்த எழுத்தாளர்

By பிரபஞ்சன்

தேன்மொழி, கவனம் கொள்ளத்தக்க கவிஞராகத் தெரிய வந்தவர். கவிதைக்குள் சொல்லப்படாத மீதம் இருப்பதை உணர்ந்து கதைகள் எழுதத் தொடங்கினார். விவரிப்பதற்கும் விளக்குவதற்கும் கதைகள் விஸ்தாரமான இடம் தருவதாக அவர் உணர்ந்திருக்கிறார். கடந்த ஐந்தாண்டுகளில் தேன்மொழியின் கதைகள் இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. 2009-ல் வந்த ‘நெற்குஞ்சம்’ சிறுகதைத் தொகுதியின் பின் அட்டையில் ‘தமிழின் எதிர்காலம்’ என்று தேன்மொழி பற்றி இந்திரா பார்த்தசாரதி குறிப்பிட்டிருந்தார்.

இந்தியாவின் 10 இளம் எழுத்தாளராக இந்தியன் ‘எக்ஸ்பிரஸ்’ நாளேடு தேன்மொழியைத் தேர்வு செய்தது. எதுவும் பொய் இல்லை. எடுத்துக் கொண்ட விஷயத்தாலும், முதிர்ந்த வெளிப்பாட்டினாலும், கலாபூர்வமான படைப்பாக்கத்தாலும் அப்பாராட்டுரைகள் முற்றும் பொருந்தி நிற்கின்றன இந்த எழுத்தாளரை.

கவிதை உரைநடையாகும்போதும் கவிதை இருக்கவே செய்கிறது. உணர்வுத் தளத்தில் உரைநடைக்குள் விவரிக்கப்படும் நிகழ்வுகள், கவித்துவமாக உருமாற்றம் பெறுவதைத் தேன்மொழியின் இரண்டு கதைகள் மெய்ப்பிக்கின்றன. அதில் ஒன்று யசோதரா. புத்தன் என்று அறியப்படும் சித்தார்த்தனின் மனைவியான யசோதராதான்.

கதையின் தொடக்கமே இப்படி அமைகிறது:

யசோதரா தன் நீண்ட கூந்தலை சிறிது சிறிதாக வெட்டிக்கொண்டிருந்தாள். யசோதரா தலையை மழித்துக் கொண்டிருந்தாள். காற்றும் வெளியும் கருமை படிந்துபோயின. அவள் தலையைச் சுற்றிக் கருப்பு ஒளிவட்டம் ஒன்று சுடர்விட்டுக் கொண்டிருந்தது. அவள் சித்தார்த்தனை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். நாளை அவன் வரப் போகிறான். இப்போது அவன் இளவரசர் இல்லை. பிச்சைப் பாத்திரம் கையிலேந்தி வாழும் துறவி. ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஞானி. (புத்தனாகும் ஆசையால்தான் அவன் வெளியேறினான். ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள் என்பது தமிழ் மந்திரம்)

போதிசத்துவன் உபதேசித்துக் கொண்டிருந்தான். அவன் மொழி பெண்களின் மேல் புழுதி வாரி இறைத்துக் கொண்டிருந்தது. அவனின் நான்கு உண்மைகளும் எட்டுப் பாதைகளும் பெண்களைத் தவிர்த்துவிட்டிருந்தன. துணைக் காலற்ற சொற்களைப் போல அவன் போதனைகள் பெண்கள் அற்ற உலகத்தைச் சிருஷ்டித்துக் கொண்டிருந்தன.

பெண்களைச் சங்கத்தில் சேர்த்துக் கொண்டால், ஆயிரம் வருடத்தில் மறைய வேண்டியது ஐநூறு வருடத்தில் மறைந்து போகும். பெண்ணில் இருந்து தப்பித்துக்கொள்ள நல்ல எண்ணங்களால் முகமூடியிட்டுக் கொள்ளுங்கள்.

