எனக்குக் காவிரிக் கரையில்தான் கர் னாடக சங்கீதம் அறிமுகமாயிற்று. நான் அப்போது (1965-1975) குடியிருந்த தஞ்சாவூர் ஐயன் கடைத் தெரு வெங்கடேசப் பெருமாள் கோயில் அக்ரஹாரத்தில் நிலைபெற்ற ஆஞ்சநேயர்க் கோயில் வருடாந்திர 10 நாள் உற்சவத்துக்கு மிகப் பெரும் சங்கீதக்காரர்கள் வந்து பாடுவார்கள். அப்போது காவிரியில் இரு கரையும் தொட்டு நீர் ஓடுவதை நான் பார்த்திருக்கிறேன். நீர், மக்கள் மனதில் ஈரம் செய்தது. ஈர மக்கள் இசையையும் இலக்கியத்தையும் நாடினார்கள்.
தமிழிலக்கியத்தில் சங்கீதம் குறித்த கலைப் பதிவுகள் குறைவுதான். அது அப்படித்தான் இருக்கும். இசை என்பது ஓர் அரூபக் கலை. உருவம் அற்ற, மனோதர்மத்தில் உருவம் கொள்ளும் கலை அது. இசைக்கும், இசை அனுபவத் துக்கும் கதை உருவம் கொடுப்பது சாதாரண முயற்சி இல்லை. என்றாலும் அதைச் சாதித்தவர்கள் உளர். தி.ஜானகி ராமன் சில சிறந்த கதைகளை படிக்கும் தரத்தில் மட்டும் இல்லை; கேட்கும் தரத் திலும் எழுதி இருக்கிறார். ஜானகிராமன் சங்கீதக் கதைகளை நாம் கேட்க முடியும். ஸ்வாமிநாத ஆத்ரேயன் முயன்றிருக் கிறார்.
சுஜாதா விஜயராகவன் ஒரு உருப் படியான நாவலைத் தந்திருக்கிறார். அண்மைக்காலங்களில் சீதா ரவி முழுமையான கலை அனுபவம் தருகிற, சங்கீதம் சார்ந்த கதைகள் பலவற்றை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரது ‘ஸ்வரஜதி’ எனும் சிறுகதைத் தொகுப்பில் 24 கதைகள் சங்கீதம் சார்ந்தும், வாழ்க்கை யின் பல சாகைகளைக் கொண்டதுமாக வும் இருக்கின்றன. தமிழ் நெடும்பரப்பில் சில குறிப்பிடத் தகுந்த சிறந்த கதை களைக் கொண்டிருக்கிறது இத் தொகுதி.
கர்னாடக இசை மூலவர்களுள் ஒருவ ரான முத்துசுவாமி தீட்சிதரின் சிஷ்யன் ஆனந்தனின் பார்வையில் எழுதப்பட்ட கதை. தீட்சிதரின் பெரிய கள்ளிப்பெட்டி யில் வரும் பூஜை சாமான்கள் ஆனந்த னின் பொறுப்பு. பல்லக்கு போல அதைச் சுமந்துகொண்டு, குரு செல்லும் ஊர்களுக்கு அவர் பாதச் சுவடுகளைத் தொடர்ந்து செல்பவன் அவன். பல வருஷங்களாக கனம் மிக்க அந்தப் பெட்டி யைச் சுமந்து அவன் தோள் தழும்பேறி இருப்பது அவனுக்கு மகிழ்ச்சி. தீட்சி தரின் சங்கீதத்துக்கு அவன் வாரிசு இல்லை.
ஆனால், குரு வடிவமைக்கும் பாடலின் சிருஷ்டி கணத்தில் அவருடன் இருக்க, அந்தத் தருணத்தில் தானும் கரைய அவன் ஆசைப்படுகிறான். அன்று காலையில்தான் தீட்சிதர் பரிமள ரங்க நாதருக்கு ஹமிர் கல்யாணியில் புனைந்த ‘புண்டரீகவல்லி நாதம்’ ஏனைய சிஷ்யர்களால் பாடப்பட்டதை அவன் கேட்டிருந்தான். அந்தப் பாடலைச் சந்நிதி யில் அவர் இசைத்த பிறகு அரங்கனுக்கும் புண்டரீகவல்லிக்கும் முகவதனச் சோபை கூடியிருக்கிறதாக ஆனந்தன் உணர் கிறான். உணர்வதுதானே சத்தியம்!
அவன் குரு பாடிய அந்தத் தருணத்தை மனசுக்குள் கொண்டுவந்து கண்ணீர் பெருக்குகிறான்.
‘‘அழுகிறாயா..?’’ என்று கேட்கிறார் குரு.
