தொல்லியல், கலை, வரலாறு, கல்வெட்டு ஆய்வாளரும், தமிழ்நாட்டுத் தொல்லியல் துறையில் நீண்ட காலம் பணிபுரிந்தவருமான வெ.வேதாசலம் எழுதிய நூல் ‘பாண்டியநாட்டு வரலாற்று முறை சமூக நிலவியல் (கி.பி.600-1400)’. பாண்டிய நாட்டைப் பற்றி ஆராய்ந்து, ‘பாண்டியன் நின்றசீா் நெடுமாறன்’, ‘பாண்டிய நாட்டுச் சமுதாயமும் பண்பாடும் (கி.பி.900-1400)’, ‘பாண்டிய நாட்டு ஊர்களின் வரலாறு’ போன்ற நூல்களை முன்னரே எழுதியுள்ளார். அந்த வகையில், இந்நூலை எழுதப் பொருத்தமானவர். பாண்டிய நாட்டு வரலாற்றில் சமூக நிலவியல் குறித்து, தமிழில் வெளிவந்த முதல் நூல் இதுதான்!
பாண்டிய நாடு, சோழ நாடு, நடுவில் நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு போன்ற பெரு நாடுகளின் உள்ளகத்தே எவ்வாறு பல சிறு நாடுகள் தோன்றின, பல ஊர்கள் சேர்ந்து எப்படிச் சிறு நாடுகளாக உருவெடுத்தன, அந்த ஊர்களை எப்படி வேளாண்குடிகள் தோற்றுவித்தன, அந்த ஊர்களை யார் நிர்வகித்துவந்தனா், நாட்டார், நாடாள்வார், கிழவன், கிழவோன், கிழான், கிழார் போன்றவர்கள் யார், ஊர்களில் ஏற்பட்ட சமூக மாற்றங்கள் எவை போன்ற பல கேள்விகளுக்கான பதிலை இந்நூல் மிக விரிவாகவும் சுவைபடவும் எடுத்துரைக்கிறது. காலப்போக்கில், இந்த உள்நாடுகளை அரசர்கள் தம் கட்டுப்பாட்டுக்குள் எப்படிக் கொண்டுவந்தனா் என்பதையும் ஆழமாக எடுத்துக்கூறுகிறது. மேலும், அரசர்களின் நடவடிக்கையால் ஊர்கள், சிறு நாடுகள் எவ்வாறு தமது சமூகத்தன்மையை இழந்தன, அரசர்கள் எப்படி நாட்டையும் நாட்டாரையும் தமது அதிகாரத்தின் மூலம் கட்டுப்படுத்திவந்தார்கள், நாட்டார்களைப் புறந்தள்ளி அரசர்கள் எப்படி ஊர்களிடமிருந்து நேரடியாக வரி வசூலிக்கத் தொடங்கினார்கள் என்பது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து கூறுகிறது.
இந்த உள்நாடுகளில், ‘பெரும்பாலானவை ஏதேனும் ஒரு ஊரின் பெயரோடு நாடு என்ற பின்னொட்டைச் சோ்த்து, சிறு சமூக நிலப் பிரிவாகப் பெயரிடப்பட்டுள்ளன’ என்கிறது இந்நூல். எடுத்துக்காட்டாக, அண்டை நாடு, அதட்டம்ப நாடு, அழ நாடு, ஆற்றுர் நாடு, கீரனூர் நாடு, மருங்கூர் நாடு. ஏனையவை கூற்றம், முட்டம், குளக்கீழ், ஊர்க்கீழ், ஏரிக்கீழ், ஆற்றுப்போக்கு போன்ற பின்னொட்டுச் சொற்களால் வழங்கப்பட்டன. உதாரணமாக, இந்தப் பின்னொட்டு உள்ள நாடுகள் பாகனூர்க் கூற்றம், அரும்போர்க் கூற்றம், மிழலைக் கூற்றம், திருத்தியூா் முட்டம், துடையனூர் முட்டம், மாடக் குளக்கீழ், வேலூர் குளக்கீழ், நாட்டாற்றுப் போக்கு, தேனாற்றுப் போக்கு போன்ற பெயர் கொண்டவையாக இருந்தன.
முன்னுரையில், நாற்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொல்லியல் ஆய்வின் பயணத்தில் பெரும்பகுதி இந்நூலுக்குரிய மூல தரவுகளைத் தேடி அலைவதில் கழிந்தது என்கிறார் வேதாசலம். இந்நூலுக்குரிய சான்றுகளாகப் பாண்டிய நாட்டில் காணப்படும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கல்வெட்டுகளும் சில செப்பேடுகளும் உள்ளன என்கிறார். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் கி.பி.600-க்கும் 1400-க்கும் இடையில் 572 உள்நாட்டு நிலப்பிரிவுகள் இருந்தன என்று நிறுவுகிறார். அவற்றில் பாண்டிய நாட்டில் 152 நாடுகள், சோழ நாட்டில் 143 நாடுகள், நடுநாட்டில் 65 நாடுகள், தொண்டை நாட்டில் 180, கொங்கு நாட்டில் 32 என மொத்தம் 572 நாடுகள் இருந்தன என்று பட்டியலிடுகிறார்.
