புனைவு என்னும் புதிர்: நுட்பத்தின் மொழி பேசும் நாகராஜன்

By விமலாதித்த மாமல்லன்

நாளேட்டைத் திறந்தாலே கொலை, தற்கொலை என்று வாழ்க்கையில் ஒரு முறையேனும் சலித்துக்கொள்ளாதவர்களே இருக்க மாட்டார்கள். காரணம், இழப்பைக் குறித்த அசூயை. அதை நம்முடன் பொருத்திப் பார்த்துக்கொள்வதில் உண்டாகும் அனிச்சையான பயம்.

சமூகப் பொறுப்புள்ள செய்தித்தாள்களில், இப்போதெல்லாம் தற்கொலைச் செய்தி முடிந்த பின் தற்கொலைத் தடுப்புக்கான ஆலோசனைக்கு என்று தொடர்பு எண்ணும் கொடுக்கப் படுகின்றன. இலக்கியம் இதைச் செய்யுமா அல்லது இலக்கியத்தில் இதற்கு இடமுண்டா என்றால் முடியும் என்கிறது ஜி. நாகராஜனின் ‘டெரிலின் சட்டையும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்’ என்னும் கதை.

இதை எழுதலாம் இதை எழுதக் கூடாது என்று இலக்கியத்தில் எதுவுமே இல்லை. ஆனால் எப்படி எழுதப்படுகிறது, எழுத்தாளனின் பார்வை எங்கே குவிகிறது என்பதை வைத்தே ஒன்று கிளுகிளுப்புக் கேளிக்கையாகவும் பிறிதொன்று இலக்கியமாகவும் ஆகிறது. நோக்கமும் வெளிப்பாடுமே கேளிக்கை யாளனிடமிருந்து கலைஞனைப் பிரித்து உயர்த்தி நிறுத்துகின்றன.

இது ஒரு பாலியல் தொழிலாளி பற்றிய கதை. இதில், அவள் வாழும் அல்லது அவளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் ‘இந்த’ வாழ்க்கை அவலமானது என்று எதுவுமே சொல்லப்படவில்லை. பாலியல் தொழிலாளியான கதையின் நாயகி அதைப் பற்றிப் பெரிதாகக் குறைபட்டுக்கொள்ளக்கூட இல்லை. நம் எல்லோரையும் போலவே அவளுக்கும் இந்த வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நன்றாகவும் இன்னும் கொஞ்சம் ரசிக்கத்தக்கதாகவும் இருக்கலாமே. இயந்திரத்தனமாகத் தான் பயன்படுத்திக்கொள்ளப்படுவதற்குப் பதிலாக, தானும் ரசிக்கப்படக்கூடியவளாக, அன்பாகவும் கவுரவமாகவும் நடத்தப்படக்கூடியவளாக இருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் இருக்கிறது. அவளது பேச்சாகவோ எண்ணமாகவோ இவற்றைச் சொல்லாமல் நிகழ்வாகச் சொல்லிச் செல்கிறார் ஆசிரியர். அப்படி ஒரு தருணம் கிடைக்கும்போது அதை மனமுவந்து அவள் துய்க்கிறாள்.

ஆனால், அப்படி ஒரு தருணம் அதுவரை அவளுக்கு வாய்க்கவே இல்லை என்பதுதான் கதையில் நேரடியான வார்த்தைகளில் சொல்லப்படாத அவலம். அதனால்தான் அவள் தற்கொலைக்கே முயற்சிக்கிறாள்.

கதையின் மூன்றில் ஒரு பங்கு, அவள் தற்கொலை செய்துகொள்வதற்காகச் செய்யும் ஆயத்தங்களை விவரிக்கிறது. ஆனால், அவள் அந்த முடிவுக்கு வர என்ன காரணம் என்று ஒரு வார்த்தைகூடச் சொல்லவில்லை. ஏன்?

