கதாநதி 9: பவா செல்லதுரை - பாறையில் முளைத்த தனிச் செடி

By பிரபஞ்சன்

கோயில் சிலைகள் அழகு என் கிறோம். ஆனால், அவற் றைத் தனக்குள் வைத்திருக் கும் பாறைகள் எத்தனை அழகு என் கிறார் எழுத்தாளர் பவா செல்லதுரை. கற்பாறைகள் எவ்வளவு சதுரம், கோணம், ஒன்றுபோல ஒன்று இல்லாத அற்புத வடிவு. எந்தச் சிற்பி இந்தப் பாறைகளை இத்தனை விதமாக செதுக்கி இருப்பான்? இந்த வியப்பைத்தான் ஒரு கலைஞன் தனக்குள் வைத்திருக்க வேண்டும். ‘புல்லை நகையுறுத்தியது யார்? பூவை வியப்பாக்கியது யார்’ என்கிறார் பாரதி. பவா செல்லதுரை, இந்த வியப்பில் இருந்துதான் கதைகளைக் கொய்கிறார்.

இரு கைகளின் விரல்கள் அளவுக்குத் தான் அவர் கதைகள் எழுதி இருக்கிறார். நிறைய கட்டுரைகள் உயர் தரத்தில் எழுதியிருக்கிறார்.

பவா செல்லத்துரையின் அருமை யான கதை ஒன்றைச் சொல்லப் போகிறேன்:

அவன் காசிரிக்கா நாரினால் கயிற்றுக் கட்டிலோடு இழுத்துக் கட்டப்பட்டிருந் தான். சுற்றி நின்றவர்கள் முகங்களின் மரணமேறி இருந்தது. அவன் தலை மாட்டில் ரங்கநாயகி கிழவி பதற்றமின்றி அமர்ந்திருந்தாள். கட்டிலோடு கட்டப் பட்டவனின் மரணத்தின் அவசியம் கிழவிக்குச் சொல்லப்பட்டது. அவனைப் பிடிக்கப்பட்டதின் அதிகபட்ச கஷ்டங்கள் சொல்லப்பட்டன. கிழவியின் முகம் இருண்டது. புள்ளத்தாச்சிப் பெண் களுக்கு குச்சி வைத்து ரத்தப் பெருக்கில் புரளும் சதைப் பிண்டங்களை வாரி வீசிய கைகள்தான் அவளுடையது. ஒரு முழு மனிதனின் மரணம்… நடுக் கம் கொண்டாள் அவள். எனினும் ஊரா ருக்குக் கட்டுப்படுவதாகக் சொன்னாள்.

‘‘இந்தப் பகலுக்கும் மலைக் காட்டுல சுத்தி விஷத்தழை பறிச்சாறேன். இருட் டினப்புறம் தழையை அறைக்கனும். எனக்கு ரெண்டு வெண்கல சருவச் சட்டி வேணும். விடியற நேரம் நாலு ஆள் அவனைத் திமிராமப் புடிச்சுக்கனும். அவன் ரெண்டு கையும் சருவச் சட்டியில் இருக்கிற மாதிரி பிடிச்சுக்கனும். ஒரே ஒரு மணிநேரம். ஆளு விரைச்சுடுவான்…’’

கண் திறவாமல் கிடந்தான், கயிற்றுக் கட்டிலில் பொட்டு இருளன். அவன் சாகசங்கள் பேசப்பட்டன.

பஞ்சம் தலை விரித்தாடிய காலம் அது. அந்த ஈரமற்ற நாட்களில் மனிதர்கள் உலர்ந்து, காய்ந்து கருகினார்கள். பிள்ளை பெற்ற பெண்களின் முலைக் காம்புகள் பச்சைக் குழந் தைக்கு சொரிய ஒரு பொட்டுப் பாலின்றி வெடித்திருந்தன. தண்ணி முட்லான் செடிகள் பள்ளி விட்டகன்ற பிள்ளை களுக்கு நம்பிக்கையின் மரணத்தைத் தள்ளிப் போட்டன. குழந்தைகள் கிழங்கு தோண்டி ஏமாந்தார்கள். ரத்தம் சுண்டிய பெருச்சாளிகள் வலை தோண்டி ஏமாந் தன. வண்டிப் பாதைகளில் பாம்புகளின் எலும்புக் கூடுகள் கிடந்தன. அம்மனுக்குக் கூழ் ஊற்றி அவள் கண்களில் மிஞ்சி இருக்கும் அருளை வேண்டுவது என்று முடிவு செய்தார்கள். குதிர்களைத் துடைத்து, பானைகளை அலசி, கதிர் அறுத்து வயல்களில் சிந்திக் கிடந்த எட்டு மரக்கால் கேழ்வரகும் அஞ்சு மரக்கால் கம்பும் கூழாக ஆயத்தம் செய்தார்கள். அதில் கை வைத்தான் திருடன். உயிர் விட இருக்கிறான்.