தமிழ்நாட்டு வரலாற்று ஆசிரியா்கள் தொடக்கக் காலத்தில் இவை அரசர்களால் உருவாக்கப்பட்ட உள்நாட்டு நிர்வாகப் பிரிவாகவே கருதினாலும், பேராசிரியர் எ.சுப்பராயலு, பிற்காலத்துச் சோழ நாட்டில் இருந்த நாடுகளைப் பற்றி ஆய்வுசெய்தபோது, இந்நாடுகள் ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகள் அல்ல, வேளாண்மைக்காக உருவாகப்பட்ட நிலப்பரப்பே என்று நிறுவினார். இந்நிலப்பரப்பில் இருந்த வேளாண் சமூகத்தினர் தங்களது சமூகப் பொதுநலன் கருதி, ஒன்றாகச் சோ்ந்து செயல்பட்டனர். ஊர் என்று அழைக்கப்பட்ட வேளாண்-சமூகக் குடியிருப்புகள் பல சோ்ந்த நிலப்பரப்பே நாடு என்று அழைக்கப்பட்டது என்ற கருத்தை முதலில் எ.சுப்பராயலு வெளியிட்டார்.
கல்வெட்டுச் சான்றுகள் மூலம், பாண்டிய நாட்டின் ஒவ்வொரு உள்நாட்டிலும் எவ்வளவு ஊர்கள் இருந்தன என்பதை இந்நூல் தெரிவிக்கிறது. 90 நாடுகளுக்கு மேல் 1-10 ஊர்கள் கொண்டவை, 35 நாடுகளுக்கு மேல் 10-20 ஊர்கள் கொண்டவை என்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதாவது, பெரும்பாலான நாடுகள் 10 ஊர்கள் வரை உடையவையாக விளங்கின. ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால், வேளாண் சமூக ஊர்களும், அவற்றை உள்ளடக்கிய சிறு நாடுகளும் நீர்வளம், நிலவளம் என்ற அடிப்படையிலேயே பெருகின என்பதாகும். நீர்வளம் இல்லாத பகுதியில் இந்த ஊர்கள் குறைவாகவே ஏற்பட்டன.
மீண்டும் மீண்டும் இந்நூலாசிரியா் ஒரு கருத்தை வலியுறுத்துகிறார். அதாவது, பாண்டிய நாட்டைப் போலவே, சோழ நாட்டிலும், நடு நாட்டிலும் கி.பி.1000-க்கு முன்பாக நாடுகளின் வளா்ச்சி உச்சகட்டத்தை எட்டிவிட்டது. அதன் பின்னா், அதாவது கி.பி.985-க்குப் பின்பு, அந்த நாடுகளின் வளா்ச்சி குன்றியது. ஏனென்றால், பெரிய நாடுகளின் வளா்ச்சியில் சிறிய நாடுகள் தாக்குப்பிடிக்க முடியாமல் மறைந்தன. சில நாட்டுப் பகுதிகள் உடைந்து புதிய நாடுகள் தோன்றின. மேலும், பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பாண்டிய அரசர்கள் வேளாண் சமூக நாடுகளைத் தமது நிர்வாகப் பிரிவாகவே கருதினா். அவற்றைத் தமது படை வலிமையாலும் நிர்வாகத் திறனாலும் கட்டுப்படுத்தி அவர்களுக்கு ஆணை பிறப்பித்து, தமது பிடிக்குள் கொண்டுவந்தனா். எனவே, நாடுகளின் வளர்ச்சியானது பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்னர் குன்றியது என்று சுட்டுகிறார்.
