இலக்கிய வடிவங்களில் நாடகம் எழுதுவதே மிகவும் கடினமானதாகவும் கலைப் படைப்புகளில் மிகவும் உயர்ந்ததாகவும் பல எழுத்தாளர்கள் கூறியிருக்கிறார்கள். செகாவ், கார்க்கி, ஷா, வைல்ட் போன்ற பல எழுத்தாளர்கள் முதலில் வேறு வடிவங்கள் படைத்து, இறுதியில்தான் நாடக வடிவத்தில் முழுமனதோடு ஈடுபட்டார்கள். நான் பள்ளியில் நாடகத்தில் நடித்திருக்கிறேன். கல்லூரியிலும் நடித்திருக்கிறேன். இரு இடங்களிலும் பாட்டு. இன்று நினைத்தால்கூடச் சிரிப்பு வருகிறது.
நான் சென்னைக்கு 1952-ல் குடிபுகுந்தபோது அநேகமாக எல்லா முன்னணி திரைப்பட நடிகர்களும் ஒரு நாடகக் குழுவும் வைத்திருந்தார்கள். எம்.ஜி.ஆர். கூடத்தான். அன்று சென்னை ஒத்தைவாடை அரங்கத்தில் இடைவிடாமல் நாடகம் நடக்கும். அது தவிர, ரசிக ரஞ்சனி சபா, அண்ணாமலை மன்றம். சரஸ்வதி மஹால் என்றொரு அரங்கமும் ஓரிடத்தில் இருந்தது.
விடாமல் நாடகம் போட்டுக்கொண்டிருந்தவர்கள் டி.கே.எஸ். குழுவினர், எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் சேவாஸ் ஸ்டேஜ், ஆர்.எஸ். மனோகர் குழுவினர். டி.கே.எஸ். குழுவினர் ‘ஔவையார்’ நாடகம் போட்டு பெரும் புகழ்பெற்றனர். ‘ஔவையார்’ திரைப்படத்தை விட ‘ஔவையார்’ நாடகம் சிறப்பானது என்று ராஜாஜி அவருடைய நாட்குறிப்பில் எழுதியிருந்ததாக, அவருடைய பேரன் ராஜ்மோகன் காந்தி எழுதிய ‘ராஜாஜி வாழ்க்கை வரலாறு’ புத்தகத்தில் உள்ளது. இவை தவிர, பல அமெச்சூர் குழுவினர் நாடகங்கள் போட்ட வண்ணம் இருந்தனர். சமகால அரசியல் பற்றிய தனது விமர்சனத்தை ‘சோ’ராமசாமி நாடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார். ஒய்.ஜி.பார்த்தசாரதி ‘ஓ வாட் எ கேர்ள்’ என்ற தலைப்பில் ஒரு நாடகம் போட்டார். பூர்ணம் விசுவநாதனும் பல அற்புதமான நாடகங்களை அரங்கேற்றியிருக்கிறார்.
ஒரு நாடகத்தில் அவர் விருந்துகளுக்கு சமைக்கும் சரக்கு மாஸ்டர். அவருக்கு உதவி யாளராக இருந்த இளைஞனுக்குத் தன் பெண்ணை மணம் செய்து கொடுக்கிறார். திறமைசாலியான அந்த இளைஞ னுக்கு யாரோ சீட்டாட்டத்தைப் பழக்கப்படுத்திவிடு கிறார்கள். இரவெல்லாம் சீட்டாடிவிட்டு, மறுநாள் சமைக்கும்போது அவன் ஜாக்கிரதைக் குறைவாகக் கொதிக்கும் எண்ணெய் உள்ள இருப்புச் சட்டியைத் தூக்கும்போது எண்ணையைத் தன் மீது கொட்டிக்கொண்டுவிடுகிறான். இப்போது சரக்கு மாஸ்டர் அவனையும் சேர்த்துக் காப்பாற்ற வேண்டியிருக்கிறது.