வாழ்வின் மர்மங்கள்

வாழ்க்கையில், சில நிகழ்வுகள் நேரடியான வெளிப்படையான காரண காரியங்களோடு எல்லா நேரமும் நடப்பதில்லை. ஒட்டுமொத்த வாழ்வே காரண காரியமற்றது என்பதல்ல இதற்கு அர்த்தம். நம்மை வாட்டி எடுக்கும் அழுத்தம் ஒற்றைக் காரணத்தால் உண்டாவதில்லை. பூடகமாகப் பல்வேறு காரணிகள் இருக்கக்கூடும். ஆனால் அந்த அழுத்தத்தில் இருந்து தப்பிப்பதற்கு ஒரே வழி தற்கொலையே என்கிற முடிவுக்கு வர ஒரு கணமே போதுமானதாக இருக்கிறது.

அந்த அசுர கணத்தை மட்டும் தவிர்க்க முடிந்தால் தப்பித்துவிடலாம். ஆனால் அப்படி அந்தக் கணத்தைத் தவிர்த்துத் தப்பித்துக்கொள்வது யார் கையில் இருக்கிறது? நம்மிடம்தான் என்று சொல்லாமல் சொல்கிறார் ஜி.நாகராஜன்.

சிரமப்பட்டுத் தூக்குக் கயிற்றை மாட்டித் தயார் நிலையில் இருக்கையில், டெரிலின் சட்டையும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர் அவளிடம் வருகிறார். பார்க்க கவுரவமாக இருக்கிறார். அது மட்டுமின்றி அவளைக் கவுரவமாகவும் நடத்துகிறார்.

அவளை விடுங்கள். வீட்டுப் பெண்களுக்கே சின்ன சின்ன ஒத்தாசை செய்தாலே உச்சி குளிர்ந்துவிடுவதில்லையா. இது போன்ற யதார்த்த கவனிப்புகள் கலை நுட்பத்தின் அடையாளம்.

ஆனால் இது போன்ற சின்னச் சின்ன நகாசுகளை நுண்ணுணர்வுடன் செய்வதே ஒருவரைக் கலைஞனாக்கிவிடுவதும் இல்லை. நுட்பங்களை எந்த இடத்தில் எப்படி வெளிப்படுத்துகிறான்; அது ஒட்டுமொத்தக் கதைக்கும் எந்த விதத்தில் மெருகூட்டுகிறது என்பதை வைத்தே எழுத்தாளன் கலைஞனாகிறான்.

இந்தக் கதையில் தேவயானை தாகத்தால் தவிக்கி றாள். அந்த டெரிலின் சட்டைக்காரர் எழுந்து போய் அறையின் மூலையில் இருக்கும் பானையிலிருந்து டம்ளரில் குடிக்க நீர் கொண்டுவந்து கொடுக்கிறார்.

உடலாகவும் சதையாகவும் மட்டுமே பார்க்கப்பட்டவளின், தானும் ஒரு மனிதப் பிறவியாக நடத்தப்படுவோமா என்கிற ஏக்கத்தையும் எதிர்பார்ப்பையும் கலைஞனால் மட்டுமே இவ்வளவு நாசூக்காக வெளிக்கொண்டுவர முடியும்.

விளிம்பு நிலை மக்களின் மீது இல்லாத பொல்லாத நற்குணங்களை எல்லாம் ஏற்றி அவர்களைக் கடவுளின் அவதாரம்போல அலங்கரித்து எழுத அநேகர் இருக்கிறார்கள். ஆனால் எளிய மனிதர்களின் எதிர்பார்ப்பு என்னவோ என்னையும் உன்னைப் போல் எண்ணி நடத்தேன் என்பதுதான்.

நாம் அன்றாடம் சந்திக்கும் நம் வீட்டுப் பெண்களில் ஒருத்தியைப் போல் இயல்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கும் தேவயானையைத் தற்கொலைக்குத் தூண்டுவது அவள் மனதில் உண்டாகியிருக்கும் அழுத்தம் என்றால் அதிலிருந்து தப்பிப்பதற்கான வாய்ப்பையும் அவள் மனமே உண்டாக்கிக் கொடுக்கிறது.

கதை முடியும்போது அவளைப் போலவே வாசகனையும் விக்கித்து நிற்க வைத்துவிடுகிறான் கலைஞன்.

தொடர்புக்கு: madrasdada@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

1 day ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

8 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

11 days ago

இலக்கியம்

17 days ago

இலக்கியம்

18 days ago

இலக்கியம்

18 days ago

மேலும்