பத்தாம் நூற்றாண்டுக்கு முன் ஊர்களை ஊரவைகள் நிர்வகித்துவந்தன. ஒவ்வொரு நாட்டிலும் ஊர்ப் பிரதிநிதிகள் அடங்கிய நாட்டவைகள் இருந்தன. இந்த நாட்டவை மூலமாகவும், குடிகளின் தலைவர்களாக விளங்கிய நாடுகிழவர்கள் மூலமாகவும், அரசு ஊர்களில் வரிகளை வசூலித்து நிர்வகித்தன. இந்த வரிகள் மூலம் பல ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் ஆறுகளிலிருந்து வெட்டப்பட்டன. கண்மாய்கள் தோற்றுவிக்கப்பட்டன. தாமிரபரணி, வைகை ஆறுகளின் கரையோரம் வேளாண்குடி ஊர்கள் பல்கிப் பெருகின. இதனால், மேன்மேலும் நிலங்களில் பயிர்கள் பயிரிடப்பட்டன. வேளாண்குடி மக்கள் செழிப்போடு வாழ்ந்தனா். இந்தக் காலகட்டத்தில், பயிரிடப்பட்ட நிலங்களோடு மக்கள் வாழ்ந்த குடியிருப்பையும் அரசர்கள் தம் விருப்பப்படி அந்தணா்களுக்கும் கோயிலுக்கும் வணிகர்களுக்கும் படைவீரா்களுக்கும் தானமாகக் கொடுத்தனர். இதை எதிர்த்து சில இடங்களில் கிளா்ந்தெழுந்தனா். அந்தக் கிளர்ச்சிகளை அரசர்கள் கடுமையாக அடக்கினா்.
பத்தாம் நூற்றாண்டுக்குப் பிறகு நிலைமை மாறியது. பாண்டிய நாடு சோழா்களின் பிடியில் சிக்கியது. ராஜராஜ சோழன், அவர் மகன் ராஜேந்திர சோழன், பின்னவரின் மகன்கள் பாண்டிய நாட்டைச் சோழ நாட்டின் மண்டலமாக மாற்றி, அதன் முக்கியத்துவத்தைக் குறைத்தனா். வெள்ளான் சமூக நாடுகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் சோழ அரசர்கள் கொண்டுவந்தனர். நாடுகிழவர்கள் அரசியல் அதிகாரிகளாக மாற்றப்பட்டு, அரசுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், பாண்டிய நாட்டில் தொன்றுதொட்டு இருந்துவந்த குடித்தலைவர்களாக விளங்கிய நாடுகிழவர்களின் தலைமை வீழ்ந்து, குடிவழி நிர்வாக முறையும், நாட்டாரின் செல்வாக்கும் குறைந்துபோயின என்று இந்நூல் விவரிக்கிறது. பின்னர் 12-ம் நூற்றாண்டில் ஆட்சிக்கு வந்த இடைக்காலப் பாண்டியா்களும், 13-ம் நூற்றாண்டில் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிற்காலப் பாண்டிய அரசர்களும் இந்தப் போக்கைக் கடைப்பிடித்தனா்; தீவிரப்படுத்தினா் என்றுகூடக் கூறலாம்.
வேதாசலம் எவ்வாறு நாற்பது ஆண்டுகள் இந்நூல் எழுவதற்கு அடிப்படைத் தரவுகளை அலைந்துதிரிந்து கண்டுபிடித்தார் என்பதற்குச் சான்றாகப் பல பட்டியல்களையும் நிலப் படங்களையும் தருகிறார். பாண்டிய நாட்டில் இருந்த 152 நாடுகளையும் அகர வரிசைப்படி தருகிறார். இந்த 152 உள்நாடுகளில் இருந்த ஒவ்வொரு ஊரின் பெயரையும் அதன் காலத்தையும் பட்டியலிடுகிறார். அடையாளம் தெரியாத பல நாடுகளின் பெயர்களையும், அவற்றின் பின்னொட்டுகளையும் தருகிறார். பல வண்ண நிலப்படங்கள் இந்நூலில் அணிவகுக்கின்றன. கல்வெட்டுகளில் இடம்பெற்றுள்ள குறுநிலக் குடித்தலைவர்களின் பட்டப் பெயர்களையும், அவர்கள் எந்தக் காலத்தைச் சோ்ந்தவர்கள் என்பதையும் வரிசைப்படுத்தியுள்ளார்.
பல நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளில் பொதிந்துள்ள வரலாற்றை ஆராய்ந்து, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பாண்டிய நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பயணித்து களப்பணி செய்ததன் விளைவாக இந்நூல் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் சமூக வரலாற்றை அறிந்துகொள்ள இந்தப் புத்தகம் ஒரு வைரச் சுரங்கம்!
- டி.எஸ்.சுப்பிரமணியன், மூத்த பத்திரிகையாளர். தொடர்புக்கு: cholamurals@gmail.com
*******
பாண்டியநாட்டு வரலாற்றுமுறை சமூக நிலவியல் (கி.பி.600 – 1400)
வெ.வேதாசலம்
தனலட்சுமி பதிப்பகம்
மானோஜிப்பட்டி தெற்கு, தஞ்சாவூா் – 613004.
விலை: ரூ.1,000
தொடர்புக்கு: 94435 44405, 98945 78440
முக்கிய செய்திகள்
இலக்கியம்
6 hours ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago
இலக்கியம்
15 days ago