குமரி மாவட்டம் தக்கலை அஞ்சு வண்ணம் பகுதியில் உள்ள பீர்முஹம்மது அப்பா, தர்காவில் நானூறு ஆண்டுகளுக்கும் மேலாக அப்பாவின் ஞானப் புகழ்ச்சிப் பாடல்களின் முற்றோதுதல் நிகழ்வு நடைபெற்றுவருகிறது. அன்னாரின் 686 பாடல்களைப் பலரும் விடிய விடிய ஓதிவருகிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்ல, வெளிநாட்டிலிருந்தும் பக்தர்கள் வந்து கலந்துகொள்கிறார்கள். அந்த விழாவில் விஸ்வகர்மா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கொண்டுவரும் பால் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. முஸ்லிம்கள் மட்டுமல்லாமல், ஏனைய சமூகத்தவர்களும் பங்கேற்பதன் மூலம் சமூக ஒற்றுமையும் அங்கு நிலைநாட்டப்படுகிறது.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான பாபு ராஜேந்திர பிரசாத் தன்னுடைய, ‘இந்தியா பிரிக்கப்பட்டால்...’ என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “தற்போதைய நமது சமூக வாழ்வு மென்மையும் எழிலும் நிறைந்த ஆடைக்கு ஒப்பாகும். இந்து - முஸ்லிமாகிய இரு வகுப்பாரைச் சேர்ந்த ஆடவர் பெண்டிர் அனைவரும் அநேக நூற்றாண்டுகளாக இதை நெய்துவந்திருக்கிறார்கள். கபீர், நானக் இன்னும் அநேக இந்திய சாதுக்கள் முஸ்லிம் சூஃபிக்களின் பாஷையையே உபயோகித்தார்கள்” என்று அவர் குறிப்பிட்டதுபோல்தான் முற்றோதுதல் நிகழ்வு பண்பாட்டு உதாரணமாகத் திகழ்கிறது.
இப்படியான ஒரு சூழலை, ஒருவர் தன் பாடல்களால் உருவாக்குகிறார் எனில், அதற்கான சமூகப் பின்புலக் காரணங்கள் வலுவாக இருக்க வேண்டும். பீர்முஹம்மது அப்பாவின் வரலாறு அப்படித்தான் இருந்திருக்கிறது. அவருடைய ஆன்மிக நாட்டம் சிறு வயதில் ஏற்பட்டது. இந்திய ஞான மரபுப்படி இத்தகைய நாட்டம் உண்டானால், அவர்கள் குடும்பத்தாரையும் ஊரையும் விட்டு வெளியேறிவிடுவது இயல்பானது. அண்மைக் காலம் வரை நெல்லை மாவட்டத்துக்குள் இருந்த தென்காசிதான் பீர்முஹம்மது அப்பாவின் சொந்த ஊர். அவ்வூரை விட்டுக் கால்போன போக்கில்தான் அவர் போயிருக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தையொட்டி அவருடைய கால்கள் ஞானம் தேடி நடந்திருக்கின்றன. தேவாரம் சென்று சேர்ந்து சிறிது காலம் தங்கிய பின், கேரளத்துக்குள் புகுந்துசென்றிருக்கிறார். இடுக்கி மாவட்டத்தில் ஒரு சிகரத்தை எட்டிப் பிடித்திருக்கிறார். அது அவரது ஞானத் தேடலுக்கான மையமானது. அப்பாவுக்குத் தெரியாது, வருங்காலத்தில் தான் அமர்ந்திருக்கும் சிகரம் தன் பெயராலேயே அமையப்போகிறது என்னும் உண்மை.
1550-ம் ஆண்டுவாக்கில் அங்கு அவர் வந்த பின் கேரள அரசு ஆவணங்களில் ‘ஹில் ஆஃப் பீர் மொகம்மது’ (Hill of Peer Mohamed) என்றே அப்பகுதி குறிப்பிடப்பட்டுவந்துள்ளது. பின்னரும், அவரின் பயணம் நீண்டு தக்கரைக்கு வந்துள்ளது. இந்த மாதிரியான ஊர் சுற்றலினால், நம்மவர்தான் தக்கலையில் பீர்முஹம்மது அப்பாவாக அடங்கியிருக்கிறார் என்கிற விவரம் சொந்த ஊர்க்காரர்களுக்கும் பீர்மேட்டுக்காரர்களுக்கும் தெரியாமல் போயிருக்கிறது. பீர்முஹம்மது அப்பாவின் ஞானத் தேடல்களில் உருவானவை பதினெட்டாயிரம் பாடல்கள். நூல்களாக அமைந்த விதத்தில் அவை இருபத்தைந்தாகும். இவர் சூஃபி ஞானியானாலும் சித்தர் மரபிலும் குறிக்கப்படுகிறார். அதற்குக் காரணம், இவ்விரு தரப்பினரும் பொதுவான மானுடப் பார்வையைக் கொண்டிருப்பதுதான். ‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ என்று கூறப்படுவதும் இவர்களின் அடிநாதமாகும். ஒருவகையில் இவர்களின் பாடல்கள், ஆளும் வர்க்கத்துக்கு எதிரான கலகக் குரலாகவும் மாறியுள்ளன. இவ்வாறாக, ஆன்மிகத்தின் அடிப்படையில் தேடப்படும் ஞானம், இறுதியில் மக்களின் கோபத்தையெல்லாம் திரட்டி, ஆள்வோருக்கு எதிரான முழக்கங்களாக அமைந்துவிடுகிறது. ‘சினத்தெனை இகழ்ந்திட வுனக்கழகல்ல, சினத்தங் கிருக்கவும் நீதியுண்டோ தெளிவானவனே’ எனும் வரிகளைக் கொண்ட பாடலால் இவற்றை அறிந்துகொள்ளலாம்.