புத்தனின் போதனைகளால் தெளிவு பெற்றவர்கள், இந்தப் பேச்சைக் கேட்டுத் திகைத்துச் சமைந்திருந்தனர். அவரவர் அவரது தாயை நினைத்துக் கொண்டார்கள். புத்தன் ஏன் இப்படிப் பேசுகிறான்? யசோதராவும் சங்கத்தில் இணைய ஆசைப்பட்டாள். புத்தன் இணங்கவில்லை. புத்தன் தனக்குத் தானே சொல்லிக்கொள்ளும் சமாதானமா? போதி மர நிழல் புத்தனுக்குச் சாந்தியைத் தரவில்லையா?

அரண்மனைக்குள் இருந்த புத்தனை அவள் சென்று பார்க்கவில்லை. ‘‘வேண்டுமானால் புத்தனை இங்கு வரச் சொல். நான் அவரை வந்து பார்க்க மாட்டேன்'' என்று திட்டவட்டமாகச் சொன்னாள் யசோதரா.

யசோதரா அரண்மனைக்குள் ஒரு துறவியாக வாழ்ந்தாள். ஆபரணங்களை, மணப் பொருட்களைத் தவிர்த்தாள். மண் பாத்திரத்தில், உயிர் தரிக்கும் அளவே உண்டாள். ‘புத்தன் வருவான். என் அறைக்கு என்னைக் காண வருவான். என்னிடமிருந்து விடைபெற்றுச் செல்ல வருவான். அது இன்னும் மிச்சமிருக்கிறது’.

யசோதராவின் தனித்த இரவுகள் ஏழு ஆண்டுகளில் உருமாறியிருந்தன. பிணியும் மூப்பும் மரணமும் சித்தார்த்தனைத் துரத்திக் கொண்டிருக்கின்றன. அவன் ஓடிக் கொண்டிருக்கிறான்.

புத்த சந்நிதியில் சித்தார்த்தன் வலது காலை எடுத்து வைத்தபோது, யசோதரா அரண்மனைக்குள் ஞானஒளி பெற்று புத்தராக மாறியிருந்தாள். குழந்தை இராகுலன் மண்ணில் விழுந்த அந்த ரத்தக் கவிச்சி நிறைந்த அறைக்குள் வந்து, பின் வெளியேறிய அந்த நள்ளிரவின் நிட்சியாக ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அறைக்குள் பிரவேசிக்கிறான் சித்தார்த்தன்.

யசோதராவின் நாபியில் திரண்டிருந்த காதல் சுருண்டு வலிந்தது. அது அன்றைய இரவு தந்த பிரசவ வலியை விடவும் கடுமையாக இருந்தது. நாபியில் ஒரு வெடிப்பு நிகழ்ந்த போது, புதையுண்ட நிலம் போல அவள் புத்தனைத் தழுவி இருந்தாள்.

கதையின் கடைசிப் பகுதி இது:

புத்தன் அவளிடம் விடைபெற்றுக் கொண்டான். அவள் இன்னும் சிறிது நாளில் அவனோடு வர இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள். அன்று சொல்லிக் கொள்ளாமல் விடைபெறாமல் யசோதராவின் சார்த்திய கண்களைக் கடந்து சென்ற சித்தார்த்தன், இப்போது புத்தனாக அவள் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து விடைபெற்றுக் கொண்டான்.

ஊருணி நீர்போல உள்ளே மறைந்திருந்த சித்தார்த்தனுக்கான காதல்மறைந்தது. புத்தன் மேல் கருணை பொங்கி வழிய, இணைந்திருந்த மேகங்கள் கலையும் காற்றில் விடைபெற்றுக் கொள்வதுபோல, புத்தனுக்கு மென்மையாக விடை தந்தாள் யசோதரா'.

தேன்மொழி, கவிதைக்கும் உரைநடைக்கும் இடையேயான எல்லைக் கோடுகளை அழிக்கும் மொழியில் எழுதுகிறார். அவருடைய தனித்துவம் பொருந்திய மொழி அர்த்தங்களை, உணர்ச்சிகளை முழுதும் உள்வாங்கி வாசகர்களுக்கு மிச்சம் வைக்காமல் கடத்துகிறது. இதை யசோதராவிலும் ஆரிய மாலையிலும் மிகவும் அழகாகவும் இயல்பாகவும் செய்து காட்டுகிறார் அவர்.

