புத்தரைப் பற்றி ஆங்கிலேயரான சர் எட்வின் ஆர்னல்டு 1879-ல் வெளியிட்ட காவியம்தான் ‘தி லைட் ஆஃப் ஏசியா’ (The Light of Asia). கவிதை நடையில் எழுதப்பட்ட இந்தக் காவியம், புத்தரைப் பற்றி மேற்குலகு அறிந்துகொள்வதில் முக்கியப் பங்குவகித்தது. விவேகானந்தர், காந்தி, நேரு, பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரின் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல் அது. இந்த நூலைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என்ற நூலைத் தமிழில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை எழுதியிருக்கிறார். இந்தியாவின் கலாச்சார விழிப்புக்கும் சமூக மாற்றத்துக்கும் ‘தி லைட் ஆஃப் ஏசியா’ பெருமளவில் பங்களித்திருக்கிறது. இந்த நூலைப் பற்றி முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் ‘தி லைட் ஆஃப் ஏசியா: தி போயம் தட் டிஃபைன்டு தி புத்தா’ நூலிலிருந்து சிறு பகுதி ‘தி இந்து’ நாளிதழில் வெளியானது. தமிழ் வாசகர்களுக்காக இந்தப் பகுதியை மொழிபெயர்த்திருக்கிறார் ஷங்கர்ராமசுப்ரமணியன்.
எல்லா வகையிலும் எட்வின் ஆர்னல்டு முழுமையான விக்டோரிய காலகட்டத்து விழுமியங்களைக் கொண்டவர். வியப்பூட்டும் பன்மொழித் திறனாளராக இருந்த அவர் கிரேக்கம், லத்தீன், அரபி, துருக்கி, பிரெஞ்சு, ஜெர்மன், ஜப்பானிய மொழி, ஹீப்ரூ, பாரசீகம், சம்ஸ்கிருதம், மராத்தி மொழிகளை அறிந்தவராக இருந்தார். லண்டனின் செய்தித்தாளான ‘தி டெய்லி டெலிகிராப்’புக்கு 40 ஆண்டுகள் பிரதானக் கட்டுரைகள் எழுதினார். பிரிட்டிஷ் பேரரசு மேற்கொண்ட நாகரிகப்படுத்தும் லட்சியப் பணியில் உறுதியான நம்பிக்கை கொண்டவர். அதேவேளையில், அவர் இந்திய ஆர்வலராகவும் இருந்தார்.
வைஸிராயாக டல்ஹவுசி பிரபு பதவி வகித்த காலகட்டத்தைப் பற்றிய ஆய்வு நூலை இரண்டு பாகங்களாக அதுவரை எழுதியிருந்தார். பிரபலமான இந்தியச் செவ்வியல் இலக்கியங்கள் இரண்டை அவர் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார். மேலும், இந்தியா தொடர்பான கருப்பொருள்களைக் கொண்டு நேரடியாக நிறைய கவிதைகளையும் எழுதியுள்ளார்.
1879-ல்தான் அவருக்கு அதிர்ஷ்டப் பரிசு கிடைத்தது; அந்த ஆண்டில் அவர் வெளியிட்ட வெற்றிகரமான புத்தகம் உலகம் முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரிஸ் டேவிட்ஸ், மாக்ஸ் முல்லர், மேடம் பிளாவட்ஸ்கி போன்றோர்களால் உலகளவில் புத்தர் மீது கவனமும் பேச்சும் திரும்பியிருந்த காலகட்டம் அது. ஆர்னல்டு போன்ற பின்னணியும் ஈடுபாடுகளும் கொண்ட மனிதர் ஒருவர் புத்தர் சார்ந்து எழுதுவதற்கு ஈர்க்கப்படுவது இயல்பானதுதான்.
அந்தப் புத்தகத்தின் தலைப்புப் பக்கம் இப்படி இருக்கிறது: ஆசிய ஜோதி அல்லது மகா நிர்வாணம், இந்திய இளவரசரும் புத்த மதத்தின் நிறுவனருமான கௌதமரின் வாழ்க்கையையும் போதனைகளையும் சொல்வது (இந்திய பௌத்தர் ஒருவரால் செய்யுள்களால் சொல்லப்பட்டது).
ஆர்னல்டு புதுமையான உத்தி ஒன்றைப் பயன்படுத்துகிறார் என்பது நூலின் தொடக்கத்திலிருந்தே தெளிவாகிறது: பௌத்தத்தை நிறுவியவரான இளவரசர் கௌதமரின் வாழ்வும், அவரது குணங்களும் போதனையும் கற்பனைக் கதாபாத்திரமான பௌத்தத் துறவி ஒருவரால் சொல்லப்படுவதுபோல இந்த நூல் உள்ளது. அவர் இதைச் செய்வதற்கான காரணத்தையும் இப்படிச் சொல்கிறார்: ஆசியவியல் சிந்தனைகளின் உத்வேகத்தை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு அவற்றைக் கீழைத்தேயக் கண்ணோட்டத்திலிருந்து பார்க்க வேண்டும்; இல்லையென்றால், இந்தப் பதிவைப் புனிதப்படுத்தும் அற்புதங்களோ, அது உருவகப்படுத்தும் தத்துவமோ இந்தப் புத்தகத்தில் இவ்வளவு இயல்பாக வெளிப்பட்டிருக்காது.
பூனா கல்லூரியில் கிடைத்த இரண்டாண்டு அனுபவம் ஆர்னல்டிடம் அழிக்க இயலாத தடத்தை விட்டுச்சென்றுள்ளது தெளிவு. நிர்வாணம், தர்மம், கர்மம், போன்ற பெளத்தத்தின் முக்கியமான அம்சங்களை (ஆன்மா மற்றொரு உடம்பு எடுத்துக்கொள்ளும் என்ற தத்துவம் போன்றவற்றை) விளக்க விரும்புவதாக முன்னுரையில் சொல்லும் அவர் மனித வர்க்கத்தின் மூன்றில் ஒரு பங்கினரை மனதுக்கு மட்டுமே எட்டும் வெற்றுக் கருத்துகளையோ அல்லது சூன்யம்தான் நம் இருப்பின் (being) விளைவும் அது முடிவுறும் முகடும் என்பதையோ நம்பவைத்திருக்க முடியாது என்பது தன் உறுதியான நிலைப்பாடு என்பதாகவும் கூறினார். சனாதன கிறிஸ்தவ விமர்சகர்களுடன் நேருக்கு நேராக மோதுகிறார். முழுக்க முழுக்க வசனத்தில் எட்டுப் புத்தகங்களாக எழுதப்பட்ட ‘தி லைட் ஆஃப் ஏசியா’ ஒவ்வொரு நூலுக்கு ஐநூறு அல்லது அறுநூறு வரிகளைக் கொண்டிருக்கிறது.
1956-ன் மிகப் பெரிய அரசியல் நிகழ்வு, இருபதாம் நூற்றாண்டு இந்திய வரலாற்றின் மாபெரும் நிகழ்ச்சிகளுள் ஒன்று, டாக்டர் அம்பேத்கர் பௌத்த மதத்துக்குத் தனது லட்சக்கணக்கான ஆதரவாளர்களோடு மாறியதாகும். இது அக்டோபர் 14 அன்று நடைபெற்றது. புத்தருடனும் பௌத்தத்துடனும் டாக்டர் அம்பேத்கர் நீடித்த ஈடுபாட்டைக் கொண்டிருந்ததால் இந்த நிகழ்ச்சி ஆச்சரியத்தை அளிக்கவில்லை.
அம்பேத்கர் வாழ்க்கையில் ‘தி லைட் ஆஃப் ஏசியா’ எங்கேயாவது தென்படுகிறதா என்பதைப் பார்க்க முயன்றேன். அம்பேத்கர் தனது வீட்டு நூலகத்தில் ஆர்னல்டின் புத்தகங்களின் இரண்டு பிரதிகளை வைத்திருந்ததால், டாக்டர் அம்பேத்கருக்கு அந்த நூலின் பரிச்சியம் இருக்கிறது என்பது தெளிவு. இப்போது அந்தப் புத்தகங்கள் மும்பையின் சித்தார்த் கல்லூரியில் உள்ளன. ஆனால், டாக்டர் அம்பேத்கர் மீது ‘தி லைட் ஆஃப் ஏசியா’ தாக்கம் எதையாவது செலுத்தியிருக்கிறதா?
இந்திய அரசமைப்புச் சாசனத்தை முன்னின்று நிர்மாணித்த அவரிடம் புத்தரைப் பற்றிய அந்தக் காவியம் என்ன மாதிரியான விளைவை ஏற்படுத்தியது என்பதைப் பற்றி குறிப்பிடத்தகுந்த அறிஞரான அக்ஷய் சிங் ரத்தோரிடம் கேட்டபோது அவர் கூறியது இதுதான்: “நேரடித் தாக்கம் இருந்தது என்று சொல்வது கடினமானது. ஆனால், அம்பேத்கரிய பௌத்தத்தைப் பற்றி எண்ணும்போது உண்மையான குவிமையம் எதுவென்றால், (அவர் காலத்து புத்த மதப் பிரிவுகளிலிருந்து) பிளவுபடும் புள்ளிகளும் செவ்வியல் இலக்கியத் தொடர்ச்சி, குறிப்பாக பாலி மொழிப் புனித நூல்களின் தொடர்ச்சி ஆகியவைதான். இப்போது மறைமுகமான தாக்கம் என்ன என்பதைப் பார்ப்போம். ஆர்னல்டு, கோசாம்பிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். கோசாம்பியோ அம்பேத்கர் மீது மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இருப்பினும், அம்பேத்கர் மீது தாக்கம் செலுத்தியது எதுவென்றால், கேன்/ஆர்னல்டு ஆகியோரின் சிந்தனைகளை கோசாம்பி பரப்பியதல்ல, அவர்களிடமிருந்து கோசாம்பி துண்டித்துக்கொள்ளும் இடம்தான்...”
சித்தார்த்தனின் துறவுக்கான மிகவும் புரட்சிகரமான விளக்கத்தை 1940-களில் தர்மானந்த கோசாம்பி முன்வைத்ததைத்தான் ரத்தோர் குறிப்பிடுகிறார். ஆர்னல்டின் காவியமும் உண்மையில் ஒட்டுமொத்த பௌத்த சம்பிரதாயமும் இளவரசன் சித்தார்த்தன் அடுத்தடுத்து நான்கு காட்சிகளைக் கண்டதாக நம்புகிறது: வயோதிகர் ஒருவர், நோயாளி ஒருவர், சடலம் ஒன்று, துறவி ஒருவர்.
முதல் மூன்று காட்சிகளும் துன்பத்தின் இயல்பைப் பற்றி சித்தார்த்தனைச் சிந்திக்கத் தூண்டுகிறது. நான்காவது காட்சியானது மீட்சிக்கான வழியைக் காட்டுகிறது. 1899-ல் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வைப் படித்த பிறகு கோசாம்பி, பௌத்த துறவியாகவும் பாலியின் முதல் நவீன இந்திய அறிஞராகவும் மாறினார். ஆனால், 1949-ல் கோசாம்பியின் மரணத்துக்குப் பிறகு புத்தகமாக வெளியிடப்பட்ட நாடகமான ‘போதிசத்வா: நாடக்’-ல் கோசாம்பி, உலகத்தின் மீதான மறுப்பும் பரிநிர்வாணம் மீதான நம்பிக்கை அவரது ஞானத் தேடலுக்கான காரணம் அல்ல என்றும், இரண்டு குடிகளுக்கு இடையில் இருந்த நதிநீர்ப் பங்கீடு தொடர்பிலான பிரச்சினையைத் தீர்க்க படைபலத்தையும் சண்டையையும் பயன்படுத்துவதை அவர் தீவிரமாக எதிர்த்ததுதான் காரணம் என்றும் சொல்கிறார். சாக்கியக் குடிகளுக்கும் கோலியாக்களுக்கும் ஏற்பட்ட தாவா அது. கௌதமரின் தந்தை சாக்கிய குடிகளைச் சேர்ந்தவர்; அவரது தாய் கோலியா குடியைச் சேர்ந்தவர்.
இளவரசன் சித்தார்த்தனின் துறவுக்குக் காரணங்களென காலங்காலமாகக் கூறப்பட்டவற்றை கோசாம்பி தனது பிற்கால வாழ்க்கையில் மறுத்தார்; கோசாம்பியின் இந்தக் கருத்துகளை டாக்டர் அம்பேத்கரும் ஏற்றுக்கொண்டார். இந்தியாவின் கடந்த காலத்தில் புத்தரின், புத்த மதத்தின் சமூக, அரசியல் பங்கைப் பற்றி மறுபார்வை செய்யக்கூடியவையாக அம்பேத்கரின் பதிவுகள் இருந்தன. இந்த மறுபார்வை மூலம் சிந்து சமவெளி நாகரிகம் பற்றிய பிரதான வரலாற்றெழுத்தியல் போக்குகளுக்கு அம்பேத்கர் சவால் விடுத்தார் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. ‘தி லைட் ஆஃப் ஏசியா’ நூலும் அப்படியான வரலாற்றெழுத்தியலில் வேர் கொண்டதுதான். புத்தரின் கொள்கைகள் மீது மாபெரும் விருப்பம் கொண்ட தாகூர், காந்தி, நேரு ஆகியவர்களிடமிருந்து அம்பேத்கரைத் தனித்துவமாகக் காட்டுவது இதுதான்.
தி லைட் ஆஃப் ஏசியா: தி போயம் தட் டிஃபைன்டு
தி புத்தா
ஜெய்ராம் ரமேஷ்
பெங்குயின்/வைகிங் வெளியீடு
விலை: ரூ.799
முக்கிய செய்திகள்
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
6 days ago
இலக்கியம்
12 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
13 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
17 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
20 days ago
இலக்கியம்
24 days ago
இலக்கியம்
24 days ago