இந்தப் பாடல்களை முஸ்லிம்களிடையே உள்ள சில வஹாபியர்கள் தீவிரமாக நிராகரிக்கின்றனர். இப்பாடல்களில் இஸ்லாமிய மரபுக்கு எதிரான சொல்லாடல்கள் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். ஞானத்தை மொழியின் அடிப்படையில்தான் பகுக்க முடியுமே தவிர, மத அடிப்படைவாதத்தின் வழியாக அணுக முடியாது. சிவம், சக்தி, பார்த்திபன் போன்றவை தமிழில் காரணத்தோடு தோன்றிய பெயர்கள். இவற்றைச் சமயம் சார்ந்த வார்த்தைகளாக வஹாபியர்கள் கருதிக்கொள்கிறார்கள். அதனால், இவ்வார்த்தைகளை மதச் சிமிழுக்குள் அடைக்கும்போது அடிப்படைவாதம் திணறுகிறது. தமிழும் இஸ்லாமும் கலக்குமிடத்தில் அவை கொள்வினை - கொடுப்பினைகளாக அமைந்திருப்பதை நூலாசிரியர் அருமையாகச் சுட்டுகிறார். இஸ்லாத்தை இந்து ஞான மரபுக்குள் அடைத்து விளக்கம் கொடுப்பதில் நியாயம் இல்லை என்பதற்கு அப்பாவின் பாடல்கள் உதாரணமாகும்.
ஞானத்தில் சிறந்திருப்போர் தம் உணர்வெழுச்சியினால் இறைவனைக் கேள்வி கேட்கவோ குற்றம் சுமத்தவோ முனைவதுண்டு. அவை உண்மையில் குற்றச்சாட்டுகளல்ல; இறைவனுடனான அவர்களின் அன்பும் உரிமைகோரலும் அவ்வாறு வெளிப்படுகின்றன. தன்னை அருளாளன் - நிகரற்ற அன்புடையவன் என்று குர் ஆன் மூலம் பல முறை அறிவிக்கிறான் இறைவன். ஆனால், இறைவன் தன்னை எவ்விதமாய் உருவகப்படுத்தினானோ அந்த நிலையிலிருந்தும் அவனைப் பார்க்க மறுக்கிறார்கள் வஹாபியர்கள். அதனால் கவிஞர்களின் அறச்சீற்றங்களை, இறைவனுடனான அவர்களின் உரிமைகோரல்களை அடிப்படைவாதிகள் புரிந்துகொள்ளாமல் போகிறார்கள்.
ஞானத் தேடல்களில் இருந்தபொழுதிலும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரளுடன் கலந்து பீர்முஹம்மது அப்பா பழகியிருக்கிறார். அவர் தவ வாழ்வை நாடிச்சென்ற காரணம் என்னவென்று தெரியவில்லை. இன்று தக்கலையில் அடங்கியிருக்கும் பீர்முஹம்மது அப்பாவின் தர்கா பிரம்மாண்டமாக எழுந்துநிற்கிறது, பல ஏக்கர் பரப்பளவில். அவருடைய ஞானப் பாடல்களில் சேதாரம் இல்லாமல் ஏராளமான பாடல்கள் கிடைத்துவிட்டன. ஆனால், அப்பாவைப் பற்றிய வாய்மொழிகள்தான் உலவினவே தவிர, முறையான வரலாறு இதுவரை எழுதப்படாமல் இருந்தது. அந்தக் குறை இனி இல்லை. அதை எழுதி முடித்திருக்கிறார் தக்கலை ஹலீமா. பீர்மேடு என்று அழைக்கப்படுவது அப்பாவின் பெயர்கொண்டுதான் என்ற அரிய உண்மையை ஹலீமா கண்டுபிடித்திருக்கிறார். ஆங்காங்கே சிதறிக்கிடந்த செய்திகளை ஒருமுகமாகத் திரட்டியிருப்பது இத்தனிமனிதரின் சாதனையாகும்.
ஆனாலும், அவர் தன் ஆற்றாமையையும் இந்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இவ்வளவு அரிய பெரிய ஞானக் குவியலை அப்பா தமிழுக்குத் தந்திருக்கும்போதும் அவருடைய ஒரு பாடல்கூட இன்று வரை கல்விக்கூடங்களில் இடம்பெறவில்லை. ஆய்வாளர்களும் அப்பாவை விலாவாரியாகப் பேசவில்லை. சாகித்ய அகாடமியின் பார்வைக்கு அப்பாவின் பாடல்களைக் கவனப்படுத்தியிருக்கிறார் ஹலீமா. குமரி மாவட்ட வரலாற்றில்கூட அவர் பெயர் ஒற்றை வரியோடு நிறைவுபெற்றுவிடுகிறது. தமிழ்நாட்டின் கலை இலக்கிய அமைப்புகளும் கண்டுகொள்ளவில்லை; இப்படியாக நூலாசிரியர் நீளமானதொரு குற்றப்பத்திரிகையை வாசிக்கிறார். சம்பந்தப்பட்டவர்கள் தம் பொறுப்புகளை இனியேனும் உணர்ந்துகொள்வார்கள் என்று நம்புவோம்.
- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக்கூத்து’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com
***********
ஞானம் மூழ்கிக் குளித்த நதி
தக்கலை ஹலீமா
வெளியீடு: வாவாஞ்சி வெளியீட்டகம்,
தொடர்புக்கு: 9443581310
விலை: ரூ. 100
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
19 days ago
இலக்கியம்
19 days ago