தேன்மொழியின் புனைவுமொழி அடர்த்தியானது. அதே சமயம் விரல்களுக்கிடையே கசியும் நீரைப் போல ஈரம் கொண்டது. விரல்களோடு நகம் ஒன்றி வருவது போல அர்த்தமும் பாவமும் கூடி வருகிறது.

ஊமத்தை என்று ஒரு கதை. தாய்மையின் மேன்மை குறித்துப் பல லட்சம் பக்கங்கள் எழுதப்பட்ட பாரத புண்ணிய பூமியில் தம் பாட்டியைக் கள்ளச் சாராயக் கேஸில் மாட்டிவிட்டுப் பேரன்கள் தப்பிக்கும், வாசிப்பவர் நெஞ்சைப் பதறவைக்கும் கதை.

அந்த நீதிமன்ற குமாஸ்தா வேலாயியைக் கூப்பிட்டார். அந்த வயது முதிர்ந்த அம்மாள் மெல்ல நடந்து வந்து கூண்டில் ஏறுகிறாள். நீதிபதி என்னமோ கேட்டார். கூண்டுக்கு வெளியே நிற்கச் சொல்கிறார்கள். அந்த மூதாட்டி கைகட்டிக் கொண்டு நிற்கிறாள். கள்ளச் சாராயம், அதில் கலந்திருக்கும் அட்ரோபின் பற்றியெல்லாம் நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் பேசிக் கொள்கிறார்கள்.

எதுவும் புரியாமல் அவர்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறார் அந்த மூதாட்டி. வேடிக்கை என்னவென்றால், அந்த மூதாட்டிதான் அந்தக் கள்ளச் சாராயத்தைக் காய்ச்சுகிறார் என்பதை நோக்கி அந்த வாதம், வழக்கு சென்று கொண்டிருக்கிறது. மூதாட்டியின் காதுகளில் ஊமத்தை என்கிற சொல், அழகுப் பூக்கள் பூக்கிற செடி ஒன்றை நினைவுபடுத்துகிறது. முடிவில், அந்த மூதாட்டி ‘‘என்னை இப்படிப் பண்ணிட்டீங்களே, நீங்க நல்லா இருப்பீங்களாடா?’’ என்று மண்ணை அள்ளித் தூற்றுகிறாள், பேரன்களைப் பார்த்து.

அவமானம், சிறை, ஊர் பழிப்பு எல்லாம் அவளை ஊமத்தைக் காய்களைத் தின்று உயிர்விடத் தூண்டுகிறது.

பணத்தில் கள்ளம் பார்க்கிறவர்கள். காதலில் கள்ளம் பார்க்கிறவர்கள், புருஷனில் கள்ளம் பார்க்கிறவர்கள், சாராயத்தில் கூட கள்ளம் பார்க்கி றவர்கள் வாழ்க்கையில் பார்க்க விரும்புவதில்லை. மனதின் தொந்தரவே இன்றி ஒரு மூதாட்டியைச் சிறைக்கு அனுப்புகிறது ஒரு குடும்பம்.

குழந்தைகள் பற்றி, மனநிலை தவறியவர்கள் பற்றி, பெண்கள் பற்றி, முதியோர்கள் பற்றித் தேன்மொழியின் இதர கதைகள், மிகச் சிறந்தவை. தமிழ்ச் சிறுகதையின் பரப்பை அகலமாக்கியும் ஆழப்படுத்தியும் இருக்கிறார் தேன்மொழி. தமிழ்நாட்டுப் பூலோகக் கோடுகள் தாண்டி, இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் ஆக்கத் தக்க பல கதைகளை இந்தக் ‘கூலை பிறை’ என்ற தொகுதி தனக்குள் கொண்டிருக்கிறது.

தேன்மொழியின் ‘கூனல்பிறை’ தொகுப்பை ‘மணற்கேணி'ப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

- நதி நகரும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

6 days ago

மேலும்