அமர்த்தியா சென் சுயசரிதை: உலகின் வெளிச்சத்தை அனுமதிக்கும் குடில்

By ஷங்கர்ராமசுப்ரமணியன்

பிரிக்கப்படாத வங்கத்தில் பிறந்த ஒரு சுயம், உலகளாவிய சுயமாக மாறுவதைப் பற்றிய கதைதான் அமர்த்தியா சென் ஆங்கிலத்தில் சுயசரிதையாக எழுதியுள்ள ‘ஹோம் இன் தி வேர்ல்ட்’. நூலின் தொடக்கத்திலேயே சொந்த ஊர், பிடித்த உணவு என்று பிரத்தியேகமான, ஒற்றையான ஒரு விருப்பம் தமக்கு இல்லை என்று சொல்லிவிடுகிறார். தான் பிறந்த சாந்திநிகேதன், வளர்ந்த டாக்கா நகரம், சிறு வயதில் கழித்த பர்மா, படித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் என தான் வீடாக உணரும் இடங்கள் பரந்தவை என்று குறிப்பிடுகிறார். குறுகிய தேசியவாதப் பார்வையை முற்றிலும் விரும்பாத அமர்த்தியா சென்னின் தாத்தா அவர்கள் வீட்டுக்கு வைத்த பெயர் ‘ஜகத் குடிர்’. ஒரு சுயம் உலகத்தின் ஒளி அனைத்தையும் உள்ளே அனுமதிக்கும் குடிலாக மாற முடியும் என்பதை அமர்த்தியா சென்னின் இந்த சுயசரிதை நிரூபிக்கிறது.

ஒரு சுயசரிதையில் பொதுவாக எதிர்பார்க்கப்படும் சுவாரசியமான அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட தகவல்கள் இந்த நூலில் குறைவு. ஆனால், பெற்றோர், நண்பர்கள், பேராசிரியர்கள், கருத்து மோதல்கள் பற்றிப் பேசும்போது விலகிப் பார்க்கும் பார்வையும் நகைச்சுவையும் அமர்த்தியா சென்னை நமக்கு மனிதராக நெருங்க வைக்கின்றன. கல்லூரிப் பருவத்தில் அவரை அச்சுறுத்திவிட்டுப் போன வாய்ப் புற்றுநோய் அனுபவத்தைப் பற்றிப் பேசும்போதும் சிரிப்பு அவரிடம் தொடர்கிறது. வங்கம், இந்தியா தொடங்கி உலக வரலாற்று நிகழ்வுகளின் பின்னணியில் தன் ஆளுமையும் கருத்துலகமும் விரிவடைந்ததைப் பேசும் நூல் இது. அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் சூழ்ந்த குடும்பத்தில் பிறந்த அமர்த்தியா சென்னின் தாய் அமிதா, ரவீந்திரநாத் தாகூரின் நாட்டிய நாடகங்களில் நடனக் கலைஞராக இருந்தவர். சாந்திநிகேதனில் பயின்றவர். தந்தை வேதியியல் பேராசிரியர். அம்மா வழி தாத்தா சாந்திநிகேதனில் ஆசிரியராக இருந்த சமஸ்கிருத, இந்து மத அறிஞர். அமர்த்தியா சென் படித்த சாந்திநிகேதனில் பின்னர் உலகப் புகழ் அடைந்த திரைப்பட இயக்குநர் சத்யஜித் ராய் அவருக்கு சீனியர்.

டாக்காவில் குழந்தைப் பருவத்தைக் கழித்தபோது, வங்கத்தின் வளமான நதிகள் வழியாகப் பயணித்த அனுபவத்தை எழுதிய அத்தியாயங்கள் கவித்துவமும் சமூகவியலும் வரலாறும் கலக்கும் அனுபவமாகும். பத்மா, மேக்னா, தலேஸ்வரி போன்ற நதிகளில் பயணிக்கும்போது, சின்ன டால்பின்களைப் பார்த்த அனுபவத்தை எழுதுகிறார். நதிகள், நதியை நம்பி இருக்கும் வாழ்க்கை, நதியை ஒட்டி உருவாகும் பண்பாடு, பொருளாதாரம் ஆகியவற்றைப் பேசும்போது ஒரு பொருளாதார வல்லுநரின் உருவாக்கத்தைப் பார்க்கிறோம். தன்னைச் சார்ந்திருப்பவர்களை அழிக்கவும் ஆக்கவும் வல்ல சமூகத்தைப் போல நதிகள் இருக்கின்றன என்று குறிப்பிடுகிறார். ஒரு மக்கள் திரளுக்கே வாழ்வாதாரமாக இருக்கும் நதிகள் வெள்ளத்தின்போது, ஒரு பெரும் வாழ்க்கையையே இல்லாமல் ஆக்கிவிடக்கூடியதை நம்மிடம் பகிர்கிறார். போக்குவரத்துக்கு அதிக சாதகம் உள்ள நதிகளில்தான் சந்தைப் பொருளாதாரம் செழுமையாக உள்ளது என்று ஆடம் ஸ்மித் கூறுவது, அமர்த்தியா சென்னைப் பாதிக்கிறது. நதிகளை முன்வைத்து எத்தனையோ சடங்குகளையும் விழாக்களையும் பாவிக்கும் வங்காளிகளின் பண்பாட்டை நோக்கிய அவர் கவனம் குவிகிறது. வங்க நாவல்களில், கதைகளில் நதியும் ஒரு பாத்திரமாகவே வருவதைத் தொகுத்து நமக்குப் பகிர்கிறார்.