உரல் குடையப்பட்டு கம்பு இடித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. யாரோ? நிழல். திரும்புகிறாள். மூன்று பெண் குழந்தைகளுடன் ஒருத்தி… அந்தக் குழந்தைகள் பார்வையாலேயே மாவைத் தின்று கொண்டிருந்தன.

‘‘கெழக்கத்தி பொம்மனாட்டியா நீ... கழுத்துல ஒண்ணேயும் காணோம். புருஷன் செத்துட்டானா... மாவு வேணுமா?’’

‘‘ஆமா. என் புள்ளைங்களுக்கு. நாளைக்கே திருப்பி தர்றேன்.’’

‘‘அதெப்படி நாளைக்கே திருப்பி தருவே?’’

‘‘நாளைக்குத் திருப்பித் தந்துடு வேன்.’’

‘‘அதான் எப்படி?’’

‘‘நாளைக்கு சத்தியமா திருப்பித் தந்துடுவேன். என் புள்ளைங்க வயிறு குளிரனும் தாயி.’’

அவள் குரலில் குழைந்திருந்த கனிவு, அதுவரை அவள் கேட்டிராதது. நிமிடத்துக்கு நிமிடம் வேறுபட்ட அவள் வார்த்தைகளுக்கு இவள் ஆச்சரியப்பட்டாள். அந்த வார்த்தையில் காய்ந்து வெடித்திருந்த அவள் முலைக் காம்புகள் பால் சொரிந்தது மாதிரி உணர்ந்தாள்.

‘‘சட்டி வெச்சிருக்கியா தாயி.’’

அவள் மூத்த மகள் கருஞ்சட்டியை நீட்டினாள். கம்பம் மாவு சட்டியில் நிரம்பியது. போட… போட... நிரம்பு கிறது. இன்னும்… இன்னும்... பாறையின் குழி அவள் மார் மாதிரி சுரந்து, நிரம்பிக்கொண்டே இருக்கிறது. அவள் இடக் கண் முந்திக்கொண்டு ஒரு சொட்டை உதிர்க்கிறது.

காலம் கருணையில் நிரம்பி வழிந்தது.

உச்சி மத்தியானத்தில் மாரியம்மன் சிலையில் இடக் கண்ணில் இருந்து ஒரு சொட்டு விழுந்ததைப் பார்த்ததாக ஒருவன் சொன்னான். விஷத் தழை சேகரித்த ரங்கநாயகியின் நெற்றிப் பொட்டில் அத்துளி விழுந்தது.

வானம் கிழிந்து ஊற்றுகிறது. உக்கிரம் குறையாத மழை. இரவு முழுக்க மழை. மழை ஓய்ந்தபோது பத்து இருபது பேர் வந்து சேர்ந்தார்கள். கட்டிலில் கட்டப்பட்டிருந்த இருளன், தான் மரணத்தின் பற்களில் நசுங்கப் போகும் கணத்தை நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால், அவர்களின் முகங்களில் தெரிந்த கருணை ஒரே கணத்தில் அவன் நினைப்பை மாற்றிப் போட்டது.

காசிரிக்கா நாரின் இறுக்கம் தளர்த்தப்பட்டு, கட்டு அவிழ்க்கப்பட்டது. புஜத்தில் கசிந்த ரத்தம் கண்டு அவர்களில் பலர் ‘இச்’ கொட்டினார்கள். அவர்கள் முகங்கள் வன்மமற்று, குழந்தை முகங்களாகி புன்னகை புனைந்திருந்தது.

‘‘இனி ஜென்மத்துக்கும் திருடாத. மாரி யாத்தா கண் தொறந்து மழை கொடுத் திருக்கா. போ… போய்ப் பொழைச்சுக்க.”

எல்லோர் குரலும் நனைந்திருந்தது. ஊர் ஈரத்தில் நனைந்திருந்தது!

பவா செல்லதுரையின் முதல் கதை 1991-ல் வெளிவந்துள்ளது. இன்று வரை சுமார் 25 கதைகள் எழுதி இருக்கிறார். காட்டு யானை ஒடித்துப் போட்ட தழைகளில் இருந்து வெளிப்படும் பசிய மர வாசனை, பவாவின் வார்த்தைகளில் இருந்து வந்து மனதை நிறைக்கிறது. மலை சார்ந்த, காடு சார்ந்த புலத்தை பவாவுக்கு நிகராக இத்தனை நெருக்க மான காதலுடன் யாரும் எழுதிய தில்லை. இளம் பெண்ணால் நேசிக்கப் படுவதை அறிய நேர்ந்த, ஒரு மூத்த பிரஜை அடைந்த மன விகாசத்துக்கு நிகராக அவர் தமிழ் எழுதுகிறார். நீரோட்டத்துக்குக் கீழே பளிச்சிட்டு விளங்கும் கூழாங்கல்லைப் போல், அவர் வாழ்க்கையை நேசிப்பதை அவர் கதைகள் குறைவான வார்த்தைகளில் அழுத்தமாகப் பேசுகின்றன. நாடு களின் பாஷையை நாம் அறிவோம். வனங்களின் பேச்சை நாம் கேட்டு இருக்கிறோமா? பாறைகள் பேச்சை, மரங்களின் உரையாடலை, மலர்களின் சங்கீதத்தை, பச்சைக் கொடிகளின் நாட்டியத்தைப் பவாவின் கதைகள் மொழிமாற்றம் செய்கின்றன.

