புனைவு என்னும் புதிர்: வாழ்க்கையை வேடிக்கை பார்ப்பவர்

By விமலாதித்த மாமல்லன்

ஒரு கதை எதைச் சொல்ல வேண்டும் எதைச் சொல்லக் கூடாது என்று எவ்விதச் சட்டதிட்டமும் இல்லை. ஆனால், எழுதப்படுவதெல்லாம் கதை என்கிற அந்தஸ்தைப் பெற்றுவிடுவதுமில்லை.

கதை அல்லது புனைவு என்பது, அரிய தத்துவங்கள், நீதி சாஸ்திரங்கள், உயரிய சிந்தனைகள், கொள்கைக் கோட்பாடுகள், செய்திகள் போன்றவற்றையோ இவற்றில் ஏதாவதொன்றையோ வைத்து எழுதப்பட்டிருக்க வேண்டியதுமில்லை. அப்படியென்றால் எழுதப்பட்ட ஏராளமானவற்றில் சில மட்டும் எப்படி உயர்ந்த இலக்கியம் ஆகின்றன, இலக்கியவாதிகளால் கொண்டாடப்படுகின்றன?

இலக்கியம், படித்துப் புரிந்துகொள்ளக்கூடியது மட்டுமன்று, உணரப்பட வேண்டியது. படித்தவர் எழுதிய கதைகள், கட்டுரைகள் போல் தங்கிவிடுவதும், படிப்பு வாசனையற்றவர் எழுதும் கட்டுரைகள்கூடக் கதைகளைப் போல் சுவாரசியமாவதும் நிகழ்கிறது அல்லவா?

மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்தில் ஒதுங்கி, அப்படி ஒதுங்கியபோதும் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக்கொண்டு இருந்துவிட்டவர் கி. ராஜநாராயணன்.

எந்தச் சிரமமும் இல்லாமல் எல்லோரும் செய்யக்கூடிய எளிய காரியம் வேடிக்கை பார்ப்பது. நாம் எல்லோரும் எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தபடிதான் வாழ்கிறோம். எழுத்தாளர்களோ வாழ்க்கையையே சற்றுத் தள்ளி நின்று வேடிக்கையாகப் பார்த்தபடி வாழ்கிறார்கள்.

கி.ராஜநாராயணன் 1960-ல் எழுதிய ‘மின்னல்’ கதையிலும் வேடிக்கைதான் பார்க்கிறார். ஆனால் அதை எழுத்தாக்கும்போது பல வேடிக்கைகள் காட்டுகிறார்.

‘மின்ன’லில் கதை என்று பெரிதாக எதுவுமில்லை. வாசகப் பெரும்பான்மையை ஈர்க்கும்படியான சுவாரசியங்களோ திடுக்கிடும் திருப்பங்களோ ஏதுமற்ற கதை. கதை என்று பொதுவாக அறியப்படும் பொருளில் இதைக் கதை என்று சொல்ல முடியுமா என்பதே சந்தேகம்தான். இதன் சிறப்பம்சமே சுவாரசியமற்றதை சுவாரசியமாகச் சொல்வதுதான்.

வெயிலில் நிறுத்தப்பட்டுப் புறப்படக் காத்திருக்கிறது, கரிசல் காட்டுக் கிராமத்துப் பேருந்து. உள்ளே வெக்கையில் தவித்தபடி இருக்கின்றனர் பயணிகள். ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவே அசூயைப்படுமளவுக்குச் சகிக்கவொண்ணாத சூழல். வண்டி புறப்பட்ட பின்னரும்கூடப் பெரிய மாற்றமில்லை. ஒரு நிறுத்தத்தில், கைக்குழந்தையுடன் இளம் தாயொருத்தி மெல்லிய பூங்காற்றைப் போல வண்டியில் ஏறுகிறாள். பஸ்ஸுக்குள் சோம்பி எரிச்சலுடன் இருந்த எல்லோரிடமும் புத்துணர்ச்சி பிறக்கிறது. ஒட்டுமொத்தப் பேருந்திலும் குழந்தையின் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. இவர்கள் இருவரும் பயணம் செய்துகொண்டிருக்கும்வரை கலகலப்பும் அழகும் அனைத்துப் பயணிகளையும் புதிய மனிதர்களைப் போல மாற்றிவிடுகிறது. கொஞ்ச நேரத்தில் இருவரும் இறங்கிவிடுகின்றனர். பஸ்ஸில் இருந்த பயணிகள் திரும்பவும் தங்களின் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகின்றனர்.

இதுதான் கதை. ஆனால், இதைப் படிக்கையில் மேலே சொல்லப்பட்டிருப்பதல்ல கதை; அது வெறும் கூடு மட்டுமே என்று ஒவ்வொரு வார்த்தையிலும் உங்களை உணரவைப்பதே கி. ராஜநாராயணன் என்கிற கதைசொல்லியின் வெற்றி.

இந்தக் கதையில் வரும் குழந்தையை எல்லோரும் கொஞ்சுகிறார்கள். கண்டக்டர் கொஞ்சுவதை ஒரே வாக்கியத்தில் கவிதையாக்கிவிடுகிறார் கி. ரா.

“டிக்கெட் கிழித்து கண்டக்டர் அந்தக் குழந்தையிடம் கொண்டுவந்து கொடுத்தார். அதை வாங்கி ஜன்னல் வழியே காற்றோடு விட்டது குழந்தை.”

கம்யூனிஸ்ட் கட்சிக்காரராகப் போராடி சிறைக்கெல்லாம் சென்ற ஒருவர் எழுதிய கதை என்று நம்ப முடிகிறதா? இந்தக் கதையின் மூலம் என்ன பெரிய தத்துவத்தை, கொள்கையை, கருத்தைச் சொல்லிவிட்டார்?

சோர்வுறச் செய்யும் தருணங்களைப் போலவே புத்துணர்வூட்டும் தருணங்களையும் கொண்டதுதான் வாழ்க்கை. வெக்கையும் புழுக்கமும் போலவே காற்றும் சுகந்தமும்கூட வீசக்கூடியவைதாம். அசூயை எரிச்சல் உண்டாக்குவதைப் போலவே அழகு மனதை ரம்மியமாக்கக்கூடியது. இதெல்லாம் எவருக்கும் தெரியாத புதிய விஷயமா என்றால், இல்லை. ஆனால் எழுதப்பட்டிருக்கும் விதத்தில் கரைந்து, நம்மை மறந்து சில தருணங்களை, சில காட்சிகளை அற்புதம் என நெகிழ்ந்து மனதை விகாசமாக்கி அதில் அன்பைத் ததும்ப வைப்பதுதான் கலை. அதிலும் குறிப்பாக, இப்படியான அதீத வார்த்தைப் பிரயோகங்கள் எவையுமின்றி இதைச் சாதிப்பதே கலையின் பூரண வெற்றி. ஒரு மின்னல் வெட்டாகத் தோன்றி மறையும் அற்புதத்தை, அன்றாடக் காட்சிபோல் இயல்பாகக் காட்டுவது அப்படியொன்றும் சாதாரண விஷயமில்லைதானே.

கி.ரா.வுக்கு இன்று வயது 94. ஆனால் இந்தக் கதையை எழுதியபோது அவருக்கு 38 வயதுதான். முதிர்ச்சி வயது காரணமாக வருவதன்று. அது வயதைத் தாண்டிய மனத்தின் முதிர்ச்சி.

-மாமல்லன், தொடர்புக்கு: madrasdada@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

9 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

19 days ago

இலக்கியம்

19 days ago

மேலும்