‘‘இன்று உங்கள் சங்கீதத்தில் சந் தோஷப்பட்டுக்கொண்டு தாயார் முகச் சோதி கூடியிருப்பதை வந்து பாருங் கள்..’’ என்று குருவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்து சந்நிதி முன் நிறுத்துகிறான் ஆனந்தன்.
‘‘சுவாமி… தங்களிடம் நான் இணைந்து எத்தனைக் காலம் ஆயிற்று. எத்தனை நூறு கீர்த்தனைகளை நீங்கள் புனைந் திருக்கிறீர்கள். ஒரு முறை, ஒரே முறை பாடல் பிறக்கும் தருணத்தில் உங்கள் பக்கத்தில் நான் இருந்தது இல்லையே. அந்த அனுபவ மேன்மைக்கு நான் ஏங்குகிறேன்..’’ ஆனந்தன் என்ற அன்பு சிஷ்யனை நோக்குகிறார் குரு.
‘பரிமள ரங்கநாதம் பஜேஹம் வீர நுதம் பரிபாலித பக்தம்…’
தீட்சிதர் பாடினார்.
ஹமிர் கல்யாணியின் சுகந்தத்துக்கு அவர் சொற்கள் மேலும் வாசம் சேர்த்தன. குருநாதர் மெய்ம்மறந்து பாடிக்கொண்டிருக்கிறார். ஆனந்தன் அவரைப் பணிகிறான்.
தீட்சிதரின் ஞானம் ஒரு சமுத்திரம். அதனினும் பெரிது, அவர் சிஷ்யனுக்கா கப் பாடியது. இது அன்புக் கடல். கண் ணீரை வரவழைத்து மனசில் பேரொ ளியை ஏற்படுத்தும் அரிய கதை இது. இத யம் கோயில் ஆகும் இடம் இதுதான்!
தியாகராஜ
சுவாமிகள் முன், ராமன் காட்சி அளித்தான். அவர் மகள் சீதா லட்சுமம்மாவுக்கு வேறு கேள்விகள். இந்த அப்பாவுக்கு எத்தனைப் பேராசை? இத்தனைக் கோடி மக்கள் திரளில் இந்த அப்பாவை மட்டுமே தேர்ந்தெடுத்து, காட்சி கொடுத்திருந்தான் ராமன். யாரைக் காண வேண்டும் என்று அல்லும்பகலும் ஏங்கித் தவித்தாரோ அவரை அந்த ராமனைக் கண்குளிரக் கண்டாயிற்று… அப்புறம் ஏன் அப்பாவுக்கு மீண்டும் மீண்டும் அவனைத் தரிசிக்க வேண்டும் என்ற பேராசை. இது அஞ்ஞானம் இல்லையா?
அன்று அவளுக்கு அதைக் கேட்கும் நேரம் வாய்த்தது.
‘‘அப்பா… நீங்கள் ஸ்ரீராமனை நிஜமாகவே பார்த்தீர்களா அப்பா?.’’
‘‘ஏனம்மா… இத்தனை நாள் சென்று இப்படி ஒரு கேள்வி? பார்த்தேன்… சத்தியமாகப் பார்த்தேன்..’’
‘‘அந்த அழகை வர்ணிக்க நான் என்ன வால்மீகியா, காளிதாசனா மகளே? என் கண்களை நிறைத்தது அவன் அழகு என்பதுதான் ஞாபகமிருக்கிறது. எனக்குள்ளே மூடிக்கிடந்த ஊற்றுக் கண்களை எல்லாம் திறந்துவிட்டது. உயிர்ப் புனல் பெருகி பாயச் செய்தது..’’
‘‘அப்படியானால் இன்னமும் ஏன் அப்பா ஏங்கித் தவிக்கிறீர்கள்? அவனை மீண்டும் மீண்டும் தரிசிக்க வேண்டும் என்ற பேராசையில், மீள முடியாது வீழ்ந்து கிடக்கிறீர்களே… அந்த விழை வும் தாகமும் அஞ்ஞானமே அல்லவா?’’
இது தியாகய்யரின் சிருஷ்டிகளின் முக்கிய அம்சம். சீதா ரவி எழுப்பும் கேள்வியின் தத்துவம் இதுதான். இறைவனைக் காண வேண்டும் என்பதே பக்தியின் உச்சம் என்றால், கண்டவுடன் ஆசைகளை விட்டொழிப்பது அதன் பலன் அல்லவா? ஆசைகளின் கனியான அந்தக் காட்சியைப் பெற்றுவிட்ட பிறகு பின் என்ன அந்தப் பசி..?
இதற்கான பதிலைக் கதையில் நீங்கள் வாசித்து அறியலாம்.
