தமிழ்நாட்டு அரசியலிலும் கலைத் துறையிலும் பிரபலமாக விளங்கிய மு.கருணாநிதியின் செயல்பாடுகள் தனித்துவமானவை. பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையின் தொடர்ச்சியாகத் தமிழ்நாட்டு வரலாற்றுப் போக்குகளைக் கேள்விக்குள்ளாக்கிய கருணாநிதியின் பன்முக ஆற்றல்கள், அவரை வரலாற்றை உருவாக்குகிறவராக மாற்றியமைத்தன. வரலாற்றில் தனிநபரின் பாத்திரம் என்னவெல்லாம் செய்யும் என்பதற்கு அடையாளமாக கருணாநிதியின் ஆளுமை விளங்குகிறது. கருணாநிதியுடன் பல்லாண்டு காலம் பத்திரிகையாளராக நெருங்கிப் பழகிய மூத்த பத்திரிகையாளர் மணா தொகுத்துள்ள ’கலைஞர் என்னும் மனிதர்’ புத்தகம் கடந்த காலத்தின் வரலாறாக விரிந்துள்ளது.
கருணாநிதியுடன் மணாவின் நேர்காணல்கள், கருணாநிதி பற்றிய மணாவின் கட்டுரைகள் புத்தகத்தில் முதன்மை இடம்வகிக்கின்றன. அத்துடன் க.அன்பழகன், கனிமொழி, நடிகர் சிவகுமார், நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன், ராசி.அழகப்பன், சிற்பி கணபதி ஸ்தபதி, அமைச்சர் தங்கம் தென்னரசு, செல்வி, பவா செல்லதுரை, சுப.வீரபாண்டியன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சோலை, உதய் பாடலிங்கம் போன்ற ஆளுமைகளின் கருணாநிதியுடனான அனுபவம் சார்ந்த கட்டுரைகளும் நேர்காணல்களும் நூலில் இடம்பெற்றுள்ளன.
கருணாநிதி ஆட்சியில் முதல்வராக இருந்தபோதும், எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்பட்டபோதும் பத்திரிகை யாளர்கள் சந்திப்புகளில் கேள்விகளை எதிர்கொள்ள ஒருபோதும் தயங்கியதில்லை. அவருடைய பதின்பருவத்து வாழ்க்கை, பத்திரிகையாளராகத் தொடங்கியதன் காரணமாக அவருக்கு எப்போதும் பத்திரிகையாளர்கள்மீது இணக்கமான பார்வை உண்டு. பத்திரிகையாளர்கள் கேட்கிற முரண்பாடான கேள்விகளுக்கும் லாகவமாகப் பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர் அவர். ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று கருதப்படுகிற பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள், அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்துக் கேள்விகளை எழுப்பி விமர்சிக்கிற வல்லமையுடையவை.
பத்திரிகையாளர் மணா, தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகினாலும் தன்னுடைய தனித்துவத்தை இழந்துவிடாமல் சமூகப் பிரச்சினைகளை எழுத்தில் பதிவாக்குகிற இயல்புடையவர். கருணாநிதியுடனான மணாவின் நேர்காணல்கள் அன்றாடம் காற்றில் கரைந்துபோகிற பத்திரிகைச் செய்திகள் அல்ல. சமகாலப் பிரச்சினைகள் குறித்த கருணாநிதியின் பதில்கள் அவருடைய பல்லாண்டு கால அரசியலின் வெளிப்பாடுகள். கருணாநிதி மறைந்து மூன்றாண்டுகள் கடந்த பின்னர், அவரைத் தனிமனிதராக அவதானித்து, மணா தொகுத்துள்ள இந்த நூல், தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றின் அழுத்தமான பதிவு.
கருணாநிதி, ‘நெஞ்சுக்கு நீதி’ தன்வரலாற்று நூல் தொகுதிகளில் தன்னுடைய இளமைப் பருவம் முதலாகக் கடந்துவந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ளார். வெகுஜனப் பத்திரிகையில் கருணாநிதியின் நேர்காணல் பிரசுரமாகிறபோது, ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான வாசகர்கள் வாசிக்கின்றனர். அந்த வகையில் சமூகச் சீர்திருத்தவாதியான கருணாநிதியின் மனத்தடை இல்லாத நேர்காணல்கள், பேச்சுகள், பொதுக்கருத்து உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.