தாகூரின் லட்சியக் கல்வி வளாகமான சாந்திநிகேதனில் படித்த சென், அதற்கு முன்னர் டாக்காவில் செயின்ட் கிரிகோரி பள்ளியில் படித்தபோது, தான் எந்த வகையிலும் சிறந்த மாணவனாக இல்லாததைப் பற்றிச் சொல்கிறார். “நான் நல்ல மாணவனா இல்லையா என்பதைப் பற்றி யாரும் கவலைப்படாத சூழலில்தான் நான் நல்ல மாணவனாக ஆனேன்’’ என்று குறிப்பிடும் அமர்த்தியா சென், உண்மையிலேயே சுவர்கள் அற்ற பள்ளி அது என்று குறிப்பிடுகிறார். தனிமனிதனின் சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றத்தில் கல்வி செலுத்தும் தாக்கம் தொடர்பில் தாகூர் கொண்டிருந்த கருத்துகள் தன் மீது இன்னமும் தாக்கம் செலுத்துபவை என்று கூறுகிறார் அமர்த்தியா சென். அவருக்கு இந்தப் பெயர் வைத்தவர் ரவீந்திரநாத் தாகூர். நோபல் பரிசு பெற்ற ஒருவர் பெயர் வைக்க, அவர் பெயர் வைத்த குழந்தையும் பின்னாளில் நோபல் பரிசு பெறுகிறது.

சிறுவயதில் தாய், தந்தையரோடு பர்மாவில் கழித்த நாட்களை நினைவுகூரும் அமர்த்தியா சென், பர்மியர்கள் பிற சமூகத்தினருடன் இணக்கமாகவும் அன்பாகவும் வாழ்ந்த அனுபவங்களைப் பேசும்போது, ஒரு பழங்கதையைக் கேட்பது போன்ற உணர்வு எழுகிறது. அந்த பர்மிய மக்கள்தான் சமீப காலத்தில் இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்பையும் வன்முறையையும் ஏவுபவர்களாக மாறியுள்ளதைக் குறிப்பிடுகிறார். அரசும் ராணுவமும் தொடர்ந்த பிரச்சாரத்தின் மூலம், பிரித்தாளும் செயல்பாடுகளின் மூலம், இணைந்து வாழும் சமூகங்களை மோசமான மோதலுக்குள்ளாக்க முடியும் என்று கூறும் அமர்த்தியா சென், இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், உலகம் முழுவதும் இந்தப் போக்கு மெதுவாக வேர்பிடித்துவருவதையும் குறிப்பிடுகிறார்.

அமர்த்தியா சென்னின் பொருளாதாரப் பார்வையை நிர்ணயித்த வங்கப் பஞ்சம் குறித்த அத்தியாயங்கள் பிரம்மாண்டமான அவல உணர்வை ஏற்படுத்துபவையாகும். முப்பது லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களைக் கொன்ற அந்த வங்கப் பஞ்சத்துக்குக் காரணம், உணவுத் தட்டுப்பாடு அல்ல என்கிறார் சென். உணவுப் பொருட்கள் தாராளமாகச் சந்தையில் கிடைப்பதற்கும் உணவை ஒவ்வொரு குடும்பமும் தேவைக்கு ஏற்ப வாங்க முடிகிற நிலைக்கும் சம்பந்தமே இல்லை என்கிறார். சந்தையில் உணவுப் பொருட்கள் கிடைத்தால் மட்டும் போதாது; அதை எல்லாரும் வாங்கும் நிலை இருக்காவிட்டால் பஞ்சம் அங்கே தோன்றிவிடும் என்கிறார் அமர்த்தியா சென். இரண்டாம் உலகப் போரையொட்டி உருவான யுத்தப் பொருளாதாரம் காரணமாக உணவுப் பொருட்களின் விலை ஐந்து மடங்கு ஏறிவிட்ட நிலையில், சாதாரண மக்களால் நெருங்க முடியாத அளவுக்கு உணவுப் பொருட்களின் விலை ஆனதே பஞ்சத்துக்கான காரணம் என்கிறார். கல்கத்தா போன்ற பெருநகரங்களில் நியாய விலைக்கடைகள் மூலம் உணவுப் பொருட்களை விநியோகித்து நகர்புற மக்களிடம் விமர்சனத்துக்குள்ளாகாமல் தப்பிக்க நினைத்த பிரிட்டிஷ் அரசு, கிராமப்புற மக்களின் பசிபட்டினி நிலையைக் கவனத்தில் கொள்ளாமலேயே இருந்ததைக் குறிப்பிடுகிறார். கல்கத்தாவுக்குப் போனால் பசியாறலாம் என்று கருதி, சாந்திநிகேதன் வழியாக குழந்தைகள், பெண்களோடு கிராமத்தவர்கள் ஒரு லட்சம் பேரை வரிசையாகப் பார்த்த அனுபவத்தைக் குறிப்பிடுகிறார். கல்கத்தா நகரத்தில் தெருக்களில் கூட்டம் கூட்டமாகப் பசியில் மக்கள் மடிந்துபோன நிலையையும் அமர்த்தியா சென் பார்த்துள்ளார்.