அரு.ராமநாதன் எழுதிய ‘ராஜராஜ சோழன்’ நாடகத்தை டி.கே.எஸ்.சகோதரர்கள் அரங்கேற்றினார்கள். அந்த நாடகம் சென்ற இடமெல்லாம் வெற்றி. நடிகர்களில் குறிப்பாக, குந்தவையாக நடித்த நாடக நடிகை நட்சத்திர அந்தஸ்து பெற்றார். இது பெரிய நடிகர்களைக் கொண்டு திரைப்படமாகவும் எடுக்கப்பட்டது. நாடகம் கொடுத்த அனுபவம் திரைப்படம் தரவில்லை என்றுதான் கூற வேண்டும்.
அன்றைய பல நாடகங்கள் திரைவடிவமும் பெற்றன. சிவாஜிகணேசன் - பானுமதி நடித்த ‘அறிவாளி’என்ற படம் ஷேக்ஸ்பியரின் நாடகத்தைத் தழுவியது என்று நினக்கிறேன். சோ தன் முக்கிய நாடகங்களைத் திரையிலும் அளித்தார். ‘முகமது பின் துக்ளக்’ சிறிது பரபரப்பைக் கூட ஏற்படுத்தியது. ‘வீர பாண்டிய கட்டபொம்மன்’ நாடகமாகவும் திரைப்படமாகவும் வெற்றி பெற்றது.
திட்டமிட்டு நாடகங்களை எழுத வைத்து அரங்கேற்றிய வர்களில் சகஸ்ரநாமம் முக்கியமானவர். நான் சென்னைக்கு வந்த ஆண்டில் ரவீந்திரநாத் தாகூரின் ‘பார்வை’ என்ற கதையை அவர் ‘கண்கள்’என்று நாடகமாக அரங்கேற்றினார். தமிழ் நாடக வடிவம் கொடுத்தவர் என்.வி.ராஜாமணி. அவரே அடுத்த நாடகமாக ‘இருளும் ஒளியும்’ எழுதினார்.
அந்த சமயத்தில் எம்.ஆர்.ஏ. என்ற சர்வ தேச அமைப்பு சென்னையில் இரு நாடகங்களை அரங்கேற்றியது. நாடகங்கள் ஆங்கில மொழியில் இருந்தாலும் அவர்களுடைய தொழிற்திறமையால் நாடகங்கள் அனைத்து தரப்பினரையும் சென்றடைந்தன. மேடையில் பகல் இரவாவது, காலைப்பொழுது விடிவது போன்றவற்றை அவர்கள் ஒளி மாற்றத்தால் வெளிக்கொணர்ந்தனர்.
‘இருளும் ஒளியும்’நாடகத்திலும் இந்த ஒளி மாற்றத்தை சகஸ்ரநாமம் சாத்தியமாக்கினார். அவர் தனது நாடகத்தின் அரங்க அமைப்புக்குக் கலாஸாகரம் என்ற கலைஞரை அமர்த்திக்கொண்டிருந்தார். அதே போல உடைகள் தயாரிக்க ஒரு தையற்கலைஞரையும் அமர்த்திக் கொண்டிருந்தார். என்னதான் மேடை ஜோடனை, தொழிற்திறமை இருந்தாலும் நாடகப் பிரதி தெளிவும் கட்டுக்கோப்பும் கொண்டதாக இருக்க வேண்டும். அவருடைய இன்னொரு நாடகம் ‘வானவில்’ நல்ல திருப்பங்கள் கொண்டிருந்தாலும் வெற்றி பெறவில்லை. சேவாஸ் ஸ்டேஜின் முதல் மூன்று நாடகங்களில் சிவாஜிகணேசன் நடித்தார். நாடகமாகப் பெரும் புகழ்பெற்ற ‘ரத்தக்கண்ணீர்’ திரைப்படமான பிறகு, எம்.ஆர்.ராதாவால் மீண்டும் முழுமூச்சாக நாடக மேடைக்குத் திரும்ப முடியவில்லை.
தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, பி.எஸ். ராமையா பொன்றோரை நாடகம் எழுத சகஸ்ரநாமம் ஊக்குவித்து, அந்த நாடகங்களை மேடையேற்றினார். தி.ஜானகிராமனின் ‘நாலு வேலி நிலம்’ நாடகத்தைத் திரைப்படமாகவும் எடுத்தார். நாடகம் அடைந்த வெற்றி திரைப்படத்தில் கிடைக்கவில்லை. இடையில் ‘நாடகக் கல்வி நிலையம்’என்ற பயிற்சிக்கூடத்தை மூன்று மாதம் நடத்தினார். அதன் ஒரு விளைவு, கோமல் சுவாமிநாதன் என்ற நாடகாசிரியர் கிடைத்தார்.
கோமலின் ‘தண்ணீர் தண்ணீர்’நாடகமாகவும் திரைப்படமாகவும் வெற்றி பெற்றதுடன் பல பரிசுகளையும் பெற்றது. அவர் தேசிய அளவில் கவனம் பெற்றார். இதற்கிடையில் என்னுடைய நாவல் ‘தண்ணீர்’ நாடெல்லாம் சுற்றி வந்ததுடன் நிறைய குழப்பத்தையும் ஏற்படுத்தியது. பலர் என் நாவலையும் ‘தண்ணீர் தண்ணீர்’என மாற்றினர். நான் ‘தண்ணீர்’ எழுதினேன், ‘தண்ணீர் தண்ணீர்’ எழுதவில்லை என்று பலமுறை விளக்கம் கூறவேண்டியிருந்தது.
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் முழு நேரத் திரைப்பட நடிகர்களானதும் அவர்களுடைய நாடகக் குழுக்கள் இயங்க முடியவில்லை. இந்த இடைவெளியை நிரப்புவது போல டெல்லியில் இருந்து ஒரு குழு சென்னை வந்து நாடக விழா நடத்தியது. அதில் ‘மழை,’ ‘போர்வை போர்த்திய உடல்கள்’ என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாடகங்களும் அடங்கும். நடிகர்களில் இன்று பிரபலமாக இருக்கும் பாரதி மணி, டெல்லி கணேஷ் போன்றோர் அன்றே நாடகங்கள் மூலம் தங்கள் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினர்.
எண்பதுகளில் சில இளைஞர்கள் ஒரு புது வகை நாடகத்தை அறிமுகப்படுத்தினர். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல; மற்ற மாநிலங்களிலும் இந்த இயக்கம் தோன்றி ஓரளவு பிரபலமாயிற்று. இந்த இயக்கத்தில் ‘பரிக்ஷா’ ஞாநியின் பங்கு கணிசமானது. அனுமதிச் சீட்டு ஒரு ரூபாய் என்று நிர்ணயித்து, அவர் கிட்டத்தட்ட 300 தீவிர ரசிகர் குழாமைத் தோற்றுவித்தார்.
இந்திரா பார்த்தசாரதி, பாதல் சர்கார், விஜய் டெண்டுல்கர், ந.முத்துச்சாமி ஆகி யோரின் நாடகங்களை ஞாநி மேடையேற்றினார். இவர் ஏற்படுத்திய உத்வேகத்தில் சென்னை நகரிலேயே பல குழுக்கள் தரமான, நீளம் குறைவான நாடகங்களை மேடையேற்றினர். நவீன நாடகத்துக்கு ஞாநி ஆற்றிய பங்கு கணிசமானது.
நான் 60 வருடங்களாக இரு நாடகங்களை எழுதி முடிக்க முடியாமல் குற்ற உணர்வோடு ஜீவித்திருக்கிறேன். பெயர் வைத்தாயிற்று. ஒன்று ‘லிபி.’ இரண்டாவது ‘சம்பரனில் காந்தி.’
- புன்னகை படரும்…
முக்கிய செய்திகள்
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
8 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
9 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
16 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago