கதாநதி 6: எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - சத்திய வேட்கை கொண்ட தத்துவவாதி

By பிரபஞ்சன்

‘‘இலக்கணச் சுத்தமான சிறு கதைகளை இப்போது யார் எழுதிக் கொண்டிருக்கிறார் கள்? ’’ இந்தக் கேள்வியை அறுபதுகளில் நீங்கள் எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, தி.ஜானகிராமன், பராங்குசம் போன்றோர்களிடம் கேட்டீர்கள் என்றால், அவர்கள் பதிலில் கட்டாயம் ஒரு பெயர் இடம்பெறும். அப்பெயர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்!

அறுபதுகளில் தஞ்சாவூரில் நான் கல்லூரி மாணவனாக இருந்தபோது, மேற்சொன்ன இலக்கிய ஆளுமைகள், ஓர் இளைய ரசிகனான என்னிடம் எம்.எஸ். கல்யாணசுந்தரம் என்ற பெயரை ஒரு கவுரமான தொனியில் சொன்னார்கள். ‘‘பிசிறில்லாத, செட்டான, அலம்பல் இல்லாத நல்ல கதைகளை ‘முன்ஷி’ எழுதிக்கிட்டிருக்கார். அவசியம் படிங்கோ’’ என்றார் தி.ஜானகிராமன்.

தி.ஜ.ர. முன்னுரையில் ‘கல்யாண சுந்தரத்தின் சிறுகதைகள் எல்லாம் நவரத்தினங்கள் - உருவிலும் சரி, தன்மை யிலும் சரி, வகையிலும் சரி. அப்படிப் பட்டவை’ என்று எழுதியதைப் போல ஒரு முக்கியமான எழுத்தாளருடன் உறவாடுகிறோம் என்ற எண்ணம் அவரை வாசிக்கும்போது தோன்றியது.

கதைகளின் மூலம் இன்பக் கனா காண வைக்கவும், காதல் முதலான அங்கீகரிக்கப்பட்ட சந்தோஷங்களின் பிரச்சினைகளை எதிர்கொள்வதைத் தவிர்த்து, ஏனைய வண்ணமயமான சமாச் சாரங்களை எழுதிக்கொண்டிருந்தார்கள் புகழ்வாய்ந்த சிலர் அக்காலங்களில்.

இவர்களுக்கு எதிராக மனித மனதில் இருண்ட பகுதிகளை, தோல்விகளை, வாழ்க்கைப் போராட்டங்களை எழுதிக் கொண்டிருந்தார்கள் லட்சிய தாகம் கொண்ட எழுத்தாளர்களில் சிலர்.

மார்க்சியத்தால் ஈர்க்கப்பட்டு வாழ்வின் பாடுகளை எழுதும் போக்கும் சிலரிடம் இருந்தது.

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் ஒரு தனித்த கண்ணோட்டத்தை வாழ்க்கைச் சார்ந்து உருவாக்கிக்கொண்டார். அவர் தத்துவம், கொள்கை எல்லாம் மனிதம். உங்கள் அனுபவத்தை முன் வைத்து, சகல கயமைகளுக்கும் இருப்பிடமாக உள்ளதே மனித மனம் என்று நீங்கள் சொன்னால், ‘‘இல்லை, இல்லை. மனிதன் மேலானவன்தான்! சில சந்தர்ப்பச் சூழ்நிலையில் அப்படித் தோன்ற வைத்துவிடுவான் மனிதன். எனினும் மனிதன் உன்னதமானவனே’’ என்பதே அவர் பதிலாக இருக்கும்.

நல்லவைகள் என்று தான் நம்பிய நம்பிக்கைகளுக்கு கலை உருவம் கொடுத்த எழுத்தாளர் அவர்.

எந்தத்

தேர்ந்தெடுத்த தமிழ்ச் சிறுகதைத் தொகுப்பிலும் தவறாது இடம்பெறும் கல்யாணசுந்தரத்தின் கதை ‘தபால்கார அப்துல்காதர்’. ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை இது.

அழகாகத் தொடங்குகிறது கதை.

‘பெர்னாட்ஷா எங்கள் ஊருக்கு வந்தபோது. ‘‘இங்கே பார்க்கத் தகுதி யானவை என்ன?’’ என்று விசாரிக் கிறார். ‘‘நவாப் கோட்டை, பாண்டவர் அனை, இடிநாதர் கோயில், தபால்கார அப்துல்காதர்’’ என்று பதில் கிடைக்கிறது.

அப்துல்காதர் தன் சொந்த ஊரான இந்த ஊரில் தபால்காரன். மாம்பிஞ்சு மீசை. நீலச் சட்டை. காக்கித் தலைப் பாகை. தபால்காரனாகவே பிறந்து எப்போதும் 35 வயதுக்காரனாகவே இருக்கிறான். மாலை ஆறு ஆறரை மணிக்குத் தபால் எடுத்து வருவான். தெருக்கோடி திரும்பியவுடனே மற்றொரு சூரியன் உதித்துவிட்டது போலவே மக்களுக்குத் தோன்றும்.

தபால் ஆபீஸில் இருந்து புறப்படும் போதே, யார் யாருக்குக் கடிதம் என்பதை மனப்பாடம் செய்திருப்பான். சுப்பையர் ‘‘என்ன அப்துல்காதர்?’’ என்பார். ‘‘இன்னிக்கு ஒண்ணுமில்லை. நாளைக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் பார்ப்போமா?’’ என்பார் அப்துல்காதர்.

ராமா ஜோசியர் ‘‘சாயபு, என்ன தபால்’’ என்பார். ‘‘நீங்கள்தான் ஜோசியம் பார்த்துச் சொல்லுங்களேன்’’ என்பார் காதர். ‘‘என்ன காதர் தயவே இல்லியே’’ என்பார் கோபால் ராவ். ‘‘என்ன ஒரு வார்த்தையிலேயே அப்படிச் சொல் லீட்டீங்க’’ என்பார் காதர்.

‘‘ஒரு லெட்டரா கிட்டரா ஒண்ணையும் காணோமே.’’

‘‘பாத்தீங்களா, பாத்தீங்களா… என் னமோ சொல்லப் போறீங்கன்னு நினைச்சா, என்ன இருந்தாலும் பாருங்க, தபால்காரப் பயன்னா வேறொண்ணும் கேட்கத் தோணுவதில்லை. அவனும் மனுஷந்தானே, அவனோட பிள்ளை குட்டியைப் பற்றி விசாரிப்போம்னு…’’

இப்படி ஒரு ஓட்டுறவு காதருக்கும் ஊர் மனிதர்க்கும். இடையில் காதர் ஒரு மாதம் விடுமுறை போட்டுச் சென்றான். ஒரு புதுத் தபால்காரர் வந்தார். சாயங்காலம் அஞ்சு மணிக்கெல்லாம் ‘டான்’ என்று தபாலைக் கொடுத்தார். ஒரு படித்த மனிதர். அவருக்குக் கோபம். என்னத்துக்கு இந்தக் காதர் மட்டும் ‘லேட்’ ஆகத் தபால் கொண்டுவருகிறான். அப்துல்காதர், திரும்பியதும் அவனை எச்சரிக்கிறார்.

‘‘ஏன் இவ்வளவு தாமதம்?’’

‘‘எப்போதும் போலத்தானே வந்திருக்கிறேன்?’’

‘‘ஒரு மாதமா எனக்கு ஐந்து மணிக்கெல்லாம் கடிதம் வந்தது.’’

‘‘ஆம். அவர்கள் அப்படித்தான். விடுவிடு என்று கொடுத்துவிட்டு போய்விடுவார்கள். லாயத்துக்குத் திரும்பும் ஜட்காக் குதிரையைப் போல…’’

‘‘நீரும் ஏன் அவ்வாறு செய்யக் கூடாது?’’

அதற்கு அப்துல்காதர் சொல்லும் பதில் பேரழகு:

‘‘பிறந்து வளர்ந்து பழகிப் போன ஊர். ஜனங்கள் அதென்ன, இதென்ன என்று, தபால் பற்றி, ஊர் நிலவரம் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். மனிதர்களைத் தட்டிக்கொண்டு போவதெப்படி சார்? (இந்தாங்கோ, பாட்டி சீயாழிலேந்து உங்க மூத்த பிள்ளை எழுதியிருக்காரு) இப்படி ஜனங்க இழுத்து வைத்துப் பேசினால், நான்தான் என்ன செய்றது? நீங்க இத்தன நேரம் இவ்வளவு தகவல் விசாரித்தீர்கள். நின்னு பதில் சொல்லிவிட்டுப் போறதுதானே மரியாதை. கடுதாசிக்கு என்ன அவசரம்? ஐஸ்கிரீமா, மல்லிகைப் பூவா இளகிப் போவும், வாடிப் போவும்னு பயப்பட…. முந்தா நாளு உங்க அண்ணாச்சியை மதுரயிலே பாத்தேன். ரொம்ப நேரம் எல்லாம் விசாரிச்சாரு. முன்னைக்கிப்போ ஒரு சுத்து பருத்திருக்கார். காதுகிட்ட நரையும் தட்டியிருக்குது. வரட்டுமா சார்…’’

கல்மிஷம் இல்லாத சிரிப்புடன் நகரும் அப்துல்காதரைப் பார்த்தபடி இருந்த, நேரம் குறித்துக் கோபப்பட்டவர், தன் கையில் இருந்த (அப்துல்காதரின் மேலதிகாரிக்கு எழுதி வைத்திருந்த) மனுவைக் கிழித்து எரிகிறார்… ‘என் கடிதங்கள் மறுநாள் காலை வந்து சேர்ந்தாலும் பரவாயில்லை. அப்துல்காதர்தான் கொண்டுவர வேண்டும்’ என்று தீர்மானித்தபடி.

கல்யாணசுந்தரத்தின் உலகம் இத்த கையதுதான். என் முன் அவ ருடைய பதினெட்டுக் கதைகள் விரிந் திருக்கின்றன. மிக மோசமான பாத்திரங் களானாலும் அவர்கள் அப்படி இருக்கிறமைக்காக இவர் வருந்துகிறார். பலவீனங்கள் எத்தகையதானாலும், அவை பெரிதே இல்லை இந்த எழுத் தாளருக்கு. யார் மீதும் சினம் இல்லாத இவர், எவர் மீதும் முதல் கல்லை எய் வதில்லை. தீர்ப்பு சொல்வது இல்லை. ‘அவர்கள் அப்படி’ என்பதற்கு மேல் அவர் விமர்சனம் செய்வதில்லை. ஆனால், அவர்கள் நம்மோடுதான் வாழ்கிறார்கள் என்ற பிரக்ஞையை ஏற்படுத்தவும் தவறுவதில்லை.

ஒரு ஆசிரியர். அவரிடம் படித்த மாணவனின் தம்பி ஆசிரியரைப் புகைவண்டி நிலையத்தில் சந்திக்கிறான். ஆசிரியர் அவனிடம் ‘‘நீ என்ன செய்கிறாய்?’ என்று கேட்கிறார்.

‘‘எனக்குப் படிப்பு ஏறவில்லை. படிப்பை முடிக்கவில்லை. உங்க வகுப்புக்கு வந்து துன்பம் தர இருந்தேன்., அதற்குள் தப்பித்துக் கொண்டீர்கள்’’ என்கிறான் அவன்.

‘‘சீ… அப்படி பழித்துக்கொள்ளாதே நாகராஜா. ஒரு யந்திரம் தயாரித்தாலும் பல குணங்களுக்கிடையே இயற்கை யாக அவகுணங்களும் அமைகின்றன. ரேடியோவின் சூட்சுமத்துவத்தை அதிகரித்தால், ஆகாயத்தில் உள்ள குப்பை ஒலிகள் எல்லாம் தன்கூட அழைத்து வரும். உன்னிடம் புத்திக்கும் உழைப்புக்கும் குறைவில்லை…’’ என்று தேற்றுகிறார் ஆசிரியர்.

மாணவர்களை அசடுகள், மூடர் கள் என்றல்லவா அசிரியர்கள் சொல்ல வேண்டும். இவர் இப்படி. சரி. மாண வனின் தம்பி என்னதான் தொழில் செய்கிறான்? பிக்பாக்கெட் என்கிறான் அவன். அத்தொழிலை விடும்படி மன்றாடு கிறார் ஆசிரியர். சாத்தியம் இல்லை என்கிறான் அவன். கடைசியாகப் பிரியும்போது ‘‘உன் குடும்ப ஷேமத்தைக் குறித்து தியானம் செய்யலாமா? உன் அனுமதி இல்லாமல் அந்த வகையிலும் நான் உன்னைப் பாதிக்க மாட்டேன். போய்வருகிறேன்.’’ என்று சொல்லி பிரி யும் ஆசிரியர் கைகளில் இரண்டு சுமை. கதையின் தலைப்பு ‘மூன்றாம் சுமை’.

முன்னுரையில் சி.சு.செல்லப்பா, ஓர் அபூர்வமான செய்தியைக் குறிப்பிடுகிறார்.

‘சமீபத்து ‘ஹிந்து’ பத்திரிகையில் ஆசிரியருக்குக் கடிதம் பகுதியில், ஒரு கடிதம் ரசமாக இருந்தது. ‘எலெக்ட்ரிக் ரயிலில் பள்ளி மாணவர்கள் கத வோரம் தொத்திக்கொண்டு நிற்பதாலும், புறப்பட்டுவிட்ட ரயிலில் ஓடிப் போய் ஏறுவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின் றன. இளம் வயதுப் பிள்ளைகளுக்கு இப்படிச் செய்வதன் விளைவு தெரிவ தில்லை. உபாத்தியாயர்கள் பிள்ளை களிடம் அடிக்கடி அவர்கள் மனதில் பதியும்படியாக எடுத்துச் சொல்லி எச் சரிக்கை செய்துகொண்டிருக்க வேண் டும். விடாமல் அசட்டுத்தனமாக இதைச் செய்துகொண்டே இருக்கும் பையன் களுக்கு ‘கவுரவ இளம் கதவுக் காவல் காரன்’ என்று பரிகாசப் பட்டம் கொடுக்கலாம்…’

கடிதம் எழுதியவர் எம்.எஸ்.கல்யாணசுந்தரம்.

எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘பொன்மணல்’ சிறுகதைத் தொகுதியை ‘தமிழினி பதிப்பகம்’ வெளியிட்டுள்ளது.

- நதி நகரும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

12 hours ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

4 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

7 days ago

இலக்கியம்

12 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

இலக்கியம்

14 days ago

மேலும்