கட்சியின் தலைவராக அல்லது முதல்வராக இருந்தபோது கருணாநிதியின் சமகால அரசியலைப் புரிந்திட நேர்காணல்கள் உதவுகின்றன. வடநாட்டைச் சார்ந்த சாமியார் ஒருவர் ‘கருணாநிதியின் தலையைச் சீவ வேண்டு’மெனச் சொல்லி அவருடைய தலைக்கு விலை வைத்தபோது, “என் தலையை நானே சீவி நீண்ட நாளாச்சு” என்று கருணாநிதி கேலியாகப் பதிலளித்தது தற்செயலானது அல்ல. சாதியரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகப் பின்புலத்திலிருந்து வந்த கருணாநிதியின் நேர்காணல்கள், அரசியல்ரீதியில் முக்கியமானவை.
மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, பாலங்கள் கட்டியதில் ஊழல் என்று குற்றம் சுமத்திய அ.இ.அ.திமு.க. அரசு, ஸ்டாலின், கருணாநிதி உள்ளிட்ட பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது. பின்னர், ஸ்டாலின் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அப்போது பிரபலமான வார இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய மணாவுக்கு ஸ்டாலின் தந்த நேர்காணல், அவருடைய அரசியல் வெளிப்பாடு. தந்தை - மகன் என்ற உறவுக்கு அப்பால் கட்சியின் தலைவர் - தொண்டன் என்ற புரிதலுடன் ஸ்டாலினுடைய பதில்கள் உள்ளன. தமிழ்நாடு காவல் துறை கருணாநிதியைக் கைது செய்த இரவில் நடந்த சம்பவங்களின் நேரடிச் சாட்சியாக மணா பதிவுசெய்துள்ள தகவல்கள், வரலாற்று ஆவணங்களாகியுள்ளன.
பத்திரிகையாளர் என்ற ஹோதாவிலிருந்து விலகிய மணா, கருணாநிதியும் முரசொலி மாறனும், கனிமொழி உள்ளிட்ட குடும்பத்தினரும் அன்றிரவில் எதிர்கொண்ட வலியையும் துயரத்தையும் வேதனையுடன் பதிவாக்கியுள்ளார். கருணாநிதி பற்றிய கனிமொழியின் கட்டுரை உயிரோட்டமான பதிவு. இறுதி நாட்களில் கருணாநிதி குறித்து அவருடைய மகள் செல்வியின் நினைவுகள் உருக்கமானவை.
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள், நேர்காணல்கள் ஒவ்வொன்றும் கருணாநிதி என்ற தமிழ்ச் சமூகத்தின் மூப்பர்களில் ஒருவர் பற்றிய கோட்டோவியங்கள். பத்திரிகையாளர் மணாவின் சமரசமற்ற எழுத்துகள், ‘கலைஞர் என்னும் மனிதர்’ என்ற தலைப்பில் புத்தகமாகியுள்ளன. இந்த நூல் இளைய தலைமுறையினருக்குத் திராவிட இயக்க அரசியல் வரலாற்றை அறிமுகப்படுத்துகிறது. பரிதி பதிப்பகம் அழகிய அச்சமைப்பில் வண்ணப் படங்களுடன் பளபளப்பான தாளில் இந்த நூலை நேர்த்தியாக வெளியிட்டுள்ளது.
- ந.முருகேசபாண்டியன்,
‘கிராமத்துத் தெருக்களின் வழியே...’
உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: murugesapandian2011@gmail.com
கலைஞர் என்னும்
மனிதர்
மணா
பரிதி பதிப்பகம் வெளியீடு, ஜோலார்பேட்டை
விலை: ரூ.500
தொடர்புக்கு: 7200693200
முக்கிய செய்திகள்
இலக்கியம்
9 hours ago
இலக்கியம்
9 hours ago
இலக்கியம்
9 hours ago
இலக்கியம்
9 hours ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
7 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago
இலக்கியம்
14 days ago