‘உடம்பெங்கும் சொடலி முள் தைக்க, எக்கி எக்கிப் பறித்த சொடலிப் பழமும், ஜீவிதம் முழுக்க நானறியாத ருசியோடு சப்பிப் போட்ட காரப் பழமும், விரிந்த காடெங்கும் மின்சார பல்புகள் பூத்தது போல் பழுத்திருந்த நொணாப் பழத்தையும் கலாப் பழத்தின் புளிப்பு ருசியையும் எவருக்கும் எடுத்துத் தர விருப்பமின்றி, என் ஜோபியில் மறைத்து வைத்துக்கொள்ளவே விரும்புகிறது மனம்’ என்கிறார் பவா. ஆனால், ஜோபியில் இருந்து சிந்திய பழங்களே கதையாகி இருக்கின்றன.

பவாவின் கதைப் பயணத்தில் சில கதைகளின் சில வரிகள்:

கணவனுடன் முதன்முதலாக ஷாப்பிங் போய்வந்த மருகள், மாமியாரிடம் புதுப் புடவையைக் காட்டி, நானூற்றி அம்பது என்கிறாள். ‘‘பொடவை, நகையெல்லாம் அப் புறம் பார்த்துக்கலாம். மொதல்ல இருபத்திரெண்டாயிரம் கடனை அடைக் கிற வழியைப் பாருங்க’ என்கிறாள் மாமியார்.

பவா எழுதுகிறார்: இந்த வார்த்தை யைக் கொட்டும்போது இருந்த அம்மாவின் முகம் இந்த ஆல்பத்தில் ஒரு இடத்திலும் பதிவாகவில்லை. (‘முகம்’ - சிறுகதையில்...)

ஜேக்கப் சாருக்கு கிராஜுட்டி, பென்ஷன், பி.எப் பணம் எதுவுமே கைக்கு வரலை. கல்யாணத்துக்கு நிற்கும் இரண்டு பெண்கள். கொஞ்சம் கொஞ்ச மாக ஜேக்கப் சார் சமநிலை தவறி மென் டல் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார். ஆஸ்பத்திரியில் அவரைப் பார்க்க வந்த மனைவியிடம், ‘‘மேடம் என் பொண் ணுங்க கல்யாணம், எனக்கு ஒரு ஆப் ரேஷன் எல்லாம் நடந்தாகனும் மேடம். கொஞ்சம் யாருகிட்டயாச்சும் சொல்லி ஒதவி பண்ணுங்க மேடம்’’ என்கிறார். அந்த மனைவி கதை சொல்லியிடம் இதைச் சொல்லி, சர்ச் வாசல் என்பதையும் மறந்து வெடித்து அழுதார். (‘வேறு வேறு மனிதர்கள்’ - சிறுகதையில்...)

இம்மாதிரி வாழ்வின் பல தெருக் களிலும் விகசிக்கும் ஜீவிதத்தை எழுதி இருக்கிற பவா செல்லதுரையின் கதைகளில், சோடை என்று எதையும் சொல்ல முடியவில்லை. காரணம், எழுது என்று மனம் உந்தும்போது மட்டுமே அவர் கதை எழுதுகிறார்.

நாகரிக நகரங்கள் புறக்கணித்த காடுகள், மலைகள், மரங்கள், செடிகள், கொடிகள் ஆகிய ஜீவன்களை, அவற்றின் ஆதரவில் வாழும் மனிதர்களை எழுது பவர்கள் அருகிப் போன காலத்தில், பவா செல்லதுரை என்று ஒருவர் பாறைக்குள்ளிருந்து முளைத்த தனிச் செடியாக நிற்கிறார்.

சூரியனும், சந்திரனும் அவர் மேல் வீசுகிறார்கள். ஆனால், அவரோ மண் ணைப் பார்த்துக்கொண்டு தலையசைத் துக் கொண்டிருக்கிறார். ‘நட்சத்திரங்கள் ஒளிந்துகொள்ளும் கருவறை’ சிறுகதைத் தொகுதி - வம்சி வெளியீடு.

- நதி நகரும்…

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

2 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

3 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

5 days ago

இலக்கியம்

6 days ago

மேலும்