பொருளியல் வல்லுநராக அவர் ஆனபோது, பஞ்சங்களால் ஏற்படும் அழிவை ஓரளவாவது தடுப்பதற்குத் தனது ஆய்வு உதவக்கூடும் என்ற நம்பிக்கையில்தான் பஞ்சம் தொடர்பான ஆய்வுகளைத் தொடங்குகிறார். பேரிடர்கள், கலவரங்கள் என எல்லா நிகழ்வுகளிலும் ஏற்படும் பாதிப்புகளில் வர்க்கரீதியான வித்தியாசங்கள் இருப்பதைச் சிறிய வயதிலேயே அறிந்துகொண்ட சம்பவங்களைக் குறிப்பிடுகிறார். எந்தவொரு கலவரச் சூழலிலும் ஒரு ஏழை, உணவுக்காகத் தனது குடும்பத்தினர் பட்டினி கிடப்பதைத் தவிர்ப்பதற்காக, வீட்டை விட்டு வெளியே கிளம்ப வேண்டிய அபாய நிலை இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் பிற பகுதிகளில் பவுத்தம் தன் செல்வாக்கை இழந்த பிறகும், வங்கத்தில் 11-ம் நூற்றாண்டு வரை தன்னைத் தக்கவைத்துக்கொண்டதையும், அதன் பிறகு வந்த முஸ்லிம் ஆட்சியாளர்கள் வங்க மொழியைக் கற்று, வங்கப் பண்பாட்டிலிருந்து உத்வேகத்தைப் பெற்றதையும் குறிப்பிடும் அமர்த்தியா சென், மத அடையாளம் பண்பாட்டு அடையாளத்தைப் பேணுவதற்குத் தடையல்ல என்பதை நிறுவுகிறார். ஒரு வங்காளி என்ற அடையாளத்தின் தனித்துவங்களைப் பேணிக்கொண்டே இதர அடையாளங்களுடன் இணக்கமான உறவையும் உரையாடலையும் தன்னால் கொள்ள முடிவதை இந்த நூல் வழியாக உணர்த்துகிறார். வர்த்தகரீதியாகவும் பண்பாட்டு அடிப்படையிலும் கொண்டு கொடுத்து இந்துக்களும் இஸ்லாமியர்களும் உருவாக்கிய மதச்சார்பற்ற தேசமான வங்கதேசத்தின் கதையையும் இந்த நூலின் வழியாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

கார்ல் மார்க்ஸ் தன் மீது செலுத்திய தாக்கத்தைப் பற்றி விரிவாகப் பேசும் அமர்த்தியா சென், ஒரு பொருளாதார அறிஞராக, அரசியலராக மட்டும் அல்ல, மனித நடத்தைகள் மீதான அபூர்வமான அவதானங்களைக் கொண்டவர் என்று அவரைக் குறிப்பிடுகிறார். கல்வி வளாகங்களுக்கு வெளியே நண்பர்கள், அறிஞர்கள் புழங்கும் மதுவிடுதிகள், காபி இல்லங்கள், வீடுகளில் நடக்கும் விவாதங்கள் வழியாக அமர்த்தியா சென்னின் கருத்துலகம் விரிவுபெற்றிருப்பதை இந்த சுயசரிதை காண்பிக்கிறது. இது, வெவ்வேறு வயதினர், வெவ்வேறு பண்பாடுகளையும் நிலப் பரப்புகளையும் சேர்ந்தவர்களோடு பயணித்துச் செழுமை பெறும் அறிதலின் கதையும்கூட. இந்த உலகை மேலும் வாழத் தகுதியுள்ளதாக்க, எல்லாரையும் எல்லாவற்றையும் உள்ளடக்கும் அகண்ட வெளியாக்கத் தொடர்ந்து முயலும் ஆளுமையின் கதையும் கூட இது. அமர்த்தியா சென்னின் இந்த சுயசரிதை அவரது 33 வயதோடு நிறைவடைகிறது. அடுத்த பாகத்தை அவர் எழுத வேண்டும்.

தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in

---

ஹோம் இன் தி வேர்ல்டு: எ மெம்வா (Home in the World: A Memoir)

அமர்த்தியா சென்

பெங்குயின் ரேண்டம் ஹவுஸ்

ரூ. 899

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

15 days ago

இலக்கியம்

1 month ago

இலக்கியம்

2 months ago

இலக்கியம்

2 months ago

மேலும்