சொற்கள் சத்தம் போடுவது இல்லை. எப்போதும் இரைந்து பேசுவதில்லை. சுருதி பிசகிய சொற்களே இல்லாத எழுத்து அவருடையது. கை நிறைய நெல் மணிகளைக் கொத்தாக அள்ளித் தூவியபடி செல்கிறார். அவர் மணிகள் சாவியாவதில்லை. மனிதர்கள் மேல் அவருக்குள்ள நம்பிக்கை அளவற்றது. மனித மனங்களின் வெளிச்சப் பகுதியிலேயே அவர் கவனம் கொள் கிறார். இருள் அவருக்குத் தெரியாதது அல்ல; அதை விளம்ப அவர் விரும்பவில்லை.
சீதாவின் முழுக்கத் தம்பூரா போடும் கலைஞர் ஒருவரைப் பற்றிய கதை. ‘தம்பூரா சோமு’ என்றால் கச்சேரி ஜமாக்கள் அறியும். மூன்று மணிநேரம், கையெடுக்காமல் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ஆரம்பத்தில் ஆள் காட்டி விரலில் தோல் உரிந்து எரியும். ஆனால், தனிமையில் அமர்ந்து தந்திகள் வெளிப்படுத்தும் நாதத்தைத் துய்க்க சோமுவுக்கு வலி மறந்து போயிற்று. அவருக்கு வாய்த்த குரு, சிஷ்யர்களுக்கு ‘வழங்கும்’ மனிதரல்லர். தம்பூரா வாழ்க்கையாயிற்று.
காலம் ஆனால், சோமு, தம்பூராவின் மேன் மையை அறிந்த கலைஞர். சாகித்யம் பாடி முடித்தபின்னும் ரீங்கரிக்கும் தம்பூரா. அந்தச் சாகித்யத்தைத் தொடர்கிறது என்பதை உணர்ந்த கலைஞர் அவர். கீர்த்தனைகள் பாடினாலோ, வாசிக்கப் பட்டாலோ, பல்லவிக்கு முந்தைய எழுதப் படாத பல்லவியை முதலில் பாடுவதும், பாடகர்க்கு அடி எடுத்துக்கொடுப்பதுமே தம்பூராதான் என்பதையும் அறிந்த கலைஞர் அவர். என்றாலும் என்ன? கச்சேரிக்கு நூறுக்கு மேல் காணப் பெறாத ஏழைமை. அவரது ஒரே ஆசை, சொந்தமாக ஒரு தம்பூரா வாங்கி வைத்துக் கொள்வது. அதன் விலை இன்றைக்கு மூவாயிரத்துக்கு மேல். காலம் சென்ற மனைவியின் ‘சொந்த தம்பூரா’ கனவு நிறைவேறாமலேயே இருந்தது.
சோமு வீட்டை நோக்கி நடந்தார். வாசலில் வெளிச்சம் தெரிந்தது. மகள் வந்திருந்தாள். கணவனும். பூஜை அலமாரி முன் அது பாயின் மேல் கிடத்தப்பட்டிருந்தது. புது தம்பூராதான், தூக்கி நிறுத்தி மீட்டினார் சோமு. என்ன ஆச்சரியம்! அது காலம் சென்ற மனைவி சுந்தரியின் சுருதிக்கு ஒலித்தது.
‘பிரிமணை எறும்புகள்’ என்று ஒரு கதை. அதில் ஒரு சம்பாஷணை.
‘‘பழைய பிரிமணை நஞ்சு போயிட்டா தூக்கிப் போட்டுட்டு, மணல் கொட்டி பாணை வெச்சுக்க வேண்டியதுதானே..’’
‘‘ஊகும். அது மட்டும் மாட்டேன்..’’
‘‘ஏப்..?’’
‘‘பழைய பிரிமணையோட ஈரத்துக் காக எறும்பு வந்து அண்டியிருக்கு மில்லே. அதைக் கலைக்க மனசே வராது. புதுசைக் கூட கொஞ்ச நாளைக்குப் பழசு மேலேயே வைப்பேன். அதும் ஈரம் படிஞ்ச பிறகு பழசை மட்டும் எடுத் துருவேன்..’’
‘‘எறும்பு அண்டறது பிரிமணை ஈரத் துக்கா, உன் மனசோட ஈரத்துக்கான்னு தெரியலை..’’
நமக்குத் தெரியும். இந்தக் கதைகளை எழுதிய சீதா ரவியின் மன ஈரம்தான் இந்தக் கதைகளின் உயர்வுக்கெல்லாம் காரணம்!
- நதி நகரும்...
முக்கிய செய்திகள்
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
1 day ago
இலக்கியம்
2 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
3 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
4 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
5 days ago
இலக்கியம்
6 days ago